2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14
ஒரு சில வாசனையை நினைத்தாலே வெறுக்கிறது. மாறாய் சில உணவின் வாசனையை நினைத்தால் சாப்பிடத் தூண்டுகிறது.
பருப்பு வாசனை, இஞ்சி பூண்டு வாசனை பிடிக்கவில்லை. ஆனால் இந்த குருமாவின் வாசனை சாப்பிட ஆசை மூட்டுகிறது.
குக்கர் சத்தம் பிடிக்கவில்லை, என்ன விந்தையோ… தோசை கல் மீது டம்ளரில் கொத்தும் சத்தம் ஆளை மயக்குகிறது.
மேலே மொட்டை மாடியில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது கீழே பச்சை நிற மின்விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்த ரோட்டோரம் இருந்த பரோட்டா கடையில் இருந்து தோசை கல்லில் கொத்தும் சத்தம் வந்தது.
கீழே வந்ததும் ஆதி உறங்கலாம் என்று கூறியதும் எனக்குள் திடீரென ஒரு தவிப்பு. கொத்து பரோட்டாவை இப்போவே சாப்பிட வேண்டும் என்றேன் ஆதியிடம்.
அவர் விழித்தார். அப்படியெல்லாம் சாப்பிட்டு முடித்தப் பின் பசி என்று எதுவும் கேட்டதில்லை. அதுவும் எட்டு மணிக்கு தோசை சாப்பிட்டு விட்டு பத்து மணிக்கு மீண்டும் பரோட்டாவா என்பது போல் என்னைப் பார்த்தார்.
“நாளைக்கு வாங்கித் தரேன் கவி.. இப்போ லேட் ஆயிடுச்சு தூங்கு”
“எனக்கு இப்போவே சாப்பிடணும்”
“பசிக்குதுனா இன்னொரு தோசை ஊத்தித் தரேன்”
“இல்லை ஆதி.. எனக்கு பரோட்டா வேணும்.. இல்லனா எனக்கு தூக்கம் வராது”
“இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்லாம் பாத்து கெட்டுப் போய்ட்ட நீ.. ப்ரெக்னென்சி க்ரேவிங், மிட்னையிட் க்ரேவிங்ன்னு பாத்து அப்படியே கேக்றீயா”
ஆதி கூறியதும் உண்மை தான். இப்பொழுதெல்லாம் இணையத்தில் வரும் வீடியோக்கள் உடம்பிற்கு ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உண்ணத் தூண்டுகின்றன. நாம் தான் தேர்ந்தெடுத்து நல்லதை உண்ண வேண்டியதாய் இருக்கின்றது.
இந்த அறிவெல்லாம் இருக்கிறது. ஆனால் இந்த அறிவைத் தாண்டிய ஆசை வேண்டும் என்கிறது.
“எனக்கு வேணும் வாங்கித்தாங்க”
“என்ன கவி அடம் பிடிக்கிற”
“ப்ளீஸ்.. “
அதற்கு மேல் ஆதியால் ஒன்றும் பேச முடியவில்லை. என்னையும் அழைத்துக் கொண்டே கடைக்குச் சென்றார்.
பரபரப்பான சாலை தான், அதனால் பத்து மணிக்கும் பாதுகாப்பிற்குப் பஞ்சம் இல்லை.
கடைக்குள்ளே சில இருக்கைகள் இருந்தன. வெளியில் சில இருக்கைகள் இருந்தன. வெளியில் இருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தோம்.
“என்ன சாப்பட்றீங்க?” அங்கே உணவு பரிமாறி கொண்டிருந்த ஒருவர் எங்களிடம் வந்து கேட்டார்.
“ஒரு கொத்து பரோட்டா” என்றார் ஆதி
“வேற?”
“ஒன்னு போதும்” என்றேன் நான்.
“கொத்து போட்டு தான் குடுக்கணும்.. ஒரு பத்து நிமிஷம் ஆகும்” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.
அந்த பத்து நிமிடங்கள் சுற்றி நிகழ்வதை பார்த்துக்கொண்டிருந்தேன்.
பார்சல் வாங்க பலர் நின்று கொண்டிருந்தனர். கறி குழம்பின் மணம் வீதிக்கே வீசியது. அதோடு சேர்ந்து பச்சை வெங்காயம் கருவேப்பிலை தக்காளியை தோசை கல்லில் கொத்தும் வாசனையும் கலந்தது.
இரண்டு மூன்று குடும்பங்கள் கடையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மீதி எல்லாம் ஆண்கள் கூட்டம் தான்.
பரோட்டா, கொத்து, கலக்கி, ஆம்லெட், ஆனியன் தோசை இவை தான் சுற்றிச் சுற்றி ஆர்டர்களாக வந்து கொண்டிருந்தன. ஒரு இலையில் சிக்கன் வறுவல் கூட இருந்தது. அதுவும் இங்கு கிடைக்கிறது போல.
பக்கத்து இலைக்கு வைக்கப் போன கொத்து பரோட்டாவை எனக்கு தான் என்று ஒரு நிமிடம் நினைத்ததை ஆதி பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.
அடுத்த நிமிடம் எங்கள் இருவருக்கும் இலை போட்டார் சட்டையும் லுங்கியும் அணிந்திருந்த உணவு பரிமாறுபவர்.
“சைவ குருமாவா அசைவமா?” இலை போட்ட கையோடு கேட்டார்
“நீயே சொல்லு” என்று பார்வையிலேயே கூறினார் ஆதி
“அசைவம்” என்றதும் குழம்பு இருந்த டம்ளரை எங்கள் பக்கத்தில் வைத்தார்.
“நாண் வெஜ் கிரேவினா டார்க் கலர்ல கொத்து பரோட்டாக்கு நல்லாருக்கும். அதாங்க” என்றேன். அதற்கும் ஆதி எதுவும் கூறவில்லை.
திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வெளியில் இருந்த பச்சை நிற மின் விளக்கு அணைந்ததில் இருள் சூழ்ந்தது.
உடனே உணவு பரிமாறுபவர் மெழுகுவர்த்தி எடுத்துக் கொண்டு எங்களிடம் வந்தார். அங்கிருந்த எல்லோருக்கும் ஒன்றை கொடுத்தார். பின் அவரே அதை பற்ற வைத்துவிட்டு மர மேஜையில் மெழுகை ஊற்றி நிற்க வைத்துவிட்டுச் சென்றார்.
“இந்த மாதிரி எதிர்பார்க்காம கேண்டில் லைட் டின்னர் அமையாதுல.. பெஸ்ட் மொமெண்ட்” ஏதோ பெரிய மகிழ்ச்சி கிட்டயது போல் அனுபவித்து கூறினேன்.
“பரவால்ல.. எழுபது ரூபாய்ல அதுவும் முடிஞ்சிருச்சி” கொத்து பரோட்டாவின் விலையை கூறி சிரித்தார் ஆதி.
“உனக்கு அனுபவிக்க தெரில”
எங்கள் பேச்சிற்கு நடுவே கொத்து பரோட்டாவை கொண்டு வந்து வைத்ததும் முதலில் நான் கொஞ்சம் போட்டுக்கொண்டு ஆதியிடம் கொடுத்தேன்.
சூடாக இருந்தது. முதல் இரண்டு வாய் வேகமாக சாப்பிட்டேன். பின் அதன் மேல் குழம்பை ஊற்றினேன். சூடாக இருந்ததில் இலையின் ருசியும் அதில் ஒட்டிக்கொண்டது. இரண்டு மூன்று வாய் குழம்பும் பரோட்டாவும் பிசைந்து உண்டேன். பின் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை மட்டும் தேடிப் பொறுக்கி உண்டேன்.
“போதும்” என்றேன் இறுதி வெங்காயத்தை வாயில் வைத்துக் கொண்டே
“இன்னும் இவ்ளோ இருக்கு.. எனக்கும் போதும்” அதற்குள் என்னைவிட அதிகம் சாப்பிட்டிருந்த ஆதி கூறினார்.
“சரி வாங்க போலாம்”
“நீ பேசின பேச்சுக்கு இன்னொரு தட்டு கேப்பன்னு நினைச்சேன்.. நாலு வாய் தின்னுட்டு போதும்ங்கிற.. நல்லாலையா”
“டேஸ்ட்லாம் சூப்பர்.. இந்த டைம்ல இவ்ளோ காரம் போட்டு இப்படி பரோட்டா சாப்பிட்டா வயித்துல இருக்க பாப்பா பாவம்ல”
“அததான நான் அப்பவே சொன்னேன்.. வேணும்னு அடம் பண்ண”
“அது ஆசை”
“இப்போ இவ்ளோ வேஸ்ட் பாரு”
“அரிசி சாப்பாடு காய்கறி வேஸ்ட் பண்ணா அத விதச்ச விவசாயி நினைச்சி வருத்தப் படலாம்.. இது வெறும் மைதாதான்.. அந்த லாஜிக் பார்த்து கஷ்டப்பட்டு சாப்ட்டு உடம்பு கெடுத்துக்க வேணாம்.. ஆசைக்கு சாப்ட்டேன் இப்போ திருப்தி போதும் போலாம்”
“நீ ஏற்கனவே ஒரு மாதிரி இப்போ மாசமானதுல இருந்து இன்னும் ஒரு மாதிரி ஆயிட்ட கவி”
“போடா”
இருவரும் சிரித்துக் கொண்டே வீட்டிற்குச் சென்றோம்.
அழகாகத் தான் சென்றன நாட்கள்.
ஒரு பக்கம் அத்தை மாமாவை விட்டு தனியாக வசிப்பது சலிப்பாகவும் வேலை பளுவோடும் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஒரு சின்ன சுதந்திரம் கிடைத்திருக்கிறது.
அவர்களைப் பார்க்க வேண்டும் அவர்களோடு இருக்க வேண்டும் போல் தான் இருக்கிறது. எனினும், இப்போதைக்கு இந்த சுதந்திரம் நன்றாகத் தான் இருக்கிறது.
நாளை புது வருடம் பிறக்கிறது. அடுத்த வருடம் என் உயிர் இந்த மண்ணில் பிறக்கப் போகிறது.
சந்தோசம் ஒரு பக்கம் பயம் ஒரு பக்கம். ஈரோட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மூன்றாவது மாத முடிவில் ஸ்கேன் எடுக்க வேண்டும். அங்கு இன்னும் என்னென்ன சொல்லப் போகிறார்களோ.
எல்லாம் கலந்த உணர்வோடு புது வருடத்தை எதிர்கொண்டேன்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings