in

வளர்ப்பு முறைகள் (Parenting Styles)

வளர்ப்பு முறைகள் (Parenting Styles)

ணக்கம்,

சென்ற பதிவில் குறிப்பிட்டது போல், வளர்ப்பு முறைகள் பற்றி இன்று பார்க்கப் போகிறோம். அதை விரிவாய் அலசும் முன், ஒரு குட்டிக் கதை

கதை என்று சொல்வதை விட, ஒரு சிறுகதையில் வரும், ஒரு பகுதி எனலாம். இதை முதலில் வாசியுங்கள், பின் வளர்ப்பு முறைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்

சிறுகதையின் ஒரு பகுதி 

“அது வந்து டாடி… உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்… திட்ட மாட்டீங்க தானே…” என தன் பதிமூன்று வயது மகன் சித்தார்த் தயக்கமாய் நிறுத்த

“சித்து கண்ணா, நான் உனக்கு டாடி மட்டுமில்ல, பெஸ்ட் பிரெண்ட்னு உனக்கே தெரியும். என்கிட்ட பேசறதுக்கு ஏன் இவ்ளோ யோசிக்கற?” என மகனை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தார் சதீஷ்

“டாடி, அது வந்து… நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்” என பிள்ளை கூறவும், மயங்கி விழுந்து விடாமல் இருக்க, தன்னை நிதானப்படுத்திக் கொண்டார் சதீஷ்

பள்ளியில் சக மாணவர்களுடன் ஏதேனும் மோதலாய் இருக்கும், சமாதானம் செய்தால் சரியாகி விடுவான் என்ற யோசனையுடன் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தவர், இப்போது என்ன செய்வதென புரியாமல் விழித்தார்

மகன் தன் கண்ணுக்கு இன்னும் சிறு பிள்ளையாய் தெரிந்தாலும், பதின்ம வயதின் தொடக்கத்தில் இருக்கிறான் என்பது அப்போது தான் சதீஷின் மனதில் உறைத்தது

‘பதிமூன்று வயதில் காதலா?’ என மனதில் கோபம் எழுந்த போதும், இதை சரியாய் கையாள வேண்டுமென அவர் உள் மனம் அறிவுறுத்தியது…..

நீங்கள் மேலே வாசித்தது, எனது “கண்பேசும் வார்த்தைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருந்த “காதல்…” எனும்  சிறுகதையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் உரையாடலின் ஒரு பகுதி

நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

அந்த தந்தையின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால், என்ன செய்திருப்பீர்கள் என ஒரு கணம் உங்களுக்கு நீங்களே கேள்வி எழுப்பிப் பாருங்கள்

முதல் ரியேக்சன் என்னவாக இருந்திருக்குமென நான் சொல்லட்டுமா?

“கொன்னுடுவேன்… என்ன பேச்சு பேசற? இந்த வயசுக்கு பேசற பேச்சா இது? எல்லாம் இந்த போனும் டிவியும் பண்ற வேலை. அதை கட்  பண்ணினா தான் இது உருப்படும்” என வசைமாறி பொழிந்து இருப்பீர்கள், நான் சொல்வது சரிதானா? 🙂

பெரும்பாலோனோர் இப்படித் தான் எதிர்வினையாற்றி (React) இருப்போம் (நான் உட்பட)

பெற்றோராய், நம் பிள்ளை வழித்தவறி செல்கிறானோ என்ற பயமும், அதனால் விளையும் பதட்டமுமே இதற்குக் காரணம்

அதை தவறென்று சொல்ல இயலாது. அந்த தருணத்தின் Reflex ஆக, அப்படித் தான் பேசத் தோன்றும்

ஆனால், இப்படி ரியாக்ட் செய்வதன் விளைவு என்னவாக இருக்கும் என சொல்கிறேன் கேளுங்கள்

  1. அடுத்த முறை உங்கள் பிள்ளை, உங்களிடம் எதையும் இயல்பாய் பகிர மாட்டான் / மாட்டாள்
  2. நம்மிடம் பகிர இயலாததை, வெளியே நட்புகளிடமோ, அல்லது யார் காது கொடுத்து கேட்கிறார்களோ அவர்களிடமோ பகிர்வார்கள்
  3. அந்த நட்போ உறவோ, அவர்களை சரியாய் வழி நடத்தினால் நல்லது. இல்லையெனில், என்ன நேரும் என யோசித்துப் பாருங்கள்

எதிர்பாலின கவர்ச்சி (Infatuation)

எதிர்பாலின கவர்ச்சி எனும் Teen Age Infatuation, இந்த தலைமுறையில் மட்டுமல்ல, நம் கொள்ளு தாத்தா அவங்க தாத்தா என, மனித இனம் தோன்றிய காலம் தொட்டே இருக்கும் ஒரு விஷயம் தான்

அறிவியல் ரீதியாய் கூறவேண்டுமெனில், அதெல்லாம் தான் உடலின் ஹார்மோன்கள் சரியாய் வேலை செய்கிறது என்பதற்கான வெளிப்பாடுகள். அந்த ஈர்ப்பை வெறும் ஈர்ப்பு என உணர்ந்து, கடந்து சென்றுவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை

ஆனால், இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு இருக்கும் எக்ஸ்போஷர் (Exposure), அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் குருட்டு தைரியத்தை கொடுப்பது தான், பெற்றோரான நமக்கான சவால்

இந்த விஷயத்தை கையாள்வது, கத்தியின் மேல நடப்பது போன்றது

கையாள வேண்டிய முறை 

விளையாட்டாய் பேசுவது போல், மனம் விட்டு பேசினாலே இத்தகைய விஷயங்களை சரி செய்து விட இயலும்

“இதெல்லாம் இந்த வயசுல வர்ற இயல்பான விஷயம். இதை ஜஸ்ட் கிராஸ் பண்ணி போய்ட்டே இருக்கணும். டிவி சினிமால வர்ற மாதிரி இல்லடா கண்ணா லைப். அதுல எல்லாம், ஸ்பைடர் மேன் சூப்பர் மேன் ஸ்டோரி மாதிரி, ரியல் லைப்பையும்  பாண்டஸி ஸ்டோரி மாதிரி Exaggerate (மிகைப்படுத்தி) பண்ணிக் காட்றாங்க. இதெல்லாம் நீ லைப்ல செட்டில் ஆனப்புறம் யோசிக்க வேண்டிய விஷயம்” என இன்னின்ன வார்த்தைகளில், அவரவர் பிள்ளைகளின் இயல்புக்கேற்ப எடுத்து சொல்வதே சரியான அணுகுமுறை

“சொல்றது சுலபம், அந்த சூழ்நிலை வந்தா தான் தெரியும்”னு, டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர் முணுமுணுப்பது கேட்கிறது

உண்மை தான், நமக்கென வரும் போது, இது அத்தனை சுலபமில்லை என்பதை நானும் உணர்கிறேன்

ஆனால் கோபம் தவிர்த்து, பிள்ளைகளிடம் நண்பனாய் / நண்பியாய் மாறி, அவர்களை பேச வைத்து, நாமும் பேசி, அவர்கள் மனம் உணர்ந்து, புரியவைக்க முயற்சிக்க வேண்டும் என்பதே நிதர்சனம்

நட்பான அணுகுமுறை

நான் மேலே குறிப்பிட்ட சிறுகதையில் வரும் தந்தை ‘சதீஷ்’, அழகான ஒரு அப்படி ஒரு நட்பான அணுகுமுறையில், தன் பிள்ளை சித்தார்த்தின் பதின்ம வயது ஈர்ப்பின் விளைவுகளை எடுத்துரைத்து, அழகாய் அவனுக்கு புரிய வைப்பார்

அவரின் Positive அல்லது Permissive Parenting Style மூலம், இந்த சூழ்நிலையை தனக்கு  சாதகமாக்கிக் கொள்வார் இந்த தந்தை

Parenting Styleன் முக்கியத்துவத்தை, ஒரு சிறு சாம்பிள் போல  இந்த கதையில் வரும் சம்பவம், உங்களுக்கு உணர்த்தி இருக்கும் என நினைக்கிறேன்

நம் பெற்றோர் எந்த பல்கலைக்கழகத்தில் உளவியலை கற்று நம்மை வளர்த்தார்கள்? 

நம் பெற்றோர், அவர்களின் பெற்றோர் எல்லாம் இப்படி உளவியல் பாடம் படித்தா பிள்ளைகளை வளர்த்தார்கள் என்ற கேள்வி, உங்களில் சிலரின் மனதில் எழலாம்

நாம் வளர்ந்த சூழல் வேறு, நம் பிள்ளைகள் வளரும் சூழல் வேறு

“பெத்தவங்களுக்கும் பயந்து, பிள்ளைகளுக்கும் பயந்து வாழற தலைமுறை நம் தலைமுறை” என விளையாட்டாய் நம் தலைமுறை பெற்றோரை பற்றி கூறுவதைக் கேட்டிருப்போம்

சிரிக்க சொல்லிய விஷயமென்றாலும், இது முற்றிலும் உண்மை. நம் பதின்ம வயதில், பெற்றோரிடம் ஒரு புத்தகம் வாங்கக் கூட யோசித்து யோசித்துக் கேட்டிருப்போம்

ஆனால், நம் பிள்ளைகள் அப்படியா? இது தான் இந்த தலைமுறை

நம் பெற்றோரும் நம்மைப் பற்றி, அவர்கள் வளர்ந்த விதத்தோடு ஒப்பிட்டு இப்படித் தான் பேசி இருப்பார்கள் என்பது வேறு விஷயம்

ஆனால், நம் பிள்ளைகளின் தலைமுறை, விஞ்ஞான வளர்ச்சியின் ஆதிக்கத்தில் வளரும் தலைமுறை. அதன் காரணமாகவே, வளர்ப்பு முறை பற்றிய புரிதல் பெற்றோராகிய நமக்கு அவசியமாகிறது

நம்மில் பலர், இதில் வரும் முறைகளை ஏற்கனவே அது தான் என தெரியாமல், இயல்பாய் உபயோகப்படுத்திக் கொண்டும் இருக்கலாம்

இன்னும் புரிந்து செயல்படுத்தும் போது, அதன் நன்மைகள்  முழுதாய் கிடைக்கும்

வளர்ப்பு முறையின் இரு வேறு கோட்பாடுகள் 

வளர்ப்பு முறை பற்றி சொல்லும் போது திணிப்பது (Demandingness) & ஏற்பது (Responsiveness) என இருவகையாய் சொல்லப்படுகிறது

திணிப்பது (Demandingness) என்பது, நமக்கு வேண்டியது போல் பிள்ளைகளை வளைப்பது, மற்றும் நம் கொள்கைகளை நம்பிக்கைகளை திணிப்பது

ஏற்பது (Responsiveness) என்பது, பிள்ளைகளை அவர்கள் போக்கில் செல்ல விட்டு நல்வழிப்படுத்துவது, மற்றும் அவர்களை உள்ளபடி ஏற்றுக் கொள்வது

எல்லா வளர்ப்பு முறைகளும் இந்த இரண்டு கோட்பாடுகளுக்குள்  தான் அடங்கும். இனி வளர்ப்பு முறைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்

நேர்மறை வளர்ப்பு முறை (Positive Parenting) 

அமெரிக்க உளவியல் வல்லுநர் மார்ட்டின் செலிக்மென் (Martin Seligman), இந்த வளர்ப்பு முறைக்கு Positive Parenting என பெயரிட்டுள்ளார். Positive Parentingன் தந்தை என இவர் அழைக்கப்படுகிறார்

இந்த முறையின் முக்கிய அம்சங்களை பார்ப்போம்

1. நட்புணர்வு (Being Friendly)

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வும், நட்புணர்வும் இருப்பது அவசியம்

நான் உன் நண்பன், நீ என்னிடம் எதையும் பகிரலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டியது அவசியம்

“அம்மா அப்பாகிட்ட என்ன வேணா சொல்லலாம்” எனும் போது, அவர்கள் செய்யும் நல்லது கெட்டது எல்லாமும் நம் கவனத்திற்கு வரும். அதில் எது சரி எது தவறு என சீர் தூக்கி பார்த்து, அவ்வப்போது சரி செய்ய இயலும்

இதன் மூலம், பிரச்சனைகள் பெரிதாகும் முன்பே, அதை செப்பனிட ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் கதை தான்

2. பேச அனுமதித்தல் (Let Them Pour it Out)

நிறைய பெற்றோர் செய்யும் தவறு இது தான். அவர்களுக்கு இருக்கும் பணிச் சுமையில், பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்துக் கேட்க நேரம் இருப்பதில்லை

“என் வேலை அப்படி… என்ன செய்வது? பொழப்பை பார்க்க வேண்டாமா?”  என்ற உங்கள் தரப்பு வாதம் சரி தான். ஆனால், ஒரு நாளில் ஒரு மணி நேரமேனும், பிள்ளைக்காக தனியாய் ஒதுக்கி செலவிடுங்கள்

அவர்களோடு அமர்ந்து இயல்பாய் பேசுங்கள். பிள்ளைகள் மனம் விட்டு பேசத் தூண்டுங்கள். இதை செய்து பாருங்கள், வித்தியாசத்தை உணர்வீர்கள்

பிள்ளைகள் சொல்வதை முழுதாய் காது கொடுத்து கேட்பது, அதன் பின் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாய், அவர்கள் நிலைக்கு இறங்கி (புரியும் விதமாய்) பதில் அளிப்பது முக்கியம்

3. மறுப்புக்கு விளக்கம் கொடுத்தல் (Give Reason for Saying “No”)

பிள்ளைகள் கேட்கும் ஒரு விசயத்திற்கு மறுப்பு சொல்லும் போது, அதற்கான சரியான காரணத்தை அளிப்பது (Reason for saying ‘no’) இன்றியமையாதது

இதை செய்வதன் மூலம், பிள்ளைகள் மறுப்புக்கான காரணம் உணர்ந்து, அதை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வார்கள். வெறுமனே மறுத்தால், மீண்டும் முயற்சித்துப் பார்க்கத் தோன்றும்

பெரியவர்களான நமக்கே, நாம் சொல்வதை ஒருவர் காரணமின்றி மறுத்தால் கோபம் வரும், ஏற்றுக் கொள்ளவும் இயலாது. அதே தான் பிள்ளைகளுக்கும்

“அப்பா  வேண்டாம்னு சொன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும்” என்ற நம்பிக்கை பிள்ளைகளின் மனதில் பதியும் போது தான், நாம் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள்

காரணமின்றி மறுக்கும் போது, “ஆமா… என்ன சொன்னாலும் சும்மா சும்மா வேண்டாம்னு தான் சொல்லுவாங்க” என வெறுப்பும் நம்பிக்கை இன்மையும் ஏற்பட்டு விடும்

அது பின்னாளில், சொல்லாமலே செய்யும் தவறான பழக்கத்தை ஏற்படுத்தி விடவும் வாய்ப்பு இருக்கிறது

4. பிள்ளைகளை மதித்தல் (Respect Your Kids)

இதென்ன புதுசா இருக்கு?  பிள்ளைகள் தானே பெற்றோரை மதிக்க வேண்டும் என்கிறீர்களா?

உண்மை தான். ஆனால், பிள்ளைகள் நாம் பார்க்கும் கண்ணாடி போன்றவர்கள். நாம் செய்வதை தான் அவர்கள் திருப்பிச் செய்வார்கள்

நாம்  அவர்களை மதித்தால், அவர்கள் நம்மை மதிப்பார்கள். மதிப்பது என்பது “வாங்க போங்க” என விளிப்பது அல்ல. நம் சமூகத்தில் இந்த தவறான புரிதலும் நம்பிக்கையும் காலம் காலமாய் இருந்து வருகிறது

அதாவது, “வாங்க போங்க” என மரியாதையாய் விளிக்கும் பிள்ளைகள் மரியாதை தெரிந்தவர்கள், இல்லையெனில் வளர்ப்பு சரியில்லை என பேசப்படுகிறது

விளிப்பது வேறு, மரியாதை அளிப்பது வேறு. ஒருவர் உங்களை “வாங்க போங்க” என அழைத்து, மரியாதை குறைவான வார்த்தைகளால் அவமதிக்க இயலும். நட்பாய் உரிமையாய் ஒருமையில் பேசி, மதிக்கவும் இயலும்

பிள்ளைகள் மரியாதையுடன் பேசிக் கற்றுத் தருவதை தவறென நான் கூறவில்லை, அது நல்ல பழக்கம் தான். ஆனால், அதை ஒரு வளர்ப்பின் அளவுகோலாய் நினைப்பது தவறு என்கிறேன்

சரி, பிள்ளைகளுக்கு மதிப்பு தருவது பற்றி பாப்போம்

பெரியவர்கள் போலவே, குழந்தைகளுக்கும், அவர்கள் வயதிற்கேற்ப ஒரு அகந்தை  (Ego) இருக்கும்

அகந்தை (Ego) என்பது ஏதோ கெட்ட வார்த்தை என நம் மனதில், நம் சமூகமும் சினிமாவும் பதித்து விட்டது. உண்மையை சொல்ல வேண்டுமெனில், எல்லோருக்கும் அகந்தை (Ego) அவசியம்

மனிதனுக்கு அகந்தை (Ego) இல்லையெனில், அவன்  பரிணாம வளர்ச்சியின்றி, காட்டுவாசியாகவே இருந்திருப்பான்

ஈகோ என்பது, சுயமரியாதை (Self-Esteem) மற்றும் சுயமுக்கியத்துவம் (Self-Importance) என்பதே அன்றி, வேறு தவறான விஷயம் ஒன்றுமில்லை

இப்போது சொல்லுங்கள், ஈகோ அவசியமா இல்லையா என?

சுயமரியாதை இல்லையெனில், நாம் முன்னேற விழைவோமா? “சும்மாவா இருக்க நீ?” என ஒருவர் கேட்டு விட்டால் நமக்கு எத்தனை கோபம் வருகிறது, அது தான் ஈகோ

அந்த ஈகோ, “ஏதாச்சும் செஞ்சு நம்மாலும் முடியும்னு காட்டணும்” என்ற உந்துதலை கொடுக்கிறது

நம் முக்கியத்துவத்தை நாம் உணரவில்லையெனில், அடுத்தக் கட்டத்திற்கு செல்லாமல், இருக்கும் இடத்திலேயே தேங்கி விட மாட்டோமா?

“நாம இல்லைனா இந்த ஆபிஸ் என்ன ஆகும்?” என்றோ, “நான் இல்லைனா இந்த வீடு வீடவே இருக்காது” என்றோ, நம் முக்கியத்துவம் என்ற ஈகோவை நாம் உணர்ந்தால் தான், எத்தனை முடியவில்லை என்றாலும், நம் கடமைகளை செய்ய இயலும்

அந்த ஈகோ, அளவான அல்லது பாசிட்டிவ் ஈகோவாக  இருக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லை. அந்த நிலை மாறும் போது  தான் பிரச்சனைகள் தலை தூக்குகிறது

ஈகோ பற்றி எழுத ஆரம்பித்தால், தனி புத்தகம் போடும் அளவிற்கு விஷயங்கள் இருக்கிறது. அதனால், அதை இதோடு நிறுத்திக் கொள்கிறேன்

நமக்கு சொன்னது போல், பிள்ளைகளுக்கும், அவர்கள் வயதுக்கென ஒரு சுயமரியாதை  இருக்கும். அது மிகவும் அவசியம். அதற்கான மரியாதையை நாம் அளிக்கத் தான் வேண்டும்

“இந்த வயசுல அப்படி என்ன இவளுக்கு” என நமக்கு கோபம் வரும். ஆனால், சிறுவயதில் இருக்கும் அந்த சுயமரியாதை தான், பெரியவர்களானதும்  அவர்களை சிறந்த தலைமை பண்பு மிக்கவர்களாக ஆக்கும்

அதோடு, சமூகம் சார்ந்த மரியாதையை தான் பெற வேண்டுமென்ற, முன்னேற்ற பாதைக்கு வழிவகுக்கும்

அந்த ஈகோ, அளவுக்கு மீறும் போது மட்டும் கொஞ்சம் எடுத்துச் சொல்வது அவசியம்

அளவுக்கு மீறுவது என்றால் என்ன?

தான் என்ற உணர்வு இருக்கும் வரை, நம் தலையீடு தேவையில்லை. அதை அப்படியே விட்டு விடலாம். ஆனால்,  தான் என்ற அளவுக்கு மீறிய அகந்தையோ, அல்லது மற்றவர்களை கீழே தள்ளியேனும் தான் மேலே வரவேண்டுமென்ற எதிர்மறை அகந்தை காரணிகள் (Negative Ego Factors) தான் தவறானது

அப்படி ஒரு நிலை வரும் நேரத்தில்,  அது தவறு என்பதை பிள்ளைகளுக்கு புரிய வைத்து நல்வழிப்படுத்த வேண்டியது, பெற்றோரின் கடமை

5. இயல்பாய் ஏற்கச் செய்தல் (Make them Accept Naturally) 

இந்த முறையின் முக்கிய அம்சம்,  கோபமாய் அல்லது தண்டனையாய் ஒரு செயலை அவர்கள் மேல் திணிக்காமல், இயல்பாய் சுய ஒழுக்கம் என்னும் முறையில், குழந்தைகளை ஏற்றுக் கொள்ளச் செய்வது

நீங்கள் தண்டனையுடன் முடிச்சு போட்டு ஒரு விஷயத்தை செய்ய வைத்தால், அந்த தண்டனைக்கு பயந்து மட்டுமே பிள்ளை அதைச் செய்யும், அது சுய ஒழுக்கத்தை (Self Discipline) ஏற்படுத்தாது

பெற்றோராய் நமக்கு வேண்டியது, பிள்ளைகள் சுய ஒழுக்கத்துடன் ஒரு செயலை செய்ய வேண்டியது தானே

“என் பிள்ளையை எந்த ஒரு செயலையும் மிரட்டினால் மட்டுமே செய்வான், அது போன்ற பிள்ளைகளை எப்படி இயல்பாய் செய்ய வைப்பது” என நீங்கள் புலம்புவது கேட்கிறது

ஒரு உதாரணத்துடன் இதைச் சொன்னால் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்குமென நினைக்கிறேன்

தினமும் செய்யும் பல் துலக்குதல் எனும் சிறு விஷயத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்

உங்கள் பிள்ளையிடம், “பிரஷ் பண்ணலைனா ஓத படுவ” என மிரட்டுவதை விட, பல் துலக்காமல் இருப்பதால் விளையும் தீமைகளையும், துலக்குவதால் உள்ள நன்மைகளையும் பெரியவர்களுக்கு விளக்குவது போல் சொன்னால் நிச்சயம் மாற்றத்தை காணலாம்

நாம் செய்யும் தவறு என்ன தெரியுமா? அவங்களுக்கு சொன்னால் புரியாது என்ற தவறான புரிதல் தான், சில காலம் முன் வரை நானும் அந்த தவறை செய்தவள் தான்

ஆனால், எந்த ஒரு விஷயத்தையும் அதன் காரண காரியங்களோடு விளக்கிச் சொல்லும் பட்சத்தில், அதை குழந்தைகள் ஏற்றுக் கொள்கிறார்கள்

ஏற்றுக் கொள்வது மட்டுமின்றி, ஒரு புது விஷயத்தை கற்கவும் செய்கிறார்கள்

“நீ சாப்பிடற பிளேட்டை கிளீன் பண்ணாம அப்படியே வெச்சிரலாம், நாளைக்கு அதுலயே மறுபடி உனக்கு போட்டு தரேன், ஓகே வா”

“சீ… டர்ட்டி”

“ஏன் அப்படி சொல்ற?”

“அதுல டர்ட்டி ஸ்மெல் வரும்”

“ஏன் அப்படி வருது?”

“அதுல Food ஒட்டிக்கிட்டு இருக்கே”

“அப்போ உன் பல்லுல ஓட்டிட்டு இருக்கற Foodஐ கிளீன் பண்ணலைனாலும் அதே தான”

“ஆமால்ல”

“ஆமாவா இல்லையா?”

“ஆமா”

“டர்ட்டி மட்டும் இல்ல பாப்பு, அது வயித்துக்குள்ள போனா, வயறு வலிக்கும். பல்லுலயும் கேவிட்டி வரும், அப்புறம் உனக்கு புடிச்ச Snack எல்லாம் சாப்பிடவே முடியாது”

“ஓ.. ஓகே ம்மா, இனிமே நான் கரெக்ட்டா பிரஷ் பண்ணிக்கறேன்”

இது எனக்கும் என் மகளுக்கும் ஆறு மாதம் முன் நடந்த ஒரு உரையாடலின் சுருக்கம்

அன்று முதல் இன்று வரை, நாள் தவறாமல், காலையும் இரவும் தானே பிரஷ் செய்கிறாள். நான் அசதியில் மறந்தாலும் நினைவூட்டுகிறாள்

இதற்கு முன், மிரட்டி செய்ய வைத்த ஒரு செயல், ஐந்து நிமிடம் செலவழித்து அளித்த விளக்கத்தால், சுய ஒழுக்க வழக்கமாய் மாறி இருக்கிறது

இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.  இது போல் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்களும் முயன்று பாருங்கள்

இந்த விளக்கம் உங்கள் பிள்ளையின் வயதுக்கும் புரிதலுக்கும் ஏற்ப மாறுபடும், ஆனா Basic Idealogy இதான் 😊

6. குழந்தைகளை குழந்தைகளாய் பார்த்தல் (Accept kid as kid, Don’t expect an adult in them)

குழந்தைகளை குழந்தைகளையாய் பார்க்க நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்

அதை விடுத்து, அவர்களிடம் பெரியவர்களுக்கான முதிர்ச்சியை நாம் எதிர்பார்க்கும் போது தான் பிரச்சனை எழுகிறது

“உன் பொண்ணு செம குறும்பு, எப்படி சமாளிக்கற?” என பலரும் என்னைக் கேட்பதுண்டு

“குழந்தை என்றால் குறும்பு செய்யத் தானே செய்யும், வைக்கும் இடத்தில் இருக்க அதென்ன பொம்மையா?” என மனதில் தோன்றும்

அதைச் சொன்னால், லூசா நீ என்பது போல் பார்ப்பார்கள் என்பதால், “ஆமா குறும்பு தான் கஷ்டம் தான்” என சிரிப்புடன் நகர்ந்து விடுவேன். சில சமயம், பெருமையுடன் அவள் செல்லக் குறும்புகளை  பட்டியலிடவும் செய்வேன்

வேலை அதிகமுள்ள சில நாட்களில், சேட்டையை சமாளிக்க இயலாமல்,  கோபம் எழுவதும் உண்டு

ஆனால், “அந்த நாளும் வந்திடாதோ” என பின்னாளில் இந்த குறும்புக்கு ஏங்கும் நாள் ஒன்று வரும் என்பதை எண்ணி, அதை ரசிக்கத் தொடங்கி விடுவேன்

நல்வழிப்படுத்த, சில நேரம் பொய்யாய் கோபமுகம் காட்டுவதும் நடக்கும். அது இல்லாமல், சமாளிக்க இயலாதே 😃

இந்த கொரோனா லாக் டவுன் காலம், இன்னும் நெருங்கச் செய்து, பிள்ளையை அவள் இயல்பில் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை எனக்கு அளித்து இருக்கிறது. நிறைய பெற்றோர் இது போல் சொல்வதை, இப்போது கேட்க முடிகிறது

இதில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், நேரத்தை ஒதுக்கி பிள்ளைகளை புரிந்து கொள்ள முயலும் போது, அவர்களை நாம் அவர்கள் இயல்பில் ஏற்றுக் கொள்கிறோம்

இதன் காரணமாய், அவர்களை நல்வழிப்படுத்துவது சற்று சுலபமாகிறது

இந்த முறை எல்லா பிள்ளைகளுக்கும் பொருந்துமா?

எப்படி ஒரு நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து ஒருவருக்கு பொருந்தி மற்றவருக்கு பொருந்தாமல் போகிறதோ, அது போல் வளர்ப்பு முறையும் குழந்தைக்கு குழந்தை மாறும்

நேர்மறை வளர்ப்பு முறை (Positive Parenting) தான் சிறந்தது என நிரூபிக்கப்பட்டிருந்தாலும் கூட, கை மீறிய பிள்ளைகளை வழிக்கு கொண்டுவர, வேறு ஒரு முறையில் சற்று சரி செய்து, பின் இந்த முறையில் தொடர்ந்து நிலைக்கச் செய்யலாம்

அந்த வேறு முறைகள் என்ன? அதை எப்படி அறிவது? அடுத்த பதிவில் அதைப் பற்றி பாப்போம். வாசித்தமைக்கு நன்றி

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

அணுகுமுறை… (சிறுகதை) – எழுதியவர் : சஹானா கோவிந்த் 

தங்கமணி சபதம்… 😂😃🤣 (நகைச்சுவை)