2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வழக்கமாக இரவு எட்டு மணிக்கு உறங்கச் சென்று விடும் பெரியவர் கந்தசாமி, இன்று மணி பத்தாகியும், உறக்கம் கண்ணிமைகளில் வந்தமர்ந்து உக்கிரத் தாண்டவம் ஆடிய நிலையிலும் படுக்கைக்குச் செல்லாமல் கூடத்து நாற்காலியில் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார்.
சமீபகாலமாய் அவர் மகன் சக்திவேலுவின் நடவடிக்கைகள் எதுவுமே அவருக்குப் பிடிக்கவில்லை, என்ற போதிலும் அதற்காக தன் எதிர்ப்பையோ, வாக்குவாதத்தையோ கையிலெடுக்காமல் பொறுமையாகவே இருந்தார். ஆனால், தற்போது அவர் கேள்விப்பட்ட விஷயம் அவரது பொறுமையைச் சோதித்து விட, “இன்றே அதற்கொரு முடிவு கட்டிவிட வேண்டியதுதான்” என்கிற காத்திருந்தார்.
இன்னும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வரப் போகும் தன் மகன் சக்திவேலுவிடம் பேசி ஒரு முடிவிற்கு வந்தே தீர வேண்டும் என்கிற ஆவேசம்தான் அவரை அப்படி அமரச் செய்திருந்தது.
மருமகளும், குழந்தைகளும் வேறொரு அறையில் படுத்துறங்க, இவர் மட்டும் கூடத்தில் அமர்ந்திருந்தார்.
வாசலில் கட்டப்பட்டிருந்த நாயின் குரைப்பில் ஒரு குழைவு தெரிய, சக்திவேலு வந்து விட்டதைப் புரிந்து கொண்டார்.
சில விநாடிகளில் செருப்புச் சத்தம் கேட்க தலையைத் தூக்கிப் பார்த்தார். சக்திவேலுதான்.
“என்ன,.. தூங்கப் போகலையா?” கேட்டவாறே உள்ளே நுழைந்த மகனிடம்,
“உன்கிட்ட ஒரு சமாச்சாரம் பேசணும்.. அதுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்” பேச்சில் ஒரு வெறுப்பிருந்தது.
“பச்.. நாளைக்குக் காலைல பேச வேண்டியதுதானே?” கொட்டாவி விட்டுக் காட்டினான் சக்திவேலு.
“இல்லை.. இன்னிக்கே.. இப்பவே பேசி ஆகணும்” பெரியவரின் விழிகளில் சிவப்பேறியிருக்க, சக்திவேலு கொஞ்சம் குழப்பத்திலாழ்ந்தான்.
“ம்.. சரி ..சொல்லுங்க” என்றான் அசுவாரஸியமாய்.
“நாளைக்கு நம்ம வீட்டுக்கு யாரோ வரப் போறாங்களாமே.. யாரது?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டார் பெரியவர்.
“அது.. வந்து.. சிவகிரிச் சாத்தைய்யன்..” என்றான் சக்திவேலு.
“சிவகிரிச் சாத்தைய்யன்”..ன்னா…. என்ன பெரிய கலெக்டரா?… இல்லை மந்திரியா?… பேர் சொன்னவுடன் அடையாளம் புரிந்து கொள்ள?”
“அவரு… பெரிய வாஸ்து நிபுணர்… போதுமா?”
“அவன் எதுக்கு இங்க வர்றான்?” புருவத்தை உயர்த்திக் கேட்டார் பெரியவர்.
“வாஸ்து நிபுணர் எதுக்கு வருவார்?… சும்மா உட்கார்ந்து விருந்து சாப்பிட்டுட்டுப் போகவா வருவார்?… வீட்டை ஆராய்ந்து…. வாஸ்து சரியா இருக்கா?… இல்லை ஏதாச்சும் மாற்றங்கள் செய்ய வேணுமா?”ன்னு சொல்லத்தான் வர்றார்”
ஒரு குறுஞ்சிரிப்பை வெளிப்படுத்திய பெரியவர், “ஏம்ப்பா.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இப்படிச் சொல்லித்தான் ஒருத்தரைக் கூட்டியாந்தே.. வந்தவரு.. “இது சரியில்லை.. அது சரியில்லை… இது இங்க இருந்தா தொழில் முடங்கும்… அது அங்க இருந்தா துர்மரணம் சம்பவிக்கும்” அப்படி இப்படின்னு எதையெதையோ சொல்லிட்டுப் போக.. நீயும் அதைக் கேட்டுக்கிட்டு எல்லாத்தையும் இடிச்சுத் தள்ளி கிட்டத்தட்ட அஞ்சாறு லட்சத்துக்கு மேல செலவு பண்ணி மாத்தினே”
சட்டென்று இடையில் புகுந்து, “அப்ப நான் அப்படிச் செய்ததால்தான் இன்னிக்கு வரைக்கும் நாம எல்லோரும் இந்த மட்டிலாவது இருக்கோம்” தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் விதமாய் மகன் சொன்னான் சக்திவேலு.
“சரி… அத்தோட விட்டியா?.. ஆறு மாசத்துக்கு முன்னாடி உன்னோட மாமனார் ஒரு வாஸ்துக்காரரை அனுப்ப… வந்தவனும் அவன் பங்குக்கு எதையோ சொல்லி விட்டுப் போக.. மறுபடியும் இடிக்கற வேலையை ஆரம்பிச்சே.. மாத்திக் கட்டுனே.. அப்ப ஒரு மூணு லட்ச ரூபாய் கரைஞ்சுது”
அவர் பேசிக் கொண்டே போக, “ப்ச்.. இப்ப என்ன சொல்ல வர்றீங்க,” எரிச்சலுற்ற சக்திவேல் காட்டமாய்க் கேட்டான்.
“இப்ப திடீர்ன்னு மறுபடியும் நாளைக்கு வேற யாரையோ கூட்டிட்டு வர்றேங்கறே.. எதுக்குப்பா?.. தேவையா?… யோசிச்சுப் பாருப்பா.. உறுதியா.. இரும்பாட்டமா.. நம்ம பாட்டன் பூட்டன் காலத்துல கட்டுன இந்த வீட்டை இப்படித் திரும்பத் திரும்ப இடிச்சா.. என்னாகும்?… ஒரு இடத்துல இடிக்கப்படும் போது இன்னொரு இடத்துல விரிசல் ஆயிடும்!.. அது மட்டுமா?… வீட்டோட நல்ல அமைப்பு பாழாப் போயிடும்.. உறுதியும் கூடப் போயிடும்ப்பா.. அதனாலதான் சொல்றேன் போதும்பா.. வேண்டாம்ப்பா இனியும் இடிச்சா தாங்காதுப்பா!… நிறுத்திடுப்பா”
“த பாருங்க.. எனக்கு எல்லாம் தெரியும்.. நீங்க எனக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமில்லை.. தயவு செய்து இதைப்பத்தி இதுக்கு மேல பேசாதீங்க… பேசினா.. மரியாதை கெட்டிடும்” ஆட்காட்டி விரலை முகத்துக்கெதிரே நீட்டி ஆக்ரோஷமாய்ச் சொல்லி விட்டுச் சென்ற மகனை வேதனையுடன் பார்க்கத்தான் முடிந்ததே தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை அந்த வயோதிகத் தந்தையால்.
மறுநாள் வந்திறங்கிய அந்த சிவகிரிச் சாத்தையன் என்னும் வாஸ்துக்காரன் தான் பெற்ற கூலிக்கு வஞ்சகமில்லாமல் பல இடிப்புக்களை அந்த வீட்டின் சிரசில் ஏற்றிச் செல்ல, மாயக்காரன் வாக்கினை மகேசன் வாக்காய் நம்பி சக்திவேலும் கட்டிடத்தை நாசமாக்கத் துவங்கினான்.
தன் பாட்டன் காலத்து வீடு தன் கண்ணெதிரெ கொஞ்சம் கொஞ்சமாய் உருமாறி… உறுதியிழந்து… சிதிலமாகிச் சிதைவதைக் காணச் சகியாத கந்தசாமி உள்ளக் குமுறலுடன் வீட்டை விட்டு வெளியேறி.. கண் போன போக்கிலே.. கால் போன வாக்கிலே நடக்கலானார்.
—-
அடுத்த மாதத்தில் அக்கிராமத்தை ஆட்டிப்படைத்த பேய் மழையும் சூறாவளிக் காற்றும் குடிசைகளைச் சிதறடித்ததோடு நில்லாமல் பல ஓட்டு வீடுகளையும் ஆட்டம் காண வைத்தன.
வரலாறு காணாத மழை உள்ளூர் ஏரிகளை உடைப்பெடுக்க வைக்க, தெருவெல்லாம் இடுப்பளவிற்குத் தண்ணீர்.
அடுத்தடுத்த இடிப்புக்களால் உண்மையான உறுதியைத் தொலைத்து விட்டிருந்த கந்தசாமியின் பாரம்பரிய வீடு தொடர் மழைத் தாக்குதலால் ஆங்காங்கே நீர்க்கசிவையும் லேசான விரிசல்களையும் வாங்கிக் கொண்டு நிற்க, அப்போதுதான் சக்திவேலுவின் மனத்தில் குன்றிமணியளவு அச்சம் துளிர்த்தது
“ஒரு இடத்துல இடிக்கப்படும் போது இன்னொரு இடத்துல விரிசல் ஆயிடும்!.. அது மட்டுமா?… வீட்டோட நல்ல அமைப்பு பாழாப் போயிடும். உறுதியும் கூடப் போயிடும்ப்பா.. அதனாலதான் சொல்றேன். போதும்பா, வேண்டாம்ப்பா இனியும் இடிச்சா தாங்காதுப்பா!… நிறுத்திடுப்பா”
தந்தையின் கெஞ்சல் குரல் காதுகளுக்குள் ஒலிக்க, அதே நேரம்,
“இங்கே இருக்கும் வாசலை அடைத்து விட்டு நைருதியில் திறப்பு செய்து பாருங்க.. செல்வம் கொழிக்கும்.. புகழ் வந்து சேரும்… அரசுக் கருவூலத்திலிருந்து ஆதாயம் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை”
சிவகிரிச் சாத்தையன் சொல்லிச் சென்ற வாஸ்து பலன்களும் காதுகளுக்குள் ஒலிக்க, சக்திவேலுவின் மனதில் துளிர்த்த அச்சம் தூரப் போய் விழுந்தது.
அன்று மதியம் பெய்த ஆவேச மழை சுழன்றடிக்கும் சூறைக்காற்றோடு கூட்டணி அமைத்தது. இடித்து இடித்துக் கட்டப்பட்டதால் இயற்கைப் பிடிமானத்தையும் உண்மை உறுதியையும் இழந்து நின்ற அந்த வீட்டின் சுவர்கள் “இதற்கு மேல் எங்களால் முடியாது” என்கிற பாணியில் நெடுஞ்சாண்கிடையாகப் படுத்து விட, “சட..சட”வென விழுந்த கூரை மொத்தக் குடும்பத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டது.
மறுநாளைய செய்தித்தாள் அச்சம்பவத்தை முக்கியச் செய்தியாக வெளியிட, அதே நேரத்தில், சிவகிரியில் தான் கட்டிய புது வீட்டின் கிரஹப்பிரவேச நிகழ்ச்சியில் சந்தோஷமாய் சிரித்துக் கொண்டிருந்தான் சிவகிரிச்சாத்தையன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings