in ,

பறவையின் இலக்கு!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“உலகப் பெண்கள் தினம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்!”

ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் மரகதம் தன்னிடம் கேட்ட அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்த்தார்.

“முதலில் நீ என்னம்மா நினைக்கிறே ! அதைச் சொல்லு”

அவள் திகைத்தாள் .சமாளித்துக் கொண்டவளாக “உங்களைத் தான் நான் பேட்டி எடுக்க வந்தேன். நீங்க என்னை கேட்கிறீங்க!”

“அதனால் என்ன! இன்னிக்கு இந்த சமுதாயம் உங்களை எங்கே வைத்திருக்கிறது.”

அவள் யோசித்தாள்.

“நல்லா இருக்கோம். துணிச்சல், தைரியம், தன்னம்பிக்கை எல்லாம் அதிகமாக இருக்கிறது. அலுவல் விஷயமாக அயல் நாடுகளுக்குப் போக , தங்க என்று எல்லா முடிவும் நாங்களே எடுக்க முடிகிறது”.

“கிரேட்! ஆனா உனக்கு இரண்டு தலைமுறை முந்தின பெண்களை பற்றி ஒன்றும் தெரியாது இல்லையா! இன்றைக்கு அறுபது வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் கேட்டுப் பார். பல பேர் சிரமப்பட்டுதான் படிக்கவே வருவார்கள். பொருளாதார கஷ்டம் தவிர பெற்றவர்களே பெண்களை படிக்க வைக்க பெரிய ஈடுபாடு காட்ட மாட்டார்கள். குடும்பத்தை சமாளிக்க படிப்பு எதற்கு? நாலெழுத்து தெரிந்தால் போதாதா? “என்ற விமரிசனங்களுடன் அவர்களுடைய படிப்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படும். அதையெல்லாம் மீறி கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு பல வித பிரச்னைகள் வரும். குறிப்பாக அந்த வயதுப் பையன்கள்” சுதா அவரின் முகத்தை பார்த்தாள்.

பழைய நினைவுகள் பலவற்றை அவர் பகிர்ந்து கொள்கிறார் என்பது புரிந்தது. ரெகார்டிங்கில் அவரது குரல் தழுதழுத்தது அவளால் உணர முடிந்தது.

“சின்ன வயசிலே விளையாட்டா தட்டாரப் பூச்சியை நூலில் கட்டி பறக்க விடாமல் பார்த்து ரசிக்கும் ஒரு குரூர மனதுடன் அந்தப்பெண்களின் வாழ்க்கையில் விளையாடுவார்கள். ஏதாவது ஒரு சின்ன விஷயம் நடந்தாலே பெற்றவர்கள் படிப்பை நிறுத்திவிட தயாராக இருப்பார்கள். உங்களுக்கு இருக்கிற தைரியம் , தன்னம்பிக்கை எதுவும் அவர்களுக்கு கிடையாது. வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறேன். இவளை சீக்கிரம் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்ற பேச்சு வராத வீடுகளே இருக்காது.”

“எத்தனையோ சம்பவங்கள்.  சாரதா என்று ஒரு பெண் கடைசி வருடத்தின் இறுதியில் அந்த மாதிரி ஒரு பிரச்னையில் மாட்டிக் கொண்டாள். உடனே அவள் அம்மா படிப்பை நிறுத்திவிட்டு அவள் சொந்தக்காரப் பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க தயாராகி விட்டாள். இந்தப் பெண் பாவம் பிழிய பிழிய அழுகிறது. எவ்வளவோ சமாதானங்கள், ஆறுதல்கள் சொல்லி தகுந்த முன்னேற்பாட்டு நடவடிக்கையுடன் அவள் படிப்பை முடிக்க வைத்தேன். கல்யாணத்தையும் நிறுத்த முடிந்தது”

ஒரு கதை போல அவர் சொன்ன விதம் அவளை உருக்கியது.

“அந்தப் பெண் எப்படி இருக்கிறாள்? அதற்குப் பிறகு நீங்கள் பார்த்தீர்களா? “

“ஒவ்வொரு வருடமும் என்னை வந்து பார்த்துவிட்டுத் தான் போவாள். இன்றைக்கு பல ஆதரவில்லாத பெண்களுக்கு அவளால் இயன்ற உதவி செய்து கொண்டு  இருக்கிறாள். இதெல்லாம் உனக்கு எதுக்கு சொன்னேன் தெரியுமா? “

ஒரு நிமிடம் மௌனம் சாதித்து விட்டு மறுபடியும் தொடர்ந்தார் அவர்.

“அன்னிக்கு பெண்களுக்கு எந்த வித சப்போர்ட்டும்  கிடையாது. பெத்தவங்க பாத்து வைக்கிற கல்யாணம் தான். வரதட்சணை கொடுமை , மாமியார், நாத்தனார் கொடுமை எல்லாத்தையும் சகிச்சுகிட்டு வாழ்ந்தாங்க.‌ ஆனாலும் அவங்களுக்கு ஒரு இலக்கு இருந்தது. தன் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும், சமுதாயத்தில் எந்த கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்.வேலை பார்த்தால் கூட அதை பெரிதாக மனதில் எடுத்துக் கொள்ளாமல் வளைய வந்தார்கள்.

சாதாரண பெண்கள் என்று இல்லை, பெரிய பெரிய வீட்டுப் பெண்கள் திரைப்பட நடிகைகள் என்று எத்தனையோ பேர்  தங்கள் மனதின் காயங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நடமாடியிருக்கிறார்கள் தெரியுமா!. இன்றைய பெண்கள் உங்கள் இலக்கு என்ன! உங்களுடைய சுதந்திரம் கட்டுப் பாடில்லாத வாழ்க்கை என்ன கற்றுக் கொடுத்திருக்கிறது? ஒரு பறவை கண்டம் விட்டு கண்டம் வந்தாலும் திரும்பி அதே இடத்திற்கு போக அதற்குத் தெரியும்.ஒரு சுதந்திரப் பறவையாக சுற்றும் உங்களின் இலக்கு என்ன! நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்றேன். பெண்கள் தினம் என்று கொண்டாடுவதை விட ஒரு பெண்ணாக என்ன செய்தோம், செய்கிறோம் என்று சுயக்கட்டுப்பாட்டுடன் உணர்ந்து வாழ பழகுங்கள்”.

சுதா ஒரு வகுப்பறையில் இருந்து பாடம் கேட்ட மாணவியின் நிலையில் இருந்தாள்.

எத்தனை உயர்ந்த சிந்தனை! அனுபவமும் அறிவும் சேர்ந்து சொன்ன படிப்பினை.

“நீங்களெல்லாம் போட்டுக் கொடுத்த பாதையில் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். அதை இப்போது நன்றாக உணர்ந்து கொண்டேன்.‌ என்னால் முடிந்த வரை மற்றவர்களுக்கும் எடுத்து சொல்கிறேன். நான் பேட்டி தான் எடுக்க வந்தேன்.‌நிறைய தெரிந்து கொண்டேன்”.

மெல்லிய குரலில் சொல்லிவிட்டு வணங்கிய சுதாவை தோளில் தட்டி ஆசிர்வதித்தார் மரகதம்.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சுத்தமான வீடும் வெண்டைக்காய் ரோஸ்டும் (சிறுகதை) – சுஶ்ரீ

    மகளிர் தினத்தை கொண்டாடுவோம்!! (அனுபவம்) – காந்திமதி உலகநாதன்