in ,

பழைய புத்தகம்!! (சிறுகதை) – இரஜகை நிலவன்

ழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வசந்தன் அமைதியாக எதிரில் உட்கார்ந்திருந்த நிஷாவைப் பார்த்துக் கொண்டே குளிர்பானத்தை அருந்திவிட்டு இழுத்து மிகவும் பெரிதாக பெருமூச்சு விட்டான். எதிரில் அமர்ந்திருந்த நிஷா அவன் நிலையைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறாய்?” அசிரத்தையாக கேட்டான் வசந்தன்.

“உன் நிலைமையைப் பார்த்துச் சிரிக்காமல் வேறு என்ன சொல்கிறாய் நான் ஒரு காபரே டான்ஸராக இருந்தவள். என்னைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படாதே என்று எத்தனையோ முறை சொல்லியும் கேட்காமல் பிடிவாதம் பிடித்து திருமணத்திற்கு நாள் குறித்தாய். அதற்குள் நாம் சுற்றித் திரிந்த இடங்களில் எத்தனை பேர் என்னிடம் எவ்வளவு வித்தியாசமாய் இதிலே என்ன நாசூக்காக சொல்ல வேண்டியதிருக்கிறது… அசிங்கமாய் பேசிக் கேட்டுச் சிரித்து விட்டுப் போகிறார்கள்.

இது அவ்வளவு எளிதில் ஏற்றுக் நினைத்துக் கூட மறந்து விட்டுப்போ கொள்ளவும் கூடிய விஷயமில்லை வசந்த். இதற்காகத்தான் சொல்கிறேன் இப்போதும் கூட நீ மனதை மாற்றிக் கொள்ளலாம். நான் என் மனதை எதற்கும் தயாராகத்தான் வைத்திருக்கிறேன். நான் செய்த தொழில் அப்படி. எல்லாவற்றையும் எதிர்பார்த்து தான் நான் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். இப்போது கூட என் மனதில் நம் திருமணம் நடைபெறாது என்ற எண்ணம் அசைக்க முடியாமல் இருக்கிறது.

உன் பிடிவாதம் தான் உன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறது வசந்த். என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்? ஒரு நல்ல அழகான பெண்னணப் பார்த்து இப்போதும் நீ திருமணம் செய்து கொள்ளலாம். நான் உன் வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்கிறேன். நடந்ததெல்லாம் ஒரு கனவாக நினைத்து மறந்து விடு

கொஞ்சம் யோசித்துப் பார். இந்தக் கூல் டிரிங்ஸ் பாரிலே கூட என்னைப் பார்த்து இழிவாக ஒருவன் கேட்டுவிட்டுப் போகும் போது எவ்வளவு கொதித்துப் போகிறாய். இது இன்னும் எவ்வளவு நாள் தொடரும். அப்போதெல்லாம் நீ எவ்வளவு கஷ்டப்பட நேரிடும்.

அவள் பேச்சை இடைமறித்த வசந்தன் “என்ன நீ பாட்டுக்கு பேசிக் கொண்டே போகிறாய்..உன் உடம்பிற்காகத் தான் நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்றா நினைத்து விட்டாய்.

நிஷா – நாம் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள்… வாழ்க்கை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் பேசிக் கொண்ட பரிமாற்றங்கள்… நீ தான் என் வாழ்க்கைத் துணை என்பது எப்போதோ முடிவு செய்து விட்ட விஷயம். இனி பொது இடங்களுக்கு சேர்ந்து வருவதை தவிர்த்து விடலாம்.

அதற்கான உடனே, என்னை விட்டு விட்டு வேறு ஒரு அழகான பெண்ணைக் கட்டிக் கொள் என்று நீயே என்னைச் சாகடிப்பது தான் பெரிய கஷ்டமாக இருக்கிறது. பெப்ஸியைக் குடி கிளம்பலாம்” என்றான்.

“தீ, என்று சொன்னால் வாய் வெந்து போய் விடாது வசந்த், திருமணமான பிறகு ஏண்டா இவளைப் போய்த் திருமணம் செய்து கொண்டோம் என்ற வருத்தம் பிறகு வரக்கூடாது.

நாளைக்குக் குழந்தைகள் பிறந்து, அவைகளுக்கு என முந்தையக் காலம் தெரிந்தால். என்னைக் காறித் துப்பி விட்டு போய் விடும்” கொஞ்சம் கலக்கத்தோடு சொன்ன நிஷா “இன்னும் ஒன்றும் கெட்டுப் போக வில்லை. இப்போதும் கூட நம் திருமணத்தை இன்னும் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்” என்றாள்.

“சரி நிஷா. நீ சொன்ன மாதிரி திருமணத்தை அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போட்டு விடலாம். அப்போதும் நாம் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தும் போது, இந்த இடைஞ்சல்கள் வராதா? அப்போது நாம் தாம்பத்தியத்தில் குழந்தைகள் பிறக்காமல் போய் விடுமா?” பில்லுக்கு பணம் கொடுத்து விட்டு சில்லறையை எடுத்துக் கொண்டான் வசந்தன்.

“அதற்குள் நிறைய சிந்திக்கத் தோன்றும். கால இடைவெளிகள் நிறைய மாற்றத்தை தரலாம். ஒருவேளை இடைப்பட்டக் காலத்தில் நீ சாமியாராகி ஊர் முழுவதும் பிரசங்கித்துக் கொண்டிருக்கலாம்” என்று சிரித்தவள், “காலங்கள் மனங்களுக்குள் மாற்றத்தை தரும். அப்போதும் நீதான் எனக்கு தாலிகட்டி திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றிருந்தால் எந்தவித மாற்றமுமின்றி நான் ஏற்றுக் கொள்கிறேன்” வசந்தனின் கையைப் பிடித்துக் கொண்டு ரோட்டில் நடந்த போது “ஹாய் நிஷா எப்படியிருக்கிறாய் இப்போதெல்லாம் ஆடறதில்லையா? ப்ரி எப்போ சொல்போன் பண்ணுகிறோம்” என்று இருவர் வந்து கேட்டு விட்டுப் போக, “பார் உன் முகம் ஏன் இவ்வளவு கறுத்துப் போகிறது.என் பழைய வாழ்க்கையை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது” என்று அழ ஆரம்பித்தாள் நிஷா.

“டாக்ஸி” என்று கைதட்டியழைத்து, “ஏறி உட்கார் நிஷா. வீட்டிலே போய் நிதானமாகப் பேசலாம்” என்று ஏறி அமர்ந்தான் வசந்தன்.

வீட்டிற்கு வந்ததும், உள்ளே போய் முகம் கழுவி விட்டு வந்த நிஷா “வசந்தன் இன்னும் நான் சொல்வதை யோசித்துப் பாருங்கள். இவ்வளவு தடபுடலாக உடனடியாக நம் திருமணத்தை வைத்துக் கொள்வதை விட, நான் கொஞ்ச நாள் கழித்து அந்தச் சடங்கெல்லாம் செய்து கொள்ளலாம்” என்றாள்.

“ஆம் நிஷா.நீ சொல்வது சரிதான்” என்றான் வசந்தன்.

கொஞ்சம் திகைப்புற்றுத் திரும்பிப் பார்த்த நிஷா, “பார்த்தாயா? இப்படித் திரும்பத் திரும்ப நான் சொன்னவுடன் நீயும் யோசிக்கத் தொடங்கி விட்டாய். இது போல் வேறு யாராவது என்னைப் பற்றிச் சொன்னால் உனக்கு என்ன தோன்றும். அடிப்பாரடித்தால் கல்லும் கரையுமென்று சும்மாவா சொன்னார்கள். நிறைய யோசி. சிந்தித்துப் பார். இந்தக் கல்யாணத்தில் நீ சந்தோசமாக இருப்பாயா என்று ஒரு சில மனத்திரைப் படங்களை சித்திரமாக்கிப் பார். அப்புறம் பார்க்கலாம். வருகிறேன்” என்று கிளம்பினான்.

“ஆமாம் நிஷா. நீ திரும்பத் திரும்பச் சொல்லும் போது எனக்கே கொஞ்சம் யோசித்து முடிவு செய்ய வேண்டியது போலத்தான் தோன்றுகிறது.” என்று கோபமாகச் சொன்னான்.

“அப்படி கோபப்படாதே, திருமணத்தை கொஞ்சம் தள்ளிப் போட யோசி”, என்று டாக்ஸியில் ஏறிக் கொண்டாள். நிஷா வீட்டிற்குள் நுழைந்த போது, தொலைபேசி மணி ஒலிக்க, ஓடிச் சென்று எடுத்து “நான் நிஷா பேசுகிறேன் . யார் பேசறது?” என்றாள்.

“நிஷா நான் முடிவு செய்து விட்டேன். நாளைக்கு மறுநாள் நாம் முடிவு செய்தபடி நண்பர்கள், என் தோழி சுஜா எல்லோரும் திருமணத்திற்கு வருகிறார்கள்” என்றான் எதிர் முனையில்.

திகைத்துப் போன நிஷா “வசந்தன் கொஞ்சம் யோசி” என்ற போது, “உனக்குப் பிடித்த பச்சை நிறத்தில் பட்டுச் சேலை வாங்கப் போகிறேன், வருகிறாயா?” என்று எதிர்முனையில் வசந்தன் கேட்க, பேசமுடியாமல், தெறித்த கண்ணீரைத்துடைத்துக் கொண்டு வாயடைத்துப் போய் அமர்ந்தாள்.

எதிர் முனையில் “ஹலோ… ஹலோ…? என சப்தம் வந்து கொண்டிருந்தது.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதல் என்பது (சிறுகதை) – இரஜகை நிலவன்

    வாழ்ந்து சிறக்க வாய்ப்புகள் பல!!! (கவிதை) – இரஜகை நிலவன்