2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4
“பட…பட”வெனக் கதவு தட்டப்பட, கண்களைத் தேய்த்துக் கொண்டே போய்த் திறக்கிறார் ஆறுமுகம்.
தலையில் கொம்புடன், கருத்தமேனி மினுமினுக்க ஆஜானுபாகு தோற்றத்துடன் நின்றிருந்தனர் இருவர். புராணப்படங்களில் வரும் அசுரர்களைப் போன்ற தோற்றத்திலிருந்த அவர்களைக் கண்டதும், முதலில் திடுமென அதிர்ந்த போதிலும் சட்டென்று சுதாரித்துக் கொண்ட ஆறுமுகம், “டேய்… யார்ரா நீங்க?… இங்க எதுக்குடா வந்திருக்கீங்க?” கத்தலாய்க் கேட்டார்.
“எங்களுக்குப் பசிக்குது… சாப்பிட ஏதாச்சும் குடு” இரு அசுரர்களும் ஒரே குரலில் கேட்க,
திரும்பி சுவர்க்கடிகாரத்தைப் பார்த்த ஆறுமுகம், “டேய்… மணியைப் பார்த்தீங்களா?… ராத்திரி ரெண்டு… இந்த நேரத்துல வந்து “சாப்பிட ஏதாச்சும் குடு”ன்னு கேட்டா… என்னத்தைடா குடுக்க முடியும்?… போங்க… போங்க… போய் வேற எங்காச்சும் முயற்சி பண்ணுங்க!… எங்கேயும் கிடைக்கலேன்னா… இன்னிக்கு ஒரு நாள் தண்ணியைக் குடிச்சு வயித்தை நிரப்பிக்கிட்டுத் தூங்குங்க” என்றார் ஆறுமுகம்.
தூரத்தில் நிரம்பித் தளும்பிக் கொண்டிருந்த அந்த ஏரியைப் பார்த்த அசுரர்கள், “அப்ப அந்த ஏரித் தண்ணியை நாங்க குடிச்சுக்கலாமா?” கேட்க,
“அதையேன் என்கிட்டக் கேட்கறீங்க?… இங்கிருந்து ரெண்டு கிலோமீட்டர்தான் அந்த ஏரி அப்படியே பொடி நடையாய்ப் போய் அள்ளி அள்ளி குடிங்க” என்றார் ஆறுமுகம்.
“அது எதுக்கு அவ்வளவு தூரம் போகணும்?… இங்கிருந்தே குடிப்போமே?” என்ற அசுரர்கள் இங்கிருந்தே தங்கள் கைகளை நீட்ட, நாலு கைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து கடைசியில் அந்த ஏரி வரைக்குமே நீ……..ண்…..டு விட, அதன் கரையை தங்கள் கைகளால் உடைத்து சீறிவரும் வெள்ளத்தை இரு கைகளாலும் அள்ளி அள்ளி அவர்கள் பருக,
பொங்கி வந்த பெருவெள்ளம் ஊருக்குள் புகுந்து ஊரையே மூழ்கடிக்க,
“அய்யோ… அய்யோ” கத்திக் கொண்டே கண் விழித்தார் ஆறுமுகம்.
விழித்த வேகத்தில் எழுந்து ஜன்னலருகே சென்று, அவசரமாய் அதைத் திறந்து, தூரத்தில் தெரியும் ஏரியைப் பார்த்தார்.
அடுத்த விநாடியே பேரதிர்ச்சி வாங்கி, “ஓ….”எனக் கூவிக் கொண்டே அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வராண்டாவிற்கு ஓடி வந்தார்.
அவர் கத்தலைக் கேட்டு எல்லா அறைக்கதவுகளும் திறக்கப்பட, மாற்றுத் திறனாளிகள் எல்லோரும் வெளியே வந்து, “என்ன சார்… என்ன ஆச்சு?” என்று கோரஸாய்க் கேட்டனர்.
பார்வையற்ற சிறுவன்., “அய்யோ… இங்க என்ன நடக்குது… சொல்லுங்க!… எனக்கு பயமாயிருக்கு” அலறினான்.
தொடர்மழை காரணமாய் கேட்டில் அமராமல், ரிசப்ஷன் பகுதியில் வந்து அமர்ந்திருந்த வாட்ச்மேன், வேக வேகமாய் வந்து ஆறுமுகத்தின் தோளைத் தொட்டு, “என்ன ஆறுமுகம்?.. ஏதாச்சும் கனவு கண்டீங்களா?” என்று கேட்க,
“ஆமாம்… கனவும் கண்டேன்!…அந்தக் கனவை நிஜத்திலும் கண்டேன்” என்றார் ஆறுமுகம்.
