“அலமேலு, மழை இவ்வளவு கொட்டுது, வேலைக்கு போகாம இருந்தா தான் என்ன?” என்று பொன்னம்மா வரும் வழியில் கேட்டாள்.
“உனக்கென்ன, நீ பையன் வீட்ல இருக்க. உன் மகன் குடிகாரனா இருந்தாலும் உன் மேல அம்புட்டு பாசம் வச்சு இருக்கான். உனக்கு சோறு போட்டு, நல்லது கெட்டது பார்க்கிறான். நான் வேலைக்கு போனாத் தானே சாப்பிட முடியும்.” என்றாள் அலமேலு.
“என் மகன் மட்டுமா உன் மருமகன்கள் கூட தான் குடிகாரணுங்க. உனக்கு என்னை பார்த்து பொறாமை. ஏதோ மழையில் நனைஞ்சுகிட்டே போறயேணு கேட்டா நக்கலா பதில் சொல்லற..!” என்று நொடித்துக் கொண்டாள் பொன்னம்மா.
“நக்கலா சொல்லலை. நான் சொன்னதை மனசுல வச்சுக்கிடாதே. எனக்கு மூணு பொட்ட புள்ளைங்க. வேலைக்கு போனா தான் சாப்பாடு. நான் வாங்கி வந்த வரம் அப்படி. என்ன செய்ய? அதைத்தான் சொன்னேன். உம் மேல எனக்கு என்ன பொறாமை. யாரும் என்னைப் போல கஷ்ட பட வேண்டாம். நல்லா இரு.”
‘பொன்னம்மாவிற்கு எத்தனை தடவை உதவி செஞ்சு இருக்கிறேன். ஏதோ இன்னைக்கு அவ மனசு காயப்படற மாதிரி பேசிட்டேன் போல. என் கெரகம் அப்படி பேச வச்சிடுச்சி.’
வீட்டை அடைந்தாள் அலமேலு.
தொலைக்காட்சியில் நாடகம் பார்த்து கொண்டிருந்தனர். யாரும் அலமேலுவை ‘சாப்பிட்டயா மா’ என்று கேட்கவில்லை. எல்லோரும் நாடகத்தில் மூழ்கி இருந்தனர்.
சின்ன பேத்தி ஓடி வந்தாள். “பாட்டி இந்தா சாப்பிடு.” என்று தட்டுல சோறு போட்டு கொண்டு வந்து கொடுத்தாள்.
“ஆத்தா.. நீ சாப்பிட்டயா தாயி..?”
“சாப்பிட்டேன். நான் படுக்கப்போறேன். வெளியே மழை. வூட்டுக்குள்ள படுத்துக்க.” என்று கூறி விட்டு சென்று விட்டாள்.
‘இவங்க டி வி யில பார்க்கிற கதையை விட என் கதையே பெரிய கதை தான். படுக்க உள்ள எங்க இடம் இருக்கு’ என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தாள் அலமேலு. திண்ணையில் உட்கார்ந்தாள்.
பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடி வந்தப் பெண் “பாட்டி..! உங்களுக்கு எத்தனை புள்ளைங்க?” என்றாள்.
“மூன்று பெண் குழந்தைகள் தாயி, அவங்க அப்பன் சாகும் போது கடைசி பொண்ணுக்கு மூன்று வயசு. குடிச்சு குடல் வெந்து செத்து போனான். “
” பாவம் பாட்டி நீங்க. அப்புறம் எப்படி புள்ளைங்களை வளர்த்தீங்க?”
“காலை மொற வாசல் செய்வதில் ஆரம்பித்து பல வீடுகளில் வீட்டு வேலை செய்து அவங்க கொடுக்கிற சாப்பாட்டை போட்டு பெண்களை வளர்த்தேன். காலையில் நான்கு மணிக்கு ஆரம்பித்து ராத்திரி வரை என்ன வேலை கிடைத்தாலும் செய்வேன் “
கொஞ்சம் நிறுத்தினாள்.
“எங்க அம்மா கூட என்னை வீட்டு வேலை செஞ்சு தான் படிக்க வச்சாங்க. எங்க அப்பா ரொம்ப நல்லவர். ஆனால் கருங்கல் உடைக்கிற மெஷினில் வேவைப் பார்த்து டி. பி வந்து போயிட்டாரு. நான் ஒரே புள்ளை. நான் சத்துணவு சமையல் கூடத்தில் வேலை செய்யறேன். எங்க அம்மா என்னோட தான் இருக்காங்க.”
“நீ பரவாயில்லை. உங்க அம்மா கஷ்டத்தை புரிஞ்சு உதவற… நீ நல்லா இருப்ப. என்னைய மாதிரி என் பொண்ணுங்க கஷ்டப் பட வேண்டாமே என்று பள்ளியில் சேர்த்துப் படிக்க வச்சேன். ஒருத்தரும் பத்தாவது தாண்டி வரலை. படிப்பு தான் வரலை. சரி.! தையல் வேலைக்கு அனுப்பலாம் என்று தையல் வகுப்பில் சேர்த்து விட்டேன். தையல் வேலை கத்துக்கிட்டாங்க. தெரிஞ்சவங்க மூலமாக எக்ஸ்போர்ட் கம்பெனியில வேலையும் வாங்கி கொடுத்தேன். ஆனால் வேலைக்கு போனதும் அவங்க அவங்க சம்பாதிக்கிற பணத்தை துணி, அழகு சாமான் என்று செலவு செஞ்சாங்க.”
அங்கு வந்த பக்கத்து வீட்டுப் கங்கா பாட்டி “இவளோட கதை பெரிய கதை.” என்று தொடர்ந்தார்.
“அம்மா கஷ்டப் பட்டு ஆளாக்கினது எதையும் நினைச்சு பார்க்காம அவங்களே தங்களுக்கு மாப்பிள்ளையை தேடிக் கிட்டாங்க. ஆனா வந்த ஒருத்தனும் சரி கிடையாது. அரசாங்கம் வீடு இல்லாத ஜனங்களுக்கு கொடுத்த முன்னூறு அடி இடத்தில கடன உடன வாங்கி சின்னதா குடிசை போட்டு புள்ளைங்களை வளர்த்தாள் அலமேலு.”
சிறிது நேரம் மௌனம். மூவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.
“அலமேலு வின் பொண்ணுங்களுக்கு நல்லா தலை சீவி சிங்காரிச்சுகிட்டு சினிமா, டிராமா என்று போகணும். எப்பவும் அம்மாவுடன் சண்டை . காசை கண்ணுல பார்த்தா போதும் ஏதாவது ஒரு விதத்தில் செலவு செஞ்சு காசை கரியாக்கிடுவாங்க.”
” சரி மா . அந்தக் கதையை விடு”
“இப்படித்தான் இவ. பொண்ணுங்களை விட்டுக் கொடுக்க மாட்டா.எப்பவும் பாச வலைக்குள்ள முடங்கி கிடப்பா…!”
கங்கா பாட்டி தொடர்ந்தாள்.
“பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆனதும் குடிசையை இடித்து விட்டு, வீடு கட்டிக் கொள்ள சொல்லி அவர்களுக்கு தான பத்திரம் எழுதி கொடுத்து விட்டாள். அவங்க லோன் வாங்கி வீடு கட்டிக் கொண்டார்கள்.
பெரிய பெண் அடி தளத்திலும் இரண்டாவது பெண் இடையிலும் கடைசி பெண் மூன்றாவது தளத்திலும் கட்டிக் கொண்டனர். மொட்டை மாடியில தனக்கு ஒரு ரூம் போட்டு தரச் சொல்லி கெஞ்சினாள் அலமேலு. பணத்தை சிறுக சிறுக தருவதாகக் கூறினாள்.
“ரூம் கட்டினா அம்மாவிற்கு பிறகு அது யாருக்கு சொந்தம் என்று அவர்களுக்குள் போட்டி அதனால் ரூம் கட்டி தரவில்லை. அலமேலுக்கு திண்ணை தான் கதி. அலமேலு யார் உதவி கேட்டாலும் அன்பா செய்வா.”
“அவங்க பொண்ணுங்க வேலைக்குப் போறாங்களா?”
“போறாங்க. மூன்று பெண்களும் ‘கார்மென்ட்’ கம்பெனியில் வேலை பார்க்கிறாங்க. பத்து வருடமாக வேலை பார்த்ததில் இப்ப நல்ல சம்பளம் வாங்கறாங்க. பெரிய பேத்தி கல்லூரி படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு செல்ல முயற்சி செய்யறா. பேத்தி, பேரன்கள் பாட்டியிடம் அன்பா இருப்பாங்க. இன்றைக்கும் வேலை செய்ற வீட்டில் இருந்து ஏதாவது கொடுத்தா பேரன் பேத்திங்களுக்கு கொடுத்து விடுவார்.”
“பாட்டி..! மீதி கதையை நாளைக்கு கேட்கிறேன். நேரமாச்சு.வரேன்” என்று அந்த பெண் சென்றதும் இருவரும் படுத்து உறங்கச் சென்றனர்.
மழையில திண்ணையில் படுக்க முடியாததால், பக்கத்தில் உள்ள கோவில் மண்டபத்தில் படுத்துக் கொண்டாள். உறக்கம் வராம மனசு முழுவதும் பொண்ணுங்க நினைப்பு தான்.
‘மூன்று பெண்களுக்கும் குழந்தை பிறப்பு பார்த்து, குழந்தைகளை வளர்த்து , அவங்களும் இன்று வளர்ந்து நிக்கறாங்க. பேரன், பேத்திகளுக்கு என் மேல பாசம் ஜாஸ்தி. அவங்க பாசத்தால் என்னைக் கட்டிப் போட்டு விட்டாங்க. வீட்டை விட்டு வெளியே போக மனசு வரலையே.!’ நினைவலைகளை அசைப் போட்டுக் கொண்டே உறங்கிப் போனாள் அலமேலு.
பறவைகள் சத்தத்தை கேட்ட அலமேலு அரக்க பரக்க எழுந்திருந்து வேலைக்கு செல்ல தயாராகி விட்டாள்.
“செல்லாத்தா.. ! தெய்வமே ..! என்னை சீக்கிரமா கால் கை நல்லா இருக்கும் போதே கூப்பிட்டுக்க தாயி.. ” என்று பிரார்த்தனையை சாமிக்கு வைத்து விட்டு வேகமாக வேலைக்குச் சென்று விட்டாள்.
‘வீட்டு வேலைக்கு யாரும் வயசானவங்களை கூப்பிடறது இல்லை. பாத்திரம் கழுவ மிஷின், பெருக்க மிஷின் வந்திடுச்சு. வசதி இல்லாதவங்க வயசு கம்மியான பொண்ணுங்களை வேலைக்கு வச்சுகிறாங்க’ என்று தனக்குள் பேசிக் கொண்டே வாசல் பெருக்கித் தெளித்து கோலம் போட்டாள் அலமேலு. தினமும் செய்ற வேலை தான். ஆனால் இன்று வேலையை செய்ய மலைப்பா இருந்தது.
“என்ன அலமேலு மா.. உடம்பு முடியலையா.. சித்த உட்காரு.” என்று அக்கறையோடு கேட்டார் அந்த வீட்டின் அம்மா.
“எங்க உட்கார்றது. இன்னொரு வீட்டுக்கு போக வேண்டும். அந்த வீட்டு அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. என்னைப் பார்த்தா தான் அவங்களுக்கு உசிரே வரும். அவங்களுக்கு காய்கறி நறுக்கி கொடுத்து சமையல் வேலைக்கு உதவி செய்வேன்.”
“அலமேலு..மா! இன்னைக்கு நீங்க டயர்டா தெரியறீங்களே. இந்த டப்பாவில் நாலு இட்லியும் சட்னியும் வச்சுருக்கேன். உட்கார்ந்து சாப்பிடுங்க. “
“நான் வூட்டுக்கு எடுத்து போறேன் மா. பேத்திங்க சாப்பிடாங்களோ இல்லையோ..! இரண்டு வாய் கொடுத்துட்டு சாப்பிடறேன் மா.”
“சொன்னா கேக்கவா போறீங்க. உங்க பொண்ணுங்களே உங்களை மதிக்கிறது இல்லை. பேத்திங்க என்ன செய்யப் போறாங்க? என்னமோ செய்யுங்கள். ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் பணத்தை பேங்கில போட சொல்றேன். நானும் பல வருஷமா திரும்ப திரும்ப சொல்றேன்.”
“எதுக்கு மா.. எனக்குப் பின்னால் அவங்க அந்த பணத்துக்காக சண்டை போட்டுக்கவா. வரேன் ” என்று வேகமாக வீட்டை அடைந்தாள் பாசக்கார அலமேலு.
சாப்பிடும் முன் பேத்திகள் யாராவது வந்தா அவங்களை ‘வேணுமா? ‘ என்று கேட்ட பின்னர் தான் அலமேலுவிற்கு சாப்பாடு உள்ளே போகும்.
“நாங்க சாப்பிட்டு விட்டோம். நீங்க சாப்பிடுங்க” என்றுக் கூறினர்.
தபால்காரர் ” அலமேலு அம்மா..! உங்களுக்கு அரசாங்கத்தில் இருந்து தபால் வந்திருக்கு. நீங்க எழுதிப் போட்டதற்கு முதியோர் பென்ஷன் தர அனுமதி கடிதம்.”
” அடி ஆத்தி… ! நான் எழுதி போடலை. எனக்கு தான் மகள்கள் இருக்காங்களே..” என்றாள்.
“உங்களுக்கு தான் பிடிங்க. உங்களுக்கு பதிலா யாரு போடுவாங்க. உங்களுக்கு எந்த சொத்தும் இல்லை. மகள்களும் கொடுக்கறது இல்லை. அரசாங்கம் உங்களை மாதிரி இருக்கிறவங்களுக்கு கொடுக்கறாங்க. உங்க பெரிய பேத்தி கலாவிற்கு இந்த தபால்” என்று இரண்டையும் கொடுத்து விட்டு சென்றார்.
அங்கு வந்த பேத்தி கலா “நான் தான் நீங்க தூங்கும் போது கை நாட்டை பதிச்சு விண்ணப்பம் அனுப்பினேன். “
” நான் ‘அனாதை’ என்று சொல்றது அரசாங்கத்திற்கு செய்யும் துரோகம் இல்லையா? .”
” பாட்டி .. ! இது முதியோர்களுக்கு அரசாங்கம் கொடுக்கிறது. உங்க பொண்ணுங்க காசு வாங்கிக் கொண்டு சாப்பாடு போடறாங்க. அதுக்காக நீங்க இன்னும் வேலைக்கு போறீங்க. அதுக்கு தான் இந்த பணம்.” என்றாள் பேத்தி கலா.
“பாட்டி..! எனக்கு வேலை கிடைச்சிருக்கு. அந்த ஆர்டர் தான். ஆசீர்வாதம் செய்யுங்க” என்று காலில் விழுந்தாள் .
“அம்மாகிட்ட போய் சொல்லுமா”என்றாள் அலமேலு.
“பாட்டி நீங்க தான் வேலைக்குப் போய் வந்து எங்களை குளிப்பாட்டி, சோறு ஊட்டி , கேட்டதை வாங்கி தந்து பார்த்துக் கிட்டீங்க. அதனால் முதல் மரியாதை உங்களுக்குத் தான்” என்றாள் கலா.
அங்கு வந்த கலாவின் அம்மா திகைத்து நின்றாள்.
“பாட்டி.. அது மட்டும் இல்லை. இந்த வீட்டில் உங்களுக்கு இடம் கொடுக்கலை. உங்களோட இடத்தை எழுதி தந்தீங்க. அவங்க வீடு கட்டிக்கிட்டாங்க. ஆனால் உங்களைக் கவனிக்கிறது இல்லை. நான் வீடு வாடகைக்கு பார்த்திருக்கேன். ரெடியா இருங்க. நம்ம இரண்டு பேரும் அங்க போவோம்” என்ற பேத்தியை வாஞ்சையுடன் பார்த்தாள் அலமேலு.
“வேண்டாம் மா. அம்மா அப்பாவோட இருக்கிறது தான் நீ அவங்களுக்கு தர மரியாதை. உன்னை ஆளாக்கி படிக்க வச்சவங்க” என்றாள் பாட்டி.
“பாட்டி…! நான் படிச்சதால தான் இப்படி சிந்திக்கறேன். எங்க ஆசிரியர் சொல்லிக் கொடுத்த குறளுக்கு இலக்கணமே நீங்க தான்.
‘அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உடையர் பிறர்க்கு.’
” அப்படினா என்னம்மா”? என்று கேட்டார் அலமேலு.
‘அன்பில்லாதவர் எப்பொருளையும் தாமே அனுபவிப்பர். அன்புடையவர் தம் பொருள் மட்டும் அன்றி தமது உடமைகள் அனைத்தையும் பிறருக்கு உரிமையாக்குவர்.”
” புரியல” என்றார் பாட்டி அலமேலு.
“அதாவது உங்களை மாதிரி அன்பு இருக்கிறவர்கள் நீங்க எங்களுக்கு கொடுத்த மாதிரி தன்கிட்ட இருக்கிறதை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்கள். அன்பு இல்லாதவர்களுக்கு உதாரணம் எங்க அம்மாக்கள். உங்க உழைப்பை உறிஞ்சிகிட்டு காசு வாங்கிக் கொண்டு சோறு போட்டாங்க. வாழ்க்கையில் எந்த கஷ்டத்தையும் படவில்லை. அவங்களை கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து கெடுத்திட்டீங்க. கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பு தேவை.”
“உன்னையும் நாங்க நல்லாத்தானே வளர்த்தோம். எவ்வளவு சுதந்திரம் கொடுத்தோம். எதுக்கு எங்களை விட்டு போகணும் என்று நினைக்கிற?”
“எல்லாம் சரி தான். நல்லது எது கெட்டது எது என்று தெரியவில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வளர்ந்து இருக்கீங்க. எங்களை நீங்க வளர்க்கலை. பாட்டி தான் கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. பக்கத்து வீட்டு அக்கா எங்களுக்கு நல்லது கெட்டது சொல்லி கொடுத்தாங்க. “
“ஏன் இப்படி எல்லாம் பேசற? எங்களை விட்டு போகாதே.”என்றுக் கெஞ்சினார் கலாவின் அம்மா.
“இப்ப என்ன..பாட்டிக்கு படுத்து உறங்க இடம் வேண்டும் அதானே.. நாங்க மூன்று பேரும் சேர்ந்து கட்டித் தரோம்.”
“வேண்டாம் தாயி.. எனக்காக யாரும் கஷ்டப் பட வேண்டாம். எனக்கு எதற்கு தனி ரூம்?”
“கலா சொல்றது சரிதான். நாங்க இதை எப்பவோ செஞ்சிருக்கணும். பாவம் அம்மா.. குளிருல வெளியே படுத்துக் கிட்டாங்க. வெளியே கொசு கடி வேற.”
“அம்மா.. நீங்க உங்க அம்மாவை எப்படி நடத்தறீங்க என்று பார்த்து வளர்ந்தவ நான். அதே போல் உங்களை நான் நடத்த மாட்டேன். பயப்படாதீங்க. பாட்டி இந்த வயதான காலத்தில் கஷ்டப்படுவது எனக்கு பிடிக்கவில்லை. அதற்காகத் தான் தனி வீட்டில பாட்டியோட குடி போயி அவங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து நல்லா பார்த்துக்கப் போறேன். நீங்களும் வந்து போகலாம். உங்களிடமும் எனக்கு அன்பு உண்டு.”
மூன்று பெண்களும் “இனி அம்மாவிடம் காசு கேட்க மாட்டோம். மூன்று வேளை சாப்பாட்டை வேளைக்கு ஒருத்தரா தர்றோம்.”
“சரி அம்மா, சித்தி. எப்படியும் ரூம் கட்ட மூன்று மாதங்கள் ஆகும். அதுவரை நான் பார்த்த வீட்டில் இருக்கிறோம். அப்புறம் இங்கே வந்திடறோம்.”
அப்பொழுதும் அலமேலு “வேண்டாம்” என்று பேத்தியிடம் கூறிக் கொண்டே இருந்தார். அலமேலுவின் பெண்கள் தங்கள் தவறை உணர்ந்தார்கள். அம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். பேத்தி கலா, தனி வீடு வாடகை எடுத்துக் கொண்டு பாட்டியைத் தன்னுடன் வைத்துப் பார்த்துக் கொண்டாள்.
அன்பின் மாய வலை இது தானோ..!
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings