in

பெற்றால் தான் பிள்ளையா (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி.

பெற்றால் தான் பிள்ளையா (சிறுகதை)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“கங்கிராட்ஸ் டாக்டர், உங்க சன்னுக்கு மெடிக்கல் சீட் கிடச்சிருக்குனு கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம்”

டாக்டர் ராகவனுக்கு அன்று முழுக்க வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு பதிலளிக்கவே நேரம் சரியாக இருந்தது.

தர்ஷன் மெடிக்கல் சீட் மெரிட்டில் வாங்கும் அளவுக்கு மார்க் எடுக்கவில்லையென்பதே உண்மை. டாக்டர் ராகவனுக்கு அவனை மெடிக்கல் லைனில் திணிக்க விருப்பமில்லை. ஆனால் அவன் அம்மா சாந்தா  கண்டிப்பாக மகனை டாக்டராக்க  வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள். வேறு வழியில்லாமல் பல லட்சங்கள் கொடுத்து தனியார் கல்லூரியில் சீட்  வாங்க வேண்டியதாயிற்று.

தட்டுத்தடுமாறி படித்து முடித்தவன், தன்  நண்பனின் தங்கை ஜெனிபரைக்  காதலிப்பதாக சொல்ல, வீட்டில் பூகம்பம் வெடித்தது. ஜெனிஃபர்  சாப்ட்வேர் என்ஜினியர்.

சாந்தா  நொந்து போனாள்.

“வேற மதத்து  பொண்ணு நம்ம குடும்பத்துக்கு சரிப்படாதுப்பா..  உனக்கு நிரஞ்சனாவை பார்த்து வச்சிருக்கேன். அவளத் தான் உனக்குத் தெரியுமே! என் பிரண்டோட பொண்ணு. அவளும் டாக்டர். உனக்கு பொருத்தமாய் இருப்பா”

“அப்ப பிளான் பண்ணித்தான் என்னை மெடிசன் படிக்க வைச்சியா?”

“பிளான் எல்லாம் ஒன்னும் இல்லப்பா! நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, உன் லைஃப் நல்லா இருக்கும். அப்பாவோட நர்சிங் ஹோமையும் பின்னாடி நீங்க ரெண்டு பேரும் பொறுப்பெடுத்துக்கலாம் “.

“ஹோ  சூப்பர் மா… நீ நெனச்சபடி வாழ என்னால முடியாது. எனக்கு ஜெனிபரை தான் புடிச்சிருக்கு. அவதான் என் லைஃப். உங்களுக்கு மகன் வேணும்னா இதை ஏத்துக்கோங்க”

எவ்வளவு போராடியும் மகன் மனதை மாற்ற சாந்தாவால் முடியவில்லை. கல்யாணம் சர்ச்சில் நடக்க, ராகவனும் சாந்தாவும் தங்கள் வருத்தத்தை வெளிகாண்பிக்காமல் கிராண்டாக ரிசப்ஷன்  கொடுத்தார்கள்.

காதலிக்கும்போது தெரியாத பிரச்சனைகள் கல்யாணம் முடிந்து வாழ ஆரம்பித்ததும் தெரிந்தது. செல்லமாக வளர்ந்த தர்ஷனுக்கு  ஜெனிபர் குடும்பத்தோடு ஒத்துப்போவது கஷ்டமாக இருந்தது. ஜெனிஃபருக்கும் சாந்தாவின் ஆச்சாரங்கள் எரிச்சலூட்டின.

இதிலிருந்து தப்பிக்க, லண்டன் ப்ராஜெக்ட் வந்தபோது அதை ஏற்றுக்கொண்டு வெளிநாடு செல்ல முடிவு பண்ணினாள். தர்ஷன்  அங்கேயே ஒரு  ஹாஸ்பிடலில் வேலை வாங்கிக் கொள்ள லண்டனிலேயே செட்டில் ஆனார்கள்.

கடமைக்காக வருடம் ஒரு முறை இந்தியா வந்து பெற்றோரை பார்த்துவிட்டுப் போனார்கள். அதுவும் எந்த ஒட்டுதலும் இல்லாமல்… ஓரிருமுறை மட்டுமே சாந்தாவும் ராகவனும் லண்டன் போய் வந்தார்கள், அதுவும் பேரக்குழந்தைகள் பிறந்த சமயத்தில்.

டாக்டர் ராகவனை விட சாந்தாவே அதிகம் நொறுங்கிப் போனாள். எப்பவுமே ஒரு ஏக்கம் மனதில் இருந்தது. ஒரே மகன் என்று செல்லம் கொடுத்து  கெடுத்து விட்டோமோ என்று வருந்தினாள்.

பேரக் குழந்தைகள் இருந்தும் அடிக்கடி பார்க்க கொடுத்து வைக்கவில்லை என்ற ஏக்கம் மனதில் இருந்தது. டாக்டர் ராகவனுக்கு, மகனும், மருமகளும் டாக்டராக இருப்பதற்கு நர்சிங்ஹோமை கவனிக்க உதவினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆதங்கம் வரத்தான் செய்தது.

காலம் உருண்டோட, தர்ஷன் லண்டனில் செட்டிலாகி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

ன்ன சாந்தாம்மா! பி.பி.  எகிறிக் கிடக்குது! அண்ணன் ஞாபகம் வந்திருச்சா?” என்று கேலி பண்ணிக் கொண்டே மாத்திரையை எடுத்து சாந்தாவின் கையில் கொடுத்தான் டாக்டர் ராஜேஷ்.

“அட போப்பா! உனக்கு எப்பவுமே கேலிதான். உன் அண்ணனுக்கு அவன் பொண்டாட்டி புள்ளைங்கதான் முக்கியம். என்னைப் பத்தி நினைக்க ஏது நேரம்?” என்றாள் வருத்தத்தோடு.

“நீங்க வருத்தப்படக் கூடாதுன்னு தான் தினமும் பேஷண்ட்ஸை பாத்துட்டு.. இங்கே வந்து  உங்க கூட இருக்கிறேன்… சாப்பிடுறேன்”

“ஆனா இங்கேயே தங்கியிருக்கச்  சொன்னா மட்டும் கேட்க மாட்டேங்கிற.. அதுதான் எனக்கு உன்கிட்ட பிடிக்கல”

“அம்மாவும், பிள்ளையும் என்ன சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க? உனக்கு என்ன சாந்தா பிடிக்கலை?” என்று கேட்டபடியே உள்ளே வந்தார் டாக்டர் ராகவன்.

“நீங்களே சொல்லுங்க! ராஜேஷை இங்கேயே நம்ம கூட தங்குன்னு  சொன்னா ஏன் கேட்க மாட்டேங்கிறான்?”

“ஏம்பா.. அம்மா தான் ஆசைப்படறால்ல, எங்க கூட தங்கிடேன்.”

வழக்கம்போல ராஜேஷ் சிரித்துக் கொண்டே தலையாட்டினான்.

“சரி.. சரி.. சாப்பிட வாங்க! ராஜேஷுக்கு பிடிக்கும்னு மஷ்ரூம் பிரியாணி பண்ணியிருக்கேன். அப்படியே பால்கோவாவும் கிளறியிருக்கேன்”

“அம்மா! நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க? சொன்னா கேக்க மாட்டீங்களா?”

“அட விடுப்பா.. அவளுக்கு அவ கையால செய்றதுல ஒரு திருப்தி… இப்படித்தான் தர்ஷன்   இருக்கும் போதும்…” என்று சொல்ல ஆரம்பித்தவர், பேச்சை நிறுத்தினார். ஒரு சங்கடமான மவுனம் நிலவியது.

