in

நடுவு நிலைமை (சிறுவர்களுக்கான திருக்குறள் கதை)

நடுவு நிலைமை (திருக்குறள் கதை)

“என்னோட மேத்ஸ் நோட்ல ஹோம் ஒர்க் எழுதின பேஜ் கிழிஞ்சுருக்கு, யார்டா இதை பண்ணினது?” என்ற ரித்விக்கின்  கத்தலுக்கு

“நான் இல்லப்பா”

“நான் இல்லடா”

“நானும் இவ்ளோ நேரம் உன்கூட தானடா கிரௌண்ட்ல இருந்தேன்” என பல்வேறு குரல்கள் எழுந்தன

“நான் சொல்றேன்” என தெளிவாக ஒலித்தது ஆர்யனின் குரல்

“யாருடா?” என வினவினான் ரித்விக்

“கேம்ஸ் பீரியட் நடுவுல தண்ணி குடிக்கணும்னு நான் கிளாஸுக்கு வந்தப்ப, வருண் தான் இங்க இருந்தான். அதுவும் உன் டெஸ்க் பக்கத்துல தான் இருந்தான். நான் கேட்டதுக்கு புக் கீழ விழுந்துடுச்சு எடுக்கறேன்னு சொன்னான்” என ஆர்யன் தான் பார்த்ததை மறைக்காமல் கூற

“டேய் வருண், ஏண்டா இப்படி செஞ்ச?” என கோபமாய் கேட்டான் ரித்விக்

“இங்க இருந்தா, நான் தான் செஞ்சேன்னு அர்த்தமா? ஆர்யன் கூடத்தான் இங்க இருந்தான், அவன் செஞ்சுட்டு என் மேல பழி போடறான்” என்றான் வருண்

“பொய் பேசாத வருண், ரித்விக் ரன்னிங்ல உன்னை  ஜெயிச்சுட்டான்னு உனக்கு கோபம், அதை இப்படி காட்டி இருக்க” என மனதில் தோன்றியதை ஆர்யன் தெளிவாய் கூற

தன் மனதில் புகுந்து பார்த்தது போல் சொல்கிறானே என வருண் அதிர்ந்த போதும், “மிஸ் வராங்க” என ஆசிரியை வகுப்புக்குள் நுழைவதை சாக்காய் கொண்டு நழுவினான்

“குட்மார்னிங் மிஸ்” என்றபடி மாணவ மாணவியர் எழுந்து நின்றனர்

“குட்மார்னிங் சில்ட்ரன், சிட் டௌன்” என்றபடி உள்ளே நுழைந்த வகுப்பாசிரியை சித்ரா, வருகை பதிவேட்டை பதிவு செய்தார்

“சில்ட்ரன், நாளைக்கு நம்ம ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்சனுக்கு டி.இ.ஓ வர்றாருனு லாஸ்ட் வீக்கே சொன்னேன் இல்லையா. அவர் என்ன கேள்வி கேட்டாலும் பயப்படாம தைரியமா பதில் சொல்லணும், தெரியலைனா தெரியலைனு சொல்லுங்க, தப்பில்ல,  சரியா?” என ஆசிரியை கூற

“ஓகே மிஸ்” என்றனர் பிள்ளைகள்

“குட்… இப்ப பிரின்சிபால் ரூம்ல டீச்சர்ஸ்’க்கு மீட்டிங் இருக்கு. லஞ்ச் பெல் அடிக்கற வரைக்கும் அமைதியா படிச்சுட்டு இருங்க. ஆர்யன், இந்த வாரம் நீ தான கிளாஸ் லீடர், பேசறவங்க பேரை ஒரு பேப்பர்ல எழுதி வை, லன்ச் பீரியட்ல கொண்டு வந்து குடு” என ஆசிரியர் கூற

“ஓகே மிஸ்” என எழுந்து நின்றான் ஆர்யன்

“படிக்காம அரட்டை அடிச்சுட்டு இருக்கறவங்களுக்கு கண்டிப்பா பனிஷ்மெண்ட் உண்டு” என்ற மிரட்டலுடன் ஆசிரியை வெளியேற, வகுப்பின் முன்னே சென்று நின்றான் ஆர்யன்

நண்பனே ஆனாலும், தாட்சண்யமின்றி பேசினால் பெயர் எழுதி விடுவான் என ஆர்யனை பற்றி அறிந்த மாணவ மாணவியர், அமைதியாய் புத்தகத்திற்குள் மூழ்கினர்

அப்படியும் சற்று நேரத்தில் சிலர் தங்களுக்குள் குசுகுசுவென்று பேச, அவர்கள் பெயரை எழுதினான் ஆர்யன்

வருண், ரித்விக்கின் கணக்கு நோட்டை கிழித்துவிட்டு இல்லை என கூறியது ஆர்யன் மனதில் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது

அவன் செய்த தவறுக்கு எப்படியேனும் தண்டிக்க வேண்டும், அப்போது தான் அவன் திருந்துவான் என்ற ஒரு நல்ல நோக்கதோடு,  வருண் பேசாத போதும் அவன் பெயரை எழுதினான் ஆர்யன்

மதிய உணவு இடைவேளை விட்டதும், பேசியவர்கள் பெயர் எழுதிய பட்டியலை ஆசிரியையிடம் கொடுத்துவிட்டே, உணவருந்த சென்றான் ஆர்யன்

திய உணவு நேரம் முடிந்து வகுப்பு துவங்க, தமிழாசிரியர் கதிரவன் பாடத்தை ஆரம்பித்தார்

“இன்னைக்கு நாம பாக்கப் போறது, அறத்துப்பால்ல வர்ற நடுவுநிலைமை அதிகாரத்துல இருக்கற ஒரு குறள், படிக்கலாமா?” என கதிரவன் வினவ

“ஓகே சார்” என பிள்ளைகள் ஆர்வமாய் கூறினர்

‘நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல் இதான் குறள்” என சொல்லியபடி கரும்பலகையில் எழுதினார் தமிழாசிரியர்

“இதுக்கு அர்த்தம் யாருக்காச்சும் தெரியுமா?” என ஆசிரியர் கேட்க, கனத்த மௌனமே பதிலாய் கிடைத்தது

“சரி நானே சொல்றேன், நாம செய்யற ஒரு செயல் ஒருத்தருக்கு நன்மை தர்ற நோக்கத்தோடு செஞ்சாலும், அப்பவும் நாம நடுநிலை தவறாம நேர்மையா செய்யணும். நடுநிலை தவறி செய்யற செயல் நல்லதுக்கே ஆனாலும், அதை செய்யக் கூடாது, புரிஞ்சுதா?” என ஆசிரியர் கேட்க ,

“புரிஞ்சது சார்” என கோரஸாய் கூறினார் பிள்ளைகள்

ஆசிரியர் சொன்ன திருக்குறளுக்கான அர்த்தம்,  ஆர்யனின் மனதை, குற்ற உணர்வில் ஆழ்த்தியது

இந்த குறள் சொல்வது போல், வருணின் நன்மைக்கே என்றாலும், தான் நடுநிலை தவறியது தவறு என உணர்ந்தான் ஆர்யன்

வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியேறியதும், உடனே வருணிடம் சென்று தான் செய்த தவறை கூறி மன்னிப்புக் கேட்டான்

உடனே ஆசிரியையிடமும் சென்று உண்மையைக் கூறி மன்னிப்பு கோரினான்

ஆர்யனின் அந்த செயல், வருணை மனதை நெகிழச் செய்தது

அக்கணமே, தான் ரித்விக்கின் புத்தகத்தை கிழித்ததை ஒப்புக் கொண்டு, ஆர்யன் ரித்விக் இருவரிடமும் மன்னிப்பு கேட்டான் வருண்

அங்கு ஒரு இனிய நட்பு உதயமானது

(முற்றும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆசிரியர் பக்கம் – August 2020

    ஜில்லுனு ஒரு காதல் (நாவல்)