in ,

அச்சலு பெட்டா உக்கலகெரே மலைக்கோயில் (ஓர் இனிய பயண அனுபவம்) – மனோகர் மைசூரு

வழக்கமான இந்திய நேரக் கணக்குப்படி, நாங்கள் திட்டமிட்டிருந்த பேருந்து முக்கால் மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டது. ஆனால், பயணத்தில் இணையவிருந்த 7 வயதுச் சிறுவர்கள் முதல் 70 வயதுப் பெரியவர்கள் வரையிலான 35 பேரின் உற்சாகத்தில் அந்தத் தாமதம் எடுபடவே இல்லை.

மைசூரிலிருந்து பண்ணூர் மற்றும் மலவல்லி வழியாக அச்சலு பெட்டாவின் தூரம் சுமார் 60 முதல் 65 கி.மீ. (https://maps.app.goo.gl/LMBhLXcZJVeAzENa8. )காலை 9 மணியளவில் மலவல்லி அருகே சாலையோர ஒன்றில் காலைச் சிற்றுண்டிக்காகப் பேருந்து நின்றது. சுடச்சுடத் தட்டை இட்லி, மொறுமொறு வடை, தேங்காய் சட்னி என காலை உணவு திருப்தியாக அமைந்தது; சாம்பாரும் சேர்ந்திருந்தால் இன்னும் முழுமை பெற்றிருக்கும் என்பது சிலரது சின்னஞ்சிறு ஆதங்கம். மீண்டும் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சுடச்சுட தேநீருக்காக இன்னொரு சிறிய இடைவேளை. அங்கிருந்து அரை மணி நேரப் பயணத்தில் அமைதியான அச்சலு கிராமத்தை அடைந்தோம்.

அச்சலு பெட்டா மலையேற்றம்: 

கன்னடத்தில் ‘பெட்டா’ என்றால் மலை என்று பொருள். அடிவாரத்தில் அமைந்துள்ள ‘அச்சலு’ என்ற எழில்மிகு கிராமத்தின் பெயரைக் கொண்டு இந்த மலை ‘அச்சலு பெட்டா’ என்று அழைக்கப்படுகிறது (உள்ளூர் வழக்கில் இது அச்சலு குட்டா என்றும் அறியப்படுகிறது). கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 முதல் 3,100 அடிகள் (சுமார் 900+ மீட்டர்கள்) உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது இக்குன்று.

அச்சலு பெட்டா மலையேற்றம் மிகக் கடினமானதுமல்ல, மிக எளிதானதுமல்ல — தொடக்க நிலை மலையேறுபவர்களுக்கும் ஏற்ற ஒரு மிதமான அனுபவம். அன்றைய இதமான வானிலை மலையேறுவோருக்குப் பெரும் பக்கபலமாக அமைந்ததால் உடல் சோர்வு பெரிதாகத் தெரியவில்லை. மலையின் ஏற்றம் சீரான சரிவாகத் தொடங்கியது. நடைப்பயணக் குழுவினர் மெதுவாக அடியெடுத்து வைக்க, துடிப்புள்ள சில இளைஞர்கள் கரடுமுரடான அந்த மண் பாதையில் பைக் ரேஸ் சாகசங்களில் ஈடுபட்டுக் கடந்து சென்றது சுவாரசியமான காட்சியாக இருந்தது.

 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கெட்டி மேளம் (சிறுகதை) – மனோகர் மைசூரு

    அன்றும் இன்றும் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்