அதுவரையில் மிதமாய்ப் பெய்து வந்த மழை, சட்டென்று வலுத்து அசுரத்தனமாய்க் கொட்ட ஆரம்பித்தது.
“என்ன ஆறுமுகம் சொல்றீங்க?… கனவில் கண்டதை நேரிலும் பார்த்தீங்களா?”… அப்படியென்ன பார்த்தீங்க?” பதட்டமாய்க் கேட்டார் வாட்ச்மேன்.
“என் கூட வாங்க” என்று சொல்லி வாட்ச்மேன் வடிவேலுவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று, அந்த வராண்டா கடைசியில் இருக்கும் ஜன்னலருகே நிறுத்தி, “அங்கே பாருங்க” என்றார் ஆறுமுகம்.
நெற்றியைச் சுருக்கிக் கொண்டே வெளியே பார்த்த வடிவேல் அலறினார். “அய்யய்யோ… என்ன தம்பி ஏரியைக் காணோம்?”
“அய்யா… ஏரி அங்கேயேதான் இருக்கு… அந்த ஏரியிலிருந்த தண்ணீரெல்லாம்தான் காணோம்” என்றார் ஆறுமுகம்.
“எங்கே போச்சு?… ஏரித் தண்ணியெல்லாம் எங்கே போச்சு?”
“அப்படியே அந்த ஜன்னலுக்குப் போய்… வெளிய பாருங்க” ஆறுமுகம் சொல்ல, தலையை மேலும் கீழும் ஆட்டிக் கொண்டே எதிர்ப்புற ஜன்னலருகே சென்று அரை குறையாய்த் திறக்கப்பட்டிருந்த அந்த ஜன்னலை முழுவதுமாய்த் திறந்து பார்த்து விட்டு, அப்படியே தலையில் கைகளை வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்தார்.
தூரத்தில் தெரிந்த தூத்துக்குடி நகரம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. “என்ன தம்பி?… என்ன கொடுமை இது?… என்னோட இத்தனை வருஷ வாழ்க்கைல நான் இது மாதிரிப் பார்த்தேயில்லையே!… அய்யோ… குடிசைக… ஓட்டு வீடுக… எல்லாம் தண்ணீல மூழ்கிப் போய்க் கிடக்கே?… அதுல இருந்த மக்கள் எங்கே போனாங்களோ?… என்ன ஆனாங்களோ?… தெரியலையே!?.. ஆண்டவா?… இது என்ன சோதனை?” வாய் விட்டே புலம்ப ஆரம்பித்தார்.
“ஏதோ நம்ம மாற்றுத் திறனாளிகள் இல்லம் மேடான பகுதில… மலையடிவாரத்துல இருந்ததினால் நாம தப்பிச்சோம்!… நெனச்சுப் பாருங்க… இந்த இல்லமும் கீழே தரை மட்டத்திலே இருந்திருந்தா… வெள்ளத்துல இந்த ஊனமுற்ற குழந்தைகள் என்ன செய்யும்க?” மனதிற்குள் நினைத்துப் பார்த்து தலையைச் சிலுப்பிக் கொண்டார் ஆறுமுகம்.
மாற்றுத் திறனாளிகள் அனைவருமே ஆளுக்கொரு ஜன்னல் பக்கம் அமர்ந்து விழிகள் விரிய அந்தக் கொடுமையான காட்சிகளைக் கண்டு நடுங்கிக் கொண்டிருந்தனர்.
மழையோ… “நிற்க மாட்டேண்டா…. இந்த ஊர் மொத்தத்தையும் கபளீகரம் பண்ணாமல் நிற்க மாட்டேண்டா” என்கிற பாணியில் கொட்டிக் கொண்டேயிருந்தது.
அங்கிருந்து நகர்ந்து வேக வேகமாய் ரிசப்ஷன் ஹாலுக்கு வந்து அங்கிருந்த தொலைக்காட்சியை ஆன் செய்த ஆறுமுகம் அப்போதுதான் உணர்ந்தார் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததை.
ஆறுமுகத்தைத் தொடர்ந்து எல்லோரும் முன்புற ஹாலுக்கு வந்தனர். சிலர் போர்ட்டிகோவில் நின்று தூரத்தில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஊரை வேதனையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
கண் பார்வை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு நடப்பவற்றை நேரடி ஒலிபரப்புச் செய்து கொண்டிருந்தனர் சக மாற்றுத் திறனாளிகள்.
“அய்யய்யோ… வீடுகளுக்குள்ளார வெள்ளம் பூந்திடுச்சின்னா… அங்க இருக்கற குழந்தைகள்… பெரியவர்கள் எல்லோரும் எங்கே போவாங்க?” விழியிழந்த இதயங்கள் ஈரமிழக்கவில்லை. அதனால்தான் அங்கலாய்ப்பில் மருகின.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings