எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காமாஷிக்கு மனதாரவில்லை. அம்மா வீட்டுக்கு பிணங்கிக் கொண்டு போன மருமகள் இன்னும் வீடு திரும்பி வந்தபாடாய் இல்லை. மகனிடம் நான்கைந்து தடவை சொல்லியும் பார்த்துவிட்டாள். அவனும் அதே கர்வத்துடன் முரண்டு பிடித்துக்கொண்டுதான் இருக்கிறான். ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள், காமாஷி.
கல்யாணமாகி ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. ஆனாலும், ஆரம்பத்திலிருந்தே மல்லிகா கொஞ்சம் எதிர்த்து எதிர்த்துதான் பேசிக் கொண்டிருந்தாள். சிறு வயது, இன்னும் பக்குவம் வரவில்லை. ஆரம்பத்தில் எல்லாம் அப்படித்தான் இருக்கும், போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று விட்டுப் பிடித்துக்கொண்டுதானிருந்தாள். ஆனாலும், சிறுசிறு மனஸ்தாபங்கள் கூட சண்டையாய் மாறி, போன வாரம், ‘ நான் எங்கம்மா வீட்டுக்கு போறேன் ‘ என்றுவிட்டு நாமக்கல்லுக்கு கிளம்பிப் போயே விட்டாள், முதல் முறையாக
வாரம் ஒன்று ஆகிவிட்டது. இவனோ, ஆபிஸிற்கு போகிறான், வீட்டிற்கு வருகிறான். ஆபிஸிற்கு போகிறான், வீட்டிற்கு வருகிறான். ஆனால் பெண்டாட்டியை மட்டும் போய் அழைத்து வராமல் இருக்கிறான்.
‘ அப்படி இல்லைடா தம்பி….சின்ன பொண்ணு….இன்னும் விளையாட்டுப் பருவம் போகலை. காலேஜ் முடிச்சு ரெண்டு வருஷத்துலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டு வேற வந்துட்டா… தன்னோட அப்பா அம்மா தங்கை எல்லாத்தையும் விட்டுட்டு நம்மளையே நம்பி வந்திருக்கா. நீ வயசுல அவளைவிட மூத்தவன் இல்லையா… நீதான் கொஞ்சம் அனுசரிச்சு போகனும்… இப்படியே இருந்தா எப்படி… நீ நாமக்கல் ஒரு நடை போயி அவளை கூப்பிடு. எல்லாம் வருவாள். ஊடலும் கூடலும் இருக்க வேண்டியதுதான். அதுக்காக கோபத்தை பாராட்டிக்கிட்டு அப்படியே விட்டுவைக்கறதா… ‘ என்று மகனின் மனதைச் சலவை செய்தாள்.
xxxxxxxxx
சாயங்காலம் ஆபிஸ்விட்டு வந்தவன், ‘ அம்மா தலை வலிக்கற மாதிரி இருக்கும்மா… கொஞ்சம் டீ போட்டுக் கொடேன்…’ என்றான். நாம் சொல்வதை மட்டும் இவன் கேட்பதாக இல்லை. நாம் மட்டும் ஏன் இவன் சொல்வதைக் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் முனகிக்கொண்டே திரும்பிப் படுத்துக் கொண்டாள். மறுபடியும் கேட்டான். ‘ என்னால முடியலை. நீயே போயி போட்டுக் குடிடா… ’ என்று முனகினாள்.
‘ ஏன்மா. உடம்புக்கு என்ன ஆச்சு…’ என்று அருகில் வந்தான்.
‘ ஒன்னும் ஆகலைடா…நீ போயி டீ போட்டு குடிச்சுக்கோ… ’ என்றாள்.
‘ டாக்டருக்கிட்டே வேணா போகலாமா…’ என்றான்.
‘ டே… என்மேல காட்டற கரிசனத்த உன்பென்டாட்டி மேல காண்பிடா… அப்புறம் பாரு… எல்லாம் சரியாகிடும்…’ என்று திரும்பி அவனைப் செல்லமாய் கண்டித்தாள்.
‘ நான் என்ன சொல்றேன்… நீ என்ன பேசறே… ‘ என்று முறைத்தவன், ‘ சரி. சரி. நீயும் டீ குடிப்பேத்தானே… போட்டுக்கிட்டு வர்றேன்… கொஞ்சம் எழுந்திரிச்சி உட்கார்… ‘ என்றுவிட்டு சமையலறைக்குள் போனான். அடுத்த பத்து நிமிடத்தில் கையில் இரண்டு கப்களுடன் வந்து சோபாவில் உட்கார்ந்தான்.
மெல்ல மறுபடியும் ஆரம்பித்தாள் காமாஷி. ‘ டேய்… நாளைக்கு ஆபிஸ்க்கு ஆப்ஃடே தானே… மத்தினாயம் நீ ஆபிஸ்லேர்ந்து அப்படியே கிளம்பிடு. போயிட்டு அவளை சமாதனம் செஞ்சு கூட்டிட்டு வா. சமாதனாம் செய்யறளவுக்கு இன்னும் கோபத்தோடவே இருக்க மாட்டா… நீ வேணுமானா பாரேன்.. நீ எப்போ வந்து கூப்பிடுவேன்னு அவ காத்திக்கிட்டுத்தான் இருப்பா.. நீ போயி கொஞ்சம் சமாதானமா பேசு. வீட்டுக்கு வா போகலாம்னு சொல்லு. அவ கிளம்பிடுவா பாரேன்…’ என்றாள். எல்லாம் அனுபவம்தானே.
‘ அவ மூஞ்சியை தூக்கி வெச்சுக்கிட்டு… நாம சொல்றத காது கொடுத்து கூட கேட்கமாட்டாமா… ராங்கி பிடிச்சவ…. ‘ என்றான்.
‘ அடேய்… அப்படியெல்லாம் இருக்காதுடா… எல்லாம் வருவா… அவளுக்கு மட்டும் உன்னோட வந்து வாழனும்னு ஆசை இருக்காதா என்ன… ஒருவேளை அவ பிடிகொடுத்து பேசலைனா உன் மாமனார்கிட்டே சொல்லு, அவளை அனுப்பி வையுங்கனு சொல்லு…. அவர் நல்ல மனுஷன், செய்வார்…. ’ என்றாள்.
‘ அம்மா… அவங்க அதை முன்னாடியே சொல்லியிருக்கலாமில்லையா…நீ வீட்டுக்கு கிளம்பி போம்மா… பாவம் அவர் தனியா கிடந்து கஷ்டப்படுவார்னு சொல்லியிருக்கலாமில்லையா….’ என்றான் விட்டுக் கொடுக்காமல்.
‘ இருக்கும்டா… யார் கண்டது.. அவங்க சொல்லிகூட இருக்கலாம்.. இவ நீ வந்து கூப்பிட்டாத்தான் போகலாம்னுகூட காத்திருப்பா… உனக்கு அவளைப் பத்தி சொல்லியா தரனும்… நீ ரொம்ப பேசாதே… நாளைக்கு ஆபிஸ்ல இருந்து இங்கே வராதே. நேரா போறே… அவளைக் கூட்டிட்டு வாறே… இல்லை நான் ஊருக்கு கிளம்பிடுவேன்… தெரிஞ்சுக்கோ… ‘ என்றவள், ‘ நான் உனக்கு எல்லாத்தையும் செஞ்சு குடுத்துக்கிட்டிருந்தா உனக்கு உன் பொண்டாட்டியோட அருமை தெரியாது… அதான் விஷயம். போ போ…’ என்று கொஞ்சம் கடுமையாகவே சொன்னாள்.
ராத்திரியும் காலையிலும் மெல்ல மெல்ல, ‘ மத்தியானமாக போயி அவளை கூட்டிக்கொண்டு வந்திடுடா… அசால்ட்டா இருந்துடாதே. ‘ என்று அவன் காதுகளில் போட்டுகொண்டே இருந்தாள், அவள்.
xxxxxxxxxx
காலையில் பதினோரு மணிக்கெல்லாம் அவனிடமிருந்து போன்.
‘ அம்மா, நான் இன்னிக்கு ஆபிஸ்க்கு லீவு போட்டுட்டு நேரா நாமக்கல் வந்துட்டேமா… நான் இங்கேதான் இருக்கேன். அவள் தயாராகிட்டு இருக்கா.. நாங்க மத்தியானம் லஞ்ச் முடிச்சதும் கிளம்பி அங்கே வந்துடுவோம்மா…’ என்றான்.
இதை எதிர்பார்க்காத காமாக்ஷி ரொம்பவும் சந்தோஷமடைந்தாள். ‘பரவாயில்லை மகனுக்கு நல்ல புத்தி வந்துவிட்டது… இனி எலாம் நல்லதாவே நடக்கும் ’ என்று பெருமிதம் அடைந்து கொண்டவள், ‘ ரொம்ப சந்தோஷம்பா…வரும்போது… கொஞ்சம் பூ, பழமெல்லாம் வாங்கிக் கொடுத்து கூட்டிட்டு வா… வெறும் கையோட வந்திடாத… ’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
உடனே மருகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசித்தவள், அவளுக்கு முந்திரி போட்ட கேசரியும், காரவடையும் ரொம்ப பிடிக்கும் என்பதால், அதற்குண்டான வேலைகளில் இறங்கினாள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முற்றும்
This post was created with our nice and easy submission form. Create your post!
அல்வாக்கு அல்வா கொடுப்பாள் மருமகள்