in ,

மனைவியின் அறிவுரை (சிறுகதை) – மகாராஜா பரமேஸ்வரி

ழுத்தாளர் மகாராஜா பரமேஸ்வரி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அப்பா, (ஆதி) கவலையுடன் இருப்பது போல், பள்ளிக்கூடம் விட்டு வந்த மகள்களுக்கு தெரிந்தது.

மூத்த மகள் ஆதினி, அம்மாவிடம் (ஆதிரை) போய் ” அப்பா  , ஏதோ ஒரு கவலையில் இருப்பது போல் தெரிகிறது…?” என்று கேட்க, அருகில் சின்ன மகளும் இருந்தாள்.

அம்மா ” என்னன்னு தெரியலை.!, சரி சரி நீங்க இரண்டு பேரும்,  முகம் கை கால் கழுவி விட்டு, உங்கள் சீருடையை மாற்றி விட்டு வாருங்கள், நான் சூடாக தேநீர் போட்டு வைக்கிறேன் …” என்று சொல்லிக்கொண்டே தேநீர் போட தயார் ஆனார்.

அதன்படி, மகள்களும், சீருடையை மாற்றி விட்டு வந்தார்கள். அதற்குள் அம்மாவும் தேநீரை தயாரித்து கொண்டு வந்தார். அம்மா , தேநீருக்கு நொறுக்கு தீனியாக ஒரு சிற்றுண்டி செய்து இருந்தார்.   அதைப் பார்த்ததும், உயர் நிலை பள்ளியில் இறுதி வகுப்புக்கு முந்தைய வகுப்பு படிக்கும் இளைய மகள் ஆழினி  ” ஆ… எனக்கு பிடித்த சிற்றுண்டி…” என்று சொல்லி அந்த சிற்றுண்டியை எடுத்து கடித்தாள்.

தங்கச்சி , ஆச்சரியமாக சொன்ன சிற்றுண்டி என்ன என்று, தொலைக்காட்சியை இயக்க சென்ற, மேல்நிலை பள்ளி படிப்பை இறுதி ஆண்டு படிக்கும் மூத்த மகள் ஆதினி பார்த்தாள்.

அவளும் தொலைக் காட்சியை இயக்கி விட்டு வந்து ” இந்த சிற்றுண்டி எனக்கும் பிடிக்கும்…!” என்று சொல்லி விட்டு அவளும் அந்த சிற்றுண்டியை எடுத்து கடித்தாள்.

சின்ன மகள் ” நல்லா இருக்கு என்று எல்லாத்தையும் நீயே தின்று விடாதே…” என்று தன் அக்காவிடம் செல்ல சண்டை போட, தன் மகள்களின் செயல்களை யெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அப்பா, தன் கவலை மறந்து லேசாக புன்னகை செய்தார்.

அதைப் பார்த்த அம்மா ” இந்தாங்க…” என்று அந்த சிற்றுண்டியை கணவரிடம் கொடுக்க, கணவரும் அதை வாங்கி கடித்தார்.

அம்மா, அனைவருக்கும் தேநீரை ஆற்றிக் கொடுத்து விட்டு, அவரும் சிற்றுண்டியை கடித்துக் கொண்டே, தேநீரை பருகினார்.

அப்பாவும், தேநீரை பருகி கொண்டு இருக்கும் போது, அவருக்கு ஒரு அழைப்பு வர, அழைப்பை ஏற்ற அவர் ” ம்ம், சொல்லுங்க” என்றதும்,

எதிர் முனையில் இருந்தவர் ” இன்று தானே முடிவுகள்? முடிவுகள் எப்படி வந்தது, உங்களுக்கு சாதகமாகவா? அல்லது பாதகமாவா?” என்று கேட்க,

ஆதி” பாதகம் தான்… ” என்று விரக்தியுடன் சொல்ல, 

எதிர் முனையில் இருந்தவர் ” ஓ.அப்படியா…!  ” என்று அதிர்ச்சியாக கேட்க,  ஆதி ” நான் பிறகு பேசுகிறேன்”என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.

ஆதி, அழைப்பில் பேசும்போது  விரக்தியுடன் பேசியதை கவனித்த, மனைவி ஆதிரை, ” என்னங்க, ஒரு மாதிரியாக இருக்கீங்க…?” என்க,

ஆதி ” ஒன்னுமில்லை” என்று மீண்டும் விரக்தியுடன் சொன்னார்.

இதை கவனித்த, மூத்த மகள் ஆதினி  ” என்ன பிரச்சினைப்பா…?” என்க,

தன் மகள் கேட்டதும், ” இந்த முறையும் தோல்வி தான்” என்றார்.

இதைக் கேட்ட ஆதிரை” அதான், ஒரு மாதிரி இருக்கிங்களா? ” என்று சொல்லி விட்டு, “இந்த முறை இல்லை என்றால் அடுத்த முறை வெற்றி பெறுவீர்கள் “என்று கணவருக்கு ஆறுதல் சொல்ல,

அதற்கு ஆதி” ஒரு முறை என்றால் பரவாயில்லை…” என்று சொல்லி பேச்சை இடையில் நிறுத்த, கணவரே பேசட்டும் என்று ஆதிரை அமைதியாக இருக்க, ” இதோடு ஆறு போட்டிகளில் தொடர் தோல்வி ” என்று வருத்தமாக சொன்னார்.

அப்பாவின் வருத்தம் கலந்த வார்த்தையை கேட்ட இரண்டு மகள்களும்”பரவாயில்லைப் பா, இந்த முறை இல்லை என்றால், அடுத்த முறை வெற்றி கிடைக்கும் “என்று இருவரும் ஒன்று போல் சொல்ல,

ஆதி”ம்ம் “என்று தலையாட்டினார்.

மனைவி ஆதிரை ” உங்கள் திறமை மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா…?” என்று ஆதரவும் ஆறுதலும் கலந்தவாறு சொல்ல,

ஆதி” நம்பிக்கை இருக்கு. ஆனால் நான் போட்டியில் கலந்து கொண்டு எழுதிய அனைத்து சிறுகதைகளும் தேர்வாக வில்லை. அனைத்தும் சமூக கருத்து நிறைந்த கதைகள் தான்…” என்று வருத்தமாக சொல்ல,

ஆதிரை ” வெற்றி பெற்ற கதைகள் இதைவிட சமூக கருத்துகள் நிறைந்த கதையாக இருக்கலாம்…” என்று சொல்ல ,

அப்போது ஆதினி ” எதனால் உங்கள் கதை தேர்வாக வில்லை?என்று நினைக்கிறீர்கள் அப்பா “என்று கேட்க,

ஆதி ” தெரியவில்லை” 

இளைய மகள் ஆழினி” நீங்கள் ஏற்கனவே கதை எழுதுவீங்களே, அந்த தளத்தில் தான் தோல்வியா?” என்று கேட்க,

ஆதி” இல்லை ” என்றார்.

இப்போது ஆதினி” அப்படின்னா, நீங்கள் எதில் கலந்து கொண்டு சிறுகதை எழுதினீங்க?”என்க,

ஆதி” எல்லாமே நான் புதிதாக கலந்து கொண்ட தளங்கள் தான் “என்றார்.

ஆதினி ” எல்லாமே புது தளங்களா?”

ஆதி ” இல்லை. எல்லாமே, ஏற்கனவே சிறுகதை போட்டி நடத்தும் தளங்கள் தான். நான் தான் அந்த தளங்களுக்கு புதிது ” என்று சலிப்புடன் சொன்னார்.

மனைவி ஆதிரை ”  ஏன் சலிப்பாக சொல்றீங்க?” என்று கேட்க,

ஆதி ” நான் எழுதிய கதைகளில் இரத்த தானம் மற்றும் சமூக சிந்தனைகள் பற்றிய கருத்து தான் இருந்தது. அதை தேர்வு செய்யவில்லை என்ற போது, வெறுப்பு தான் வருகிறது”என்றார்.

மனைவி ஆதிரை ” சரிங்க, உங்கள் பக்கம் ஏதாவது தவறு இருக்கா? ” என்று கேட்க,

அதற்கு ஆதி ” புரியவில்லை…! , நீ என்ன கேட்கிற?” என்க,

ஆதிரை ” இல்லைங்க, அந்த போட்டிகளில் உள்ள விதிமுறைகள் மீறி கதை எழுதினீர்களா? ஏனெனில் உங்கள் கதை நல்ல கருத்துள்ள கதையாக இருந்தாலும், விதிமுறைகள் மீறி இருந்தால் கூட உங்கள் கதை தேர்வாகமல் இருக்கலாம்ல…” என்க,

அதற்கு ஆதி ” எல்லாம் விதிமுறைகள்படி தான் எழுதினேன் என்று” ஒவ்வொரு தளத்தின் போட்டி விதிமுறைகளை எடுத்து காட்டினார்.

அதை ஒன்றொன்றாக, மனைவியும், மகள்களும் பார்த்தார்கள். அதில் உள்ள விதிமுறைகள் படி, ஆதி அனுப்பிய கதைகளை பார்த்தார்கள். அப்போது , ஆதிரை  ஒரு தளத்தில் தன் கணவர் பக்கம் உள்ள தவறை கண்டு பிடித்தார்.  ஆதினியும்  ஆழினியும் ஒரு தளத்தில் தன் அப்பா பக்கம் உள்ள தவறை அவர்களும் கண்டு பிடித்தார்கள்.

முதலில் மகள்கள், தன் அப்பாவிடம், அவரின் தவறை  ” அப்பா, இந்த தளத்தின் விதிமுறைகள் படி, உங்கள் கதை அவர்கள் சொன்ன கடைசி தேதிக்கு மறுநாள் தான் அங்கே போயிருக்கு”என்று சொல்ல,

அதற்கு ஆதி ” அப்படியா… !” என்று அதிர்ச்சியாக கேட்க,

ஆதினி ” ஆம் அப்பா, நீங்கள் அந்த தளத்துக்கு உங்கள் கதையை மின்னஞ்சலில் அனுப்பிய தேதியில், அங்கே போகவில்லை. அதன் பிறகு இரண்டு நாள்கள் கழித்து, அதாவது போட்டி தேதி முடிந்த மறுநாள் அன்று தான் போயிருக்கு ” என்று மின்னஞ்சல் பெறுதல் நேரத்தையும்,  தேதியையும் சுட்டி காட்டினாள்.

மகள் சுட்டி காட்டியதை பார்த்து விட்டு ” அட ஆமாம்…!”என்று சொல்லி விட்டு எதோ யோசனையில் மூழ்கி விட்டு  ” இப்போது நினைவுக்கு வந்து விட்டது. அன்று கதையை அனுப்பும் போது என் கைப்பேசியில் உள்ள இணைய இருப்பு தீர்ந்து விட்டதால், உங்கள் கைப்பேசி பகிரலை மூலம் தான் கதையை அனுப்பினேன். அப்போ அது என் கைப்பேசியில் இருந்து அன்று போகவில்லையா?” என்று கேட்க,

ஆதினி” ஆம் அப்பா, அது அன்று போகாமல், இரண்டு நாள்கள் கழித்து தான் போய் இருக்கு “என்று,  அந்த தளத்துக்கு கிடைத்த தேதியை காட்டினாள்.

ஆதி , அதைப் பார்த்து” ஆமாம்… என் தப்புத் தான்” என்றார்.

அதேபோல் மனைவி ஆதிரையும்  ” இந்த தளத்தில், கதையை ஒருங்குறி முறையில் அனுப்ப சொல்லி விதிமுறைகள் உள்ளது ஆனால் நீங்கள் அனுப்பியது ஒருங்குறி முறையில் அல்ல ” என்று அவர் கண்டு பிடித்த தவறை சுட்டிக் காட்டினார்.

ஆதியும் ” அப்படியா…! “என்று கேட்க,

ஆதிரையும் ” ம்ம், இந்த கதையை நீங்கள் எழுதும் போது நான் உங்கள் அருகில் தான் இருந்தேன். இந்த கதையை நீங்கள் உங்கள் பழைய கைப்பேசியில் எழுதினீங்க, அந்த கைப்பேசியில் உள்ள எழுத்துக்கள் ஒருங்குறி முறையில் வராது, மேலும் நீங்கள் அந்த கைப்பேசியில் இருந்து தான் கதையை அனுப்பியிருக்கீங்க , அதனால், அந்த தளத்துக்கு உங்கள் கதை போயிருக்கு. ஆனால் அவர்களுக்கு அந்த கதையை திறந்து படிக்க முடியாது ” என்று சொல்ல,

ஆதியும் சில விநாடிகள் யோசித்து விட்டு ” ஆமாம். இந்த தளத்திற்கு என் பழைய கைப்பேசியில் இருந்து தான் கதையை அனுப்பினேன்”என்று  அசடு வழிந்தது போல் சிரித்தார்.

ஆதிரை ” தவறை எல்லாம் உங்கள் மீது வைத்து கொண்டு, நீங்கள் மற்றவர்கள் மீது குறையை கண்டு பிடிக்கீங்க”என்று நக்கலாக சிரிக்க,

மனைவி நக்கலாக சிரித்ததும் லேசாக கோபம் வர, ” ம்ம் சரி, இது இரண்டும் என் தவறாகவே இருக்கட்டும். மற்ற நான்கு தளங்களில் என் கதை ஏன் தேர்வாக வில்லை. அவர்களுக்கு சமூக கருத்துகள் பிடிக்க வில்லையா?” என்று உரக்க கேட்க,

உடனே ஆதிரை, ” உங்களிடம் ஒரு கேள்வி” 

ஆதி ” என்ன கேள்வி?”  என்று அழுத்தமாக கேட்க,

ஆதிரை ” நீங்கள் வேலை செய்யும் கடைக்கு, புதியதாக ஒருவர் வேலைக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் கடையின் நிர்வாகி, உங்கள் கடையில் வேலை செய்பவர்ளை சுழற்சி முறையில் பதவி உயர்வு செய்யலாம் என்று வைத்துக் கொள்வோம். பழையவர்கள் எல்லோரும் நீண்ட நாள்களாக, பொறுப்பானவராகவும், நல்ல உழைப்பாளி யாகவும் இருக்கீங்க. புதிதாக வந்த அவர், பழையவர்களை விட, மிகுந்த பொறுப்பானவராகவும், நல்ல உழைப்பாளி யாகவும் இருந்தால், அவருக்கு பதவி உயர்வு கொடுக்கலாமா?” என்று கேட்க,

அதற்கு ஆதி  வேகமாக ” அது எப்படி கொடுக்க முடியும்? , கொடுக்கவும் கூடாது ” என்க,

அதற்கு ஆதிரை ” ஏன் கொடுக்க கூடாது? , அவர் தான் உங்கள் எல்லோரையும் விட மிகவும் பொறுப்பாகவும், நல்ல உழைப்பாளி யாகவும் இருக்காரே, அதை வைத்து கொடுக்கலாமே?”

உடனே ஆதி ” அவர் என்ன தான் கடுமையான உழைப்பாளி யாகவும் இருந்தாலும், அவருக்கு பதவி உயர்வு கொடுத்தால், நாங்கள் அந்த கடையில் நீண்ட நாள்களாக பொறுப்பாக வேலை செய்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும். மேலும் எங்களுக்கு அங்கு அனுபவம் அதிகம். புதிதாக வந்தவர் ஆர்வத்தில் அப்படித்தான் இருப்பார். போக போக, அதே ஆர்வமும் ஈடுபாடும் இருக்காது ” என்றார்.

உடனே ஆதிரை ” ஓ அப்படியா.! அப்ப புதிதாக வந்தவர், நாம் மற்ற வேலைக்காரரை விட, இவ்வளவு பொறுப்பாக பார்த்தும் நமக்கு பதவி உயர்வு கிடைக்க வில்லை என்று வருத்தத்தில் வேலை செய்தால், அவருக்கு அங்கே பதவி உயர்வு எப்போது கிடைக்கும்?”

உடனே ஆதி ” அவருக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்றால், அவர் அங்கேயே தொடர்ந்து மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் உழைப்பையும் அதிகரித்தால் சீக்கிரம் பதவி உயர்வு கிடைக்கும் ” என்றார்.

மனைவி ” இது தாங்க உங்களுக்கு வேண்டும். நீங்கள், அப்போது சொன்னீர்களே, நான் நல்ல சமூக சிந்தனை கதை எழுதியும் என் கதை தேர்வாகவில்லை என்று வருந்துனீர்களே, அதை அப்படி நினைக்காமல், நீங்கள் தொடர்ந்து அதே தளங்களில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு இன்னும் சிறப்பாக சமூக சிந்தனைகள் பற்றிய கதைகள் எழுதினால் கண்டிப்பாக உங்களுக்கு பதவி உயர்வு, அதான் வெற்றி கிடைக்கும் ” என்று கணவனுக்கு  அன்பான அறிவுரை வழங்கினார்.

மனைவியின் அன்பான அறிவுரையை கேட்ட பிறகு, தன் பக்கம் உள்ள தவறை உணர்ந்து  முன்பை விட இன்னும் சமூக சிந்தனை கொண்ட கதைகளை எழுத ஆரம்பித்தார்.

ழுத்தாளர் மகாராஜா பரமேஸ்வரி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    துப்பறிய ஆசை (சிறுகதை) மகாராஜா பரமேஸ்வரி

    நிழல் நிஜமாகிறது (சிறுகதை) – தெனாலி ராமன்