எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சாவியைப் போட்டு சுற்ற ஆரம்பிக்கும்போதே கதவு உள்நோக்கி நகர்ந்து கொண்டது. திடுக்கிட்டாள் சுந்தரி.
‘ ஐயையோ… சாவி போடறதுக்குள்ளே கதவு திறந்துகிச்சே. அப்போ… போறப்போ நாம பூட்டாமலேயே போயிட்டோமா… ‘ சந்தேகமும் தலைத் தூக்கியது அவளுக்கு.
யோசித்தாள். ‘ இல்லை… நன்றாக நினைவு இருக்கிறது. கிளம்பும்போது சாவியைப் போட்டு இரண்டு சுற்று சுற்றினோமே… கதவைத் தள்ளிக் கூட பார்த்தோமே… ‘
இப்போது நெஞ்சு பலமாக அடித்துக் கொண்டது. கதவில் கைவைக்காமல் அப்படியே நின்றுவிட்டாள்.
‘திருடன் ஏதும் வந்துவிட்டானா… கடவுளே… உள்ளே எல்லாம் போட்டது போட்டபடியே கிடந்திருக்குமே… பீரோவை பூட்டினோமான்னுக் கூடத் தெரியலையே… ‘ நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
‘கடவுளே பூஜாவோட கல்யாணத்துக்காக மாசாமாசம் முப்பதினாயிரம் தவணைக் கட்டி ஆறு பவுன் சங்கிலி எடுத்து பீரோல வச்சிருந்தோமே… தங்கக் காசு வாங்கி வச்சிருந்தோம். வெள்ளிச் சாமான்கள் வச்சிருந்தோம்… சாமி ரூம்ல வெள்ளி குத்துவிளக்கெல்லாம் வச்சிருந்தோம்… என்ன ஆச்சோ… கடவுளே…‘ நெஞ்சு இன்னும் வேகமாய் அடித்துக் கொண்டது.
உடனே ராஜனுக்கு போன் போட எண்ணி மொபைலைத் திறந்தாள். சட்டென யோசனை மாறியது..
‘இல்லை… வேண்டாம்… அப்புறம் திட்டோ திட்டென்று திட்டுவார்… ‘உனக்கெல்லாம் ஒரு பூட்டைகூட ஒழுங்காக பூட்டத் தெரியவில்லை. நீயெல்லாம் கடைக்குப் போகலைனு யாரு அழுதா’ என்று கத்துவார்… ‘
‘ கடவுளே… பூஜாக்கிட்டே சொல்லியிருந்தோமே… ‘ உனக்காக ஒரு செயின் எடுத்து வச்சிருக்கேன்டி… ‘ என்று. வந்தவுடனே எங்கேம்மா செயின்னு கேட்பாளே, நான் என்னத்த எடுத்து காட்டுவேன்… கடவுளே… ’ புலம்பிக்கொண்டாள்.
கதவைத் திறக்க பயம். போலீஸுக்கு போன் போடலாமா என்று யோசித்து போட்டும் விட்டாள்.
‘ நீங்க எதையும் டச் பண்ணாதீங்கம்மா… வெயிட் பண்ணுங்க… ‘ என்றார்கள் அவர்கள்.
நெஞ்சு அடித்துக்கொள்ள அப்படியே நின்றுவிட்டாள். வரட்டும். அவர்களே வந்து வீட்டைத் திறக்கட்டும்… யார் கண்டது, ஒருவேளை உள்ளே திருடன் இருந்தால், பெண்பிள்ளை நாம் ஒருத்தி மட்டும் எப்படி அவனைப் பிடிக்க முடியும். போலீஸ் உடன் இருப்பதுதான் சரியாக இருக்கும்…
அவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே வேகமாய் ஒரு புல்லட் அவர்கள் வீட்டு முன் க்ரீச்சிட்டு நின்றது. இரண்டு கான்ஸ்டபிள்கள் இறங்கினார்கள்.
‘ நம்பர் இருபது… விவேகானந்தர் தெரு… சுந்தரிங்கறது… ‘
‘ வாங்க ஸார்… நாந்தான் போன் பண்ணினேன்… இந்த வீடுதான்… எங்களோடதுதான்…‘
அவர்களிடம் நடந்ததை வரிசைக்கிரமமாக சொல்லி முடித்தாள். ரொம்பவும் ஜாக்கிரதையுடன் கதவைத் திறக்கப் போனார் ஒரு கான்ஸ்டபிள்.
‘ யோவ்… உன் கையை ஏன்யா வைக்கறே… கர்சீப் வச்சுக்கோய்யா… கைரேகை அழிஞ்சிடக் கூடாதில்லையா… ‘ என்றார் அடுத்த கான்ஸ்டபிள் மிகவும் ரகசியமாக.
மெல்ல கதவைத் திறந்தார்கள். மெதுவாய் உள்ளே நுழைந்தார்கள்.
‘ ஏன்மா… நல்ல பாருங்கம்மா… எல்லாம் நீங்க வச்ச மாதிரியேதான் இருக்கா… இல்லே ஏதாவது வித்தியாசமா தெரியுதான்னு… ‘ என்று மிகவும் மெல்லிய குரலில் கிசுகிசுத்தார் கான்ஸ்டபிள். சுந்தரிக்கோ முதலில் பீரோவைப் போய் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
‘ ஸார்… முதல்ல பெட்ரூம் போகணும் ஸார்… பீரோ அங்கே தான் இருக்கு… அதுலே ஏதும் திருட்டுப் போயிருச்சான்னனு பார்க்கணும் ஸார், ஆண்டவா… ‘ சொல்லும்போதே அழுகை முட்டியது அவளுக்கு.
‘ கவலைப் படாதீங்கம்மா… ஒன்னும் ஆகியிருக்காது… அப்படி ஆகியிருந்தாலும்… புடிச்சிடலாம்… ‘ என்று கிசுகிசுத்தபடி பதுங்கி பதுங்கி நடந்தார்கள். அவர்கள் பின்னாலேயே சுந்தரியும் நடந்தாள்.
‘ யோவ்… பார்த்துயா… திருடன் உள்ளே பதுங்கியிருந்தா… லத்தியால ஒரே போடா போடு… நானும் எட்டிப் புடிச்சிடறேன்… ‘ என்று இன்னொரு கான்ஸ்டபிள் கிசுகிசுத்தார்.
போகும் வழியில் கிச்சன் முழுதும் பார்வையை வீசினாள் சுந்தரி. எதுவும் காணாமல் போனது போலத் தெரியவில்லை. டி.வி. மிக்ஸர் கிரைண்டர் எல்லாம் கூட அப்படி அப்படியே இருந்தன.
அடுத்து பூஜை ரூம். போன மாதம் வாங்கிய இரண்டடி உயர இரண்டு வெள்ளிக் குத்து விளக்குகளை உள்ளே வைத்திருந்தாள். கதவைத் திறக்கும்போது இரண்டுகதவுகளிலும் பொருத்தியிருந்த வெண்கல மணிகள் சத்தம் கிண்கிணித்தன. ‘ மெல்லம்மா… ‘ என்று உஷார்படுத்தினார் கான்ஸ்டபிள்.
வெள்ளிக் குத்துவிளக்குகள் அப்படியே நின்றிருந்தன. அதில் கைவைத்துப் பார்த்து நெஞ்சையும் பிடித்துக்கொண்டாள். ‘ ஏம்மா… ஒன்னும் காணாமப் போகலையே… ‘ என்றார் கான்ஸ்டபிள். தலையை ஆட்டினாள் இவள்.
மெல்ல படுக்கையறைப் பக்கம் நகர்ந்தனர். கதவு சாத்தியிருந்தது.
‘ஏம்மா… பூட்டு ஏதும் போட்டிருக்கீங்களா… இல்லை சும்மாத்தான் சாத்துவீங்களா… ‘ என்றார் கான்ஸ்டபிள் மிகவும் மெல்லிய குரலில்.
‘இல்ல ஸார்… பூட்டல்லாம் மாட்டோம்… எப்போவாவது வெளியூர் போனா மட்டும் பூட்டுவோம்… ‘ என்றாள். கான்ஸ்டபிள் கைக்குட்டையால் கைப்பிடியை பிடித்துத் தள்ளினார். முடியவில்லை. மறுபடியும் முயன்றார். முடியவேயில்லை.
சுந்தரியைப் பார்த்தார். ‘ ஏன்மா… நீங்க பூட்டியிருக்கீங்களேம்மா… திறக்க மாட்டேங்குதே… ‘ என்றார் கான்ஸ்டபிள்.
அப்போது இன்னொரு கான்ஸ்டபிள் அவரது தோளைத் தட்டி ‘ உஷ்… ‘ என்றார். இவர் முறைத்துப் பார்த்து, ‘ என்னய்யா… ‘ என்று கிசுகிசுக்க, உள்பக்கம் விரலைக்காட்டி… ‘ ஏதோ மியூசிக் சத்தம் வருதுய்யா உள்ளேயிருந்து… ‘ என்று கிசுகிசுத்தார் அவர். இப்போது எல்லோரும் நன்றாக உற்றுக் கேட்டனர்.
‘ஆமாயா… எனக்கென்னவோ திருடன் மொபைல்ல பாட்டுக் கேட்டுக்கிட்டு அசந்து தூங்கிட்டானோ… ‘ என்றார்.
‘ இப்போ என்னய்யா பண்ணலாம்… ‘ என்றார் அடுத்தவர்.
சுந்தரியைப் பார்த்தார் அவர். ‘ அம்மா நகர்ந்து போயிடுங்க.. நான் கதவைத் தட்டறேன்… திருடன் கதவைத் திறப்பான். யோவ்… நீ லத்தியால ஒரே போடா போடுய்யா… ‘ என்றார்.
அவசரமாய் நகர்ந்து போனாள் சுந்தரி. தனது லத்தியால் கதவைத் தட்டினார் அவர். அடுத்தவர் லத்தியை உயரத் தூக்கிப் பிடித்துக்கொண்டு எலியை அடிக்க தயாராக நிற்பது போல நின்றார்.
சட்டென மியூசிக் சத்தம் நின்றது. இவர்கள் உஷாராயினர். கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மறுபடியும் உஷாராகினர். ஆனால் கதவுத் திறக்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
‘என்னய்யா இது… கதவு திறக்கல… ‘ கிசுகிசுத்தார் அவர். மறுபடியும் இவர் லத்தியால் தட்டினார். இப்போது கதவு லேசாய் திறந்தது.
‘ யோவ்… திருடன் இல்ல… திருடி… ‘ என்றபடி லத்தியை ஓங்கினார்.
‘ஐயையோ… இது என் பொண்ணு… பூஜா.. திருடி இல்ல… ‘ என்று கைகளை விரித்துக் கொண்டு குறுக்கே ஓடிவந்தாள் சுந்தரி.
இப்போது கதவை முழுதாகத் திறந்து கொண்டு நறுமணத்துடன் ஆனால் கலவரத்துடன் வெளிப்பட்டாள் பூஜா. அப்போதுதான் குளித்துவிட்டு வெளிப்பட்டிருப்பது புலப்பட்டது. எதிரில் ஒரு அழகான வாலிபியை அதுவும் நறுமணத்துடன் பார்த்ததும் வாய்பிளந்து நின்றனர் கான்ஸ்டபிள்கள்.
‘ உங்க பொண்ணாம்மா… ‘ ஊர்ஜிதப் படுத்திக்கொண்டார் ஒருவர்.
‘ ஆமா ஸார்… ‘ என்றபடி ஓடிப்போய் மகளைக் கட்டிக்கொண்டாள் அவள்.
‘ என்னம்மா… திடீர்னு… ‘ என்றாள் அவளிடம் அழுகையுடன். புரியாமல் நின்றாள் பூஜா.
கான்ஸ்டபிள்கள் முகம் கருத்து நிற்க, அவள் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
“அம்மா… நான் சாயங்கால பஸ்தான்மா புக் பண்ண இருந்தேன்… ஆனா தெரியாத்தனமா PMக்குப் பதிலா AMனு செலக்ட் பண்ணிட்டேன் போல. விடிகார்த்தால 5 மணி பஸ்க்கு புக் ஆகிடுச்சு… திடீர்னு தூங்கிட்டிருக்கற நேரத்துல போன். மணிக்கூண்டுக்கிட்ட வந்து நிக்கச் சொல்லி. கையில கிடச்சதை அள்ளிப் போட்டுக்கிட்டு கிளம்பிட்டேன். இங்கே வந்து பார்த்தா வீடு பூட்டியிருக்கு… என்கிட்டத்தான் ட்யூப்ளிகட் சாவியிருக்கே. போட்டுத் திறந்துட்டேன். அவசரமா வாஸ்ரூம் போகவேண்டியிருந்ததால வெளிக்கதவை பூட்டாம நேரா வாஸ்ரூம்க்கு வந்துட்டேன். அப்படியே குளிச்சிடலாமேனு மொபைல்ல பாட்டுக் கேட்டுக்கிடே குளிச்சும் முடிச்சு ரெடியாயிட்டேன். அப்போதான் கதவு தட்டற சத்தம் கேட்டுச்சு…. திறந்தா நீங்க… இதுக்காக போலீஸை எல்லாமா கூப்பிடுவே… என் நம்பருக்கு ஒரு ரிங் விட்டிருக்கக் கூடாது…. ? ‘
‘எனக்கென்ன தெரியும், நீ உள்ளே இருப்பேன்னு… நான் உங்கப்பாவுக்கு போன் போடலாம்னு நினைச்சு நம்பரும் போட்டுட்டு அப்புறம் விட்டுட்டேன், நல்லா திட்டிப்புடுவாறேன்னு… அப்புறம்தான் நூறுக்கு அடிச்சேன்… ‘
ஒரு கான்ஸ்டபில் சொன்னார். ‘அம்மாவும் பொண்ணும் சேர்ந்து நல்லாப் பண்ணுனீங்கம்மா கூத்து… சரி… சரி… ஸ்டேஷனுக்கு வந்து நடந்ததை எழுதிக் கொடுத்துட்டு வந்திடுங்க… ‘ என்றுவிட்டு நகர்ந்தனர்.
இவர்கள் இருவரும் பேச்சற்று நின்றிருந்தனர்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings