2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12
எண்ணெய் ஊற்றி கடுகு போட்டதும் ஒரு மந்தமான வாடை. உளுத்தம் பருப்பு கடலை பருப்பு போட்டதும் குமட்டல் ஆரம்பித்தது. வெங்காயம் போட்டதும் அங்கே என்னால் நிற்கவே முடியாமல் வாந்தி வந்தது.
“ஆதி நீ கொஞ்சம் இங்க அடுப்பு கிட்ட வரியா”
இதற்கு முன்பு நானும் ஆதியும் தனியாக இருக்கும் பொழுது நானே சமைத்து விடுவேன். தேங்காய் துருவித் தர சப்பாத்தி மாவு பிசைய பாத்திரங்கள் அதிகம் குவிந்து விட்டால் அதை விளக்கித் தர இன்னும் சில உதவிகளை கூட ஆதி செய்துள்ளார்.மற்றபடி காய்கறி நறுக்கிக் கொள்வது, சமைப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை நானே செய்து கொள்வேன். இரண்டு பேருக்குத் தானே சமையல் அதனால் சீக்கிரமே முடிந்து விடும்.
காலையிலேயே சோறு வைத்து குழம்பு வைத்து ஒரு பொரியல் செய்து விடுவேன். அதையே சாப்பிட்டு விட்டு அலுவலகத்திற்கும் எடுத்துச் செல்வேன். சாயங்காலம் வந்து இரவு உணவு தயார் செய்வேன்.
இரவில் நிதானமாக சமைப்பேன். ராகி சேமியா சப்பாத்தி இட்லி தோசை உப்புமா என்ன தோன்றுகிறதோ அதை நன்கு சமைத்து சீக்கிரமே சாப்பிட்டு விடுவோம். பின் சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு தூங்குவேன். அதனால் சமைத்துவிட்டு அலுவலகம் செல்வதும் சரி அலுவலகம் முடிந்து வந்து சமைப்பதும் சரி கடினமாக இருந்ததில்லை.
ஆனால் இப்பொழுது அடுப்பிற்கு பக்கத்தில் சென்றாலே தலைசுற்றுகிறது. கொமட்டல் வருகிறது. மயக்க உணர்வு ஏற்படுகிறது.
ஆதியை அழைத்ததும் வந்தார். நான் சொல்லச் சொல்ல ஒவ்வொன்றாகச் செய்தார்.
“பேசாம மேல இருக்க பாட்டி கிட்ட சமச்சி தர சொல்லலாமா” என்று ஆதி கேட்டார் வெங்காயத்தை வதக்கிக் கொண்டே.
மேலே எங்கள் சொந்தக்காரப் பாட்டி ஒருவர் குடியிருக்கிறார். ஈரோட்டிற்கு தனியாக வருவோம் என்று தெரிந்ததுமே அப்பா அவரின் அத்தை வீடு இருக்கும் அதே கட்டிடத்தில் வீடு காலியாக இருக்கிறது என்பதை விசாரித்து இங்கே குடிவைத்தார். அலுவலகத்திற்குப் பக்கத்திலேயே வீடு கிடைத்தது. இருந்தும் கால் மணி நேர தொலைவு என்றாலும் தெரிந்தவர் ஒருவர் துணைக்கு இருப்பது நல்லது என்பதால் இங்கே குடி வந்தோம்.
சில நாட்கள் ஆதிக்கு சென்னை செல்ல வேண்டிய அவசர வேலை இருக்கும்பொழுது நான் மட்டும் கூட தனியாக தங்கிக்கொள்வேன். அந்த சமயத்தில் பாட்டி என்னுடன் வந்து தங்கிக்கொள்வார். மேல் வீட்டில் பாட்டி, பேரன், பேரனின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நல்ல உதவியாக இருப்பார். ஆனால் நாங்கள் அதிகம் உதவி கேட்பதில்லை. ஒரு நாள் அவர் குழம்பு கொடுத்தால் மறு நாள் நாங்கள் கொடுப்போம்.
“வேணாம்ங்க.. ஏற்கனவே சின்ன சின்ன உதவிலாம் பண்ணிட்டு தான் இருக்காங்க.. அரிசி மாவு ஆட்டித்தராங்க.. அவசரம்னா கொழம்பு கூட வாங்கிக்கலாம்.. சமையல் நம்பலே பண்ணிக்கலாம்”
சரி என்று தலையசைத்து விட்டு சமையலை கவனித்தார். ‘இனி நான் தான் சமைக்கணுமோ’ என்கிற முகபாவனையோடு அவர் இருந்தது எனக்கு கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது. கொஞ்ச நாளில் சரியாகிவிடும் பார்த்துக்கொள்ளலாம்.
வெண்டைக்காய் குழம்பு செய்தார். அரிசி கலைந்து கொடுக்க சாதம் வைத்தார். கீரை ஆய்ந்து வைத்திருந்ததை பொரியல் செய்தார். ரசம் கூட வைத்தால் நன்றாகத் தான் இருக்கும் வேண்டாம் ஒரே நாளில் அவரை இவ்வளவு வேலை வாங்கியதே பெரிது.
எல்லாம் எடுத்து வைத்து பாத்திரத்தில் மாற்றி விட்டு குளிப்பதற்குச் சென்றேன்.
வார நாட்களில் பத்து நிமிட குளியல் தான். வெளியில் வரும்பொழுது ஆதி பீட்ரூட்டை நறுக்கிக் கொண்டிருந்தார்.
“அதான் கீரை பொரியல் செஞ்சாச்சுல.. எதுக்கு பீட்ரூட்”
“உனக்கு தான்”
“அதெல்லாம் சமைக்க டைம் இல்லை.. பத்து நிமிஷத்துல சாப்டுட்டு கிளம்பனும்”
“ரெண்டு நிமிஷத்துல ஆயிடும்.. ஜூஸ் தான”
“பீட்ரூட்ல ஜூஸ்சா”
“ஆமா கவி.. உனக்கு ஹிமோகுளோபின் பார்டர்ல இருக்கு.. பாப்பா வளர வளர இன்னும் குறையும். நீ மாத்திரையும் எதும் கரெக்ட்டா முழுங்குற மாதிரி தெரில.. அதான் பீட்ரூட் ஜூஸ்”
“அதுக்குத்தான் காலைல மாதுளை சாப்பிட்டேன்ல”
“இதுவும் எடுத்துட்டுப் போ அப்பப்ப குடி”
“ஏற்கனவே எதுவும் சாப்பிட பிடிக்கல.. இது வேறயா..”
“அப்பறம் இன்னொன்னு.. உனக்கு ஜூஸ்ல சக்கரை போட்டா பிடிக்காதுல.. அதுவும் போடல” நக்கலாக கூறினார்.
“கடவுளே…” என்றதும் வாய்விட்டு சிரித்தார் ஆதி.
சிரிக்க நன்றாகத்தான் இருக்கிறது எப்படி குடிக்கப் போகிறேனோ தெரியவில்லை.
பதினோரு மணி அளவில் வேலைக்கு நடுவே பீட்ரூட் ஜூஸ் நினைவிற்கு வந்தது. பையில் இருந்து வெளியே எடுத்து பாட்டிலை திறந்தேன். என் பக்கத்து இருக்கையில் இருந்தவர் என்னையே பார்த்தார். பெரும்பாலும் நான் உணவிற்கு நடுவில் எதுவும் உண்ணும் பழக்கம் கிடையாது. டீ, காபி கூட அருந்த மாட்டேன். இன்று என்ன பாட்டிலில் பழ ரசம் அருந்துகிறேன் என்று நினைத்து பார்க்கிறாரோ என்னவோ.
கொஞ்சம் பருகிப் பார்த்தேன். பீட்ரூட்டை வேக வைக்காமல் சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படித் தான் இருந்தது. பெரும்பாலும் எனக்கு எந்த ஜூஸ் ஆக இருந்தாலும் அப்படி அருந்தத்தான் பிடிக்கும். சக்கரை ஐஸ் எதையும் சேர்த்துக் கொள்ள மாட்டேன். பழத்தின் தூய சுவையை அப்படியே பருகத்தான் பிடிக்கும்.
இன்னும் கொஞ்சம் பருகினேன். கொமட்டத் தொடங்கியது. நாக்கில் ருசிக்காமல் வேக வேகமாக தண்ணீர் போல் குடித்து விடலாம். பாப்பாவிற்கும் நல்லது எனக்கும் குடித்தது போல் இருக்காது கொமட்டாது என்று பேராசை கொண்டு பாட்டில் முழுவதும் வேக வேகமாக பருகினேன்.
பருகி முடித்து கீழே வைத்ததும் உடம்பு என்னவோ செய்யத் தொடங்கியது. தலை வலித்தது. நெஞ்சு கனத்தது. வயிறு பிரட்டியது. உட்காரவே முடியவில்லை. இப்பொழுதே எழுந்து சென்று வாந்தி எடுத்தால் தான் இந்த அசௌகர்யம் குறையும்.
கீழே இருக்கும் கை கழுவும் இடத்தில் வாந்தி எடுத்தால் சத்தம் வெளியே கேட்கும் அனைவருக்கும் தெரிந்து விடும். அதனால் மேலே இருக்கும் கை கழுவும் இடத்திற்குச் சென்றேன். நடக்க நடக்க வாந்தி உணர்வு அதிகரித்தது.
கையை வாயில் வைத்து மூடிக்கொண்டு ஓடினேன். படி ஏறி விட்டேன் அவ்வளவு தான் கிட்டே வந்து விட்டேன் அதற்குள் எடுத்து விடாதே என்று எனக்குள் சொல்லிக்கொண்டே கையை வாயில் அடைத்து வைத்துக் கொண்டு வேகமாக நடந்தேன் பின் ஓடினேன். சரியாக கை கழுவும் இடத்திற்கு வரும்பொழுது அடக்க முடியாமல் சத்தமிட்டு வாந்தி எடுத்தேன்.
பீட்ரூட் மொத்தமும் வெளியே வந்தது. யாராவது பார்த்தால் கூட இரத்த வாந்தி என்று நினைத்து கொள்வார்கள். அந்த அளவிற்கு சிகப்பாய் இருந்தது.
வாந்தி எடுத்து முடித்ததும் உடல் சோர்வு அதிகம் ஆனது. நெஞ்சில் கனம் குறைந்தது எனினும் இன்னும் ஏதோ நிற்பது போல் இருந்தது. தலை சுற்றியது. திடீரென ஒரு பயம் ஒருவேளை நான் இங்கே மயங்கி விழுந்து விட்டால் என்ன செய்வது மேலே யாரும் இல்லையே நான் இங்கே இருப்பது யாருக்கும் தெரியாதே.
தலை சுற்றல் அதிகரித்தது. நிற்கமுடியாமல் சரிந்தேன். கண்கள் மெல்ல சொறுகியது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings