எழுத்தாளர் வெங்கடேஷ் கணபதி மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கோமா மாமிக்கு ஐந்து மகன்கள். ஒருவருக்குப் பிறகு ஒருவராக எல்லா மகன்களுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும், ஒவ்வொரு மகனும் மெல்ல மெல்ல அந்த வீட்டை விட்டு வெளியேறி, தனிக்குடித்தனம் அமைத்துக் கொள்ளத் தொடங்கினர்.
மாமாவால் எதுவும் செய்ய முடியவில்லை. நாராயணன் மாமா, கோமா மாமியைச் சமாதானப்படுத்தியும், எடுத்துச் சொல்லியும், அவ்வப்போது கண்டித்தும் பார்த்தார். ஆனால், மாமி தனது பிடிவாதத்திலிருந்து ஒரு அங்குலம்கூட பின்வாங்கவில்லை.
மாமியின் அனுமதியில்லாமல் யாரும் சமையலறைக்குள் நுழைய முடியாது. சமையலறை மட்டுமல்ல, வீட்டில் ஒவ்வொரு விஷயமும் தனது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் மாமி. எல்லாவற்றையும் தன் கையில் வைத்துக்கொண்டு, மற்றவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் தீர்மானிப்பவர்.
கோமா மாமியுடன் ஒரே கூரையின் கீழ் வாழ்வது ஒரு கொடுமையாகவே இருந்தது. எந்த மருமகளாலும் அந்தச் சூழலை இரவு பகலாகச் சகித்துக்கொண்டு வாழ முடியவில்லை. கோமா மாமி தன் மகன்களின் வீட்டிற்கு வருகிறார் என்றாலே போதும், அவர்களுடைய மருமகள்களுக்கு சிம்ம சொப்பனமாகிவிடும்.
கோமா மாமி, “மகன்கள் எல்லாம் தனித்தனியாகப் போய்விட்டார்களே” என்று கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, “அப்பாடா… நம் வீட்டில் நாம்தான் மகாராணி! பொறுத்திருந்து பாருங்கள், இதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம்” என்று அவரது மனம் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தது.
சிறு வயதிலிருந்தே மாமியின் கொள்ளுப்பாட்டியான அம்மாளு பாட்டி, “பத்து பசை பார்த்துத்தான் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும்” என்பதை மாமியின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருந்தார். எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல், சுற்றியிருப்பவர்களை நன்றாகக் கவனித்து, அவர்களைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.
நாளாவட்டத்தில், மாமிக்கு “பத்து பசை” என்பது ஒரு பித்தாகவே மாறிவிட்டது என்றால் அது மிகையாகாது.
உணவைத் தயவு தாட்சண்யமின்றி வீணாக்குவது, தேவைக்கு அதிகமாகச் சாதத்தை வடித்துக் கொட்டுவது போன்ற பழக்கங்கள் மாமிக்கு இயல்பாகவே மாறிவிட்டன. மாமியின் மூத்த மகன் ஸ்ரீதர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மாமி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
ஒரு திருமண நிகழ்ச்சி என்றாலே மாமிக்கு, தனது கைப்பையில் இருந்து கட்டுக்கட்டாக நோட்டுகளை எடுத்து அனைவருக்கும் காண்பிப்பது ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது. எல்லோரும் மாமியிடம் நிறையப் பணம் இருக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.
இந்த லட்சணத்தில், தனது நாட்டுப்பெண்களிடம், “என் கண்ணாடியைப் பார்த்துக்கொள்… என் கைப்பையைப் பார்த்துக்கொள்…” என்று அதிகாரம் வேறு காட்டுவார். மாமிக்கு சாஸ்திர சம்பிரதாயங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால், எல்லாம் தெரிந்தவர் போல காட்டிக் கொள்வதில் மட்டும் அவருக்கு நிகர் அவரே!
தனது பிள்ளைகள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால், அதில் மூக்கை நுழைக்காமல் மாமி இருக்கமாட்டார்.
“இதை இப்படித்தான் வை… அதை அப்படித்தான் பண்ணு… இந்த வாத்தியாரைக் கூப்பிடு…” என்று ஒவ்வொன்றிலும் தலையிட்டு அதிகாரம் செய்வார். ஆனால், அதே விசேஷத்தில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றால் மட்டும், அது மாமிக்குக் கசக்கும் வேப்பங்காயாகிவிடும்.
இதுதான் நிஜம்!
மாமியின் ஓட்டை அதிகாரத்தைச் சகித்துக்கொள்ளும் தன்மையை, அவருடைய பிள்ளைகளும் மருமகள்களும் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தார்கள். ஒரு தடவை, சுமங்கலி பிரார்த்தனை நடந்து முடிந்திருந்தது. பால் பாயசம் நிறைய மிஞ்சியிருந்தது. ஆனால், மாமியோ அதையெல்லாம் எடுத்து குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டார். இதைப் பார்த்த மாமியின் மூத்த நாட்டுப்பெண் பத்மாவின் வயிறு எரிந்தது.
“இப்படி ஒரு பெண்மணி இருப்பாளா? யாரோ சம்பாதிக்கிறார்கள். இவர் என்னவென்றால், ஊதாரித்தனத்தின் எல்லையைத் தாண்டியது மட்டுமல்லாமல், பாயசத்தையே குப்பைத் தொட்டியில் கொட்டுகிறாரே!” என்று அவளுக்குள் கோபம் கொப்பளித்தது.
மாமிக்கு எங்கிருந்து இவ்வளவு ஆணவம் வந்தது?
மாமி வெளுப்பாக இருப்பாரே தவிர, அவரை அழகு என்று சொல்லிவிட முடியாது. ஐந்து பிள்ளைகளைப் பெற்றவள் என்ற மதர்ப்பு வேறு அவருக்குள் இருந்தது.
அதோடு, நாராயணன் மாமாவோ மாமியிடம் காதல் வயப்பட்டு இருந்தார். அவர்களுடைய தாம்பத்யம் ஒரு “சூப்பர் ஹிட்” என்றுதான் சொல்ல வேண்டும்!
மாமியின் அப்பா கோவில்பட்டியில் அந்திக்கடை வைத்திருந்தவர். தினமும் சாயங்காலம் பஜ்ஜி, போண்டா, இட்லி, வடை என்று வியாபாரம் தூள் பறக்கும். எட்டு பேருடன் பிறந்த மாமி, தன் தங்கைகளையும் தம்பியையும் விட்டுக்கொடுக்கவே மாட்டார். உடன்பிறந்தவர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்காமல், அவர்களைக் காப்பாற்றி நிற்பது மாமியின் இயல்பாகவே இருந்தது. ஆனால், அவர்களிடம் காட்டிய கரிசனத்தில் பாதிகூட தனது நாட்டுப்பெண்களிடம் மாமி காட்டியதில்லை.
இப்படியே போய்க்கொண்டிருந்த மாமியின் வாழ்க்கையில் ஒருநாள் இடி விழுந்தது. மாமிக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்தது.
நடைப்பயிற்சிக்குச் செல்ல மாட்டார். அதிலும் ஒரே பிடிவாதம்! வாயில் கட்டுப்பாடு என்பதே கிடையாது. இனிப்புகளைக் கண்டால் போதும், ஒரு கை பார்த்துவிடுவார்.
பிள்ளைகள் ஏதாவது அறிவுரை சொன்னால், மாமி உடனே, “என்னடா, அம்மாவுக்கே புத்தி சொல்லுற புத்தி உனக்கு வந்திருச்சோ?” என்று மறுகேள்வி கேட்பார்.
ஒருநாள் மாமிக்கு ஸ்ட்ரோக் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருடைய தங்கைகளும் தம்பியும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. மருமகள்கள்தான் மாமியைக் கவனித்துக்கொண்டார்கள். அதிலும், கடைசி நாட்டுப்பெண் லலிதா, மாமியாரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார்.
ஆனால், மூன்று மாத சிகிச்சையும் பலனளிக்காமல், மாமி ஒருநாள் கண்ணை மூடினார்.
அவருடைய கடைசிக் காரியங்களில் கலந்துகொண்ட தம்பியும் தங்கைகளும் ஒப்பாரி வைத்தனர்.
“அக்கா… நீ போயிட்டியா? எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போயிட்டியா, அக்கா!”
அவர்கள் கதறிய கதறலைப் பார்த்து ஊரே வேடிக்கை பார்த்தது.
“இப்படி ஒரு பாசப்பறவைகளா…?”
ஆனால், மாமியின் ஆன்மா சோகத்தில் ஆழ்ந்திருந்தது.
“நான் உயிரோடு இருந்தபோது ஒருமுறையாவது என்னைப் பார்க்க வராத நீங்கள், இப்போது மட்டும் இப்படி கதறுகிறீர்களே… நான் உங்களுக்காக எவ்வளவு செய்தேன்! உங்களை விட்டுக்கொடுக்காமல் எத்தனை முறை நின்றேன்! ஆனால், என் கடைசி நாட்களில் என்னுடன் இருந்தது என் மருமகள்கள்தானே… குறிப்பாக லலிதா…”
மாமியின் ஆன்மாவுக்கு அப்போது ஒரு உண்மை புரிந்தது.
பாசம் என்று நாம் நினைப்பது எல்லாம் பாசமாக இருப்பதில்லை. சில நேரங்களில், நாம் உயிரோடு இருக்கும்போது நம்மைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்பவர்கள்தான் உண்மையான சொந்தங்கள்.
எழுத்தாளர் வெங்கடேஷ் கணபதி மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings