in

விசிட் விசா (சிறுகதை) – ✍கார்த்திக் கிருபாகரன்

விசிட் விசா

#ads – Deals in Amazon👇



மாத போட்டிக்கான பதிவு (நவம்பர் 2021)

துபாய் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் இரண்டாவது தளத்தை சுத்தம் பண்ணிட்டு இருந்த ஜோதிலிங்கத்துக்கு, தன் நண்பனும் எதிரியுமான சூசைய பார்த்தவுடனே இனம் புரியாத மகிழ்ச்சி

ஆனா எதையும் வெளிகாட்டிக்காம வேலை பார்த்தான். சூசைக்கும் லிங்குவ பார்த்தவுடனே ரொம்ப சந்தோஷம்

பக்கத்துல வந்து, “டேய் லிங்கு எப்படி இருக்கடா? நல்லா இருக்கியா? துபாய் வந்தா உன்னைய பார்ப்பேன்னு நெனச்சேன், பார்த்துட்டேன்டா. நீ இங்க தான் வேலை பாக்குறியா?னு கேள்வி மேல கேள்வியா கேட்டான்

தலையை நிமிர்ந்து அவனை பாத்துட்டு பதிலேதும் சொல்லாம வேலைய பாத்துகிட்டே இருந்தான் லிங்கு

ஊர்ல தெருக்கூத்து நாடகத்துல நடந்த கைகலப்புனால தான் லிங்கு இப்ப பாத்தும் பேசாம இருக்குறதா நினைச்சான் சூசை

ஆனா, காரணம் அந்த சூப்பர் மார்க்கெட் சூப்பர்வைசரோட கெடுபுடி தான். வேலை பார்க்கிறப்ப பேசிக் கொண்டு இருந்தாலும், வேலை எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துட்டு  இருந்தாலும் ஒருநாள் சம்பளத்தை நிறுத்திடுவாங்க.

அதான் லிங்கு பேசாம இருந்தான். அது சூசைக்கு தெரியாது. சூசை வேலைக்கு புதுவரவு

தலை குனிந்தபடியே மெல்ல நிமிர்ந்து சூசைய பார்த்து, “டேய் பேசாம போடா” அப்படினு சொல்லிட்டு, வாலியை தூக்கிட்டு துடைப்பத்த எடுத்துக்கிட்டு முதல் தளத்தை சுத்தம் பண்ண போனான்

“அடக்கடவுளே, பேசக் கூட மாட்டானா? இவ்வளவு ரோசமா இருக்கான். வெளிநாட்டுல ஊர்காரன் தான் ஒத்தாசைனு நெனச்சா, இவன் இப்புடி இருக்கானே. எப்புடி வேல செய்ய போறேன்னு நினைச்சு, லிங்கம் வேலை செய்றதையே வேடிக்கை பாத்துட்டு இருந்தான் சூசை

அந்த தளத்தின் சூப்பர்வைசர் ஜோஸ்வா, கேரளாவை சேர்ந்தவர். எல்லாரையும் அதட்டி, வரிசையா மேனேஜர் ரூமுக்கு வரச் சொன்னாரு

மொத்தம் 13 பேர் மேனேஜர் ரூமுக்கு  போனாங்க. எல்லாருமே புது வரவு

“யார் யார் எந்தெந்த வேலை”னு மேனேஜர்கிட்ட சொன்னாரு ஜோஸ்வா

மேனேஜர் மேலேயும் கீழேயும் எல்லாரையும் பார்த்தார். எல்லாருக்கும் யூனிபார்ம் கொடுக்க சொல்லிட்டு, ரூமுக்கு போக சொல்லிட்டு, நாளையிலிருந்து வேலையை பிரிச்சு விட சொன்னார்

எல்லாரும் ரூமுக்கு போனாங்க. மாலுக்கு பின்னாடி பத்து நிமிட நடைல, கண்டைனரை ரூம் மாதிரி தயார் பண்ணிருந்தாங்க

அதில் ஒரு ரூம்ல ஆறு பேரு. ஏசி ரூம், ஒரு கட்டில் மூணு தளமா இருந்துச்சு. அதில் இரண்டாவது தளத்தில் சூசைக்கு தங்க இடம் கிடைச்சது

ரூமுக்கு ஒரே ஒரு பாத்ரூம். சாப்பாடு நம்மளே தான் சமைச்சு சாப்பிடனும். அதுக்கு தனியா ரூபாய் கொடுத்துடுவாங்க. சமைத்து சாப்பிடுவதற்கு ஒரு அடுப்படி இருந்துச்சு.

நெருக்கமான இறுக்கமான இடம் தான், ஆனால் எல்லாத்தையும் சகித்துக் கொண்டு தான் வாழணும்னு கட்டாயம். லிங்கத்துக்கு பக்கத்து ரூம் தான் சூசை இருந்தான்

வேலை நேரம் கணக்கே கிடையாது. காலையில ஏழு மணிக்கு போய் வேலை ஆரம்பித்தால், நைட் பதினொரு மணி வரைக்கும் வேலை இருக்கும். மதியம் உணவு இடைவேளை. ஓய்வு என்பது கொஞ்ச நேரம் தான்

ஆச்சரியம் கலந்த இந்த வெளிநாட்டு வாழ்க்கை. அரபு நாடுகளில் ரம்ஜான், நோம்பு நாள்கள் வந்தால் சந்தோஷம் தான்

ஏன்னா, அப்ப வேலை நேரம் ரொம்ப குறைவு.

‘இரவு 11 மணிக்கு லிங்கம் வேலைய முடிச்சுட்டு வருவான், அவன்கிட்ட பேசனும்னு’ காத்திருந்தான் சூசை. காத்திருந்த நேரத்தில், பழைய நினைவில் மூழ்கினான்

மேடை நாடகங்களில் சூசையும் லிங்கமும் சேர்ந்து நடிப்பார்கள். இவர்கள் நடிக்கும் தெருகூத்துகள் அந்த பகுதியில் பிரபலமாக இருந்தது.

தன் விவசாய நிலங்களை கவனித்துக் கொண்டும் பல ஊர்களில் கூத்து கட்டிக் கொண்டும் வாழ்ந்து வந்தார்கள், அதில் ஜோதிலிங்கம் ராஜபாட்டை ஆக இருப்பான்.

சூசைக்கு முதலில் ஒண்டிபுலி என்று தான் பெயர். எல்லா தெருகூத்திலும் லிங்கம் ராஜபாட்டையாக நடிப்பது, அவனுக்கு பிடிக்காமலே இருந்தது

அன்று பக்கத்து கிராமத்தில் ‘பாஸ்கா திருவிழிப்பு’ இயேசு கிறித்து சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி நாடகம். அந்த நாட்களை கத்தோலிக்க திருச்சபையும், பிற கிறித்தவ சபைகளும் எல்லா ஆண்டும் சிறப்பிக்கின்ற கொண்டாட்டம்.

அதில் இயேசுநாதர் கதாபாத்திரத்தில் சூசை நடிக்க ஆசைப்பட்டான். ஆனா லிங்கம் தானே ராஜபாட்டை, அந்த பாத்திரத்தை அவனே ஏற்று நடிச்சான்.

ஏன்! ஆண்டு தோறும் கத்தோலிக்க திருச்சபை இந்த உயிர்த்தெழும் நாடகத்தை லிங்கத்தோட குழுவை தான் அந்த ஊர்க்காரர்கள் செய்ய சொல்லுவார்கள். அதுலேயும் ‘இயேசுநாதர் கதாபாத்திரத்திற்கு லிங்கம் அவ்வளவு பொருத்தமாக இருப்பான்னு அவனையே நடிக்க சொல்லுவார்கள்.

அந்த விஷயத்துல லிங்கம் மேல சூசைக்கு பொறமை அதிகமாவே இருந்தது. அந்த நாடகத்துல ஏசுநாதர் சிலுவையைச் சுமந்து கொண்டு போற போது சாட்டையால் அடிக்கும்  காட்சி.

சாட்டையை சுழற்றி இயேசுவை அடிக்க வேண்டும். அது பார்ப்பவர்களுக்கு இயேசு மேல் படுவதாக தெரிந்தாலும்,சாட்டையடி சிலுவையில் தான் பட வேண்டும்.

சாட்டை சுழற்றி அடிக்கும் காவலாளி வேடத்தை சூசை ஏற்றிருந்தான். அப்போது சாட்டையால் அடித்தான்

சிலுவையில் பட வேண்டிய சாட்டையடி, லிங்கத்தின் மேல் பளீர்…என பட்டது. கனமான சிலுவையை சுமந்து கொண்டு நிஜ சாட்டையடி வாங்கிய லிங்கம், கண் கலங்கி தத்ரூபமாக நடித்தான்

அந்த காட்சியை பார்த்த மக்களுக்கே கண்ணீர் வந்தது. அந்த காட்சியில் மூன்று முறை ஏசுநாதரை காவலாளி அடிக்கனும். இரண்டாவது முறையும் சாட்டையடி சிலுவையில் படாமல் லிங்கத்தின் மேல் பட்டது.

லிங்கத்துக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. இவன் நம்மல வேணும்னே அடிக்கிறானோ?’ என நினைத்தாலும், வலியை பொறுத்துக் கொண்டு தொடர்ந்து நடித்தான்

மூன்றாம் முறையும் சாட்டையடி லிங்கத்தின் மேல் பட, வலி பொறுக்க முடியாமல் கீழே விழுந்தான்

அந்த காட்சி மேலும் தத்ரூபமாக இருந்ததால், கிராம மக்கள் அமோக ஆதரவு தெரிவித்தனர். நாடகம் முடிந்தது லிங்கத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது.

பின் லிங்கம் சூசையை தனியாக சந்தித்து பேசிய போது, சூசையின் தவறான எண்ணத்தை புரிந்து கொண்டான்

பேச்சுவார்த்தை ஒரு கட்டத்திற்கு மேல் கைகலப்பானது. அந்த சண்டைக்கு பின் லிங்கமும் சூசையும் சேரவே இல்லை. நாடகக் குழுவும் இரண்டாகி போனது.

அந்த நிகழ்ச்சிக்கு பின் சில கலைஞர்கள் வேற தெருக்கூத்தில் இணைய ஆரம்பித்தார்கள். சிலர் வேறு வேலைக்கு போக ஆரம்பித்தார்கள். லிங்கம் பிழைப்புகாக ஏஜெண்ட் மூலம் துபாய் வேலையில் சேர்ந்தான்.

சூசை அந்த தெருக்கூத்து பார்க்க வந்த ஒரு பொண்ணை காதலிச்சு அவளைக் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிட்டான். இரண்டு வருடத்துக்கு பின் குடும்பத்தினரோடு சமாதானம் ஏற்பட்டது

அந்த திருச்சபையிலேயே ஒண்டி என்கிற பெயர் மாற்றி சூசைனு ஞானஸ்தானம் வாங்கினான்

சூசையோட படிப்பு தகுதிக்கு வேலை ஏதும் இல்லை. திருச்சபை மூலமா இரண்டு லட்ச ரூபா ஏஜென்ட்கிட்ட கடனுதவி கொடுத்து, துபாய்க்கு விசிட் விசா மூலமா போக வச்சாங்க

விசிட் விசா மூலமாக துபாய் வந்து, துபாயில இருக்கிற பல கம்பெனிகளுக்கு கூட்டிட்டு போவான் ஏஜென்ட்

அந்த கம்பெனிகள் ஏஜென்ட் கூட்டிட்டு வர ஆட்களை இண்டெர்வியூ மூலமா தேர்வு செய்வாங்க. எப்படியும் 10க்கு மேல கம்பெனி ஏறி இறங்குற மாதிரி இருக்கும்.

வெளிநாட்டு வாழ்க்கை ஆசையில் வந்த சிலர், இந்த விஷயம் ஒத்துவராமல் திரும்ப டிக்கெட் போட சொல்லி இந்தியாவுக்கு கிளம்பி போயிடுவாங்க. ஆனால் சிலர் காத்திருந்து பல கம்பெனி ஏறி இறங்க தயாரா இருப்பாங்க

இதுல எத்தனை நாள் ஆனாலும், துபாய்ல தங்குற செலவு, நம்ம செலவா தான் இருக்கும். ஏஜென்ட் பத்து பைசா கூட செலவு செய்ய மாட்டான்.

இப்ப வந்திருக்க 50 பேரும் அப்படித் தான் ஏஜென்ட் கூட வந்திருந்தாங்க. எல்லாம் வேற வேற ஊரை சேர்ந்த ஆட்கள். அதுல 20 பேருக்கு மேல பயந்துகிட்டு, ஊருக்கே திரும்பி போய்ட்டாங்க

அவர்களுக்கு கட்டுன பணம் திருப்பி கிடைக்குறதும் சந்தேகம் தான். மீதி இருக்கிற ஆட்கள் எல்லாம் கடன் பிரச்சனை, குடும்ப பிரச்சினை, குடும்பத்தை காப்பாத்தணும்க்கிற எண்ணத்தில் வந்தவங்க

அதனால வேற வழி இல்லாம, ‘ஏதோ ஒரு வேலை கிடைச்சா போதும்னு, ஏஜென்ட் சொல்ற சம்பளத்துக்கும் கம்பெனிக்கும் வேலைக்கு சேர ஆரம்பிச்சாங்க

சிலர் துபாயில் குப்பை அள்ளும் வேலை, ரோடு போடும் வேலை, செக்யூரிட்டி வேலைனு ஏஜெண்ட் மூலமா சேர்ந்தாங்க. மீதம் இருக்குற ஆளுங்க சூப்பர் மார்க்கெட்ல வேலைக்கு சேந்தாங்க

அப்படி சூசை சேர்ந்தது தான் இந்த சூப்பர் மார்க்கெட் வேலை. இதிலேயும் ஏஜென்டு சொன்ன சம்பளம் இல்லை, வேலை நேரமும் அதிகம்

‘ஊர்ல ஏஜெண்ட் சொன்னது எல்லாமே பொய்னு இங்க வந்து தான் தெரிஞ்சுகிட்டான் சூசை. கட்டில்ல படுத்து கண்ணீர் விட்டான்

ப்ப அங்க வந்த லிங்கம்,”டேய் எப்படிடா இருக்க. உன் மனைவி, குழந்தையெல்லாம் சவுக்கியமா?” என அன்பாக கேட்டான்

“நல்லா இருக்கேன் லிங்கம்என கண்ணீர் விட்டான் சூசை

“ஏன்டா அழுகுற?

“நான் தான் வந்து உனக்கிட்ட பேசுனேன், நீ பேசல. ஏன்டா? நம்ம ஊர்ல நாடகம் போட்டப்ப உன்னைய அடிச்ச கோபம் தான இன்னும், என் கூட பேச மாட்டியா?” என்றான் சூசை

“டேய் கிறுக்கா, பேசின திட்டுவாங்க. கெடுபிடியான வேலை, அதனால தான் பேசல. சரி ஊர்ல இருந்து சாப்பிட என்ன கொண்டு வந்தனு ஜாலியா கேட்டான் லிங்கம்.

“நம்ம ஊரு முறுக்கு இருக்குடா. நெய் முறுக்கு இருக்கு, கார முறுக்கு இருக்குனு எடுத்து காமிக்க , ஏதோ காணாததை கண்ட மாதிரி எடுத்து சாப்பிட ஆரம்பிச்சான் லிங்கம்

அவன் சாப்பிடுவதை பார்த்தவுடனே சூசைக்கு புரிஞ்சது, நல்ல சாப்பாடு கிடைக்காது போலனு

சாப்பிட்டுகிட்டே, “இந்த வேலைக்கு எப்புடி வந்தனு கேட்டான் லிங்கம்

ஏஜெண்ட் மூலமா தான் வந்த கதைய வருத்தமா சொன்னான் சூசை

“நீ எப்படி?”னு சூசை கேட்க

“சண்ட போட்டதுக்கு அப்பறம் வேற குழுவுலயும் சேர முடியல. சேர்ந்தாலும் பின் பாட்டு தான் பாடுனேன். மழ இல்ல, விவசாயமும் பண்ண முடியல. ஏதோ காசு பொரட்டி கரீம் ஏஜெண்ட்க்கு குடுத்து வேல கேட்டேன். ஏஜென்ட், துபாய் வேலை, 40,000 ரூபாய் சம்பளம்னு சொல்லி தான் என்னை கூட்டிட்டு வந்தான்

இங்க வந்தா, எந்த ஒரு கம்பெனியும் 25,000 ரூபா சம்பளத்துக்கு மேல தர சம்மதிக்கல. பத்து நாளுக்கு மேல ஆகவும், பயம் வர ஆரம்பிச்சது. வீட்டுக்கு பேச முடியல. கையில காசும் இல்லை. அதனால வேற வழி இல்லாம சூப்பர் மார்க்கெட் வேலைக்கு ஒத்துகிட்டேன்.

இங்கேயும் கௌரவமா பொருள் எடுத்துக் கொடுக்கிற வேலை, அதுவும் 40 ஆயிரம் சம்பளம்னு நினைச்சேன். ஆனா, வெறும் 20 ஆயிரம் சம்பளத்துக்கு தான் சேர்ந்து விட்டுருக்கான் ஏஜெண்ட். சாப்பாட்டுக்கு தனியா கொடுத்துடுறாங்க. நானும் வேற வழி இல்லாம இருக்கேன். ரெண்டு வருஷம் ஆக போகுதுனு தன் கஷ்டத்தை சொன்னான் லிங்கம்

“இப்புடி வர வச்சு வேல தராங்க, இதுல கம்பெனிக்கு என்ன லாபம்”

“நம்ம நாட்டுல வந்து வேலைக்கு எடுத்தா உன்னைய துபாய் கூட்டிட்டு வர்ற செலவு எல்லாம் கம்பெனி தான் பார்க்கணும். விசிட் விசாவுல வர வெச்சு, கம்மி சம்பளத்துல வேலைக்கு எடுப்பாங்க. அந்த வகையில, ஒரு லட்சம் வரைக்கும் கம்பெனிக்கு லாபம். நீ சரியா வேலை செய்யல, இல்ல கம்பெனிகாரனுக்கு புடிக்கலன்னா, ஒரு மாசத்துல உன்னைய  அனுப்புவாங்க. அதனால தான் இப்படி ஏஜென்ட் மூலமா செய்றாங்க”

“சரி… பாக்குற வேலை ரொம்ப கஷ்டமாடா?

“போக போக நீயே புரிஞ்சுக்குவனு சொல்லிட்டு, “சரிடா எனக்கு ரொம்ப தூக்கமா வருது. நீ சாப்பிட்டியா?

“இல்லடா இன்னும் சாப்பிடல”

“சரி வா, என் ரூம்ல குப்புஸ் ரொட்டி இருக்கு தரேன்”

“அப்புடின்னா?”

“நம்மள மாதிரி காசு இல்லாதவங்களுக்கு காசு கம்மியா கிடைக்கிற ரொட்டி. அத சாப்புட்டு தான் நிறைய நாள் நான் பசிய தீர்த்துருக்கேன்”

“சரினு தலையாட்டிட்டு ரொம்ப நேரம் யோசனை பண்ணிக் கொண்டு இருந்தான் சூசை.

“ஏன்டாவேலைய நெனச்சு யோசிக்கீறியா?“னு கேட்டேன் லிங்கம்

நிமிர்ந்து பார்த்து, “ஆமா ஊர் நாடக ராஜபாட்டை உனக்கே துடக்கிற வேலன்னா, எனக்கு என்ன வேலை குடுப்பாங்கன்னு யோசிச்சேன்னு பெருமூச்சு விட்டான் சூசை

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. In the Middle East the agents from the cities especially Dubai, Abu Dubai, Doha etc., go to Chennai and recruit men for jobs assuring them that they will get lucrative salaries; but the realities are later found to be otherwise; and they will be forced to accept much lower salaries and pitiable living conditions. I wish that such reports are untrue. It is not known why the Govt. of India are not taking adequate steps to stop these inhuman acts. I do not know whether there is any kind of improvement now i.e., as on date. May I appeal to the Govt. of India to review the situation?

    “M.K. Subramanian.”

டிர்ரக்கா (சிறுகதை) – ✍ உடுமலை கி. ராம்கணேஷ்

சாமியாடி (சிறுகதை) – ✍ காரைக்குடி நாராயணன்