2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அதிகாலையில் எழுந்து அவசர அவசரமாய்க் கிளம்பினாள் யாமினி. அவளது பரபரப்பை வீட்டிலுள்ளோர் அனைவரும் ஒருவிதக் கோபத்தோடு பார்த்தனர்.
‘த்தூ!… குடும்ப மானத்தைக் குழி தோண்டிப் புதைக்க வந்த சனியன்!” சமையல்கட்டிலிருந்து அம்மாவின் அர்ச்சனை கேட்டது. பாத்திரங்களை அவள் “ணங்…ணங்”கென்று வைப்பதில் அவளது சினம் தெரிந்தது.
யாமினி அதைக் கண்டு கொள்ளவுமில்லை… அதைப் பற்றிக் கவலைப்படவுமில்லை.
‘இவளை இனிமே வீட்டுக்குள்ளார சேர்த்துக்கிட்டா… நம்ம சொந்தக்காரங்க மட்டுமல்ல… அக்கம்பக்கம் குடியிருக்கறவங்க… யாருமே நம்மை மதிக்க மாட்டாங்க!… கேவலமாய்ப் பார்த்து காறித் துப்புவாங்க!”
இது அண்ணன்காரனின் ஆராதனை. வீட்டில் உள்ள மற்றவர்கள் அனைவரையும், தன் உருட்டல், மிரட்டலால் பயமுறுத்தி வைத்திருந்த அவனால், யாமினியை மட்டும் அடிபணிய வைக்க முடியாமல் போனது அவனுக்குள் ஒரு பெரிய ஆங்காரத்தை ஏற்படுத்தியிருந்தது.
‘அப்படியா?… அப்ப நான் இப்படியே… இங்கேயே இருந்துடறேன்… அந்த இடத்துக்கு நீ போறியா… எனக்கு பதிலா!” ஆட்காட்டி விரலைக் காட்டி ஆக்ரோஷமாய்க் கேட்டாள் யாமினி.
சட்டென்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் அண்ணன்காரன்.
ஒரு கட்டத்தில் கோபம் எல்லை மீறி விட, ‘ஒரு பொட்டச்சி… நம்ம பேச்சையெல்லாம் கேட்காம… அந்த வேலைக்குப் போறேன்னு பகிரங்கமாச் சொல்லிட்டுக் கிளம்பறான்னா… இந்தக் கண்ராவியை என்னன்னு சொல்றது?…’ சமையல்கட்டிலிருந்து வெளியே வந்து மகனிடம் கூவினாள் யாமினியின் தாயார்.
‘நம்ம சொந்தத்துல இப்படியொரு கேவலமான சிறுக்கி எந்தக் குடும்பத்திலேயும் பொறக்கலை… நான் அடிச்சுச் சொல்வேன்!” தன் உள்ளங்கையில் தானே குத்திக் கொண்டு அம்மாவின் கூவலுக்கு ஆதரவு காட்டினான் மகன்.
அந்தக் கத்தல்கள் எதையும் கண்டு கொள்ளாமல் செருப்பை மாட்டிக் கொண்டு தெருவில் இறங்கினாள் யாமினி.
பக்கத்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்மணிகள் போகும் இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து, தங்களுக்குள் பேசிக் கொள்வதைப் போல் யாமினியை திட்டித் தீர்த்தனர்.
‘ஹூம்… நம்ம லட்சுமியம்மா வயத்துல இப்படியொரு பொண்ணு வந்து பொறக்கணுமா?… இதுவே என் மகளா இருந்திருந்தா… காலை உடைச்சு வீட்டுக்குள்ளாரவே போட்டிருப்பேன்!” என்று சொல்லியவாறே கழுத்தை நொடித்தாள் ஒருத்தி.
“நான் சோத்துல விஷத்தை வெச்சுக் குடுத்திடுவேன்”
‘காசு சம்பாதிக்கணும்கற ஆசை எல்லாருக்கும் வரும்தான்… இல்லேன்னு சொல்லலை!… அதுக்காக என்ன வேலைக்கு வேணாலும் போக முடியுமா?… பொம்பளைகளுக்குன்னு சில வேலைகள் இருக்கே… டீச்சர் வேலை… கம்ப்யூட்டர் வேலைன்னு… அதுல எதுக்காச்சும் போக வேண்டியதுதானே?”
‘கர்மம்… கர்மம்… இனி இதுக்கு கண்ணாலமேது… காட்சியேது?… ஊர் முழுக்க சுத்திச் சுத்தித் திரிய வேண்டியதுதான்!… ஒரு பயல் கட்டிக்க மாட்டான்!… அப்படியே கட்டிக்கிட்டாலும் இவ கூட கடைசி வரைக்கும் பொழைக்க மாட்டான்”
நாசூக்காய்த் திரும்பி அவர்களை நெருப்பாய் நோக்கினாள் யாமினி.
‘படக்”கென்று வீட்டிற்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டனர் அந்த வாய்ப் பேச்சு வீராங்கனைகள்.
எதிர்ப்பு வரும் வரை வாய் வலிக்கப் பேசுவதும், எதிர்ப்புக் காட்ட ஆரம்பித்தால் ஓடி ஒளிந்து கொள்வதும்தான் அந்தப் பெண்களின் இயல்பு, என்பதைப் புரிந்து கொண்ட யாமினி, மெலிதாய் முறுவலித்தபடியே தன் நடையை வேகப் படுத்திக் கொண்டாள்.
வழியில் இருந்த பெட்டிக்கடையைத் தாண்டிச் செல்லுகையில், வழக்கமாய் அங்கே அமர்ந்து போகும் வரும் பெண்களைப் பார்த்துக் கேலி பேசி மகிழும் வேலையற்ற வீணர்களுக்கு அவளைக் கண்டதும் குஷி கிளம்பியது. ‘
‘டேய்… கலிகாலம் நடக்குது… கலிகாலம் நடக்குதுன்னு ஆளாளுக்கு சொன்னாங்க… நான் நம்பலை!… இப்ப நம்பறேன்!” பீடியை உறிஞ்சியபடியே அவளை நக்கலடித்தான் கட்டம் போட்ட சட்டைக்காரனொருவன்.
‘பின்னே?… கௌரவம்… மரியாதை… இதையெல்லாம் பார்த்தா வசதியான வாழ்க்கை கெடைக்குமா?…” இன்னொரு பீடி பதில் சொன்னது.
‘டேய்… நம்மையும் கஸ்டமரா சேர்த்துக்க முடியுமானு கேட்டுச் சொல்லுடா!”
‘விருட்”டென்று அவர்கள் பக்கம் திரும்பி, பரிகாசமாய், ‘ஈஈஈஈஈஈ”என்று இளித்து விட்டு நடந்தாள் அவள்.
‘யப்பா!… செத்துப் போன முத்துச்சாமி சரியான பொம்பளை ரவுடியைத்தான் பெத்துப் போட்டுட்டுப் போயிருக்கான்!” அபிநயித்துச் சொன்னான் அந்தக் கட்டம் போட்ட சட்டைக்காரன்.
சரியாக ஏழரை மணிக்கு அந்தக் கடைத் தெருவின் முகப்பிற்கு வந்த யாமினி, தனக்காக அங்கு காத்திருந்த ஆண்களைப் பார்த்துத் தலையாட்டினாள்.
அவர்களும் ‘தயார்” என்னும் விதத்தில் தலையாட்டியவாறே சற்றுத் தள்ளி நடக்க, அவர்களைப் பின் தொடர்ந்தாள் யாமினி.
அந்தக் குறிப்பிட்ட இடத்தில் மினுமினுக்கும் மஞ்சள் பெயிண்டுடன், சந்தனப்பொட்டு… மாலை மரியாதையுடன் நின்றிருந்தது அந்த ஆட்டோ.
இருபத்திமூன்று வருடங்களாய் அதை ஓட்டி, அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்த தன் தந்தையின் ஆட்டோ தொழிலை, அவர் இறப்பிற்குப் பின் தான் ஏற்றுக் கொண்டவள், மனதில் அவரை எண்ணிக் கொண்டு அந்த ஆட்டோவைத் தொட்டு வணங்கினாள்.
“ஏம்மா… உன் வீட்டிலிருந்து யாரும் வரலையா?” மூத்த ஆட்டோ டிரைவர் கேட்க
“வர மாட்டாங்க அய்யா!… ஏன்னா அவங்க யாருக்குமே… நான் இந்த வேலைக்கு வர்றது பிடிக்கலை!…” என்றாள் யாமினி.
“உன் அண்ணன்காரன் என்னதான் சொல்றான்?”
“அப்பாவோட ஆட்டோவை வித்து… அந்தப் பணத்தை அவன் கையில் குடுக்கச் சொல்றான்”
“எதுக்காம்?” புருவங்களை நெரித்துக் கொண்டு பெரியவர் கேட்டார்.
“ஏதோ வியாபாரம் ஆரம்பிக்கிறானாம்”
“க்கும்… அவன் வியாபாரம் செஞ்ச லட்சணத்தைத்தான் பார்த்தோமே?… கஷ்டப்பட்டு உங்கப்பன் கொடுத்த பணத்தை மூணே மாசத்துல முடிச்சுக் கட்டியவன்தானே அவன்?”
காக்கிச் சட்டையணிந்த ஒருவன், “அய்யா… ஆரம்பிக்கலாமா?” என்று கேட்க, பெரியவர் தலையசைத்தார்.
அடுத்த நிமிடம் அவன் தேங்காயை உடைத்து. கற்பூரம் காட்டி, பூசை செய்து முடித்தான். இன்னொருவன் ஓடி வந்து, முன் சக்கரத்தினடியில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து விட்டு, ‘ம்… உள்ளார உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ணும்மா!” என்றான்.
அவர்கள் அனைவரின் கைதட்டலுக்கு நடுவில், ஆட்டோவை ஸ்டார்ட் செய்து, நிதானமாய் நகர்த்தினாள் யாமினி. சக்கரத்தினடியிலிருந்த எலுமிச்சம்பழம் சரியாக நசுங்கியதும், ‘அப்படியே மார்க்கெட்டை ஒரு மூணு ரவுண்டு அடிச்சிட்டு வாம்மா!” என்றார் ஒருவர்.
நிதானமாய் ஆட்டோவை நகர்த்தி, மெல்ல வேகம் பிடித்து, மார்க்கெட்டை மூன்று முறை சுற்றி வந்த பின், புறப்பட்ட இடத்திகே வந்து நின்றாள் யாமினி.
ஆட்டோவை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கி வந்தவளை நெருங்கி வந்த அந்த மூத்த ஆட்டோ டிரைவர், ‘அம்மா… யாமினி!… உன்னைய நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கும்மா!… நீ ஆட்டோவில் ஏறும், போதும், இறங்கி வரும் போதும் பார்த்தா, ஆக்ஸிடெண்ட்ல இறந்து போன உங்கப்பா முத்துச்சாமியைப் பார்க்கிற மாதிரியே இருக்கும்மா!… பொம்பளைங்களை முடக்கி வெச்சிருக்கற இந்த சமுதாயத்துல… பொம்பளைங்கன்னா சாதாரணமில்லை… ஆம்பளைங்களுக்கு நிகரா எங்களாலேயும் எதையும் செய்ய முடியும்”ன்னு நிரூபிக்கற மாதிரி வீட்டிலிருக்கறவங்க எதிர்ப்பையும்… அக்கம் பக்கம் இருக்கறவங்களோட அரசல் புரசல் பேச்சுக்களையும் தூசிய ஊதுற மாதிரி ஊதித் தள்ளிட்டு தைரியமா வந்து உங்கப்பா செஞ்சிட்டிருந்த இந்த ஆட்டோ டிரைவர் தொழிலை ஏத்துக்கிட்டியே உண்மையில் நீதாம்மா புதுமைப் பெண்!…”
தன் தந்தை வயதான அந்த நபரின் காலைத் தொட்டு வணங்கிய யாமினி, ‘அய்யா…குத்தும் ஊசியிடம் வாதாடினால் ஆடை தன் அழகை இழந்து விடும், அதே மாதிரி வெட்டும் கத்திரிக்கோலிடம் வாதாடினால் ஆடை தன் வடிவத்தை இழந்து விடும். சில பேர் நமக்குக் காயங்களை ஏற்படுத்தினாலும் அவர்கள் நம்மை நேர்த்தி செய்யவே குத்துகிறார்கள்… வெட்டுகிறார்கள் எனப் புரிந்து கொண்டு மகிழ்வோடு அதை ஏற்றுக் கொண்டால்… நம்ம வாழ்க்கையும் அழகாகும். நல்ல வடிவமாகும்… அந்த ஆடையைப் போல!” என்றாள்.
விண்ணுலகில் பாரதி மீசையை நீவிக் கொண்டார்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings