2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
எம்.டி.யின் அம்மா திடீரென்று இறந்துவிட்டார்கள் என்று செய்தி கிடைக்க, கம்பெனிக்கு லீவு விட்டுவிட்டார்கள். ஒன்பது மணிக்கு அரக்கப் பறக்க ஆபீஸ் போய்ச் சேரும்போதுதான் பிரபுவுக்கு விஷயமே தெரிய வந்தது. வந்தவர்கள் எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் வராதவர்களுக்கு செய்தி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
சிலரது முகத்தில் துக்கம், சிலரது முகத்தில் சந்தோஷம். பிரபுவும் எம்.டி.யின் வாட்ஸப் நம்பரில் தனது துக்கத்தை பகிர்ந்து கொண்டுவிட்டு வீட்டுக்கு திரும்பினான்.
ஒருவகையில் அவனுக்கு சந்தோஷம்தான். எதிர்பாராத நேரத்தில் இன்ப அதிர்ச்சி போல ஒரு நாள் லீவு கிடைக்கிறதே. உடனே பவித்ராவுக்கு போன் போட்டு விவரம் சொன்னான்.
அவளும் சிரித்தபடி, ‘ சரி…சரி… வீட்டுக்குப் போயி நல்லா ரெஸ்ட் எடுங்க ‘ அவனும் வேகமாய் வீடுதிரும்பினான்.
விசிலடித்தபடியே வீட்டைத் திறந்தான். கொண்டுவந்திருந்த டிபன் பாக்ஸைத் திறந்து பார்த்தான். பவித்ரா அடைத்து வைத்திருந்த எலுமிச்சை சாதம், நார்த்தங்காய் ஊறுகாய் வாசனை மூக்கைத் துளைத்து, என்னை கொஞ்சம் ருசி பாரேன் என்றழைத்தது. அதை அப்படியே வைத்துவிட்டு, டீ போட்டுக் குடிக்கலாமே என்றெண்ணி சமையற்கட்டுக்குள் நுழைந்தான். அப்போதுதான் கவனித்தான். டீ போடும் பாத்திரம் தொட்டிக்குள் கிடந்தது. அதைக் கழுவினால்தான் டீ போடமுடியும். அத்துடன் நிறைய பாத்திரங்களும் ரொம்பிக் கிடந்தன.
டீ பாத்திரத்தை கழுவி டீயை கொதிக்க வைத்தான். அப்புறமாய் மற்ற எல்லா பாத்திரங்களையும் கழுவி வைத்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டான். அதற்குள் முகம் அலம்பிக் கொண்டு வரலாம் என்று பாத்ரூமிற்குள் நுழைந்தான். கதவை அடைத்துக் கொண்டு அழுக்குத்துணி கூடை நின்றது. அது நிறைய துவைக்க வேண்டிய துணிகள் என்னைக் கொஞ்சம் கவனி என்று கண்களைக் கசக்கின. மறுபடியும் யோசனை. துணிகளை துவைத்து காய வைத்தால் என்ன என்று.
திரும்பிப் போய் டீயைக் கலக்கி குடித்தான். வாஷிங் மிஷினை ஆன் செய்து பக்கெட்டில் தண்ணீர் பிடித்து சோப்புத் தூளைக் கொட்டி கலக்கினான். டைமர் வைத்துவிட்டு திரும்பி வந்தான். பாத்திரங்களை தேய்த்துக் கழுவ ஆரம்பித்தான். இடையில் வாஷிங் மிஷினைப் போய் பார்த்தான். தண்ணீர் நிரம்பியிருக்க துணிகளை அள்ளிப் போட்டு துவைக்க விட்டுவிட்டுத் திரும்பினான்.
பாத்திரங்களைக் கழுவி கவிழ்த்து வைத்தான். அடுப்பு மேடையை துடைத்து ஒழுங்கு படுத்தினான். ஃபேனை போட்டான். ஃபேனிலிருந்து பஞ்சு போன்ற அழுக்கு பத்தைகள் பறந்து வந்து கீழே விழுந்தன. நிமிர்ந்து பார்த்தான். அதில் அழுக்கு படிந்திருந்தது தெரியவந்தது. உடனே ஒரு உயரமான ஸ்டூலை எடுத்துப் போட்டு ஈரத்துணி கொண்டு ஐந்து ஃபேன்களையும் துடைத்து ஓடவிட்டான்.
தரை முழுவதும் குப்பையாகக் கிடந்தது. துடைப்பத்தை எடுத்தான். பெருக்கினான். அதற்குள் வாஷின் மிஷின் சத்தம் கொடுத்தது. துணிகளை கொண்டுபோய் மாடியில் காயவைத்துவிட்டு திரும்பி வந்தான். பக்கெட்டில் தண்ணீர் பிடித்து லைஜால் விட்டு கலக்கி, மாப்புப் போட்டு தரையைத் துடைத்தான். இப்போது வீடே பளிச் என்றிருந்தது. பவித்ரா வந்து பார்த்தால் ஆச்சரியப் பட்டுப்போவாள் என்ற நினைப்பு உண்டானதும் குதூகலம் வந்து குடிகொண்டது அவனுக்குள்.
சரி, படுக்கையில் போய் கொஞ்சநேரம் உடம்பை சாய்க்கலாம் என்று வந்தால், போர்த்தியிருந்த போர்வைகள் மடிக்கப்படாமல் அப்படியப்படியே தாறுமாறாய் கிடந்தன. அவைகளை அழகாய் மடித்து வைத்தான். இரண்டு தலையணைகளுக்கும் உறையை மாற்றினான். உடம்பை கொஞ்சம் சாய்க்கலாம் என்று படுத்தான். நித்திராதேவி அப்படியே அவனை அனைத்துக் கொண்டாள்.
ஒரு மணிக்கு திடீரென்று முழிப்புத் தட்ட எழுந்தான். முகம் அலம்பிக்கொண்டு வந்து டிபன் பாக்ஸைத் திறந்து ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு எலுமிச்சை சாதத்தை சாப்பிட்டான். பாக்ஸை கழுவிவைத்தான். டீ போட்டுக் குடித்த பாத்திரம், கிளாஸ் எல்லாம் கழுவி கவிழ்த்து வைத்து விட்டுத் திரும்பினான்.
மாடியில் காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டு வந்தான். அவனது பேண்ட் சட்டைகள், பவித்ராவின் பிளவுஸ்கள், சேலைகள் என்று எல்லாவற்றையும் அயர்ன் செய்து மேஜை மேல் அடுக்கி வைத்தான். அதை பார்க்கவே பிரமிப்பாய் இருந்தது.
வீட்டை ஒரு வலம் வந்தான். எல்லாம் சுத்தமாய் இருப்பதைப் பார்த்தால், பவித்ரா அசந்து போவாள் என்று நினைக்கையில் மறுபடியும் பரவசம் வந்து பற்றிக்கொண்டது அவனை..
மறுபடியும் ஒரு குட்டித்தூக்கம் போட்டான். காலிங் பெல் அடித்து அலறிக்கொண்டு எழுந்துபோய் கதவைத் திறந்தான். பவித்ராதான் நின்றிருந்தாள். புன்னகை பூத்தான். அவளும் பூத்தாள். உள்ளே வரும்போதே வீடே சுத்தமாய் இருப்பதைக் கண்டாள். ஹாலைப் பார்த்தாள், பெட்ரூமைப் பார்த்தாள், கிச்சனுக்குள் போனாள். பாத்ரூமிற்குள் போனாள். திரும்பிவந்தாள். அவள் பின்னாலேயே நடந்தவன், ‘ ஏதாவது மாற்றம் தெரியுதா… ‘ என்றான்.
‘ உம் தெரியுது… ‘ என்றாள்.
‘ வீடே பளிச்சுனு மாத்தியிருக்கீங்க, பாத்திரங்கள்லாம் கழுவி நீட்டா அடுக்கி வச்சிருக்கீங்க, அடுப்பு மேடையை நீட் பண்ணியிருக்கீங்க. பேனெல்லாம் சுத்தமா துடைச்சிருக்கீங்க. தரையெல்லாம் கூட்டி மாப்பு போட்டிருக்கீங்க.. அழுக்குத்துணி கூடை காலியா இருக்கு. எல்லாம் துவைச்சி காயப்போட்டு கொண்டு வந்து பெட்மேல அடுக்கி வச்சிருக்கீங்க. மேஜை மேல சிலதை அயர்ன் பண்ணி அடுக்கி வச்சிருக்கீங்க… திடீர்னு கிடைச்ச லீவை உபயோகமா மாத்தியிருக்கீங்க… உங்க சமர்த்து யாருக்கு வரும்… ‘ என்றெல்லாம் சொல்லி அவனை பாராட்டுவாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
‘ உம் தெரியுது ‘ என்று மட்டும் சொல்லிவிட்டு அவனைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தவளை அதிர்ச்சியுடன் பார்த்தான். .
‘ அவ்வளவுதானா… ‘ என்றான்.
‘ வேறென்ன… ‘ என்றாள்.
சட்டென, மூளைக்குள் ஒரு சிறு மின்னல்.
அவளோ தினமும் செய்கிறாளே… நாம் என்றைக்காவது அவளைப் பாராட்டி இருக்கிறோமா…
யோசித்தவன் புன்னகைத்தபடி, ‘ ஒன்னுமில்லை ‘ என்றுவிட்டு நகர்ந்தான்.
ஆனால், அவள் விடவில்லை. பின்னாலேயே வந்து பின்பக்கமிருந்து அவனை அப்படியே கட்டிக் கொண்டு சொன்னாள், ‘ நீங்க இதே மாதிரி தினமும் செஞ்சுக் கொடுத்தா எப்படி இருக்கும்… !! ‘
ஒரு பேச்சுக்கு, நீங்கள்தான் அந்த பிரபு. உங்களது மனநிலை எப்படியிருந்திருக்கும். அதை எனக்கு மட்டும் சொல்லுங்கள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings