2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஆலயமணியின் ஓசை கேட்டவுடன் மணி எட்டு ஆகி விட்டதை உணர்ந்தாள் சாரு. துரிதமாகத் தன் வேலைகளை முடித்தாள்.
“அம்மா, நான் வேலைக்குப் போயிட்டு வர்றேன்; அப்பாகிட்டே சொல்லிடு” என்று தன் தாயிடம் கூறிக் கொண்டு இருந்தாள் சாருமதி.
“ம்….பார்த்துப் போயிட்டு வாம்மா, சாயந்திரம் வர்றப்ப டெய்லர் கடையில ப்ளவுஸ் தைக்கக் கொடுத்திருக்கேன், வாங்கிட்டு வந்துடு” என்றாள் சரஸ்வதி.
“சரிம்மா” என்றபடிக் கிளம்பினாள் சாருமதி.
தோட்டத்தில் இருந்த தன் கணவனை நோக்கிச் சென்றாள்.
“என்னங்க! உங்களுக்குக் காபி கொண்டு வரட்டா?”
“கொண்டு வா சரஸ்வதி” என்றார் ராமநாதன்.
காபி கலந்து அவருக்குக் கொண்டு வந்தாள் சரஸ்வதி. இருவரும் தோட்டத்தில் இருந்த திட்டில் அமர்ந்தனர்.
“என்னங்க, நம்ம சாருவை நினைச்சா எனக்கு ரொம்பக் கவலையா இருக்குங்க”
“ஏன் கவலைப்படறே சரசு?”
“+2 முடிச்சவுடனே நர்ஸிங் தான் படிப்பேன்னு அடம் பிடிச்சுப் படிச்சா; சரி, நர்ஸிங் படிச்சு முடிச்சிட்டு ஏதோ ஒரு ஆஸ்பத்திரிக்குப் போனோமா, வேலையைப் பார்த்தோமான்னு இல்லாம, எய்ட்ஸ் நோய் பிரிவுக்குன்னு ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுத்திக்கிட்டு இப்ப எய்ட்ஸ் சேவை மையத்துல நர்ஸா இருக்கா; எனக்கு இது சுத்தமாப் பிடிக்கவே இல்லைங்க” என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தாள் சரஸ்வதி.
“உன் ஆதங்கம் எனக்குப் புரியுது சரஸ்வதி, ஆனா, சாரு ஒரு முடிவு எடுத்தா அதுல உறுதியா இருக்காளே, நாம என்ன செய்யறது?”
“அவ அப்படி இருந்தா அப்படியே விட்டுட முடியுமா? ஏற்கெனவே ரெண்டு வரன் வந்து அவ பார்க்கிற வேலைன்னால தட்டிப் போச்சு; இந்தத் தடவை வர்ற வரனாவது அமையணும்”
“கவலைப்படாதே சரஸ்வதி, இந்தத் தடவை எப்படியாவது சாருகிட்டே பேசி இந்த வேலையை விடச் சொல்லியாவது இந்தக் கல்யாணத்தை முடிப்போம், சரியா? கவலைப்படாதே; ஆமா பாஸ்கர் இன்னிக்குத் தானே ஊர்லேருந்து வர்றதாச் சொன்னான்”
“இன்னிக்குச் சாயந்திரம் வர்றேன்னு சொன்னான். வாசல்ல ஏதோ சத்தம் கேட்குது, நான் போய்ப் பார்க்கிறேன்”
சாயங்காலம் சாருமதி வீட்டிற்குள் நுழையவும் அடுத்து பாஸ்கர் வரவும் சரியாக இருந்தது. அக்கா-தம்பி இருவரும் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர்.
பாஸ்கர் மருத்துவப் பிரதிநிதியாக வேலை செய்கிறான். மாதத்தில் பாதி நாட்கள் வெளியூர் சென்று விடுவான். இவன் வீட்டில் இருக்கும் சமயத்தில் தன் அக்காவுடன் இப்படித்தான் அரட்டை அடிப்பான். அக்காவும் தம்பியும் சிறந்த நண்பர்களைப் போலப் பழகினர். இரவு சாப்பாடு முடிந்தவுடன் இராமநாதன் சாருவை அழைத்தார்.
“சாரு, இங்கே வாம்மா”
“என்னப்பா?”
“உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சாரு”
“நானும் தாம்பா”
“சரி, நீ முதல்ல சொல்லும்மா”
“இல்லே, நீங்க தான் முதல்ல சொன்னீங்க, அதனால நீங்க தான் சொல்லணும்”
“சரிம்மா, எல்லாம் உன் கல்யாண விஷயமாத் தான்” என்று ஆரம்பித்தார் இராமநாதன். “ஒரு வரன் வந்திருக்கு, பேங்குல கேஷியரா வேலை பார்க்கிறார்; நமக்குத் தோதான இடம், மத்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்ட மாதிரி நீ வேலையை விட வேணாம்மா; ஆனா எய்ட்ஸ் நோய் பிரிவிலிருந்து சாதாரணப் பிரிவுக்கு மாறிக்கோ; அவ்வளவு தான்; நீ சரின்னு சொல்லிட்டேன்னா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள வரச் சொல்லலாம். என்னம்மா சொல்றே?”.
“இல்லைப்பா, என்னால எய்ட்ஸ் நோய் பிரிவை விட்டு எல்லாம் வர முடியாது; அவங்களுக்குத் தான் பரிவும் பாசமும் கூடுதலாத் தேவைப்படும்; சாதாரணப் பிரிவுக்கு யார் வேணாலும் நர்ஸா வருவாங்க; ஆனா எய்ட்ஸ் நோய்ப் பிரிவிற்கு வரத் தயங்குவாங்க; அதனால எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்”
“கொழுப்பு எடுத்துப் போய் தப்பு பண்ணிட்டு இந்த நோயை வாங்கிட்டு வர்றவங்களுக்கு எல்லாம் சேவை செஞ்சு நீ என்னத்தைச் சாதிக்கப் போறே?”
“அப்பா நீங்க நினைக்கிறது தப்பு; எய்ட்ஸ் நோய் ஸ்டெரிலைஸ் பண்ணாத ஊசி, பரிசோதிக்கப்படாத இரத்தத்தைத் தானம் பண்றது மூலமாகவும் பரவுது; நீங்க நினைக்கிறதுல பாதி தாம்பா சரி, பாதி தப்பு; இவங்களுக்குச் சேவை செய்யறது மூலமா எனக்குத் திருப்தி கிடைக்குது; ப்ளீஸ்பா, என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க” என்றாள் சாரு.
“அப்ப வாழ்க்கை முழுக்க இப்படியே இருக்கப் போறேன்னு சொல்றியா?” என்றாள் சரஸ்வதி.
“இல்லைம்மா, என் கூட வேலை பார்க்குற சேகர் என்னை நல்லாப் புரிஞ்சுக்கிட்டவரு, அவரையே கல்யாணம் செஞ்சுக்கணும்னு விரும்பறேன்” என்று தயங்கியபடியே சொன்னாள் சாரு. இராமனாதனுக்குக் கோபம் தலைக்கேறியது.
“என் பேச்சைக் கேட்காதவங்க யாரும் இந்த வீட்டுல இருக்கத் தேவையில்லை” என்று இராமநாதன் கத்தினார்.
“அப்பா, அக்கா பாவம்பா; அவ ஆசையை நீங்க கொஞ்சம் யோசிங்களேன்” என்று அக்காவுக்காகப் பரிந்து பேசினான் பாஸ்கர்.
“வாயை மூடிட்டு இருடா” என்று அவனையும் அதட்டினார் இராமநாதன்.
பின் வந்த நாட்கள் அந்த வீட்டின் அமைதியைக் குலைப்பதாகவே இருந்தன. சாருமதி சேகரைப் பதிவுத்திருமணம் செய்து கொண்டாள். ஆசீர்வாதம் வாங்க வந்த போதும் இராமநாதன் அவர்களை வீட்டுக்குள் வர விடவில்லை. இப்படியே சில மாதங்கள் கழிந்தன.
சாருமதி வார்டில் உள்ள ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு நர்ஸ் வந்து சாருமதியைப் பார்க்க யாரோ விசிட்டர்ஸ் ஹாலில் காத்திருப்பதாகக் கூறினாள்.
யாராக இருக்கும் என்று யோசித்தபடியே வந்த சாருமதி தன் அப்பாவை அங்கு கண்டவுடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்டாள்.
“அப்பா, வாங்கப்பா” என்று தயங்கியபடியே அழைத்தாள்.
“என்னம்மா இந்த அப்பாவை நீ எதிர்பார்க்கலை இல்லையா? உன் நல்ல எண்ணத்தைப் புரிஞ்சுக்காம போன இந்த அப்பனுக்கு ஆண்டவன் பெரிய தண்டனையாத் தான் கொடுத்திருக்கான்” என்று குரல் கம்மப் பேசினார் இராமநாதன்.
“என்னப்பா, என்னாச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க?” என்று பதட்டத்துடன் கேட்டாள் சாருமதி.
“உன் தம்பிக்கு எய்ட்ஸ் நோய் வந்திருக்குமா” என்று கதறி அழுதார் இராமநாதன்.
“என்னப்பா சொல்றீங்க?” அதிர்ச்சியோடு கேட்டாள் சாருமதி.
“ஆமாம்மா, இந்த மாசம் அவன் பெங்களூர் போனப்ப கார் ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு, பக்கத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்திருக்காங்க; அங்கே பரிசோதனை செய்யாத இரத்தத்தை ஏத்தியிருக்காங்க; அதனால தான் அவனுக்கு இந்த நோய் வந்திருக்கு; நீ தாம்மா அவனைக் கவனிச்சுக்கணும்” என்று தழுதழுத்தபடிக் கூறினார் இராமநாதன்.
“அப்பா, இப்ப சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க; உங்க பையனுக்குக் கொடிய நோய் வந்தாலும் உங்களுக்கு அவன் மேல சந்தேகம் வரலை; தாய் உள்ளத்தோடு பார்க்கறீங்க; அதத் தான் நான் எல்லோர் மேலேயும் காட்டறேன்; ஒரு நோயாளிக்கு மாத்திரை மருந்து நோயைப் பாதி குணமாக்கும்; நம்மளோட பாசமும் பரிவும் தான் மீதி நோயைக் குணமாக்கும் அப்பா” என்றாள் சாரு.
“நல்லாப் புரிஞ்சுக்கிட்டேம்மா, நீயும் மாப்பிள்ளையும் இன்னிக்கு நம்ம வீட்டுக்கு வாங்க” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறினார் இராமநாதன்.
“என்னப்பா இப்படி உம்முன்னு முகத்தை வச்சிட்டுக் கூப்பிடறீங்க?” என்றாள் சாருமதி.
“பாஸ்கர் இப்படி இருக்கிறப்ப நான் எப்படிம்மா சந்தோஷமா இருக்க முடியும்?” என்றார் இராமநாதன்.
“நீங்க சந்தோஷமாகவே எங்களைக் கூப்பிடலாம்பா, ஏன்னா பாஸ்கருக்கு ஒண்ணும் இல்லை; அவன் ஆரோக்கியமாத் தான் இருக்கான்” என்று சிரித்தபடியே கூறினாள் சாருமதி.
“என்னம்மா சொல்றே?” என்று விழி விரியக் கேட்டார் இராமநாதன்.
“ஆமாம்பா, பாஸ்கர் தான் இந்த ஐடியா கொடுத்தான்; நீங்க உண்மையை உணரணும் தான் இப்படிச் செஞ்சோம்; அது உங்களை நோகடிச்சிருந்தா மன்னிச்சுங்கப்பா” என்றாள் சாரு.
“இந்த முட்டாள் அப்பனுக்கு இப்படி ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தாத் தான் வழிக்கு வருவான்னு நினைச்சுட்டீங்க; நல்ல பிள்ளைங்க போங்க, சரி, சரி, இன்னிக்குச் சாயங்காலம் மறந்துடாம மாப்பிள்ளையோட வாம்மா” என்றார் இராமநாதன்.
“சரிப்பா” என்று சிரித்தாள் சாருமதி. அந்தச் சிரிப்பில் தாயுள்ளம் தெரிந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
Arumai.. Brinda ma. 👋👋
மிக்க நன்றி மா!