எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
செக்கை கவுண்ட்டர் கிளார்க்கிடம் நீட்டினான் மணி. அவர் அதை வாங்கி முன்னும் பின்னும் பார்த்துவிட்டு ஒரு டோக்கன் கொடுத்துவிட்டு, காத்திருக்கச் சொன்னார்.
ஏ.ஸி. காற்று குளுகுளுவென்றிருந்தது. போதாக் குறைக்கு ஆங்காங்கே சுவரில் தொங்க விட்டிருந்த ஃபேன்களும் ஏ.ஸி காற்றை சுழற்றியடித்துக் கொண்டிருந்தன. சுற்றும் முற்றும் பார்த்தான். மூன்று பெஞ்ச்கள் போட்டிருந்தார்கள். மேலே பார்த்தான். ஒரு ஏ.ஸி. இருபதில் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு நேர் கீழே போய் உட்கார்ந்து கொண்டான்.
டிங்டாங் சத்தம் கேட்டது. டோக்கன் டிஸ்ப்ளே பன்னிரண்டு என்று காட்டியது. கையிலிருந்த டோக்கனைப் பார்த்தான். பதினான்கு. இன்னும் யாரோ ஒருவர் பணம் வாங்க வேண்டும். அடுத்து நமக்குத்தான் என்று நினைத்துக் கொண்டான்.
ஹாலை அப்படியே ஒரு பார்வை பார்த்தான். கவுண்டருக்குள் கிளார்க்குகள் மும்முரமாய் வேலை செய்துகொண்டிருந்தார்கள். கவுண்ட்டருக்கு வெளியே கையில் பாஸ்புத்தகமும், பேப்பருமாக சிலர் அங்குமிங்குமாய் நடந்துகொண்டிருந்தார்கள். மேனேஜர் யாரோ இருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
மறுபடியும் டிங்டாங் சத்தம். டிஸ்ப்ளே. பதிமூன்றை காட்டியது. மறுபடியும் தனது டோக்கனை பார்த்துக் கொண்டான். அடுத்து நாம்தான்.
எதற்கும் எழுந்து போய் காஷியருக்கு முன்பக்கம் கொஞ்சம் ஓரம்கட்டி நின்று கொள்ளலாம் என்று நினைத்து மெல்ல எழுந்தான். ஒருவர் பணம் வாங்கிக்கொண்டு திரும்பினார். அடுத்து நம்முடையதுதான்.
டிங்டாங் சத்தம். கொஞ்சம் பின்னல் நகர்ந்து மேலே பார்த்தான். பதினான்கை காட்டியது டிஸ்ப்ளே. முன்னே வந்து கவுன்ட்டருக்குள்ளே கையைவிட்டு டோக்கனை நீட்டினான்.
‘ உங்க பேரு… ‘
‘ மணி ரத்தினம்… ‘
வீட்டில், செக்கை கொடுத்தனுப்பும்போது, ‘ டேய்… ஐந்நூறு ரூபா நோட்டா வாங்கிட்டு வாடா… ‘ என்று காமினி சொன்னது நினைவுக்கு வந்தது.
‘ ஸார்… ஐநூறு ரூபா நோட்டா குடுங்க… ‘ என்றான்.
அவர் பணத்தை நீட்டினார். வாங்கிக்கொண்டு எதிர் பெஞ்சில் வந்து உட்கார்ந்தான்.
எண்ணிப் பார்த்தவனுக்கு திகீர் என்றது. ஆயிரம் ரூபாய் அதிகம் கொடுத்திருந்தார். அக்கா அய்யாயிரம்தானே சொன்னாள். இவர் ஆறாயிரம் கொடுத்திருக்கிறாரே… குழம்பினான்.
கவுன்ட்டரைப் பார்த்தான். அதே நேரம் டிங்டாங் கேட்டது. இன்னொரு ஆள் வேக வேகமாய் ஓடிப்போய் கேஷ் கவுண்ட்டரை மறைத்துக் கொண்டு நின்றார். சுற்றும் முற்றும் பார்த்தான். நெஞ்சு இப்போது வேகமாய் அடித்துக்கொண்டது. யாரும் நம்மைக் கவனிக்கவில்லை என்று உணர்ந்ததும், பணத்தை அப்படியே மடித்து பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்தான். மொபெட் சாவியை எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து வெளியேறி மொபெட்டை கிளப்பினான்.
வீடு போகும் வழியில் ஒரு மரநிழலில் மொபெட்டை நிறுத்தினான். பதட்டம் குறையவில்லை.
‘நாம்தான் தவறாக எண்ணிவிட்டோமா… பத்து நோட்டுகளை பன்னிரண்டு என்று எண்ணி விட்டோமா… ‘
மறுபடியும் பணத்தை எடுத்து நோட்டுக்களை ஒவ்வொன்றாய் எண்ணினான்.
ஒன்று… இரண்டு…….. பதினொன்று…. பன்னிரண்டு.
சரிதான். பன்னிரண்டு ஐநூறு… அப்படியென்றால் ஆறாயிரம்தான்.. கேஷியர் ஆயிரம் ரூபாய் கூடுதலாகத்தான் கொடுத்திருக்கிறார்.
யோசித்தான். ஆயிரம் ரூபாயை தனியாக எடுத்து இடுப்பு பெல்ட் பாக்கெட்டுக்குள் திணித்தான். ஐயாயிரத்தை மட்டும் மறுபடியும் பாக்கெட்டுக்குள் செருகிக்கொண்டு மொபெட்டை எடுத்தான்.
பணத்தை அக்காவிடம் கொடுத்தான். ‘ டே… நா மாவு பிசைஞ்சுகிட்டிருக்கேன்ல… அங்கே டேபிள் மேல கொண்டு போய் வைடா… அப்புறமா நான் எடுத்துக்கறேன்… ‘ என்றாள்.
அவளிடம் நடந்தது எதையும் சொல்லவில்லை. அப்படியே ஐயாயிரத்தை டேபிள்மேல் வைத்து ஒரு காலி டம்ளரை அதன்மேல் வைத்துவிட்டு நகர்ந்தான்.
அவசரமாய் மொட்டை மாடிக்கு ஓடினான். ரொம்பவும் ஆவலுடன் இரண்டு ஐநூறு ரூபாய்களை பெல்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்தான்.
‘என்ன செய்யலாம்… பிரண்ட்ஸோட சேர்ந்து பார்ட்டி கொண்டாடலாமா… இல்லை… ஒரு டிராக் பேண்ட் அம்மாவிடம் கேட்டிருந்தோமே… அதை நாமே வாங்கிக்கொள்ளலாமா… பணம் ஏது என்று அம்மா கேட்டால்…. அப்போது பார்த்துக் கொள்ளலாம்… யோசித்தபடியே கீழே இறங்க எண்ணி எழுந்தான்.
‘ மணீ… மணீ… ‘
கீழே இருந்து அக்கா கூப்பிடுவது கேட்டது. பதறிக்கொண்டு இறங்கினான்.
‘ டேய்… பணத்தை எண்ணி வாங்கினீயா இல்லையா… ‘
‘ ஏங்க்கா… எண்ணித்தான் வாங்கினேன்… ‘
‘ இந்தா நீயே திரும்ப எண்ணு… ‘
அவள் பணத்தை நீட்டினாள். இவனுக்கு தூக்கி வாரி போட்டது.
‘ஒருவேளை பத்து நோட்டுதான் இருந்தததா… நாம் இரண்டை எடுத்துக்கொள்ள, எட்டு நோட்டுக்கள்தான் இருக்கின்றனவா… ‘
‘ ஒன்று… இரண்டு…. ஒன்பது…பத்து… சரியாத்தானேக்கா இருக்கு…’
‘ எவ்வளவு… ‘
‘ ஐயாயிரம்… ‘
‘ மாடு மாடு… நான் குடுத்தது ஆறாயிரத்துக்கு…. ‘
திடுக்கிட்டான்.
‘ அக்கா… நீ ஐயாயிரம்தானே கேஷ் எடுக்கனும்னு சொல்லிட்டிருந்தே… ‘
‘மாடு மாடு… நான் சொன்னா… ஐயாயிரமேத்தான் எடுக்கணுமா… இடையில அம்மா ஆயிரம் ரூபா சீட்டு கட்டனும், குடுடினு கேட்டாங்க… ஆறாயிரத்துக்கா செக் போட்டேன்… ஐயாயிரம்தான் வாங்கிட்டு வந்திருக்கே… ’
திடுக்கிட்டான் இவன். கேஷியர் தவறுதலாக ஆயிரம் ரூபாய் கூடுதலாக கொடுத்துவிட்டார் என்றல்லவா நினைத்திருந்தோம். இப்போது இவளிடம் நடந்ததைச் சொன்னால் திட்டுவாளே… என்ன செய்வது… யோசித்தான்.
‘மாடு… ஏன்டா முழிச்சிக்கிட்டு நிக்கறே… ஊம்… கிளம்பு, கிளம்பு… போயி விளக்கமா சொல்லி மீதி பணத்தை வாங்கணும்… ‘ என்றவள் திடீரென்று நினைத்துக் கொண்டவளாய், ‘எல்லாம் சரி… செக் கையில கொடுத்தா என்ன எழுதியிருக்குன்னேல்லாம் பார்க்கவே மாட்டியா… மாடே… ‘ என்றபடி தன் தாவணியை சரிசெய்துகொண்டு போய் கண்ணாடியில் முகம் பார்த்தாள். அப்படியே, ‘ கிளம்புடா… போலாம்… ‘ என்றாள்.
திடுக்கிட்டான். ‘ என்ன… அக்காவும் வருகிறாளா, சரியான வம்பில் மாட்டிக்கொண்டோமே… இப்போது என்ன செய்வது… ‘
சட்டென சொன்னான்…. ‘ அக்கா இதுக்கெதுக்குக்கா நீயும் வர்றே… நான் போயி வாங்கிட்டு வரமாட்டேனா… நீ இருக்கா… ‘ என்றபடி அவளது பதிலை எதிர்பார்க்காமல் மடமடவென வெளியேறினான்.
அடுத்த பத்தாவது நிமிடம், திரும்பிவந்து ஆயிரம் ரூபாயை அக்காவிடம் கொடுத்தான்.
‘செக்ல போட்டிருக்கற பணத்தை குடுக்க வேண்டியதுதானே… அவனெல்லாம் மனுஷனா… அவனையெல்லாம் அப்படியே அறையணும்… ‘
டக்கென தனது கன்னத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டான் மணி.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
Nice one
நன்றி நண்பரே… உங்களது மேலான கருத்துக்கள் எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும்…கொடுக்கிறது… நன்றி மீண்டும்…