in ,

தூக்கம் (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ந்தனுக்கு கண்களை லேசாய் சொக்கியது. சரி கொஞ்ச நேரம் தூங்கலாமென்றெண்ணி படுக்கையில் போய் படுத்தான். தூக்கம் கண்களை அழுத்த ஆரம்பித்த சில நிமிடங்களில் காலிங் பெல் அடித்தது. வெறுப்புடன் எழுந்து போனான். கூரியர் ஆள் ஒருவன் நின்றிருந்தான்.

‘என்ன… நம்ம கதை ஏதும் செலக்ட் ஆகி பத்திரிகை காரங்க லெட்டர் அனுப்பியிருக்காங்களா… ‘ அவனை நெருங்கினான்.

‘ ஸார்… வள்ளிங்கற பேருக்கு ஒரு கவர்… ‘ என்றான் அந்தாள்.

ஏமாந்து போனான். ஆனாலும் சமாளித்தபடி, ‘ அவள் ஊருக்குப் போயிருக்கிறாளே… அவங்க என் ஓய்ஃப் தான்… நான் வாங்கிக்கலாமில்ல… ‘ என்றான்.

அவர், ‘ வாங்கிக்கலாம்.. ‘ என்றபடி பேனாவை அவன் நீட்ட, சில நொடிகளில் கவர் இவன் கைக்கு வந்து சேர்ந்தது. பார்த்ததும்தான் தெரிந்தது, கும்பகோணத்திலிருந்து ஒருவர் அனுப்பிய கல்யாண அழைப்பிதழ் என்று. அப்படியே மேஜை மேல் வைத்துவிட்டு வந்து படுக்கையில் மீண்டும் படுத்தான். 

போனவாரம்தான் கல்யாணத்தை மையமாக வைத்து ஒரு கதை எழுதியிருந்தான். ஆனால் அது முடியாமல் பாதியில் நின்றிருந்தது. இப்போது கல்யாணப் பத்திரிக்கையைப் பார்த்ததும் அது ஞாபகத்துக்கு வர அந்தக் கதையைப் பற்றி யோசித்தபடியே படுத்திருந்தான்.

கொஞ்சம் சூடு தெரிந்தது.  எழுந்து போய் ஃபேனின் வேகத்தைக் கொஞ்சம் கூட்டி வைத்துவிட்டு மறுபடியும் வந்து படுத்தான்.

சரி கதையைப் பற்றி அப்புறம் யோசித்துக்கொள்ளலாம் முதலில் தூங்கலாம் என்றெண்ணி கண்களை இறுக மூடினான். அந்த நேரம் பார்த்து மொபைல் சிணுங்கியது.

எடுத்தான். வெறும் நம்பர் தெரிந்தது.

‘ ஹலோ… யாருங்க… ‘

‘ ஸார்… நாங்க எஸ்.டி.ஐ. பேங்க்லர்ந்து பேசறோம்… உங்க கணக்குல கே.ஒய்.ஸி. வெரிஃபை பண்ணாததால கணக்கு ப்ளாக் ஆகப் போகுது…   உங்க மொபைல்ல ஒரு ஓ.டி.பி. வரும். அதை மட்டும் சொன்னா போதும்… கணக்கை ஆக்டிவேட் பண்ணிடுவோம்… ‘

‘ ஹே… எத்தனை பேர்டி இப்படி கிளம்பியிருக்கீங்க… எங்க கணக்குல இருக்கறதை எல்லாம் சுருட்டிக்கிட்டு போகவா… ‘ முனகியபடியே காலை கட்செய்துவிட்டு அந்த நம்பரை பிளாக்கும் செய்துவிட்டு மறுபடியும் வந்து படுத்தான்.

‘ ச்சே, கொஞ்ச நேரம் தூங்கலாம்னு பார்த்தா விட்டமாட்டேன்றாங்களே… ’

புலம்பியபடியே கண்களை மறுபடியும் இறுக மூடினான். சட்டென்று ஒரு யோசனை. மறுபடியும் மொபைல் சிணுங்கக் கூடாதல்லவா. அதனால் அதன் சத்தத்தை குறைத்து வைத்தான். அதிகம் குறைக்கப்போக அது தானாக வைப்ரேஷன் மோடுக்குப் போனது. அப்படியே விட்டுவிட்டு மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான்.

சில நொடிகள்தான்…

காலிங் பெல் அடித்தது. ‘ தூங்கவிடமாட்டேன்றாங்களே… ச்சை… ‘ வெறுப்பை உமிழ்ந்தபடி எழுந்து போனான்.

‘ ஸார்… கியாஸ்… ‘

முந்தின நாள் புக் செய்த கியாஸ் வந்திருந்தது. ஓ.டி.பி. நம்பரைச் சொல்லி கையெழுத்தைப் போட்டு பணத்தைக் கொடுத்து சிலிண்டரை லீக் ஏதும் இருக்கிறதா என்று கண்முன்னே செக் செய்து காட்டச்சொல்லிவிட்டு பழைய சிலின்டரை எடுத்துக் கொண்டு போகச் செய்தான்.

‘ ச்சை… மனுஷன் தூங்கவே முடியலை… ‘

லைட் எரியவில்லையானாலும் மூடிய கண்களுக்குள் வெளிச்சம் தெரிந்தது. எழுந்தான். ஒரு துண்டை எடுத்து வந்தான். கண்களை கட்டிக்கொண்டான்.

மல்லாக்க படுத்திருந்தவள் இடது பக்கம் திரும்பி ஒருக்களித்துப் படுத்தான். மறுபடியும் வலது பக்கம் திரும்பிப் படுத்தான். குப்புறப் படுத்தான். தொப்பை அழுத்தியது. பேசாமல் திரும்பி மறுபடியும் மல்லார்ந்தே படுத்தான்.  தூக்கம் வருவது போல இருந்தது.  

மொபைல் உர்ர்ர்ர்ர்ர்ரென்றது…

பேசாமல் படுத்திருந்தான். சில கணங்களில் உர்ர்ர்ர் நின்றது.

சுற்றிக்கொண்டிருந்த ஃபேன் திடீரென்று நின்றது.  சூடு ஏறியது. வியர்க்க ஆரம்பித்தது.

‘ ச்சே… இனி தூங்கிய மாதிரிதான்… ‘

எழுந்து போய் முகத்தை அலம்பிக்கொண்டு வந்தான்.

மொபைலில் யார் கூப்பிட்டிருப்பார்கள் என்றெண்ணியபடி பார்த்தான். ஸ்பாம் என்று வந்திருந்தது. ‘ இந்த மார்க்கெட்டிங் காரங்களுக்கு வேற வேலையே இல்லை… ‘ என்று முனுமுனுத்தபடி மொபைலை போட்டுவிட்டு ‘ சரி, கதையாவது எழுதலாம்… ‘ என்று எண்ணி நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான். கிளிப் அட்டையை எடுத்தான்.  மேல் பேப்பரில் அவன் எழுதிவிட்டு பாதியில் விட்டிருந்த கல்யாணக்கதை இருந்தது.  புதிதாக இரண்டு பேப்பர்களை எடுத்து மேலே செருகினான்.  பேனாவை எடுத்தான்.

கதாசிரியருக்கு கதை எழுவதைத் தவிர வேறென்ன வேலை இருக்க முடியும்.

கதைக்குத் தலைப்பு கொடுத்தான்… ‘ கெட்டது தூக்கம்… ‘ என்று.

உடனே  கெட்டதை தூக்கினான். ‘ தூக்கம்… ’ என்று வைத்தான்.

எழுத ஆரம்பித்தான். 

‘ கந்தனுக்கு கண்களை லேசாய் சொக்கியது…. ‘

‘ ஹிஹி… ‘

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எனக்கொரு மகன் (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

    வராத அழுகை (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு