in

விழா (சிறுகதை) – ✍ சுமத்ரா அபிமன்னன், மலேசியா

விழா (சிறுகதை)

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

வெகுநேரமாக ஒலித்து கொண்டிருக்கும் கைப்பேசியைக் கூட எடுக்க முடியாத அளவிற்கு கூட்டம். கைப்பேசியில் மட்டும் என்ன அதே அன்பு மழை தானே?

கதிர் கைப்பேசியை எடுத்துப் பதிலளிப்பதைப் பார்த்ததும் தான் நிம்மதி வந்தது. ஒருவேளை யாராவது நண்பர்களாக இருக்கலாம். என்ன அப்படி சாதித்து விட்டேன் என்று காலையிலிருந்து மாலைகளும் பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன? போதுமப்பா… விழா வைத்துக் கொண்டாட நான் என்ன செய்து விட்டேன்?

விடிந்ததும் வீட்டின் முன் இருக்கும் வெள்ளை மரத்துப் பூக்களைப் பறித்து சாமி கும்பிட்டாத் தான் அந்த நாள் சரியாக ஓடுவது போல ஓர் உணர்வு. இன்றைய நிலைமையைப் பார்த்தால் யாரும் என்னை என் வேலையைச் செய்ய விட மாட்டார்கள் போல தெரிகிறது. விடிந்தது முதல் வீட்டிற்கு வருவோரைப் பார்ப்பதே வேலையாகி விட்டது.

“கணேசன் கடவுள் பக்தி அதிகம் உள்ளவன்” என்று சொல்லிக் கொண்டே என் பக்கத்தில் அமர்ந்த பக்கத்து வீட்டு ரவி, கூட்டத்தைச் சீக்கிரம் போக சொல்லும் சூசகத்தோடு என்னைப் பாராட்டுவதை உணர்ந்தவனாய், ஓரக் கண்ணால் அவனைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

அதை சற்றும் கவனிக்காதவனாய், மேலும் மேலும் என்னைப் புகழ்ந்து தள்ளும் ரவியைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு முறை மகன் கதிரின் திருமணத்திற்காக போட்டப்பட்ட கனோப்பியைக் கழற்ற தாமதம் ஆனதால், சந்திக்க நேர்ந்த போதெல்லாம் ஜாடையாக வசைப்பாடிய ரவி, இன்று கூட்டத்தில் என்னைப் புகழ்ந்து பேசுவதை ரசிக்க முடியவில்லையென்றாலும், மேற்கொண்டு ஏதும் பேசமுடியாமல் அமைதி காத்தேன்.

“என்னமோ இவங்க மட்டும் தான் பங்சன் செய்வாங்களாம், அதிசயம் தான் காட்டுறாங்க” என்று காதுப்பட பேசும் போது

‘யாரை சொல்றீங்க என்னைத் தானே?’ என்று கேட்கத் தோன்றினாலும், ரவியின் குணம் தெரிந்ததால் கூறியது காதில் விழாதது போல அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

கூட்ட நெரிசலில் அன்பு மனைவி சாந்தாவைக் காண முடியவில்லை. வீட்டிற்கு வந்தவர்களை உபசரிப்பதில் என் மனைவி கை தேர்ந்தவள். ஒருவேளை சமையலறையில் ஆவி பறக்க தேநீர் கலக்கி கொண்டிருப்பாள். கலக்கி வந்ததும் முதலில் நான் தான் குடிக்க வேண்டும்.

சாந்தா கையில் தேநீர் குடிப்பதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்? எனக்கும்  நீண்ட நாட்களுக்கு பிறகு தான் மனைவி கையால் தேநீர் குடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. அதைக் கூட குடிக்க விட மாட்டார்கள் போல. சில சமயங்களில் விழாக்களும் அவஸ்தையாகி போவது உண்மை தான்.

வேலைக்குச் சென்ற முதலில், விற்பனைக் கணக்கைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் செய்து அனுப்பி விட்டு மேனேஜரின் பாராட்டுக்காக ஏங்கிய காலங்கள் இருந்தாலும், வயது முதிர்ச்சி எதையுமே எதிர்ப்பார்க்காத அளவிற்கு நம்மை செதுக்கி விடுகிறது.

ஆனால், எதிர்ப்பாராத சமயத்தில் இது போன்று குவியும் பாராட்டுகளையும் அன்பையும் அனுபவிக்க நினைத்தாலும் ஏதோ ஒரு உறுத்தல்.

“அம்மா, இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்பீங்க?”

கதிர் சாந்தாவைப் பார்த்துச் சத்தமிட்டதும், கூட்டத்தின் கண்கள் ஒரு சேர சாந்தாவின் பக்கம் பாய்ந்தன.

நடுக்கோடு எடுத்து சீவி நிரந்தர கோடாகி போன தலையில் எண்ணெய் வழிய கொண்டை, சில நாட்களாக குறைப்பட்டு கொண்டிருந்த பல் வலியின் பலனாக ஆங்காங்கே ஓட்டை விழுந்த பல் வரிசை, களைப்பில் சாய்ந்திருந்தவளைக் கதிர் சத்தம் போட என்ன காரணமோ?

ஒருவேளை கதிருக்கு மணியாகியிருக்கலாம். அன்போடு என்னைச் சந்திக்க இவ்வளவு மக்கள் வீடு தேடி வந்திருக்கும் சமயத்தில், கதிரின் செய்கை மிகவும் அநாகரீகமாக இருந்தது.

ம்ம்ம்ம்… இப்பொழுதெல்லாம் கதிர் எங்கே சுய புத்தியில் இருக்கிறான். எல்லாம் மனைவியின் ஆட்சி தான். இல்லை என்றால் என்னை மட்டும் வீட்டில் தனியாக தவிக்க விட்டு சாந்தாவைக் குழந்தையைப் பார்க்க அவனோடு அழைத்துச் சென்றிருப்பானா?

என்னை விட்டு மீண்டும் பிரிய நேரிடுமோ என்ற கவலையில் சாந்தா ஓய்ந்து உட்கார்ந்திருப்பதை என் மனம் அறிந்திருந்தது. ஆறுதல் சொல்ல பாழாய் போன மனம் துடித்தாலும், விழாவின் கதாநாயகனாக இருக்கும் நான் கூட்டத்தை கவனிக்க வேண்டியது அவசியமாயிருந்தது.

“அப்பா வேலைக்குப் போயிட்டு வர ராத்திரி எட்டு  மணியாயிடுது, அப்புறம் நீங்க இங்க தனியா இருந்து என்னம்மா பண்ணப் போறீங்க? வேலை முடிஞ்சு வரும் போதே அப்பா சாப்பாடு வாங்கிட்டு வந்து சாப்பிட்டுக்குவாரு. சனிக்கிழமை காலையிலேயே உங்களை வந்து இங்க விட்டுடுறேன். சனி ஞாயிறு உங்க மருமகளுக்கு லீவு, பிள்ளையை அவ பார்த்துக்குவா. ரெண்டு நாளு இங்க சந்தோசமா இருங்கம்மா” என்று கதிர் தன் குழந்தையைப் பார்க்க சந்தாவை அவனோடு அழைத்த போது, கண்களால் என்னிடம் சம்மதம் வாங்கியவளுக்கு பிறகு எந்த சனிக்கிழமைகளும் கண்ணுக்குக் காட்டப்படவில்லை.

ஒருமுறை நான் சென்ற போது, “இப்ப தான் கல்யாணம் பண்ணவங்க கூட உங்கப்பாகிட்ட தோத்து போயிடுவாங்க. இந்த வயசுலயும் உங்கம்மாவைப் பார்க்காம இருக்க மாட்டாரோ?” என்று மருமகள் வேடிக்கையாக சிரித்து பேசியது எனக்கான எச்சரிக்கையாகத் தான் தோன்றியது.

பதவி ஓய்வுக்குப் பிறகாவது எனது தனிமையை உணர்ந்து சாந்தாவைக் கூட்டி வருவார்களா என்று எதிர்ப்பார்த்த நாட்கள், மெதுவாக நகர்ந்த நாட்கள். இருந்தாலும் பேரக் குழந்தையை எங்கு தான் விடுவார்கள் என்று எண்ணிய போதெல்லாம், இந்த தனிமையும் தியாகமாகத் தான் தோன்றியது.

கூட்டத்தில் பல தெரிந்த முகங்கள், சில தெரியாத முகங்கள். அலுவலக நண்பர்களின் வருகை மேலும் என்னை உற்சாகப்படுத்தியது

பதவி ஓய்வு பெற்ற பத்து மாதங்களில், இன்று தான் அலுவலக நண்பர்களைப் பார்க்க முடிந்தது. எவ்வளவு இன்பமான நினைவுகளைத் தந்தவர்கள். அரட்டைக்கும் கேலி பேச்சுக்கும் நண்பர்கள் மட்டுமே சரியான இணையாக அமைவார்கள்.

என் வயதை மறந்து பாலகனாக மாறி அடித்தும் விளையாடியும் கழித்த நாட்கள் கண்முன் வந்து போயின. அன்றாடம் சந்தித்துக் கொண்டிருந்த நண்பர்களுக்காக மனம் ஏங்கி தவிக்க, பல முறை அலுவலகம் சென்று வரலாமா என்று எண்ணியபோதெல்லாம், வரட்டு கௌரவம் தடை போட்டது.

“சார் போனதிலிருந்து ரொம்ப கஸ்டமா போச்சு எங்களுக்கு, கலகலன்னு பேசிக்கிட்டே இருப்பாரு. அவரு இருக்குற இடத்தைச் சந்தோசமாக வைச்சுக்குவாரு. ஒருநாள் வந்து எங்களைப் பார்க்கக் கூட அவருக்கு தோணலையா?” என்று மிக உரிமையோடு கேட்பது மிஸ்டர் சதீஸ், கணக்கு பிரிவில் புதிதாக சேர்ந்த ஜூனியர் அக்கவுண்டன்ட்

என் அருகாமையை விரும்பாதவரா இன்று இப்படி பேசுவது என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், யாருக்கும் தெரிந்து விட கூடாது என்பதற்காக முகத்தை இயல்பாகவே வைத்துக் கொண்டேன்.

“இந்த கிழம் எப்ப தான் ரிட்டையர் ஆகுமோ?” என்று சதிஸ் பெண் நண்பர்களுடன் கூறும் போதெல்லாம், இளசுகளுக்குப் பெரிசுகளைப் பார்க்கும் போது வரும் சாதாரண எரிச்சலாகத் தான் இருக்கும் என்று நினைத்த எனக்கு, சதிஸ் என் இடத்திற்கு அடி போட்டு வருவது நண்பர் ஒருவரின் மூலம் தெரிய வந்தது.

“நான் போன பிறகு யாராவது அந்த இடத்துக்கு வந்து தானே ஆகனும். அதுக்குள்ள தம்பிக்கு என்ன அவசரமோ?” என்று கூறி அதையுமே இலகுவாக எடுத்துக் கொண்ட எனக்கு, சதிஸின் பொய்யான மெச்சிய பேச்சு இப்பொழுதும் எந்த மனக்கசப்பையும் தரவில்லை.

“கணேசா” என்று குரல் வந்த பக்கம் திரும்பினேன். திரும்புவதற்கு முன்பே நாடி நரம்புகள் ஒன்றாக ‘உங்க அண்ணன் வந்திருக்காரு பாரு’ என்று இரைந்தன.

என்ன ஆச்சரியம்? கதிரின் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுத்தும் வராதவர், இன்று கூட்டத்தில் ஒருவராக வேண்டும் என்று வந்திருப்பது அண்ணனின் பெருந்தன்மையைக் காட்டுகிறது

அண்ணனை ஆரத்தழுவி 6 ஆண்டுகள் பிரிந்து தவித்த துயரத்தைக் கொட்டி தீர்க்க வேண்டுமென்று கைகள் துடித்தாலும், பலர் முன்னிலையில் அவ்வாறு நடந்து கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை

கைகள் தானாக அமைதி கொண்டன. கைகளுக்குத் தெரிந்த சபை நாகரீகம் கண்களுக்குத் தெரியவில்லை. இரு பக்க காதுகளையும் நனைத்தன.

அண்ணனின் கண்களில் வழிந்தோடும் கண்ணீர், ரத்தத்தாலும் சதையாலும் மூத்தவரின் உணர்வுகளும் என் உணர்வுகளை ஒத்தே இருந்ததை நிருபித்தது.

அப்பாவின் இறப்பில் நடந்த சொத்து சிக்கலில் அண்ணன் கோபத்தோடு சென்ற நாளிலிருந்து, பல தடவைகள் கைப்பேசியிலும் வீட்டிற்கும் சென்றும் பேச துடித்த எனக்கு, வெறுப்பையே பதிலளித்தார் அண்ணன்.

தவறு என் மேல் தான் என்பதை உணர்ந்ததும், எப்படியாவது அண்ணனிடம் மன்னிப்பு கோரி சமாதானம் ஆகிவிட வேண்டும் என்பதையே குறிகோளாக கொண்டு நான் எடுத்த அனைத்து முன்னெடுப்புகளிலும் தோல்வி தான்.

ஆயிரம்தான் என் மேல் வெறுப்பும் கோபமும் இருந்தாலும், இன்று என்னைப் பற்றிய செய்தி அறிந்ததும் ஓடோடி வந்த அண்ணன், என் கண்களுக்குக் கூட்டத்திலும் தனியாக தான் தெரிந்தார்.

இப்பொழுதாவது நான் அவர் தம்பி தான் என்று என்  பக்கத்தில் உரிமையோடு உட்கார்ந்த அவரின் கைகளின் கதகதப்பு, அப்பாவின் அரவணைப்பை நினைவுப்படுத்தியது. 

கூட்டத்தில் அனைவரும் என்னைப் புகழ்ந்து பேசி மாலைகளை அன்போடு போடுவதை எங்கிருந்தோ அழகான இரு சிறு விழிகள் வியந்து பார்த்துக் கொண்டிருந்ததைச் சட்டென்று கவனித்த எனக்கு, அந்த நிலையிலும் சிரிப்பு பீறிட்டு தான் வந்தது.

உரக்க சிரித்தால் கூட்டத்தைக் கவனிக்கவில்லை என நினைக்கக் கூடும் என்றெண்ணி, பொங்கி வந்த சிரிப்பை உதட்டை பிதுக்கி அடக்கி கொண்டேன்.

அன்பு பேரன் அகிலன், விளையாடுவதையும் விட்டு விட்டு கூட்டத்தைக் கண்டொட்டாமல் பார்த்து கொண்டிருந்தது, சாதாரணமான பார்வையாக தோன்றவில்லை எனக்கு.

பொம்மைகளை வண்ணங்களுக்கு ஏற்றார் போல் அடுக்கி விளையாடி கொண்டிருந்த இரண்டு வயது குழந்தைக்கு, திடீரென்று கூட்டத்தின் பால் ஓர் ஈர்ப்பு.

நேரமாக ஆக கூட்டமும் அன்பு வார்த்தைகளும் என்னை உயர்ந்தவனாக காட்ட ஆரம்பித்தன. இவ்வளவு நாட்களாக யாருக்கும் என்னைப் பற்றி அக்கறை இல்லை என்று மனத்திற்குள் இருந்த தாழ்வுமனப்பான்மை, இன்று எங்கோ ஓடி மறைந்தது.

தனிமையில் சிக்குண்டு மீள முடியாமல் தவித்த நாட்களில் இந்த அன்பில் பாதி கிடைத்திருந்தாலும் என்னைப் புதுப்பித்து புதிய மனிதனாக வலம் வந்திருப்பேன்.

யாரையும் குறை கூறியும் பயனில்லை. காலத்தின் கட்டாயத்தில் நான் என்ன விதிவிலக்கா? சுற்றியுள்ளவர்களின் அன்பு வெளிப்பட, ஒவ்வொருவருக்கும் இவ்வாறான விழா தேவைப்படுகிறது.

அன்பால் விழுந்த மாலைகள் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தன. திருமணத்தின் போது மாலையும் கழுத்துமாக சாந்தாவுடன் எடுத்த கலரில்லாத படம், சுவரின் அழகைக் கூட்டி கொண்டிருந்தது.

சீக்கிரம் வண்ணப்படமாக மாற்ற வேண்டும். வெள்ளை புடவையில் இருப்பதை போன்று இருந்தாலும், சாந்தாவின் அழகில் எந்த வித மாற்றமும் இல்லை.

மாலைகள் தொடர்ந்து விழவும், தவறாக நினைத்தாலும் பரவாயில்லையென்று வாயைத் திறந்தேன்.

அதற்குள் கூட்டத்தில் அதை அறிந்தவர் யாரோ, “மாலையையெல்லாம் எடுங்கப்பா… ரொம்ப அதிகமாயிடுச்சு” என்று கூச்சலிட்டதும், பாரம் குறைவதை உணர்ந்தேன்.

“சீக்கிரம் பொணத்தை தூக்குங்க… மணியாகுது” கூட்டத்தில் யாரோ சொன்னதும் கூட்டம் தானாக பிரிந்து வழி கொடுக்,க விழாவின் கதாநாயகனாக நான் சகல மரியாதையுடன்…

“என்னங்க… என்னை விட்டுப் போகாதீங்க” சாந்தாவின் அலறல் என்னைத் தொடர்ந்து வந்தது

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

                            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் மனசுல பாட்டு தான் இருக்குது (சிறுகதை) – ✍ Writer JRB, Chennai

    காகித ஓடம் (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி