in ,

முடியாத முடிவு (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தோசையை எடுத்துப் போட்டு சட்னி கொஞ்சம் ஊற்றி தட்டை எடுத்துக்கொண்டு மகளைக் கூப்பிட்டபடியே நடந்த தங்கம், எதேச்சையாய் வாசல் பக்கம் பார்க்க, அங்கே ஒரு கார் வந்து வெளிகேட்டை அடைப்பது போல நிற்பதைப் பார்த்துவிட்டாள்.

‘ நமது வீட்டு வாசலில் காரா… யாராக இருக்கும்… ‘ என்று அதிசயித்தபடியே தட்டை அப்படியே அருகில் இருந்த நாற்காலில் வைத்துவிட்டு ஆர்வத்துடன் வேகமாய் நடந்தாள். காரில் ராஜாத்தி அம்மாள் இருப்பதைக்கண்டு இன்ப அதிர்ச்சி மேலோங்கியது.

‘ அம்மா, நீங்களா… என்னம்மா, இந்த நேரத்துல, அதுவும் எங்க வீட்டுக்கு… ‘ என்று தடுமாறிய தங்கம், ‘ வாங்கம்மா… ‘ என்று வரவேற்றாள்.

ராஜாத்தி அம்மாள் காரைவிட்டு இறங்கி வந்தார்கள். காரை திரும்பவும் தங்கம் பார்ப்பதைக் கவனித்த ராஜாத்தி, ‘ நான் மட்டும்தான் வந்தேன்… ‘ என்றுவிட்டு, ‘ சரி, உள்ளே போலாமா… பேச நேரமில்ல… சீக்கிரம் வா… ‘ என்று அவளது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே நடந்தார்கள்.

நமது வீட்டுக்குள் நமது முதலாளியம்மாவா என்ற சந்தோஷ மிகுதியில் தங்கத்துக்கு பேச வாய் வரவில்லை. உள்ளே அவளை கூட்டிக்கொண்டு வந்த ராஜாத்தி தனது கையில் கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தார்கள்.

சாப்பாட்டுத் தட்டு அருகில் அப்படியே இருக்க, வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த இனியாவிடம், ‘ செல்லம்… நீ எழுதினது போதும், தோசை ஆறியே போயிடும், எடுத்துக்கிட்டு உள்ளே போயி சாப்பிடு… பாட்டி வந்திருக்காங்க… நான் கொஞ்ச நேரம் அவங்களோட பேசிட்டிருக்கேன்… ‘ என்றுவிட்டு, நாற்காலியை சேலை முந்தானையால் துடைத்துவிட்டு, ‘ அம்மா நீங்க சேர்ல உட்காருங்கம்மா… ‘ என்றாள்.

அதற்குள் நாற்காலியில் உட்கார்ந்துவிட்ட ராஜாத்தியம்மாள் ஒரு மூச்சை இழுத்துவிட்டு, ‘தங்கம்… இது வெளீல யாருக்கும் தெரியக் கூடாது… ‘ என்றுவிட்டு, உடனே குரலையும் தாழ்த்திக்கொண்டு, ‘  இதுல நகைகள் இருக்கு தங்கம்… அய்யாவோட ஆபீஸ்ல ரெய்டு நடக்குது… அவங்க நம்ம வீட்டுக்கு வரவும் சான்ஸ் இருக்குது.  அதான் பணம் நகைகளை பத்திரப் படுத்திக்கிட்டிருக்கோம்… இந்தப் பெட்டியை யார்கிட்ட கொடுத்துவைக்கலாம்னு யோசிச்சப்போ உன் முகம்தான் மனக்கண்ணு முன்னாடி வந்தது… அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்… அதுக்கு காரணமும் இருக்கு. நார்மலா வீட்டுக்கு ரெய்டு வந்தா… சொந்தக்காரங்க, டிரைவர், தோட்டக்காரங்கனு நெருக்கமானவங்க எல்லாரையும் விசாரிக்கவும் செய்வாங்க… அவங்க வீட்டுக்குப் போயி தேடவும் செய்வாங்க… நீதான் வேலையை விட்டு நின்னு ரெண்டு வருஷம் ஆச்சே… அதனால் உன்னைப் பத்தி அவங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை… இதுல நகைகள் இருக்கு. பத்திரம்… ரொம்பப் பத்திரம்… இதை எங்கே வைப்பியோ… எப்படி வைப்பியோ எனக்குத் தெரியாது… ஆனா பத்திரமா இருக்கணும்… ரகசியமா இருக்கணும்… நான் எப்போ வந்து கேட்கறேனோ அப்போ என்கிட்டே கொடுத்தா போதும்…  சரியா… ‘ என்றவள், ‘ ஸாரி தங்கம்… நேரமாச்சு… நான் கிளம்பறேன்… ‘ என்று படபடத்தபடி எழுந்துகொண்டாள்.

ராஜாத்தி அம்மாள் அவசரமாக எழவும், பதறிய தங்கம், ‘ அம்மா கொஞ்சம் இருங்கம்மா… முதல் முதலா நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க… ஒரு டீ காபி கூட சாப்பிடாம போனா எப்படி… இந்த நேரம் பார்த்து வீட்டுல  பால் இல்லை… கொஞ்சம் இருங்கம்மா… பக்கத்து கடைலேர்ந்து ஒரு கலராவது வாங்கிட்டு வந்துடறேன்… ‘ என்றுவிட்டு ஓட எத்தனித்தாள்.

அதற்குள் அவளது கையைப் பிடித்திழுத்த ராஜாத்தி, ‘ பரவால்ல தங்கம்… அதுக்கெல்லாம் இப்போ நேரமில்ல… நான் கிளம்பறேன்… ‘ என்றபடி நான்கு அடிகள் எடுத்து வைத்துவிட்டு ஏதோ நினைத்துக்கொண்டது போலத் திரும்பி, ‘ பத்திரம் தங்கம்… பெட்டி பத்திரம்… ‘ என்றுவிட்டு திரும்பி வேகமாய் நடந்தாள். காரி ஏறி உட்கார்ந்து அப்படியே டாட்டாவும் காட்டிவிட்டு பறந்தே விட்டாள்.

இன்னும் அந்த பதட்டம் குறையவில்லை தங்கத்துக்கு. மகளை எட்டிப் பார்த்தாள்.  அவள் தோசையை சாப்பிட்டு முடித்திருக்க ஓடிப்போய் அவளை தட்டிலேயே கைகழுவ வைத்து விட்டு தட்டைக்கொண்டு போய் குழாயடியில் போட்டுவிட்டு திரும்பி ஓடிவந்தாள்.

டீ.வி. ஸ்டேன்ட் மேல் இருந்த பெட்டியைப் பார்த்தவளுக்கு நெஞ்சு அடித்துக் கொண்டது. ‘ எவ்வளவு நகைகள் இதுக்குள்ளே இருக்கோ… நம்மை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைச்சிட்டு போறாங்களே நம்ம அம்மா…  இதை எங்கே ஒளித்து வைப்பது… ‘

யோசனையையும் மீறி பழைய நினைவுகள் நிழலாய் ஓடவாரம்பித்தன.

சுமார் ஆறு வருடங்கள் அங்கே வேலை செய்தாள் தங்கம்.  அவர்களது பையனுக்கு கல்யாணம் ஆனதும் புது மருமகள் வந்த பிறகு கொஞ்ச காலம் எல்லாம் அமைதியாக ஓடியது. ஆனால் நாளடைவில் தங்கத்தை அவளுக்குப் பிடிக்காமல் போக திடீர் திடீரென்று குற்றம் குறைகள் கண்டுப் பிடித்து ஏதாவது சொல்லுவதும் முனகுவதுமாக இருந்துவிட்டு திடீரென்று ஒரு நாள் வேறொரு வேலைக்காரியை அமர்த்திக் கொண்டாள் மருமகள்.

ஆனால் அதற்குப் பிறகு ஒரே வருடத்தில் மகனும் மருமகளும் வெளிநாட்டுக்குப் போவிட்டது தனிக்கதை. பிறகு இவளும் போய், அம்மாவிடம் மறுபடியும் வேலைக்கு வரலாமா என்று கேட்கவுமில்லை.

ஐயாவுக்கு அரசாங்க ஆபீசில் வேலை.  அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால் ராஜாத்தி அம்மாள் அப்படியே தலைகீழ். ரொம்பவும் பேசுவார்கள்.  

மகன் ஒரு கம்பயூட்டர் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தார்.  கல்யாணம் நடந்தது. வீட்டுக்கு வந்த மருமகளும் அதே கம்ப்யூட்டர் கம்பெனியில்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாக அம்மா சொல்லியிருக்கிறார்கள். சில மாதங்களிலேயே கம்பெனிகாரர்களே இருவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் என்று ஒருமுறை ராஜாத்தி அம்மாள் கடைவீதியில் பார்த்தபோது சொன்னார்கள்.

அப்போது தங்கம் மொபெட்டைப் பிடித்துக்கொண்டுதான் நின்றிருந்தாள். அதைப் பார்த்த ராஜாத்தி அம்மாள்,  ‘ வண்டி நல்லா ஓடுதா… ‘ என்றார்கள்.  சிரித்துக்கொண்டே, ‘ ஓடுதுமா… எண்ணெய்தான் ரொம்பக் குடிக்குது… ‘ என்றாள் தங்கம்.

தங்கம் நான்கைந்து வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்தாள்.  அதில் ராஜாத்தி அம்மாளின் வீடுதான் ரொம்ப தூரம்.  ஒவ்வொரு சமயம் லேட்டாக வருவாள் தங்கம். அதைக் கவனித்த ராஜாத்திதான் லேட்டுக்கான காரணத்தை விசாரித்துவிட்டு, தனது வீட்டில் ரொம்ப நாட்களாக உபயோகிக்காமல் நின்றிருந்த அந்த மொபெட்டை ஓவராலிங் செய்து அவளிடம் கொடுத்தார்கள்.  அந்த வண்டிதான் அது.

அவர்களுக்கு அவ்வளவு இளகிய மனது.  நல்லவேளை வீட்டு வேலையை விட்டு நிறுத்தும்போது, ‘ எங்கள் வண்டியை கொடுத்துவிட்டு நின்றுகொள்… ‘ என்று அவர்கள் சொல்லவில்லை.  இவளும் அதுபற்றி கேட்கவும் இல்லை.  இப்போது நம்மேல் எவ்வளவு அக்கறை இருந்தால் அம்மாள் மறக்காமல் கேட்டிருப்பார்கள் என்று நினைத்து பெருமிதம் கொண்டாள்.

வ்வொரு நாளைக்கு அந்த நகைப்பெட்டி ஞாபகத்துக்கு வரும்.  அதை திறந்து கூட பார்க்கவில்லையே என்ற எண்ணமும் வரும். அத்துடன் அம்மாள் எப்போது வந்து கேட்பார்களோ என்ற யோசனையும் வரும்.

தங்கமும் அது பற்றி யாரிடமும் வாய் திறக்கவில்லை.  ஒருமுறை கூட அவள் பத்திரப்படுத்தியிருந்த இடத்தில் இருந்து அதை வெளியே எடுக்க முற்பட்டதும் இல்லை.

மாதங்கள் மட்டும் ஓடிக்கொண்டே இருந்தன.  ஆனால் ராஜாதியம்மாள் வீட்டுக்கு வரவும் இல்லை. அவர்களிடமிருந்து தகவலும் வரவில்லை. 

ஒருநாள் திடீரென்று இடியாய் வந்து விழுந்தது அந்தச் செய்தி, ‘ ராஜாத்தி அம்மாளும் அவரது கணவரும் ஒருவாரத்துக்கு முன்னதாக ஒரு கார் ஆக்ஸிடெண்ட்டில் இறந்துவிட்டார்கள் ‘ என்று.

‘ ஐயோ. ஐயோ… ‘ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓடினாள், தங்கம்.

அவர்களது வீடு அமைதியாக இருந்தது. மகனும் மருமகளும் இருந்தனர். மற்ற சில உறவினர்களும் இருந்தனர். அவர்களது வேலைக்காரி மூலம் லாரி ஆக்ஸிடெண்ட்டில் அம்மாவும் அய்யாவும் இறந்துவிட போலீஸ் கேஸ் நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டாள் இவள். அவர்களது மகனிடம் துக்கம் விசாரித்தாள். ஆனால் நகைப் பெட்டிப் பற்றி மட்டும் பேசவே இல்லை.

வீட்டுக்கு வந்ததும் மண்டைக் குழம்பியது, இவளுக்கு. ‘நான் எப்பொழுது வந்து கேட்கறேனோ அப்பொழுது என்னிடம் கொடுத்துவிடவேண்டும்… வேறு யாருக்கும் தெரியவும் கூடாது… ‘ என்று சொல்லித்தான் பெட்டியைக் கொடுத்தார்கள்.  அம்மாவோ இப்போது உயிருடன் இல்லை.  அது ரகசியம் என்று அம்மா சொன்னதால் வேறு யாரிடமும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. யாரும் வந்து கேட்கப் போவதுமில்லை. பேசாமல் நாமே அதை வைத்துக்கொள்ளலாமா…

அது அம்மாவுக்கு செய்யும் துரோகமாகிவிடுமோ…  

அவளால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

இப்படித்தான் கதையை முதலில் முடித்தேன். பிறகுமுடிவை வேறு விதமாக மாற்றியமைத்து பார்க்கலாமே என்று தோன்ற வேறொரு முடிவையும் வைத்து எழுதி உள்ளேன்.  விரைவில் அது.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கல்லூரிக் காலம் (சிறுகதை) – பவானி உமாசங்கர்

    முடியாத முடிவு (சிறுகதை – வேறொரு முடிவுடன்) – நாமக்கல் எம். வேலு