in

யாதுமாகி நின்றாய் ❤ (உலக இல்லத்தரசிகள் தின சிறப்புச் சிறுகதை) – எழுதியவர் : சஹானா கோவிந்த்

யாதுமாகி நின்றாய் ❤ (சிறுகதை)

“மம்மி… இந்த சம் புரியல” என மூன்றாவது படிக்கும் மகன் அஸ்வத் அழைக்க

இட்லி குக்கரை அடுப்பில் ஏற்றிக் கொண்டிருந்த அபர்ணா, “இதோ வரேன் கண்ணா” என்றவள், வேலையை முடித்து விட்டு முன்னறைக்கு வந்தாள்

“நான் சொல்லித் தாரேன்னா வர மாட்டேங்கறான் அபி” என பேரன் மீது செல்லப் புகார் வாசித்த தன் அன்னை சித்ராவை பார்த்து புன்னகைத்தாள் அபர்ணா

“அவனுக்கு நான் சொல்லி குடுத்தே பழகிடுச்சும்மா” என சமாதானமாய் கூறியவள், பிள்ளைக்கு கணக்குப் பாடத்தில் சந்தேகத்தை நிவர்த்தி செய்தாள்

“மம்மி, இந்த பட்டர்பிளை ரைம்ஸ் சொல்லிக் குடு” என அண்ணனுக்கு போட்டியாய் தன் புத்தகத்தை நீட்டினாள் எல்.கே,ஜி படிக்கும் அபர்ணாவின் மகள் ஸ்ரீநிதி

“அம்மா அண்ணாவுக்கு சொல்லித் தரட்டும், உனக்கு நான் சொல்லித் தரேன் வாடா தங்கம்” என  அபர்ணாவின் தந்தை சரவணன் பேத்தியை அழைக்க

“போங்க தாத்தா, உங்களுக்கு ஒண்ணும் தெரியாது” என்ற பேத்தியின் மழலையை, தாத்தா பாட்டி இருவரும் ரசித்து மகிழ்வாய் முறுவலித்தனர்

“ஸ்ரீநிதி, பெரியவங்ககிட்ட அப்படி பேசக் கூடாது, தாத்தாகிட்ட சாரி கேளு” என அபர்ணா மகளைக் கண்டிக்க

“விடும்மா, கொழந்த தான” என பேத்திக்கு பரிந்து கொண்டு வந்தார் தாத்தா சரவணன்

“அப்படி இல்லப்பா, வெளி ஆளுககிட்டயும் அதே பழக்கம் தான் வரும்” என்றவள்

“ஸ்ரீ…” என மகளுக்கு பார்வையாலேயே கட்டளையிட

“சாரி தாத்தா… இப்ப ஓகே வாம்மா, இனி பட்டர்பிளை ரைம்ஸ் சொல்லி தர்றதுல பிரச்சனை இல்லையே” என பெரிய மனுஷத் தோரணையுடன் ஸ்ரீநிதி கேட்கவும், அறையே சிரிப்பில் நிறைந்தது

மகளின் பேச்சில் மயங்கிய போதும், “வாய் கொழுப்பு ஜாஸ்தியா போச்சு உனக்கு” என்ற செல்ல அதட்டலுக்கு பின், மகளுக்கு ரைம்ஸ் சொல்லி கொடுத்தவள், இட்லி குக்கரின் இடைவிடாத சத்தத்தில் எழுந்தாள் அபர்ணா

“நான் பாக்கறேன் அபி” என சித்ரா எழ

“வேண்டாம்மா… நீயே எப்பவாச்சும் தான் இங்க வர்ற, ரெஸ்ட் எடு, அப்புறம் முட்டிவலி அதிகமாயிடும்” என சமையல் அறைக்குள் சென்றாள் அபர்ணா

சிறிது நேரத்துக்குப் பின், “அம்மா ஹோம் ஒர்க் முடிச்சுட்டேன், கொஞ்ச நேரம் விளையாடட்டுமா?” என அஸ்வத் வந்து கேட்க

“சரி, ஆனா ரகள பண்ணாம விளையாடணும்” எனவும்

“ஹேய்….” என்றபடி இருவரும் குஷியாய் ஓடினர்

அடுத்த பத்து நிமிடத்தில், ஸ்ரீநிதியின் கத்தலும் அஸ்வத்தின் அலறலும், அதோடு “அபி கொஞ்சம்  இங்க வாயேன்” என சித்ராவின் பதற்றமான குரலும், அபர்ணாவை முன்னறைக்கு இழுத்து வந்தன

அஸ்வத்தின் முட்டியில் ரத்தம் வழியக் கண்டதும் ஒரு கணம் அதிர்ந்த அபர்ணா, விரைந்து முதலுதவி பெட்டியை எடுத்து வந்து, பிள்ளையை சமாதானம் செய்தவாறே, காயத்தை ஆராய்ந்து துடைத்து மருந்து போட்டாள்

“மம்மி… ஸ்ரீ தான் சோபால இருந்து என்னை தள்ளி விட்டா” என அஸ்வத் புகார் வாசிக்க

உடனே, “அவன் என் முடியப் புடிச்சு இழுத்தான்” என ஸ்ரீநிதி வாதம் செய்ய

“அதுக்கு முன்னாடியே அவ என்னோட ட்ரெயின் செட் எடுத்தா, அதான் நான் அப்படி செஞ்சேன்” என அஸ்வத் பிரதிவாதம் செய்தான்

“ஓகே ஓகே… ஸ்ரீ குட்டி, அண்ணாவை அவன் இவன்னு பேசக்கூடாதுனு சொல்லி இருக்கேன்ல. அஸ்வத், அவ தப்பு செஞ்சா நீ என்கிட்ட தான் வந்து சொல்லணும், நீயா பனிஷ் பண்ணக்கூடாது, புரிஞ்சுதா?” கண்டிப்புடன் கூறினாள் அபர்ணா

“ஆனா…” என இருவரும் மீண்டும் ஒருவர் மீது மற்றவர் புகார் வாசிக்கத் துவங்க, இடைமறித்த அபர்ணா

“சண்டை போடாம விளையாடறதுன்னா விளையாடுங்க, இல்லேன்னா புக் எடுங்க படிக்கலாம்” என தன் ஆயுதத்தை கையில் எடுத்தாள் அபர்ணா

“இல்ல மம்மி, நாங்க சண்டையே போட மாட்டோம்” என சரணடைந்தனர் பிள்ளைகள் இருவரும்

சற்று நேரத்தில் அபர்ணாவின் கணவன் ஸ்ரீராம் வர, மாப்பிள்ளையிடம் பேர பிள்ளைகளின் ரகளைகளை எல்லாம் ரசிப்புடன் கூறி சிரித்தனர் சரவணன் சித்ரா தம்பதியர்

“ரெண்டும் அவங்கம்மா மாதிரியே வாலுகளாச்சே” என மனைவியை பார்த்து கண்சிமிட்டியபடி ஸ்ரீராம் கூற, அபர்ணா முறைத்தாள்

மருமகன் சொன்னதைக் கேட்ட சித்ரா சிரித்தபடி, “அதென்னமோ வாஸ்தவம் தான் மாப்ள, அபி சின்னதுல சரியான வாலு தான்” என்றார்

மனைவியின் முறைப்பு, அவளை மேலும் சீண்டிப் பார்க்க வேண்டுமென்ற ஆவலை அவனுக்கு ஏற்படுத்த, “அப்படியா அத்தை, என்ன வாலுத்தனம் பண்ணுவா அபி, சொல்லுங்க கேப்போம்” என ஆவலாய் ஸ்ரீராம் கேட்க

“அய்யே போதுமே, அப்புறம் உங்கம்மாகிட்ட நானும் கேட்பேன்” என மிரட்டல் விடுத்தாள் அபர்ணா

இதற்கெல்லாம் தான் பயந்தவன் அல்ல என பறைசாற்றுபவனாய், “நோ ப்ராப்ளம் கேட்டுக்கோ” என சிறுமுறுவலுடன் மனைவியிடம் கூறியவன்

“நீங்க சொல்லுங்க அத்தை” என மாமியாரை ஊக்குவித்தான்

எத்தனை வயதானாலும் தான் பெற்ற பிள்ளையை பற்றி பேச எந்த தாய்க்கு தான் கசக்கும், எனவே மருமகன் கேட்டதும் உற்சாகமானார்  சித்ரா

“டென்த் படிக்கறப்ப ஒரு நாள் சயின்ஸ் டெஸ்டுக்கு படிக்கலைனு, பக்கத்துல இருக்கற டெலிபோன் பூத்ல இருந்து போன் பண்ணி, ஸ்கூல்ல பாம் வெச்சுருக்காங்கன்னு அபி போன் பண்ணிட்டா. அன்னைக்கு ஸ்கூல் லீவு விட்டு, கூட இருந்த எவளோ அபியை மாட்டி விட்டு, ஒரே கலவரம் தான் போங்க” என மகளின் பெருமையை பிரதாபித்தார் சித்ரா

“அடிப்பாவி, அப்பாவி மாதிரி மூஞ்சிய வெச்சுட்டு இவ்ளோ ரவுடித்தனம் பண்ணி இருக்கியா?” என கிடைத்த வாய்ப்பை விடாமல் ஸ்ரீராம் கேலி செய்ய, மீண்டும் அவனை முறைத்தாள் அபர்ணா

“அப்புறம் மாப்ள, அபி தினம் ஒரு லட்சியம் வெச்சிருந்த கதை தெரியுமா உங்களுக்கு?” என சித்ரா தொடர

“அதென்ன அத்தை தினம் ஒரு லட்சியம்?”  என ஆர்வமானான் ஸ்ரீராம்

“ஒருநாள் டீச்சர் ஆகணும் சொன்னா, திடீர்னு டாக்டருக்கு படிக்க போறேன்னு டயலாக் விட்டா, கொஞ்ச நாள் வக்கீலாகறதே லட்சியம்னு சுத்திட்டு இருந்தா, ஆனாலும் கடைசியா ஒண்ணு சொன்னா பாருங்க…” என அடக்கமாட்டாத சிரிப்புடன் சித்ரா நிறுத்தவும், அது என்னவென புரிந்த அபர்ணா

“ஐயோ கொஞ்சம் சும்மா இரேம்மா” என பெற்றவளிடம் சிணுங்கினாள்

மனைவியின் சிணுங்கல் ஸ்ரீராமிற்கு அது என்னவென அறியும் ஆவலைத் தூண்டியது

“நீங்க சொல்லுங்கத்தை” என்றான், அபர்ணாவின் முறைப்பை  பொருட்படுத்தாமல்

“அப்போ எங்க வீட்ல வேலை செஞ்சுட்டுருந்த சாவித்திரினா இவளுக்கு ரெம்ப இஷ்டம், அதனால பெருசாகி வீட்டு வேலைக்கு போகப்போறேனு சொன்னா பாருங்க ஒருநாள், எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான்” என அந்த நாள் நினைவில் சிரித்த சித்ரா

“ஆனா கடைசியா சொன்ன மாதிரி, டபிள் டிகிரி படிச்சும், இன்னைக்கி வீட்டு வேலை மட்டும் தான் செஞ்சுட்டு இருக்கா” என கேலியாய்  கூறினார்

பெற்றவள் விளையாட்டாய் கூறியதை உணர்ந்து புன்னகைத்தப் போதும், மனைவியின் முகம் வாடியதை ஸ்ரீராமால் உணர முடிந்தது

அவள் வருத்தத்தை உடனே போக்கி, அவள் முகத்தில் புன்னகையை வரச் செய்ய வேண்டுமென நினைத்தான், மனைவியின் மீது தீராக்காதல் கொண்ட ஸ்ரீராம்

“இல்ல அத்தை, அபி அவ சொன்ன எல்லாமாவும் இப்ப இருக்கா. பசங்களுக்கு பாடம் சொல்லி தர்றப்ப டீச்சர், அவங்களுக்கு முடியாதப்ப டாக்டர், ரெண்டும் சண்டை போட்டுட்டு நிக்கறப்ப வக்கீல். கடைசியா வீட்டு வேலைக்காரினு சொல்ல மாட்டேன், இந்த வீட்டின் நிர்வாகியா இருக்கா. யாதுமாகி நின்றாய் எங்கும் நீ நிறைந்தாய்னு பாரதியார் பாடி இருக்காரே, அந்த மாதிரி, இல்ல அபி?” என காதலுடன் மனைவியைப் பார்த்தபடி ஸ்ரீராம் கேட்க, அபர்ணாவின் கண்களில் நீர் நிறைந்தது

இங்கிதம் உணர்ந்த அபர்ணாவின் பெற்றோர், குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவுக்குச் செல்வதாய் கூறி வெளியேறினர்

தன் தோழிகள் எல்லாம் நல்ல பணியில் இருக்க, தான் மட்டும் வீட்டில் இருக்கிறோம் என்ற சுணக்கம் அபர்ணாவின் மனதில் இருந்தது

அதை உணர்ந்தவனாய், அதைப் போக்கும் வண்ணம் கணவன் பேசியது,  அபர்ணாவை பெரிதும் உணர்ச்சிவசப்படச் செய்தது

விசும்பிய மனைவியை தோளோடு அணைத்த ஸ்ரீராம், “ஏய் அபிம்மா, எதுக்கு இப்ப அழுகை… ம்ம்ம்?” என செல்லமாய் அதட்டினான்

“தேங்க்ஸ்” என்றாள் அழுகையினூடே

“எதுக்கு தேங்க்ஸ்? நான் உண்மையத் தான சொன்னேன். ஒருநாள் கூட நீ வீட்ல செய்யற வேலைய என்னால செய்ய முடியாது. வேலைக்கு போகாத பெண்கள வீட்ல சும்மா இருக்காங்கனு சொல்றது அநியாயம். அம்மாங்கற வேலையும் அதை சார்ந்த பொறுப்பும் ரெம்பவே பெருசு அபி. யாதுமாகி நின்னா மட்டும் தான் அந்த பொறுப்பை சரியா கையாள முடியும். என்னைப் பொறுத்தவரை, எல்லா அம்மாக்களும் யாதுமாகி நிற்கிற சக்திகள் தான். இந்த சக்திகள் இல்லாம எந்த சிவனும் ஜெயிக்க முடியாது” என்றான் ஸ்ரீராம் அன்பு ததும்பிய குரலில்

“நான் ரெம்ப லக்கிங்க” என்றாள் அபர்ணா மனநிறைவுடன்

“இல்ல அபி, நான் தான் லக்கி. நல்லா படிச்சுருந்தும் ஈகோ பாக்காம வீட்டு பொறுப்புகளை நீ எடுத்துகிட்டதால தான், அடிக்கடி ட்ராவல் பண்ற ஜாப்ல இருக்கற என்னால நிம்மதியா இருக்க முடியுது. அதுக்காக வேலைக்கு போற பொண்ணுகளை நான் தப்பு சொல்லல. ரெண்டையும் பாலன்ஸ் செய்யறது கிரேட் தான். ஆனா, உன்னை மாதிரி கரியரை விட்டுத் தர்றதுக்கு பெரிய மனசு வேணும்” என கணவன் கூறியதும், மேலும் உணர்ச்சிவசப்பட்டவளானாள் அபர்ணா

மனைவியின் மனதை சரியாக்க எண்ணியவனாய், “ஆனா அபி, பாரதி யாதுமாகி நின்றாய்னு யாரைப் பாத்து பாடினார் தெரியுமா? காளியைப் பாத்து…” என குறும்பாய் சிரித்தான் ஸ்ரீராம்

கணவனின் கேலி உணர்ந்து, பொய்க் கோபத்துடன் அவனுக்கு செல்ல அடிகளை பரிசாய் அளித்தாள் அபர்ணா

அடித்த கரங்களை சிறைபிடித்து இதழ் பதித்த ஸ்ரீராம், மெல்லியக் குரலில் பாட ஆரம்பித்தான்…

“யாதுமாகி நின்றாய் – அபி 
     எங்கும் நீ நிறைந்தாய் 
தீது நன்மையெல்லாம் – அபி 
     தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்து மானாய் – அபி 
     பொறிக ளைந்து மானாய் 
போதமாகி  நின்றாய் – அபி  
     பொறியை விஞ்சி நின்றாய்

இன்பமாகிவிட்டாய் – அபி 
     என்னுள்ளே புகுந்தாய் 
பின்பு நின்னையல்லால் – அபி 
     பிறிது நானுமுண்டோ?
அன்பளித்துவிட்டாய் – அபி 
     ஆண்மை தந்துவிட்டாய்
துன்ப நீக்கிவிட்டாய் – அபி  
     தொல்லை போக்கிவிட்டாய்”

பாரதியின் பாடலில் உள்ள “காளி”யின் இடத்தில் தன் மனைவி “அபி”யின் பெயரை வைத்து, மெல்லிய குரலில் காதோரம் கணவன் பாட, அதில் வெளிப்பட்ட காதலில் மயங்கி நின்றாள் அபர்ணா

#ad


(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பார்த்த முதல் நாளே ❤ (நாவல்)

    உக்காரை/ஒக்கோரை (ஆதி வெங்கட்) – Deepawali Recipe Contest Entry 3