in ,

நவராத்திரி (நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் நாட்கள்) – வழிப்பட்டு முறை மற்றும் நிவேதன ரெசிபிக்களும் பகிரப்பட்டுள்ளது – எழுதியவர்: கீதா சாம்பசிவம்

4, 5 & 6ம் நாள்

நவராத்திரி நான்காம் நாள்

சந்திரகாந்தா

நான்காம் நாளுக்கான தேவி சந்திரகாந்தா அல்லது ஸ்கந்த மாதா ஆகியோர் ஆவார்கள். ஸ்கந்தமாதா செவ்வாய்க்கிழமைக்கு உரிய தேவி

சந்திரகாந்தாவாகவும் வழிபடலாம். சந்திரகாந்தா முக்கண்கள் உடைய தேவி ஆவாள். வெப்பத்தைத் தணிவிக்கும் தேவி இவள். சந்திரகாந்தக் கல்லானது, சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகிறாப் போல் அம்பிகையும் நம் தீவினைகளைத் தன்னுள் வாங்கிக் கொண்டு, தன் முக்கண்களால் கருணை என்னும் அருளைப் பொழிகிறாள்.

நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொள்ளும் அம்பிகை, கருணை நீரைப் பொழிகிறாள். இங்கே குறிப்பிடப்படும் வெம்மையானது நம் தீவினைகளே ஆகும்.

இந்தத் தீவினைகளை அம்பிகை தன்னுள் வாங்கிக் கொண்டு, கருணை மழையால் நம் உடலையும், மனதையும் குளிர்விக்கிறாள். முக்கண்ணனின் மனைவியான இந்த தேவி, தானும் முக்கண்களைக் கொண்டு ஈசனைப் போல் பிறைச் சந்திரனைச் சூடிக் கொண்டு காட்சி தருகிறாள்.

நம் தீவினைகளாம் அசுரர்களை அழித்தொழிக்க வேண்டிக், கைகளில் பல்வேறு ஆயுதங்களைத் தாங்கி நிற்கிறாள் இந்த தேவி. ராகு காலம், செவ்வாய்க்கிழமைகளில் இவளை வழிபடுதல் சிறப்பு

நவராத்திரி செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில், இவளை நினைத்து வழிபடுதல் இன்னமும் சிறப்பு.

திருவாலங்காட்டில் காளி ஆடிய ஆட்டத்தில், அவளைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஊர்த்துவத் தாண்டவத்தில் தோன்றிய இந்தச் சந்திரகாந்தா தேவி, ஈசன் ஒரு காலைத் தரையில் ஊன்றி மறுகாலைத் தோளுக்கு மேல் தூக்கிய கோலத்தின் போது பிறந்தவள் என்பார்கள்.

ஸ்கந்த மாதா

அடுத்து வரும் ஸ்கந்த மாதாவும் செவ்வாய்க்கிழமைக்கு உகந்த தேவி. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் ஸ்கந்தனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையே உகந்த நாளாகும்.

அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திரு அவதாரத்துக்குக் காரணம் ஆன இந்த ஸ்கந்தமாதா, அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரித்துச் சாம்பலாக்குகிறதோ, அவ்வாறு நம் தீவினைகளையும் சுட்டெரித்துச் சாம்பாலாக்குவாள்.

நமக்கு அங்காரக தோஷத்தினால் ஏற்படும் துன்பங்கள் தீவினைகளைச் சுட்டுப் பொசுக்குவாள்.

நவராத்திரி செவ்வாய்க்கிழமைக்கு உகந்த தேவியான இவள், பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் கடைந்த போது தோன்றிய ஆலஹால விஷத்தை உண்ட ஈசன் கண்டத்தைப் பிடிக்கவும், அப்போது ஈசன் ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் எனப்படும். ஸ்கந்தமாதா தோன்றியது அப்போது தான்.

இன்றைய தினம் ஐந்து வயதுப் பெண் குழந்தையை “ரோஹிணி” என்னும் திருநாமத்தால் வழிபட வேண்டும். சிவந்த நிறத்தில் ஆடைகள் கொடுக்கலாம்.

கோலம்

இன்றைய தினம் படிக்கட்டுக் கோலம் போடலாம். அல்லது அக்ஷதை, மலர் இதழ்கள் இவற்றாலும் கோலம் போடலாம்

கீழே குறுகி மேலே செல்லச் செல்ல விரிந்து வருவதைப் போல் கோலமிட்டால் செல்வம் பெருகும் என்பார்கள்.  நமக்கு இருக்கும் ரோகங்கள் நீங்க இத்தகைய வழிபாடு சிறப்பானது.

பூமாலை

பொதுவாகச் சிவப்பு மலர்களால் 4,5,6 நாட்களில் அம்பிகையை அர்ச்சிக்க வேண்டும் என்பார்கள். செந்தாமரை மலர், ரோஜாமலர்கள், அரளிப்பூக்கள் ஆகியவை இன்றைக்கு ஏற்றவை.

கஸ்தூரி மஞ்சள் பொடியாலும் அர்ச்சிக்கலாம். மஹாலக்ஷ்மி அஷ்டகம் அல்லது திருமகளைக் குறித்த துதிகளால் வழிபடலாம்.

அம்பிகையை இன்று ஜயதுர்கை கோலத்தில் சிங்காதனத்தில் வீற்றிருக்கும் தேவியாக அலங்கரிக்கலாம்.

நிவேதனம்

நிவேதனமாக அவல் கேசரி அல்லது ரவா கேசரி பண்ணலாம். சர்க்கரைப் பொங்கலும் பண்ணலாம். மாலை பட்டாணிச் சுண்டல் பண்ணி விநியோகிக்கலாம்.

1. அவல் கேசரி

  • நல்ல கெட்டி அவலை நெய்யில் வறுத்துக் கொண்டு, அதோடு சேர்த்துச் சர்க்கரையைக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் வெந்நீரைக் கொதிக்க வைத்து அவலும் சர்க்கரையும் கலந்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும்.
  • சிறிது நேரத்தில் அவல் வெந்து சர்க்கரையோடு கலந்து விடும். தேவையானால் கேசரிக் கலர் சேர்க்கலாம். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழங்கள் சேர்த்து ஏலப்பொடி சேர்க்கவும். அவல் இல்லை எனில் ரவையில் இதே மாதிரிப் பண்ணலாம்.

2. சர்க்கரைப் பொங்கல்

  • சர்க்கரைப் பொங்கலுக்கு அரிசி, பருப்பை வாசனை வரும்படி வறுத்துக் கொண்டு பாலில் குழைய வேக வைத்துக் கொண்டு, தேவையான வெல்லம் சேர்த்து வெல்ல வாசனை போகச் சுருள வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராக்ஷைப் பழங்கள் சேர்த்துப் பின்னர் குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம்.

3. வெள்ளைப் பட்டாணிச் சுண்டல்

  • வெள்ளைப் பட்டாணியை முதல் நாளே ஊற வைத்துக் கொண்டு, மறுநாள் நன்கு கழுவி உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு, நீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக், கடுகு, பெருங்காய்த்தூள், பச்சை மிளகாய், இஞ்சி, மாங்காய் (கிடைத்தால்) கருகப்பிலை, தேங்காய்க்கீற்றுகள் சேர்த்து நன்கு கிளறி வெந்த பட்டாணியைப் போட்டுக் கிளறி எடுத்தால் சுவையான தேங்காய், மாங்காய்ப் பட்டாணிச் சுண்டல் தயார். விநியோகிக்கலாம்.

நவராத்திரி ஐந்தாம் நாள்

காத்யாயினி!

காத்யாயன மஹாமுனிவர் உலகாளும் அம்பிகையே தனக்கு மகளாய்ப் பிறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். அவர் எண்ணம் ஈடேறும்படி அன்னை இவருக்கு மகளாய்ப் பூவுலகில் பிறந்தாள்.

காத்யாயன மஹாமுனிவரின் மகள் என்பதால் காத்யாயினி என்னும் பெயரைப் பெற்றாள். கோகுலத்து கோபியர் கண்ணனை அடைய இருந்த விரதமான பாவை நோன்புக்கு இவளே தேவி ஆவாள்.

இவளை நினைத்தே அவர்கள் விரதம் இருந்து நோன்பு நூற்றார்கள். கன்னியர் மனம் மகிழும்படியான கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அருளும் இவளுக்கான ஸ்லோகம் மிகவும் பிரபலமானது.

பெண்கள் தினம் இதைச் சொல்லுவதால் நல்ல கணவன் கிடைப்பான் எனவும் கிடைத்த கணவனுடன் நல்வாழ்வு வாழ வழி செய்யும் என்றும் கூறுவார்கள். அந்த ஸ்லோகம்:

காத்யாயினி மஹா மாயே மஹா யோகிந் யதீஸ்வரி

நந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ!

என்பதாகும். இந்த ஸ்லோகத்தை தினம் தினம் முழு மனதுடன் தேவியை நினைத்துச் சொல்லும் பெண்களுக்கு நல்ல கணவன் கிட்டுவான் என்பதில் சந்தேகமே இல்லை.

நவராத்திரி புதன்கிழமைக்கான இந்த தேவியை வழிபடுவதன் மூலம் புத்தியும், ஞானமும் கிட்டுவதோடு கல்வி, கேள்விகளில் சிறந்தும் விளங்குவார்கள். திருமணப் பேறும் அளிப்பாள் இந்த தேவி.

பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்துத் தாளம் கொட்ட ஈசன் ஆடிய தாண்டவம் முனி தாண்டவம் எனப்படும். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணிலே இருந்து தோன்றியவளே காத்யாயினி.

பாமாலை

இன்றைய தினம் மஹாலக்ஷ்மி அஷ்டகம், அல்லது ஷோடசி துதிகளால் அம்பிகையை வணங்கலாம்.

அலங்காரம்

இன்றைய தினம் அம்பிகையை துர்கையாக அலங்கரிக்கலாம். இன்றைய தினத்துக்கான தேவி “காளிகா” ஆறு வயதுக்குட்பட்ட பெண் குழந்தையை “காளிகா” வாகப் பாவித்து வழிபடுதல் நன்று.

குழந்தைக்குப் பிடித்தமாதிரி சிவந்த நிறமுள்ள ஆடைகளாகக் கொடுக்கலாம்.

பூமாலை 

இன்றும் சிவந்த மலர்களாலேயே அர்ச்சிக்க வேண்டும். எனினும் செந்தாமரைப்பூக்கள், செவ்வரளிப் பூ விசேஷமானது. ஒரு சிலர் அம்பிகையை வைஷ்ணவியாகவும் பாவித்து சங்கு, சக்கரத்துடன் அலங்கரித்து வழிபடுவார்கள்.

கடலை மாவில் மஞ்சள் பொடி கலந்த மயில் அல்லது பறவைகள் கோலம் அல்லது பாவைகள் கோலமாகப் போடலாம்.

நிவேதனம்

பால் சாதம் விசேஷமானது. நிவேதனம் பண்ணலாம். சர்க்கரைப் பொங்கலும் ஏற்றது.

1.பால் சாதம்

  • குழைய வடித்த சாதத்தில் சுண்டக்காய்ச்சிய பாலை விட்டுக் கலந்து ஏலப்பொடி, முந்திரிப்பருப்பு நெய்யில் வறுத்தது சேர்த்துக் கலந்து ஒரு சிட்டிகை பச்சைக்கற்பூரம் சேர்த்து நிவேதனம் பண்ணிக் குழநதைக்குக் கொடுக்கலாம்.

2. கடலைப்பருப்புச் சுண்டல்

  • இன்று பெரும்பாலும் கடலைப்பருப்புச் சுண்டலே விசேஷம். கடலைப்பருப்பைக் காலையிலோ அல்லது மத்தியானம் பனிரண்டு மணி அளவிலோ கழுவி ஊற வைக்கவும்.
  • சுமார் 3 மணி சுமாருக்கு வாயகன்ற பாத்திரம் அல்லது கடாயில் கடலைப்பருப்பை வேக வைக்கவும். அரை வேக்காட்டில் உப்புச் சேர்க்கவும்.
  • கடலைப்பருப்பு நன்கு நசுங்கியதும் அடுப்பை அணைத்துச் சிறிது நேரம் சூட்டோடு வைத்திருந்து பின்னர் வடிகட்டவும்.
  • கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காய்த் தூள், பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை சேர்த்துத் தாளித்துக் கடலைப்பருப்பைக் கொட்டிக் கிளறவும்.
  • தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்க்கவும். காரம் வேண்டுமெனில் பச்சை மிளகாய் அதிகம் சேர்க்கலாம். அல்லது 3,4 பச்சை மிளகாய் தாளித்துவிட்டுக் கடலைப்பருப்பைக் கொட்டிக் கிளறுகையில் இரண்டு தேக்கரண்டி சாம்பார்ப் பொடியைச் சேர்க்கலாம்.
  • காரம் அவரவர் விருப்பம்/வசதிப்படி சேர்க்கவும். கட்டாயமாய்ச் சர்க்கரையும் சேர்த்துத் தேங்காய்த் துருவலோடு கிளறவும். இருந்தால் பச்சைக் கொத்துமல்லி போட்டுக் கலந்து விநியோகிக்கலாம்.
  • நவராத்திரி இல்லாத நாட்களில் இந்தச் சுண்டலோடு பச்சைக் கொத்துமல்லி, வெங்காயம் பொடியாக நறுக்கியது, துருவிய காரட், புதினா இலைகள் பொடியாக நறுக்கியது சேர்த்துக் கிளறிச் சாப்பிடலாம். இதோடு மிக்சர், ஓமப்பொடி கலந்தும் சாட் மாதிரிச் சாப்பிடலாம்.

நவராத்திரி ஆறாம் நாள்

பர்வத ராஜகுமாரி

பர்வதராஜன் மகளாய்ப் பிறந்த தேவி பார்வதி என்றும் பர்வத ராஜகுமாரி எனவும் அழைக்கப்பட்டாள். அவள் ஈசனையே தன் கணவனாக அடைய விரும்பி கடும் தவம் இருந்தாள்.

ஈசன் அவள் முன் தோன்றி ஈசனைக் கணவனாக அடைவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை எனவும் இன்னமும் கடுமையான தவம் இயற்ற வேண்டும் என ஓர் கிழவன் வடிவில் வந்து சொல்ல அப்படியே ஊண், உறக்கம் துறந்து தேவி கடும் தவத்தில் ஈடுபடுகிறாள்.

அகில உலகையும் படைத்து, காத்து, அழிக்கும் வல்லமை பெற்ற பரப்பிரும்மம் ஆன தேவியே தவம் இருந்ததால் அவள் “பிரமசாரிணி” என அழைக்கப்பட்டாள்.

மாங்காட்டில் ஈசனை நினைத்து தவம் செய்த காமாட்சியும் இவள் வடிவே என்பார்கள். இவள் நவராத்திரி வியாழக்கிழமைக்கு உரிய தேவி ஆவாள்.

குரு பகவான், வியாழன் எனவும் அழைக்கப்படுவார் அல்லவா! அந்த குருவானவர் நாம் இவளை வழிபடுவதன் மூலம் அனைவருக்கும் ஞானம், கல்வி, அமைதியான நிலையான வாழ்க்கை கிட்டச் செய்வார்.

திரிபுர சம்ஹாரத்தின்போது ஈசனின் இடக்கால் கட்டை விரலால் வரையப்பட்ட அஷ்டவகைக் கோலத்திலிருந்து தோன்றியவளே “பிரமசாரிணி” ஆவாள்.

இன்றைய தினம் அம்பிகையை சாகம்பரியாகவும் வழிபடுவார்கள். கொலுவில் அம்பிகையை சாகம்பரியாக அலங்கரித்துக் காய், கனிகளால் அலங்கரிக்கலாம்.

சண்டிகா தேவி

இன்றைய தினம் ஏழு வயதுப் பெண் குழந்தையைச் சண்டிகா தேவியாக நினைத்து ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும்.

சர்ப்ப ராஜனை ஆசனமாய்க் கொண்ட சண்டிகாதேவி, தூம்ரலோசனன் என்னும் அசுரனை வதம் செய்தாள்

தன் கரங்களில் அக்ஷமாலை, கபாலம்,தாமரைப்பூ, தங்கக்கலசம் ஆகியவற்றை ஏந்திய வண்ணம் காட்சி தருவாள்.

கோலம்

ஆறாவது நாள் சஷ்டி தினமான இன்று, அம்பிகையின் பல்வேறு நாமங்களை அரிசிமாவினால் அல்லது மஞ்சள் பொடி கலந்த கடலை மாவினால் கோலமாக வரைதல் நல்லது.

பூமாலை

அர்ச்சனைக்குப் பவளமல்லிப் பூக்கள் சிறந்தவை. எனினும் செம்பருத்தி மலர்களும் உகந்தவையே!

ரோஜாப்பூக்களும் உகந்தவை. இன்றும் சிவந்த நிறமுள்ள ஆடைகளையே குழந்தைக்குக் கொடுக்கலாம்.

நிவேதனம்

கல்கண்டு சாதம் நிவேதனம் பண்ணலாம். இயலவில்லை எனில் தேங்காய்ப் பால்ப் பாயசம், தேங்காய்ச் சாதம் எனத் தேங்காய் சேர்த்த உணவுகளைச் சமைத்துக் கொடுக்கலாம். பச்சைப்பயறு அல்லது பாசிப்பருப்பில் சுண்டல் பண்ணலாம்.

1.பச்சைப்பயறுச் சுண்டல்

  • பயறை நன்கு களைந்து அதில் கல் போன்றிருக்கும் பயறுகளைக் களைந்து அரித்துவிட்டு முதல் நாளே ஊற வைக்கவும்.
  • மறுநாள் 2,3 முறை கழுவி விட்டுப் பின்னர் ஓர் வாயகன்ற பாத்திரம் அல்லது கடாயில் வேக வைக்கவும்.
  •  பாதி வெந்ததும் உப்புச் சேர்க்கவும். பின்னர் நீரை வடிகட்டி எடுத்துக் கொண்டு, கடாயில் எண்ணெய் ஊற்றிக், கடுகு,பெருங்காயம், மிளகாய் வற்றல், கருகப்பிலை தாளித்து, வெந்த பயறோடு தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கிளறவும்.
  • இனிப்புச் சுண்டல் எனில் பயறை ஒரு அரைத் தேக்கரண்டி உப்புப் போட்டு வேக வைத்து எடுத்துக் கொண்டு வடிகட்டி வைக்கவும்.
  • கடாயில் நெய்யை ஊற்றிக் கடுகு, மிளகாய் வற்றல் தாளித்துக் கொண்டு வெந்த பயறைக் கொட்டி வெல்லத்தூள் சேர்த்துத் தேங்காய்த் துருவலோடு கலந்து நன்கு கிளறவும். மி.வத்தல் போடுவதால் ஏலக்காய் தேவை இல்லை. ஏலக்காய் தேவை எனில் மிளகாய் வற்றல் தாளிக்க வேண்டாம்.

2, கல்கண்டு சாதம்

  • ஒரு கிண்ணம் அரிசியோடு அரைக்கிண்ணம் பாசிப்பருப்பையும் சேர்த்து வறுத்துப், பாலில் குழைய வேக விட வேண்டும்.
  • இந்த அளவு அரிசிக்கு அரை லிட்டர் பாலாவது தேவைப்படும்.  குழைந்த சாதத்தில் கட்டிக்கல்கண்டைக் கால்கிலோ சேர்த்துக் கல்கண்டு சாதத்தோடு சேர்ந்து கெட்டிப்படும் வரை கிளற வேண்டும்.
  • பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்து ஏலக்காய், ஜாதிக்காயை நெய்யில் பொரித்துப் பொடித்துச் சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழங்களால் அலங்கரிக்க வேண்டும்.

3. தேங்காய்ப் பால்ப் பாயசம்

  • அரைக் கிண்ணம் அரிசியை நன்கு வறுத்துக் களைந்து கொண்டு, மிக்சி ஜாரில் போட்டுக் குருணையாகப் பொடிக்க வேண்டும்.
  • ஒரு நடுத்தர அளவுத் தேங்காயை உடைத்துத் துருவிக் கொண்டுப், பால் எடுக்க வேண்டும். முதல் பாலைத் தனியாக வைத்து விட்டு இரண்டாம், மூன்றாம் பாலில் அரிசியை நன்கு குழைய வேக வைக்கவும்.
  • இந்த அளவுக்கு 200 கிராம் வெல்லத்தூள் தேவை. அரிசி குழைந்ததும் வெல்லத்தூளைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • வெல்ல வாசனை போகக் கரைந்ததும் முதல் பாலைச் சேர்த்து ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைக்கவும்.
  •  முதல் பாலைச் சேர்த்துக் கொதிக்க விட்டால் திரிந்து விடும். நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்து அத்துடன் தனியாக எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப் பால் பிழிந்த சக்கையையும் வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.

4. தேங்காய்ச் சாதம்

  • இரண்டு கிண்ணம் சமைத்த சாதம். உதிர் உதிராக இருக்க வேண்டும்.
  • ஒரு நடுத்தர அளவுத் தேங்காயை உடைத்து ஒரு மூடியைத் துருவிக் கொள்ளவும். துருவல் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.
  • அடுப்பில் கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி ஊற்றவும்.
  • கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை/முந்திரிப்பருப்பு (இரண்டில் ஏதேனும் ஒன்று) போட்டு ஒவ்வொன்றாகத் தாளித்துப் பருப்புச் சிவந்ததும், பச்சை மிளகாய் இரண்டு, கருகப்பிலை, பெருங்காயம் போட்டுத் தேங்காய்த் துருவலையும் அதில் போட்டுக் கிளறவும்.
  • சிவக்க வறுத்தால் பிடிக்குமெனில் சிவப்பாக வறுக்கவும். இல்லை எனில் போட்டு இரண்டு நிமிஷம் வறுத்த பின்னர் அடுப்பை அணைத்துவிடலாம்.
  • இதில் இரண்டு கிண்ணம் சமைத்த சாதத்தைச் சேர்த்து, தேவையான உப்புடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு சாதம் உடையாமல் கிளறவும்.
  • சுவையான தேங்காய்ச் சாதம் தயார். சர்க்கரை சேர்ப்பதால் தேங்காயின் ருசியை எடுத்துக் காட்டும் என்பார்கள்.

நவராத்திரி ஏழாம் நாள்

கூஷ்மாண்டா

நவராத்திரி வெள்ளிக்கிழமைக்குரிய தேவி கூஷ்மாண்டா ஆவாள். கூஷ்மம் என்பது முட்டை, அண்டம்.

அண்டம் என்பது இந்தப் பிரபஞ்சத்தைக் குறிக்கும். கூஷ்மம் ஆகிய முட்டை தோன்றியது இந்த தேவியிடம் இருந்தே என்பதால் இவளைக் கூஷ்மாண்டா என அழைக்கிறோம்.

தீவினைகளைப் போக்கி நல்வினைகளை உருவாக்கும் இந்த தேவியைத் துதித்தால் கண் திருஷ்டி, தீய சக்திகளைத் தன் பக்தர்களை அணுகாமல் பாதுகாக்கிறாள்.

இதை வைத்தே பூஷணிக்காயில் குங்குமம் தடவி நட்ட நடு ரோட்டில் போட்டு திருஷ்டி கழிய என உடைக்கிறோம். இதன் மூலம் தெருவில் நடமாடும் அனைவர் கால்களையும் கூட உடைக்கிறோம் என்பது தெரியவில்லை நமக்கு.

ஓர் ஓரமாக உடைத்துப் போட்டு விட வேண்டும். பூஷணிக்காயையும் கூஷ்மாண்டம் என்பார்கள்.

வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்குரிய நாளான இன்று நமக்குச் சுக்கிரதசை அடிக்க வேண்டுமெனில் இந்த தேவியைத் துதிக்க வேண்டும்.

சுக்கிரன் மகிழ்ந்து எல்லாச் செல்வங்களையும் அருளுவார். தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துப் பாதுகாப்பாள்.

பகலும் இரவும் சந்திக்கும் அற்புத வேளையில் தன் இடக்கால் விரலால் ஈசன் வரைந்த கோலம் சப்த ஒலிக் கோலம். தாண்டவம் சந்தியா தாண்டவம். இந்தச் சமயம் தோன்றியவளே கூஷ்மாண்டா ஆவாள்.

அலங்காரம்

நவராத்திரி ஏழாம் நாள் என்பதோடு கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்குரிய நாட்கள் என ஏற்கெனவே பார்த்தோம். ஆகையால் இன்றைய தினம் கொலுவில் அம்பிகையை மஹாசரஸ்வதியாக அலங்கரிக்கலாம்.

ஸ்ரீவித்யா பீஜாக்ஷரியான அன்னை, சண்டமுண்டர்களை அழித்த கோலத்தோடு மிகவும் வீரியம் கொண்டு காட்சி அளிப்பாள்.

இவளைத் தங்க சிங்காதனத்தில் வீணையைக் கையில் ஏந்தி அமர்ந்திருக்கும் “சாம்பவி”யாக வழிபட வேண்டும்.

வெண் தாமரை மலரில் வீணை வாசிக்கும் கோலத்தில் அமர்ந்திருக்கும் இவளை, வெண்ணிற மலர்களால் அர்ச்சிக்கலாம்.

எட்டு வயதுப் பெண் குழந்தையை “சாம்பவி”யாக நினைத்து ஆவாஹனம் செய்து, வெண்பட்டு வஸ்திரம், வெண்ணிற மல்லிகை மலர்கள், வெள்ளியில் ஆன ஆபரணங்கள் கொடுத்து உபசரித்து, வெண் தாமரைப்பூ, மல்லிகை, முல்லை, தாழம்பூ ஆகிய வெண்ணிறம் அல்லது பழுப்புக் கலந்த வெண்ணிறப் பூக்களால் அர்ச்சித்து வழிபடலாம். இவளாலேயே மழை பொழிந்து நீர் வளம், நிலவளம் ஏற்படும்.

திட்டாணிக் கோலம் போடலாம். செண்பகப்பூக்கள், ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நறுமணம் மிக்க மலர்களால் வட்டவடிவமான கோலமும் போடலாம். அபிராமி அந்தாதி, சரஸ்வதி துதி ஆகியவற்றால் அன்னையைத் தொழுது வணங்கலாம்.

நிவேதனம்

இன்றைய தினம் வெண் பொங்கல் குழைய வேக வைத்துப் பண்ணி நிவேதனம் செய்யலாம். அல்லது காய்கள்+பருப்பு+அரிசி கலந்த கதம்பச்சாதமும் பண்ணலாம்.

இன்றைய தினம் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டல் பண்ணலாம். ஆனாலும் நவராத்திரி வெள்ளிக்கிழமைகளில் புட்டுப் போடுவதே விசேஷம்.

1. வெண் பொங்கல்

  • ஒரு கிண்ணம் அரிசியோடு அரைக் கிண்ணம் பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
  • வேகும்போது ஒரு கிண்ணம் பால் சேர்க்கலாம். வெந்து வரும்போது தேவையான உப்புச் சேர்த்து மஞ்சள் பொடியும் சேர்க்கவும்.
  • பின்னர் பக்கத்தில் இன்னொரு அடுப்பில் ஒரு கடாயில் இரண்டு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றிக் கொண்டு, மிளகு இரண்டு தேக்கரண்டி, ஜீரகம் இரண்டு தேக்கரண்டி, இஞ்சி பொடியாக நறுக்கியது இரண்டு தேக்கரண்டி போட்டுக் கருகப்பிலையும் போட்டுப் பொரித்துப் பொங்கலில் ஊற்றவும்.
  • முந்திரிப்பருப்பு இருந்தால் அதையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம். சுவையான வெண்பொங்கல் தயார்.

2. கதம்பச் சாதம்

  • அரிசியையும் பருப்பையும் நன்கு வேக வைத்துக் கொண்டு ஓரளவுக்குக் குழைந்து வரும்போது ஒரு கிண்ணம் புளியைக் கரைத்து எடுத்த சாறை வெந்து கொண்டிருக்கும் அரிசியில் சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். இன்னொரு அடுப்பில் எல்லாக் காய்களையும் கொஞ்சம் வதக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். காய்கள் வெந்ததும் வெந்து கொண்டிருக்கும் சாதத்தில் சேர்த்துக் கிளறவும்.
  • ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அதில் மிளகாய் வற்றல், கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக் கொண்டு வறுத்த தேங்காய்த் துருவலோடு சேர்த்துப் பொடிக்கவும்.
  • தேவையான பொடியை வெந்து கொண்டிருக்கும் சாதத்தில் போட்டுக் கலக்கவும்.
  • பச்சை மொச்சை, மற்றும் பருப்புகள் கிடைத்தால் அவற்றைச் சாதம் வேகும்போது சேர்க்கலாம். கீரை வகைகளையும் சேர்க்கலாம்.
  • எல்லாம் சேர்த்து நன்கு கிளறிக் கீழே இறக்கி வைத்து நெய்யில் கடுகு, மிளகாய் வற்றல் ஒன்று, கருகப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொண்டு சாதத்தில் சேர்க்கவும்.
  • பிடித்தமானால் கொத்துமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். ஏதேனும் ஒரு தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.

3. வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டல்

  • கொண்டைக்கடலையை முதல் நாளே ஊற வைத்து விட்டு, மறுநாள் மாலை 3 மணி அளவில் நன்கு கழுவிக் குக்கரில் உப்புச் சேர்த்துக் குழைய வேக வைக்கவும்.
  • வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கருகப்பிலை சேர்த்துக் கொண்டைக்கடலையையும் போட்டுக் கிளறவும்.
  • மிளகாய் வற்றல்+கொத்துமல்லி விதைப் பொடி இருந்தால் அதையும் போட்டுத் தேங்காய்த் துருவலோடு சேர்த்துக் கிளறவும்
  • சிலருக்குத் தேங்காய்ப் பல்லுப் பல்லாகப் போட்டால் பிடிக்கும். இது அவரவர் வழக்கப்படி செய்யவும். பின்னர் சுண்டலை அடுப்பிலிருந்து எடுத்து விநியோகம் செய்யலாம்.

4. புட்டுச் செய்யும் முறை

  • கால் கிலோ பச்சரிசி ஐ.ஆர். 20 எனில் நல்லது.
  • பாகு வெல்லம் கால் கிலோ
  • வேக வைத்த துவரம்பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன்.
  • உப்பு மொத்தமாக அரைத் தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி
  • பிசைய வெந்நீர்
  • தேங்காய்த் துருவல் சின்னதாக ஒரு மூடி
  • முந்திரிப்பருப்பு ஒரு கைப்பிடி, ஏலக்காய்த் தூள் அரைத் தேக்கரண்டி
  • நெய் இரண்டு மேஜைக்கரண்டி, தேங்காய்த் துருவல் முந்திரிப்பருப்பு வறுக்க.

முதல் முறை:

  • அரிசியைக் களைந்து ஊற வைத்துக் கொண்டு நீரை வடித்துவிட்டு வெறும் வாணலியில் சிவப்பாக வறுக்கவும்.
  • நன்கு ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கிண்ணம் நீரை விட்டுக் கொதிக்கவிடவும்.
  • அதிலேயே தேவையான உப்பையும், மஞ்சள் பொடியையும் சேர்க்கவும்.
  • இந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் விட்டுக் கலக்கவும்.
  • மாவைக் கையால் பிடித்தால் பிடிக்க வரவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும். நிதானமாய்ச் செய்து சுமார் இரண்டு மணி நேரம் இதை ஊற வைக்கவும்.
  • உருளி அல்லது வாணலியில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டுச் சுத்தம் செய்து விட்டுப் பாகு காய்ச்சவும்.
  • ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாகை அதில் விட்டுப் பார்த்தால் உருண்டையாக உருட்ட வரவேண்டும். உருட்டிப்போட்டால் “டங்”என்று சப்தம் வரும்.
  • இந்தப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்திருக்கும் மாவில் விட்டுக் கிளறவும்.
  • தேவையான பாகைச் சேர்த்ததும் மாவும் பாகும் நன்கு கலக்கும்படி கிளறவும்.
  • நெய்யில் முந்திரிப்பருப்பு, பொட்டுக்கடலை, தேங்காய் ஆகியவற்றைச் சிவக்க வறுத்து ஏலக்காய்த் தூளுடன் போட்டு நன்கு கலக்கவும்.

இன்னொரு முறை

  • அரிசியை நன்கு ஊற வைக்கவும்.
  • நீரை வடித்து விட்டு மிக்சி ஜாரில் போட்டு மாவாக்கவும். ஒரு மாவுச் சல்லடையில் சலித்தால் நைசான மாவு மட்டும் விழும்.
  • எல்லா மாவையும் சலித்து எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் நன்கு வாசனை வர வறுத்துக் கொள்ளவும்.
  • வெந்நீரைக் கொதிக்க வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு மாவில் கொஞ்சமாக விட்டுக் கலக்கவும்.
  • ஈர மாவு என்பதால், நீர் அதிகம் போனால் தளர்த்தியாகி விடும்.
  • சிறிது நேரம் மாவை வைத்து விட்டு ஓர் வெள்ளையான ஈரத்துணியில் மாவைப் பரப்பி இட்லித் தட்டில் துவரம்பருப்பு ஊற வைத்ததைக் கலந்து வைக்கவும்.
  • இட்லித்தட்டை மூடவும். மாவு வெந்துவிட்டதா எனப் பார்க்க ஒரு குச்சியால் கிளறினால் அதில் ஒட்டாமல் வரும்.
  • முன் சொன்ன மாதிரி உதிர்த்தால் உதிரும். பிடித்தால் பிடிக்கவும் வரும். பின்னர் மேலே சொன்ன மாதிரிப் பாகு வைத்துக் கொண்டு மாவில் விட்டுக் கலக்கவும்.
  • நெய்யில் வறுத்த சாமான்களைச் சேர்க்கவும். இந்தப் புட்டு முதலில் சொன்னதை விட மெதுவாக மிருதுவாக இருக்கும்
    #ad

    #ads

    ‘நவராத்திரி கையேடு’ போல் அமைந்த, ‘சஹானா’வின் 2020 நவராத்திரி சிறப்பிதழை வாங்க. கீழே கொடுத்துள்ள படத்தை கிளிக் செய்யவும்👇

    இந்த புத்தகத்தில் உள்ள நவராத்திரி சிறப்பு பதிவுகள் பின் வருமாறு

    • நவராத்திரி வழிபாடு உருவான கதை
    • கொலுப்படி அமைத்தல் மற்றும் அலங்காரங்கள்
    • நவராத்திரி பூஜைக்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள்
    • நவராத்திரி ஒன்பது நாட்கள் மற்றும் விஜயதசமி அன்று பூஜை செய்யும் முறைகள் (தனித்தனியே விளக்கமாக)
    • நவராத்திரி ஒன்பது நாளுக்கான நிவேதன செய்முறைகள் (26 Recipes)
    • நவராத்திரிக்கான பாமாலை
    • நவராத்திரி நாட்களுக்கான தேவியின் நாமங்கள் (விளக்கத்துடன்)
    • லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள் 
    • அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள் 
    • அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்

    கொலு பொம்மைகள் / ஸ்டாண்ட் வாங்க Amazon இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

    நவராத்திரி தொடர்பான அனைத்து பதிவுகளும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள் – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)

    தாத்பர்யம் (நவராத்திரி சிறப்புச் சிறுகதை) – எழுதியவர் : சுபாஷினி பாலகிருஷ்ணன்