2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
ஷீலாவின் கண்கள் சிவந்திருந்தன. சிறிய கைக்குட்டை கொண்டு நாசூக்காய் மூக்கை அடிக்கடித் துடைத்துக் கொண்டாள்.
“வெரி சாரி மிஸஸ் ஷீலா. இந்தச் சோகமான சந்தர்ப்பத்தில் உங்ககிட்ட கேள்வி கேட்க வேண்டியிருக்கு” என்றார் இன்ஸ்பெக்டர் சிவசரண்.
“என்ன கேக்கணுமோ கேளுங்க சார்” என்றாள் ஷீலா, அழுகை தெறித்த குரலில்.
“உங்க தம்பி உங்களை ரொம்ப இர்ரிடேட் பண்ணிட்டாராமே?” என்று தன்யாதான் ஆரம்பித்தாள்.
“வாட் டூ யூ மீன்?” என்றாள் ஷீலா சற்றே கோபமாக.
“சாரி, உங்க கணவர்கிட்ட பேசினபோது உங்க தம்பியால உங்க ரெண்டு பேருக்கும் இடையில அதிகமா சண்டை வந்ததுன்னு சொன்னார், அதான் கேட்டேன். சாரி, சென்சிட்டிவ் டாபிக், இப்போ கேட்டிருக்கக் கூடாது நான்” என்று தன்யா மன்னிப்புக் கேட்டதும் ஷீலாவின் கோபம் தணிந்துவிட்டது.
“பரவாயில்லை, கேட்க வேண்டியது உங்க கடமை. என் தம்பி என்னை என்ன இர்ரிடேட் பண்ணினான்? உண்மையை எடுத்துச் சொன்னான், அவ்வளவுதான். என் கணவரைப் பற்றி வெளியே என்ன வம்பு பேசறாங்கங்கறதை எனக்கு எடுத்துச் சொன்னான். எந்த மனைவியால அதைத் தாங்க முடியும்? அதான் இந்த வீட்டை விட்டுப் போயிடுவோம்னு என் கணவர்கிட்ட சொன்னேன்.”
“ஜெயக்குமார் பதினைந்து வருஷங்கழிச்சு இப்போதான் இந்தப் பக்கம் வந்திருக்கார். அவருக்கு ஊரிலே பேசற வம்பு எப்படித் தெரிஞ்சுது, மிஸஸ் ஷீலா?” என்று மெதுவாகக் கேட்டான் தர்மா. அவன் ஒருவன் இருப்பதையே அங்கு எல்லோரும் மறந்துவிட்டார்களாதலால் அவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“வந்து… அப்படித்தான் பேசுவாங்கன்னு சொன்னான். அவனுக்கும் தெரிஞ்ச மாதிரிதான் இருந்தது” என்றாள் ஷீலா, சில விநாடிகளுக்குப் பிறகு.
“அப்படியே இருந்தாலும், அதை நீங்க ஏன் இவ்வளவு மைண்ட் பண்ணணும்? நீங்க இந்த வீட்டுப் பொண்ணு. மிஸ்டர் சம்பத்துக்கு இருக்கற எல்லா உரிமையும் உங்களுக்கும் இருக்கு. நீங்க ஒண்ணும் கையாலாகாம இங்கே வந்து தங்கலையே! உங்க அப்பா நடத்தற ஸ்கூலை முழுக்க முழுக்க நீங்க ரெண்டுபேரும்தான் மானேஜ் பண்றீங்க. அப்புறம் அவர் வீட்ல தங்கறதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை? உங்க கணவருக்கே வெளியேறுவதில் இஷ்டமில்லாதபோது?” என்று கேள்விகளைச் சரமாரியாகப் பொழிந்தார் இன்ஸ்பெக்டர் சிவசரண், தர்மாவின் கேள்விக்கான காரணத்தைப் புரிந்துகொண்டு.
ஷீலா தடுமாறினாள். பிறகு “சார், சட்டம் வேற, நடைமுறை வேற. நான் என்ன இருந்தாலும் பெண். என் அப்பா காலம் வரைக்கும் நீங்க சொன்னதெல்லாம் சரி. அதுக்கப்புறம்? சம்பத்தையோ, ஜெய்யையோ நம்பி நான் இருக்க முடியுமா, சொல்லுங்க?”
இன்ஸ்பெக்டர் மெலிதாகத் தலையாட்டினார்.
“இருங்க, ஜெய் இங்கே எங்கே வந்தார்? அவர் இந்த வீட்டில் தங்கப் போறதா இல்லையே? உயிரோடு இருந்திருந்தா நேற்றைக்கு இரவே அவர் கிளம்பியிருக்கணுமே?” என்றாள் தன்யா.
ஷீலா மீண்டும் தடுமாறினாள். “அப்புறம் வரவே மாட்டானா என்ன? எங்க அப்பா காலத்திற்கப்புறம் அவன் வரலாமில்லையா?” என்றாள்.
“சரி” என்றாள் தன்யா. வேறு ஏதோ கேட்கப்போன இன்ஸ்பெக்டரைக் கண்களாலேயே தடுத்து விட்டாள்.
“உங்க அம்மாவையாவது ஸிஸ்டரையாவது வரச் சொல்லுங்க” என்றார் இன்ஸ்பெக்டர் கடைசியில்.
ஷீலா வெளியேறினாள்.
==============
அந்தக் கண்கள் அழுதிருந்தன.
“இவன் போய்த் தொலைந்தது நல்லதுதான், என்றாலும் என் கூடப் பிறந்தவன். அதனால் இவனுக்காக அழ வேண்டியது என் கடமை” என்ற அழுகையல்ல. உண்மையான அழுகை. கூடவே அடிபட்டதுபோல் ஒரு அதிர்ச்சி.
“ஸிட் டவுன்” என்றார் இன்ஸ்பெக்டர், ஒரு நாற்காலியைக் காட்டி. குரலில் ஒரு பரிதாபம் தொனித்தது.
மருண்ட மான் போன்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே அமர்ந்தாள் ஜானவி.
“உன் அண்ணன் இந்தத் தீபாவளிக்கு வீட்டுக்கு வந்ததில் உனக்கு ரொம்பச் சந்தோஷம், இல்லையா?” என்றாள் தன்யா, இன்ஸ்பெக்டரின் அனுமதி அளிக்கும் கைஜாடையைத் தொடர்ந்து.
ஜானவி தலையசைத்தாள்.
“அவனை நீ இதற்கு முன்னாடி கடைசியாகப் பார்க்கும்போது உனக்கு என்ன வயசிருக்கும், ஜானவி?” தன்யா மெதுவாகக் கேட்டாள்.
“ஐந்து வயது இருக்கலாம். என்னோட பனிரெண்டு வயது பெரியவன் ஜெய் அண்ணா.”
“அப்போ அவர் மேல உனக்குப் பெரிதா பிரியம் இருக்கச் சான்ஸ் இல்லை, இல்லையா? நீ அவரைப் பார்த்துப் பதினைந்து வருடங்கள் ஆகியிருக்குமே?”
ஜானவி இல்லையென்று தலையசைத்தாள். “எத்தனை வருஷம் பார்க்காட்டா என்ன? அவன் எனக்கு அண்ணாதானே.”
“அண்ணாதான். அவனைப் பற்றி உனக்கு வேற ஒண்ணும் தெரிஞ்சிருக்காதே! அஞ்சு வயசில பார்த்த அண்ணனை அவ்வளவு நல்லா நினைவு வெச்சிருந்தியா?”
ஜானவி சிறிதுநேரம் தலைகுனிந்திருந்தாள். பிறகு “அந்த வயசில் பார்த்தது பழகியது எல்லாம் மெலிதா நினைவு இருக்கு. ஆனா… அவனைப் பற்றி எல்லா விஷயமும் எனக்குச் சொல்லியிருக்காங்க” என்றாள்.
“யார் சொல்லியிருக்காங்க?” என்று தன்யா கேட்டாள் விடாமல்.
“அம்மா” என்று தயக்கத்துடன் ஒப்புக்கொண்டாள் ஜானவி. “என்னதான் அப்பா அவன்மேல் கோபப்பட்டு வீட்டைவிட்டு அனுப்பிட்டாலும், அம்மாவுக்கு அவன்மேல் பாசம் குறையாமலே இருந்தது. என்கிட்ட தான் சொல்லிச் சொல்லி அழுவாங்க” என்றாள்.
“பெத்தவங்களாச்சே” என்றாள் தர்ஷினி. “அவங்க சொல்லித்தான் உங்க அப்பா ஜெயக்குமாரைத் தீபாவளிக்கு இன்வைட் பண்ணினாரா?”
“இல்லை, வந்து, அம்மாவுக்கு அதுக்கெல்லாம் தைரியம் கிடையாது. பாண்டுரங்கன் அங்கிள்தான் அப்பாவை வற்புறுத்தி ஜெய் அண்ணாவை இன்வைட் பண்ணினார்…” என்றவள் “இன்னொரு உண்மையும் சொல்லிடறேன்… நான் ஒரே ஒரு தடவை அண்ணாகிட்ட ஃபோன்ல பேசியிருக்கேன்” என்றாள்.
“எப்போ?” என்றார் இன்ஸ்பெக்டர் சிவசரண் ஆர்வமாய் இடைமறித்து.
“அண்ணாவுக்கு ஃபர்ஸ்ட் டைம் ஃபிலிம்ஃபேர் கிடைச்சபோது” என்றாள் ஜானவி. “கங்க்ராஜுலேட் பண்ணக் கூப்பிட்டேன்.”
“அப்புறம் பேசலை?”
“இல்லை. வந்து… வாட்ஸப் கொடுக்கறது உண்டு. எல்லாமே அவன் மூவீஸ், ஸாங்க்ஸ் பற்றிப் பேச மட்டும்தான். எதுக்காக இதையெல்லாம் கேட்கறீங்க?” என்று தயக்கமாகக் கேட்டாள்.
“ஜானவி, உன் அண்ணனோடு இந்த வீட்டில் உனக்கு மட்டும்தான் தொடர்பு இருந்ததுன்னு சொல்லலாமா?”
ஜானவி கண்ணில் மறுபடியும் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. ஆனால் அதில் சோகத்தைவிடப் பயமே அதிகமாக இருந்தது. “சார், சத்தியமா சொல்றேன். என் அண்ணனோட சங்கீதத்தால நான் அதிகமா ஈர்க்கப்பட்டேன். ஒரு ஃபேன் மாதிரி அவன்கிட்டப் பேசினதோட சரி. வீட்டு விஷயங்களெல்லாம் நான் டிஸ்கஸ் பண்ணினதேயில்லை. என்னோட பெயிண்ட்டிங்ஸ் சிலதும் ஃபோட்டோ எடுத்து அனுப்புவேன்…”
“ஜானவி பெயிண்ட் பண்ணுவீங்களா?” ஆர்வமாகக் கேட்டாள் தர்ஷினி.
“ப்ளீஸ் மேடம்!” என்று அலறினாள் ஜானவி. “இது விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது மேடம்!”
“என்ன சொல்றீங்க? படம் வரையறது என்ன கொலைக் குற்றமா?” என்றான் தர்மா.
இப்போதுதான் அவனை ஜானவி கவனித்தாள். ஆனால் தன் சகோதரர்களைப் பார்ப்பது போன்ற ஆறுதல் அவளுக்கு உண்டானதால், அவனை நோக்கி நன்றாகத் திரும்பி அமர்ந்து கொண்டாள். தெளிவாகப் பேசலானாள்.
“சார், இந்த வீட்டில் எங்க அப்பாவுக்கு எதிரா எதைச் செய்தாலும் அது கொலைக் குற்றத்திற்கு நிகர்தான். நான் ஐஐடி படிக்கணும்ங்கறது என் அப்பாவோட ஆணை. பெயிண்ட் பிரஷை நான் தொட்டும் பார்க்கக்கூடாதுங்கறது அவருடைய கண்டிப்பான கட்டளை. எப்போதாவது என் ஃப்ரெண்ட்ஸ் வீட்டிலிருந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் வரைவேன். அவ்வப்போது பென்சில் ஸ்கெட்சஸ் காலேஜில் இருக்கும்போது போடுவேன். அதை வீட்டுக்குக் கொண்டுவரவே மாட்டேன். என் நோட்டை எனக்குத் தெரியாமல் என் அப்பா செக் செய்வார்.
“அந்தப் படங்களைத்தான் என் அண்ணாவுக்கு, அவற்றைப் பாராட்டக் கூடிய ஒரே மனிதனுக்கு, அனுப்புவேன். அவனும் பாராட்டுத் தெரிவிப்பான். தைரியமா என்னோட கலையார்வத்தை வளர்த்துக்கணும், வீட்டிலேயே தைரியமா படம் வரைய ஆரம்பிக்கணும்னெல்லாம் சொல்லுவான். எனக்குத் தைரியம் வரலை. அவன் எப்படி அப்பாவை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே போனான்னு இந்த முறை வீட்டுக்கு வந்திருந்தபோது என்னிடம் விளக்கிச் சொல்லி, நானும் வெளியே போகணும்னு அவசியமில்லை, ஆனால் என்னோட கலைதான் என்னுடைய ஆத்மா, அதை அப்பா சொல்றாருங்கறதுக்காகக் கைவிடறது, சொந்த அம்மாவைச் சொத்துக்காக அடகுவைக்கறதுக்குச் சமம்னு சொன்னான். தன் லட்சியங்களை நிறைவேற்றுவதற்காக மனசாட்சிக்கு விரோதமில்லாத எந்த எல்லைக்கும் போகலாம்னு…” ஜெயக்குமாரின் குரல் இப்போதும் கேட்பதுபோல் இருந்தது ஜானவிக்கு. அவள் உடல் சிலிர்த்தது.
தன்யா, தர்ஷினி அவளை உற்றுப் பார்த்தார்கள்.
இந்தப் பெண்ணுள் தன் அண்ணனுடைய அறிவுரைகள் நன்றாகப் பதிந்திருக்கின்றன. ‘எந்த எல்லைக்கும்?’ தன் குழந்தைகளை சகல சௌகரியங்களும் உள்ள அடிமைகளாக நடத்தும் ஒரு தகப்பனுக்கு எதிராகப் போராட எந்த எல்லைவரை மனசாட்சி அனுமதிக்கும்?
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings