in ,

தாத்பரியங்கள் (சிறுகதை) – இரஜகை நிலவன்

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மருமகள்கள் இருவரும் பேசுவதை கவனிக்க மனம் மறுத்தாலும் காதில் நாரசமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

“புவனா உன் மாமனாருக்கு இந்த வயசிலேயும் வேலைக்காரிங்கிற பேரிலே கூத்தியாள் வைத்துக் கொள்ள ஆசை வந்திருக்கிறது பார்த்தாயா?” என்றாள் சுகன்யா.

“ஏன் அப்படிச் சொல்கிறாய் சுகு…?”

“பின்ன என்னடி… நம்ம மாமியார் செத்து ஒரு வாரம் தானாகிறது. ஒன்று உன் குடும்பத்தோடு வந்து தங்க வேண்டும், இல்லையெனில் எங்கள் குடும்பத்தோடு வந்து தங்க வேண்டும் அதை விட்டுவிட்டு இங்கே ஒரு வேலைக்காரியை வைத்து சமைத்துக் கொண்டு இந்த கிராமத்திலேயே தங்கிக் கொள்கிறேன் என்கிறாரே” என்றாள் சுகன்யா.

ஒடிப் போய் ஒரு அறை விடலாம் என்று கோபம் வந்தது வேலுவிற்கு, இருப்பினும் அடக்கிக் கொண்டார்.

அடுத்த அறையினுள் இன்னும் அவருடைய வாரிசுகள் மோகனும் குமணணும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

“நீ மட்டும் அப்பாவின் சொத்தில் அதிக பங்கை எடுத்துக் கொண்டவன் தானே, நீயோ அப்பாவை பார்த்துக் கொள்ள நீதான் கட்மைப்பட்டவன். அதனாலே அப்பாவை, அழைத்துக் கொண்டு போய் உன்னோடு வைத்துக் கொள்” என்றான் குமணன்.

“எனக்கு அதிக பங்கு தந்ததற்கு காரணம் நான் சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துக்கள் என்பதால் தான் புரிகிறதா… எனவே இளைய பையன் நீ வீட்டை எடுத்துக் கொண்டதைப் போல அப்பாவையும் உன்னோடு வைத்துப் பார்த்துக் கொள்” என்றான் மோகன்.

பெரியவர் வேலுவிற்கு கோபம் பீறிக் கொண்டு வந்தது. “என்னைப் பற்றி ஏன் இவர்கள் வீணாக சண்டையிடுகிறார்கள். நான் இவர்களோடு போய்த் தங்கியிருந்தா “சோறு போடுவார்களா?” என்று காவல் இருக்க வேண்டுமா? நேற்று இவர்களிடம் விவரமாக எடுத்துச் சொன்ன பிறகும் ஏன் என்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்.

இதற்கு என்ன தீர்வு கண்டாலும் நான் இவர்களோடு போய்த் தங்கப் போவதில்லை என்பது இந்த மரமண்டைகளுக்கு ஏன் புரிய மறுக்கிறது.

சரி! இவர்களுக்குள் என்ன தான் முடிவிற்கு வருகிறார்கள் என்று பார்க்கலாம் என்று எண்ணியவாறு அவர்களுடைய பேச்சு வார்த்தைகளை கவனித்து கொண்டிருந்தார்.

இப்போது மோகனும் குமணனும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த இடத்தில் புவனாவும் சுகன்யாவும் வந்து சேர்ந்திருந்தனர்.

“மாமா தான் எங்கேயும் வரமாட்டேன் என்கிறாரே அவரை இங்கேயே விட்டு விட்டு போய் விடலாமே நம்முடைய நில புலன்களையும் பார்ப்பதற்கு ஒரு ஆள் இருந்த மாதிரி இருக்கும்” என்றாள்.

“சும்மா இரு புவனா. அப்பா இப்போதே கண்பார்வை சரியாக இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள், இதிலே கையிலே ஊன்று கம்பு வேறு ஊன்றிக் கொண்டு தான் நடக்கிறார்கள். அவர்களை இங்கே தனியே விட்டு விட்டுப் போனால் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆச்சுது என்றால் யார் கவனிப்பார்கள்” என்றான் மோகன்.

“அதற்காக நம்மோடு வீட்டிலே கூட்டிக் கொண்டு வைத்துக் கொள்ள முடியுமா? ஏற்கனவே ஒற்றை அறையில் தங்கிக் கொண்டு குழந்தைகளுடன் தங்கியபடியே பிரைவேசி இல்லை எனத் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதிலே உங்கள் அப்பாவையும் தங்க வைக்க முடியுமா?”

“இனி எதாவது செய்து தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை” என்றான் குமணன்.

“அப்படியென்றால் நீங்கள் உங்கள் வீட்டிலேயே கூட்டிக் கொண்டு வைத்துக் கொண்டு சாப்பாடு போடுங்கள். என்ன செலவாகிறதோ மாதா மாதம் பாதி பணம் எங்கள் வீட்டுக்காரர் தந்து விடுவார். உங்கள் வீடு பெரிய வீடு தானே, அப்பாவிற்கு ஒரு அறையை ஒதுக்கி விட வேண்டியது தானே” என்றாள் புவனா.

சுகன்யா இடைமறித்து “அதெல்லாம் முடியாத காரியம். ஏற்கனவே குழந்தைகள் படிக்க மாட்டேன் என்கிறார்கள். இனி தாத்தா இருந்தால் அது வேறு கொண்டாட்டம். அங்கேயெல்லாம் மாமாவை வைத்து சாப்பாடு போட முடியாது” என்றாள்.

“இதற்கு என்ன தான் வழி” என்று கத்தினான் குமணன்.

“வீணாக ஏன் கூப்பாடு போடுகிறாய் ஒன்று செய்யலாம். அப்பா ஒரு மாதம் உங்களோடு இருக்கட்டும். இன்னொரு மாதம் எங்களோடு. இருக்கட்டும்” என்றான் மோகன்.

“அதுவும் சரியான வழிதான். அப்படியே செய்யலாம்” என்றான் குமணன் மனைவியின் கண்களில் எழுந்த கோபக்கனலை பார்த்துக் கொண்டே…

“நீ என்ன சொல்கிறாய்” மனைவியிடம் கேட்டான் மோகன்.

“சரி வேறு வழியில்லை. நாம் ஒரு மாதம் பார்த்துக் கொண்டோ மென்றால் அவர்கள் ஒரு மாதம் பார்த்துக் கொள்வது சரி. நம் வீட்டிலிருந்து அவர்கள் வீட்டிற்கு போகும் போது நாம் கொண்டு விட்டு வரவேண்டும். அது போல அவர்கள் வீட்டிலிருந்து நம் வீட்டிற்கு கொண்டு வரும் போது அவர்கள் கொண்டு விட வேண்டும்” என்றாள் புவனா.

“மிகச் சரி” என்றாள் சுகன்யா.

இடையில் புகுந்து பெரியவர் வேலு, “நீங்கள் என்ன சொல்லியும் நான் கேட்கப் போவதில்லை. நான் வாழ்ந்த கிராமம் இது. இங்கு எனக்கு நேரம் போவதற்கு என் நிலம், ஈரமட்டைகள், தென்னந்தோப்பு நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் அம்மாவின் காரியத்தை முடித்து விட்டு நீங்கள் கிளம்புங்கள்” என்று உறுமினார்.

“அப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்! சமைக்க வேண்டாமா?” என்றான் குமணன்.

“டேய் உன் மனைவி நான் வேலைக்காரி வைத்துக் கொண்டு சமைக்கிறேன் என்றதற்கே நான் இந்த வயதிலும் கூத்தியாள் வைத்துக் கொள்ள ஆசைப் படுகிறேன் என்கிறாள்” என்று சொல்லி முடிப்பதற்குள், “அப்படியா சொன்னாய்” என்று கத்தினான் குமணன்.

“சும்மா பூச்சாண்டி காட்டாதே! உன் மனைவியிடம் நீ எவ்வளவு பயந்து நடந்து கொண்டிருக்கிறாய் என எனக்கு நன்றாகவே தெரியும்.

என் செலவுக்கு தென்னந் தோப்பிலிருந்து வருமானம் வருகிறது. சாப்பாடு எப்படியாவது ஒரு வேலையாள் வைத்து சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு என் மீதமுள்ள நாட்களை நான் கழித்துக் கொள்வேன். இனி என்னைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று உறுதியாகச் சொல்லி விட்டு கைத்தடியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பேசினால் தப்பா? (சிறுகதை) – இரஜகை நிலவன்

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 2) – மீனாட்சி சுந்தரமூர்த்தி