in ,

பசங்க (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

மனைவியை சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றிவிட்டு திரும்பிய சந்திரசேகர் தெருவுக்குள் நுழைந்தார்.

எதிரே லாரி வருவது தெரிந்தது.” லாரிக்காரன் எல்லாம் ஏன் இந்த தெருவுக்குள் வருகிறான்” என்று நினைத்தார்.

லாரி அவரை கடக்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பைக் லாரியை முந்தி கொண்டு வர ஸ்தம்பித்தார். பக்கவாட்டில் நகர இடமில்லாமல் ஜல்லிக்கட்டு ரோட்டில் குவித்து வைக்கப்பட்டிருக்க.. நின்ற இடத்திலேயே செய்வதறியாத திகைத்து நின்றுவிட்டார். ..வேகமாக வந்த பைக் அவர் மீது மோத தான் தூக்கி எறியப்படுவதை உணர்ந்தார் சந்திரசேகர்.

“ஐயோ “என்று அவரது கூக்குரலில் தெருவே கூடிவிட, கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தால் எல்லோரும் உறைந்து போய் நின்றனர். தெருமுனையில் பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞர்கள் அதைப் பார்த்துவிட்டு பதறினர் ….

” டேய் நம்ம சந்திரசேகர் சார் மீது பைக் மோதி விட்டது” என்று கத்தியபடி வசந்த் மற்றும் அவனது நண்பர்களும் ஓடி வந்தனர் சந்திரசேகர் உணர்விழக்கும் தருணத்தில் அவர்கள் முகங்கள் கண்ணில் பட, விவரிக்க முடியாத உணர்வில் ஒரு கணம் …மறுகணம் உணர்விழந்தார்.

                      ##########################

“தெண்ட தீவட்டி பசங்க.. தகப்பன் சம்பாதிக்கிற காசை எல்லாம் கரியாக்க பிறந்தவங்க.. உருப்படாமல் வெட்டி பேச்ச பேசிகிட்டு நேரத்தை வீணாக்கிட்டு திரியுறாங்க”. வசைமாரி பொழிந்தபடி உள்ளே நுழைந்தார் சந்திரசேகர். சந்திரசேகர் கல்லூரி ப்ரொபசர். அவர் மனைவி அன்னத்திற்கு அவர் யாரை திட்டுகிறார் என்று புரிந்தது.

தெருமுனையில் உள்ள உயரம் குறைந்த அந்த காம்பவுண்ட் சுவரில் ஐந்தாறு பசங்கள் உட்கார்ந்து பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள். எதிர்வீட்டு வசந்தும், மாடி வீட்டு தினேஷும், இதில் அடக்கம். எல்லாரும் கலைக்கல்லூரி மாணவர்கள். கொஞ்ச நேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்து விட்டுப் போய்விடுவார்கள். அவர்கள் யாரையும் கேலி, கிண்டல் பண்ணிப் பார்த்ததில்லை.

“பாவம் வயசு பசங்க பேசிட்டுப் போறாங்க” என்று நினைப்பாள். ஆனால் கட்டுப்பாடாக வளர்ந்த, கட்டுப்பாட்டை விரும்பிய சந்திரசேகருக்கோ, அந்தப் பையன்களின் வெட்டி அரட்டையும் சிரிப்பு சத்தமும் சகிக்க முடியாததாக இருந்தது.

சென்னையில் வசித்து வந்த மகளின் கணவன் சிங்கப்பூர் செல்ல அவளுக்கு துணைக்காக அன்னம் சென்னை செல்ல வேண்டி இருந்தது. மனைவியை ரயில்வே ஏற்றி விட்டுவிட்டு, வீட்டுக்கு வரும்போது தான் சந்திரசேகர் விபத்தில் சிக்கிக்கொண்டார்.

விபத்து நடந்த உடன் முதலில் சூழ்ந்த கூட்டம்” நமக்கேன் வம்பு” என்றபடி மெதுவாக கரைந்து போனது .அங்கே நின்று கொண்டிருந்த ஆட்டோக்கள் கூட மெதுவாக கிளம்பி தெருவை விட்டு வெளியேறி விட்டனர்.

ஓடி வந்த வசந்தும், அவன் நண்பர்களும் ஜல்லி குவியலில் இருந்து சந்திரசேகரை தூக்கி தரையில் கிடத்தினர்.

“நிறைய ரத்தம் வருதேப்பா” என்ற வசந்த் தன் சட்டையை கழற்றி ரத்தம் வரும் இடத்தில் அழுத்தி பிடித்தான். தினேஷ் உடனே ஆம்புலன்ஸ்ஸுக்கு போன் பண்ணி விபத்து நடந்த இடத்தின் விபரத்தைக் கூறி உடனே வரச் சொன்னான்.

வசந்தின் நண்பன் அவரை மார்பில் சாத்தி, தண்ணீர் புகட்டி, முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தும் உணர்விழந்த நிலையிலேயே சந்திரசேகர் இருந்தார். ஆம்புலன்ஸ் வர மருத்துவமனைக்கு விரைந்தனர்.

மருத்துவமனையில் ஐ.சி.யூ வில் சந்திரசேகர் அனுமதிக்கப்பட்டார். “சீக்கிரம் பணம் கட்டுங்க” என்று நர்ஸ் வந்து அவசரப்படுத்தி விட்டுப் போனாள்.

வசந்த் தன் நண்பன் பாபுவுக்கு போன் செய்து விவரத்தைக் கூறி வீட்டில் பணம் வாங்கி வரச் செய்தான். பணம் கட்டிய பிறகுதான் நண்பர்கள் நிம்மதியானார்கள்.

தினேஷ் தன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் சங்கிலியை கழட்டி பாபுவின் கையில் கொடுத்து “இதை சேட் கடையில் வைத்து பணம் வாங்கிட்டு வாடா.. இன்னும் மருந்து செலவெல்லாம் இருக்கு பணம் வேணும்.”

அதே தெருவில் இருந்த சந்திரசேகரின் நண்பர் நடேசன் வீட்டுக்கு ஒரு நண்பன் விவரத்தை கூறச் சென்றான். ஆனால் நடேசன் பக்கத்து கிராமத்திற்கு போய் இருப்பதாகவும், மறுநாள் காலையில் தான் வருவார் என்று கூறி விட ..சந்திரசேகர் குடும்பத்தினருக்கு எப்படி விபரத்தை சொல்லுவது என்று தெரியாமல் தவித்தனர்.

ஐ.சி.யு’வில் இருந்து வெளியே வந்த டாக்டர் வசந்தைப் பார்த்து . “தலையிலே நல்ல அடிபட்டிருக்குது. எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேன் எடுத்து பார்த்துட்டு தான் மேற்கொண்டு ட்ரீட்மென்ட் பண்ண முடியும். இன்னும் 12 மணி நேரம் எதுவும் சொல்ல முடியாது. ரத்தம் நிறைய சேதமாகிவிட்டது . உடனடியாக நாலு யூனிட்டாவது ரத்தம் கொடுக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்…

நர்ஸ் சொல்லியபடி ரத்த வங்கிக்கு ஓடிய நண்பர்கள்’ 4 யூனிட் பி-பாஸிட்டிவ் ரத்தம் அவசரமாக தேவை’ என்று கூறினர். ரத்த வங்கியில் அவர்கள் தேவைப்படும் ரத்தம் தருவதாக கூறியவர்கள்

“பதிலுக்கு நாலு யூனிட் ரத்தம், டோனர்ஸ் யாராவது தர வேண்டும். எந்த குரூப்பாக இருந்தாலும் பரவாயில்லை” என்று கூறினர். நண்பர்களில் நால்வர் ரத்தம் கொடுக்க தயாரானார்கள்.

சந்திரசேகர் கண்விழிக்காத நிலையில், நண்பர்கள் தங்கள் வீட்டுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிவிட்டு, அங்கேயே இருந்து பார்த்துக் கொண்டனர். மருந்துகளை அவ்வப்போது வாங்கி கொடுத்தனர் .

காலையில் சந்திரசேகரின் நண்பர் நடேசன் வந்து சேர, நண்பனின் நிலையை பார்த்து பதறினார். உடனே சந்திரசேகரின் மகளுக்கு போன் போட்டு விஷயத்தைச் சொல்ல அப்போது தான் அங்கு போய் சேர்ந்திருந்த அன்னம்.உடனே பதறியடித்துக் கொண்டு மகளுடன் காரில் கிளம்பினாள். அன்று இரவு அவர்கள் வந்து சேரும் வரை வசந்தும், நண்பர்களும் ஆஸ்பத்திரியில் கூடவே இருந்து பார்த்துக் கொண்டனர். இரவு மகளுடன் வந்து சேர்ந்த அன்னம் வசந்தின் கையைப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர் தெரிவிக்க எல்லோர் மனதிலும் நிம்மதி வந்தது.” உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்த்ததாலேயே உயிர் பிழைத்தார். இன்னும் அரை மணி நேரம் தாமதித்திருந்தால் கூட அவரை காப்பாற்றுவது கடினமாகி இருக்கும்” என்றார் மருத்துவர்.

மேலும் இரண்டு நாட்கள் செல்ல தன்னை பார்க்க வந்த வசந்த், தினேஷ் மற்றும் நண்பர்களை கண்டதும் சந்திரசேகரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“தம்பி உங்களை பற்றி தப்பா பேசி இருக்கிறேன். இன்னைக்கு உயிர்பிழைச்சு உங்க முன்னால இருக்குறேன்னா அதுக்கு காரணம் நீங்கதாம்ப்பா. உங்களை மாதிரி இளைஞர்களால் தான் எதை பத்தியும் கவலைப்படாமல் இப்படி ஒரு சேவை செய்ய முடியும். நெருங்கின சொந்தங்களே ஒரு கஷ்டம்னு வரும்போது நழுவிடுறாங்க. நீங்க எந்த சொந்தமும் இல்லாம ரத்தமும் கொடுத்து என்னை காப்பாற்றியிருக்கீங்க. இளைய தலைமுறைய நான் சரியா புரிஞ்சுக்கலப்பா” உணர்ச்சிவசப்பட்டு பேசிய சந்திரசேகரின் கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டான் வசந்த் .

“மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்

அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு

அது நேர்மையின் மறுபிறப்பு “

என்ற பாடல் காற்றில் தவழ்ந்து வந்தது அவர் கூற்றை ஆமோதிப்பது போல .

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நம்பிக்கையின் மறு உருவம் (கவிதை) ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர்

    நாலணா பரதன் (சிறுகதை) – செல்வம்