“அம்மா மாங்காடு போகணும்னு சொன்னீங்களே! இந்த சண்டே போவோமா? அப்பாவை விட்டுட்டு போயிடுவோம். அவர் கோயிலுக்கு சரிப்பட மாட்டார். நாம போனால்தான் நிதானமா சாமி கும்பிட்டுட்டு வரலாம். வந்து வேணும்னா அப்பாவை கூட்டிட்டு வெளில சாப்பிட  போலாம்”

“நல்ல ஐடியா ராஜேஷ்! நாம வெளியில போய் ரொம்ப நாள் ஆகுது. இந்த வாரம் கண்டிப்பாக போவோம்” என்றாள் சாந்தா சந்தோஷமாக.

தர்ஷனை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு ராஜேஷ் வரவு  வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது. அந்த வீடும் மெல்ல மெல்ல பழையபடி கலகலப்பாக தொடங்கியது.

பணம் கொடுத்து, மெடிக்கல் சீட் வாங்கி, மகனை படிக்க வைப்பதை மனதார  ஏற்றுக்கொள்ள முடியாத ராகவனுக்கு, மெரிட்டில் சீட் கிடைத்தும், பீஸ் கட்ட முடியாமல் தவித்த ஏழை மாணவன் ராஜேஷ் அறிமுகமானான். அவனுக்கு ஆதரவு கொடுத்ததோடு நான்கு வருடங்களும் பீஸ் கட்டி படிக்க வைத்தார்.

அம்மாவைத் தவிர பெரிதாக வேறு எந்த உறவும் கிடையாது ராஜேஷுக்கு. அவன் அம்மா நான்கு வீடுகளில் சமையல் செய்து குடும்பத்தை நடத்தி வந்தாள். மகன் காலேஜ் சேர்ந்த இரண்டாம் ஆண்டில் அவளும் இறந்து போக, ராஜேஷ் மிகவும் நொறுங்கிப் போனான்.

மகன் அருகில் இல்லாத சோகத்தில் இருந்த சாந்தாவும், தாயை இழந்த ராஜேஷும்,  பழகப்பழக தாய் மகனாகவே மாறிப் போனார்கள்.

ராகவன் வற்புறுத்த மேல் படிப்பையும் முடித்த ராஜேஷ், ராகவன் நர்சிங் ஹோமிலேயே வேலை பார்க்கத் தொடங்கினான். மகன் பாசத்திற்காக ஏங்கும் அந்த தம்பதிகளுக்கு வளர்ப்பு மகனாகவே மாறிப் போனான்.

தர்ஷன் ஒரு வருடம் லீவில் வர, முதலில் ராஜேஷுடன் நட்பு பாராட்டினான். அவன் அப்பாவின் நர்சிங் ஹோமில் அப்பாவின் வாரிசாக செயல்படுவதையும், வீட்டில் பெறாத பிள்ளையாக அம்மா, அப்பாவின் பாசத்திற்குரியவனாக மாறி போனதையும்,  தாங்க முடியவில்லை. அதனால் ஆத்திரமடைந்தவன், அந்த ஆத்திரம் மொத்தத்தையும் ராஜேஷ் மேல் கொட்டி தீர்த்தான். அவனை வார்த்தைகளால் காயப்படுத்தினான்.

அவனை மேலும் கோபப்படுத்த விரும்பாமலே, டாக்டர் வீட்டில் தங்குவதை தவிர்த்து வந்தான் ராஜேஷ். அதுவும் தர்ஷன் இந்தியா வந்தால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அந்த  வீட்டை விட்டு சற்று விலகி நின்றான்.

ருநாள் ராஜேஷ் நர்சிங் ஹோமில் பேஷண்டை பார்த்துக் கொண்டிருக்க சாந்தா வீட்டில் வேலை பார்க்கும் பார்வதி அவசரமாக ஓடி வந்தாள்.

“ஐயா ஐயா… அம்மா நெஞ்சு வலியில துடிக்கிறாங்க, சீக்கிரம் வாங்க…” என்றாள் பதட்டத்தோடு.

பதறிய ராஜேஷ், வீட்டிற்கு ஓடினான். சாந்தாவை உடனே நர்சிங் ஹோம் அழைத்து வந்து அட்மிட் பண்ணிய பிறகே அப்பாவிற்கு விஷயத்தை சொன்னான். எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்தான். சாந்தாவுக்கு ஆன்ஜியோ பண்ணிப் பார்த்து தேவைப்பட்டால் பைபாஸ் சர்ஜரி பண்ணுவது என்று முடிவு பண்ணினார்கள்.

சாந்தா ட்ரிட்மெண்ட்க்கு  ஒத்துழைக்க மறுத்தாள்.

ராகவன்  டென்ஷனாக, “அப்பா! நீங்க போங்க!  நான் அம்மாவை சமாதானப்படுத்துறேன். நீங்க டென்ஷனாகாதீங்க” என்றான் ராஜேஷ்.

“அம்மா பயப்படாதீங்க, நான் கூட இருக்கேன். ஆஞ்சியோ பண்ணி பிளாக்கை எடுத்துட்டா ஒன்னும் இல்ல”

“எனக்கு எந்த ட்ரீட்மெண்ட்டும் வேணாம். கடமையெல்லாம் முடிச்சாச்சு, இனிமே இருந்து என்ன பண்ணப் போறேன். ஆபரேஷன் எல்லாம் வேண்டாம், இருக்கும் வரைக்கும் இருக்கிறேன். நான் போய் சேர்ந்தா, அப்பாவைப் பாத்துக்க நீ இருக்க” என்றாள் விரக்தியாக.

“அம்மா எப்படி சுயநலமா பேசுறீங்க பாத்தீங்களா?”

“போடா போ… பெரிய சுயநலத்த கண்டுட்ட”

“கடமையெல்லாம் முடிச்சாச்சுன்னு சொல்றீங்க! எனக்கு பொண்ணு பார்த்து வச்சிருக்கேன், அதுவும் டாக்டர் பொண்ணு இந்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னீங்க. என் பொண்டாட்டிய மாமியாரா நீங்க அதிகாரம் பண்ண வேண்டாமா? அப்புறம் அவ குழந்தை உண்டானா யார் வளைகாப்பு பண்ணுவா? பிறந்தநாள் கொண்டாடி, குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து, மொட்டை போட்டு, காது குத்தி…” அவன் கூறிக் கொண்டே போக, கடகடவென சிரித்து விட்டாள் சாந்தா.

“ஏண்டா அதோட நிறுத்திட்ட? அதுக்கு சடங்கு, கல்யாணம்னு, சொல்லிகிட்டே போ” என்று மேலுக்கு சொன்னாலும், உள்ளுக்குள் நினைக்கையில், ஒரு உற்சாகம் பெருக்கெடுத்தோடியது. 

எதையெல்லாம் தர்ஷன் விஷயத்தில் செய்ய கொடுத்து வைக்கவில்லையோ, அதையெல்லாம் ராஜேஷுக்கு செய்து பார்க்க மனம் துடித்தது.

“சரிடா! உனக்காக சர்ஜரிக்கு ஒத்துக்குறேன்”

“சூப்பர் அம்மா! சூப்பர்! நீங்க ஒரே மாசத்துல உடம்பு தேறி எனக்கும் அப்பாவுக்கும் மஸ்ரூம் பிரியாணி பண்ணப் போறீங்க பாருங்க”

“உண்மை தாண்டா! உன் முகத்தைப் பார்த்து, உன் பாசமான பேச்சைக்கேட்டு, வாழனும்னு ஆசை வந்துடுச்சுடா”

பெறாத தன் மகனின் கையைப் பிடித்துக் கொண்டாள் சாந்தா.

விரும்புகிற இடத்தில் பாசம் கிடைக்கவில்லையென்றால், கிடைக்கிற இடத்தில் பெற்றுக் கொள்ள வேண்டியது தானே!

‘பெற்றால்தான் பிள்ளையா?’ என்று நினைத்துக் கொண்டாள் சாந்தா.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 8) – ✍ விபா விஷா, அமெரிக்கா

வல்லபி ❤ (பகுதி 6) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை