in ,

விடியல் வெளிச்சங்கள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

காலிங்பெல் ஒலிக்க, ஹாலுக்கு வந்து, வாசல் கதவைத் திறந்தாள் ஜெயா.

வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை, தோளில் துண்டு சகிதமாய் மண்வாசணை மனிதர்கள் நாலைந்து பேர் நிற்க,  “தமிழ்மணி சார்… வீடு?”

“இதுதான்!… உள்ளார வாங்க!”

அவர்களை ஹாலில் அமர வைத்து விட்டு, கணவனுக்குத் தகவல் சொன்னாள்..

அவசரமாய் வந்து நின்ற தமிழ்மணியை அவர்கள் கும்பிட, பதிலுக்கு அவனும் கும்பிட்டு, சோபாவில் அமர்ந்தான்.

 “நாங்க… சிவகிரி கிராமத்துல இருந்து வர்றோம்!” நாட்டாமை போலிருந்தவர் சொன்னார்.

 “அப்படியா?… சந்தோஷம்!” என்றான் தமிழ்மணி.

அந்த சிவகிரி கிராமம்தான் அவனுடைய பூர்வீகம், அவனது அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா, என நாலைந்து தலைமுறையினர் வாழ்ந்து மறைந்த மண் அது.

 “தம்பீ.. நாங்க உங்களோட இனம்தான்!… ஒரே குல தெய்வம்தான் நம்ம எல்லோருக்கும்!” பெரிய மீசையோடிருந்தவர் சொல்ல,

“சரி… எல்லோரும் வந்திருக்கீங்களே ஏதாவது முக்கியமான விஷயமா?” கேட்டான்.

 “ஆமாம் தம்பி!.. நம்ம ஊர்ல… சிவன் மலை அடிவாரத்துல உங்க குடும்பத்துக்குச் சொந்தமான நாலு ஏக்கரா பூமி இருந்திச்சு!… அதுல உங்க கொள்ளுத் தாத்தா.. நம்ம குல தெய்வமான பச்சையம்மனுக்கு கோவில் கட்டினாரு!… நூறு வருஷமா நம்மாளுங்க அந்தக் கோவிலில்தான் வழிபட்டுக்கிட்டிருக்காங்க!”

 “அந்த பூமிய எங்க தாத்தா காலத்திலேயே வித்துட்டோமே?” தமிழ்மணி சொல்ல.

 “அந்த நெலத்தை விற்கும் போது உங்க தாத்தா ஒரு நிபந்தனையோடதான் வித்தாரு!… “அதாவது கோவில் அங்க அப்படியேதான் இருக்கும்!… அதை இடிக்கவோ… வேறெதுவும் செய்யவோ கூடாது!… நம்ம ஜனங்க அங்க வழிபடறதுக்கு எத்தனை காலமானாலும் அனுமதிக்கணும்!”அதான் நிபந்தனை!”

 “அதுக்கென்ன இப்ப?” கேட்டான் தமிழ்மணி.

 “அந்த நெலத்தை உங்க தாத்தாகிட்ட வாங்கினவரோட பேரன் இப்ப திடீர்னு வந்து “கோயிலை இடிப்பேன்..!”னு குதிக்கறான்!”

“குல தெய்வத்தை விட்டுக் கொடுக்க முடியுமா?.. இன்னிக்கு உங்க வம்சத்துல நீங்க மட்டும்தான் மிச்சம் இருக்கீங்க!…. இதை தட்டிக் கேட்கிற உரிமை உங்க ஒருத்தருக்கு மட்டும்தான் இருக்கு!… அதனால நீங்க வந்து பேசுங்க தம்பி!… ஏதாச்சும் விபரீதமா நடக்கறதுக்கு முன்னாடி வாங்க தம்பி!”

“நீங்க சொல்ற நிபந்தனை எழுத்து மூலமா இருக்கா?”

 “இல்லையே… வெறும் வாய் வார்த்தையாய்த்தானே ஒப்புதல் வாங்கி வெச்சிருக்கார் உங்க தாத்தா!”

 “அப்புறமெப்படி நாம உரிமை கோர முடியும்?”

“அதுக்குத்தான் தம்பி சம்மந்தப்பட்ட உங்களைக் கூப்பிடறோம்!”

“சரி… எதுக்கு திடீர்னு அந்தக் கோயிலை இடிக்கறேன்கறான் அவன்?” தமிழ்மணி கேட்க,.

“என்னமோ கம்பியூட்டர் காலேஜி கட்டறானாம்!… யாருக்கு வேணும் அந்த எழவெல்லாம்?”  நாட்டாமை கொக்கரிக்க,

அவரைப் பார்க்க சிரிப்பாயிருந்தது தமிழ்மணிக்கு.  

“சரி… நீங்க போங்க!… என்னால் உடனே  வர முடியாது!. ரெண்டு மூணு நாள்ல வந்திடறேன்!”

 “தாமதம் பண்ணிடாதீங்க பசங்க கொதிச்சிட்டிருக்கானுக!…” போகிற போக்கில் ஒருவர் சொல்ல,

 “சரி… வந்திடறேன்!” அவர்கள் சென்றதும் மனைவி ஜெயாவை அழைத்து விவாதித்தான்.

 “நீங்க போனாத்தான் பிரச்சினை பெரிசாகி… விபரீதமாகும்னு தோணுது!… உங்க தாத்தா காலத்திலேயே கையை விட்டுப் போயிட்ட நெலம்!… அதுக்கும் உங்களுக்கும் இப்ப சம்மந்தமேயில்லை!… நீங்க போக வேண்டாம்… பிரச்சினை அதுவா ஆறிடும்!”

தமிழ்மணியும் அப்பிரச்சினையை  மறந்து விட்டு, தன் அலுவலகப் பணிகளில் மூழ்கினான். 

நான்கு நாட்களுக்குப் பிறகு, தொலைக்காட்சி காட்டிய செய்தி அவனை உலுக்கி விட்டது.

 “சிவகிரி கிராமத்தில் குல தெய்வம் கோவில் இடிப்பு விவகாரத்தில் இருவேறு இன மக்களிடையே ஏற்பட்ட தகராறு, கலவரமாகி மூன்று பேர் கொல்லப்பட்டனர்”.

“எது நடக்கக் கூடாதுன்னு நெனச்சேனோ… அதுவே நடந்திட்டுது… இதுக்கு மேலேயும் அமைதியாயிருக்கறது தப்பு!… இப்பவே போறேன்” அவசர அவசரமாய்க் கிளம்பினான் தமிழ்மணி.

போகிற போக்கில் கலெக்டரைச் சந்தித்து விபரத்தைச் சொல்லி, “சார்… ரெண்டு பக்கத்திலிருந்தும் முக்கிய ஆளுங்களை வரச் சொல்லி, ஒரு பொது மீட்டிங் ஏற்பாடு பண்ணுங்க சார்!… உங்க முன்னாடி நேருக்கு நேர் பேசிட்டாங்கன்னா பிரச்சினைக்கு தீர்வு வந்திடும்!” கெஞ்சினான் தமிழ்மணி.

 “ஓ.கே!” ஏற்பாடுகளை உடனே செய்தார் கலெக்டர்.

 சிவகிரி கிராமத்தில், பச்சையம்மன் கோவில் அருகில், நடைபெற்றது பொதுச் சந்திப்பு.

கலெக்டரும், தமிழ்மணியும் மத்தியில் அமர்ந்திருக்க, இடது புறம் ஒரு இனத்தவரும், வலது புறம் மற்றொரு இனத்தவரும் அமர்ந்து பேசினர்.

போலீஸும் வரவழைக்கபட்டிருந்தது.

மதியம் தொடங்கி மாலை வரை நீண்ட பேச்சு வார்த்தை, எங்கெங்கோ சென்று விட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து நிற்க, “கோவிலை இடிக்கறது… இடிக்கறதுதான்… காலேசி கட்டறது… கட்டறதுதான்…” என்று இடத்துக்காரர் பிடிவாதத்தில் கூவ,

 “கோவிலுக்கு ஏதாச்சும் ஆகட்டும்,… இங்க ரத்த ஆறு ஓடும்…” என்று தமிழ்மணியின் இனத்துக்காரர்களும் நிற்க, கலெக்டரே சலித்துப் போனார்.  எந்த முடிவும் எடுக்க இயலாமல் திணறினார்.

பொறுமையிழந்த தமிழ்மணி அந்தக் கோவிலைப் பார்த்தான்.  ஆறுக்கு ஆறில் ஒரு சதுரம், மேலே சின்னதாய் ஒரு கோபுரம், அதுவும் சிதிலமான நிலையில். சுவர்களெல்லாம் கூட பொரிந்து போய் உறுதியற்ற நிலையில் இருந்தன.  “இந்தக் கோவிலுக்காகவா உயிர்ப்பலி?:”

பொதுச் சந்திப்பு தோல்வியடையும் நிலைக்குப் போக, வேறு வழியே இல்லாமல் அந்த முடிவெடுத்தான் தமிழ்மணி.

வேகமாய் எழுந்து தன் இனத்தினர் எதிரே வந்து, “என்னை எதுக்கு வரச் சொன்னீங்க?” கேட்டான்.

 “இந்தக் கோவில் உங்க கொள்ளுத் தாத்தா கட்டினது!… அந்த வம்சத்துல இன்னிக்கு இருக்கற ஒரே ஆளு நீங்கதான்… உங்களுக்குத்தான் எல்லா உரிமையும் இருக்கு!… அதனால் கூப்பிட்டோம்”

 “அதுல எந்தவித சந்தேகமும் இல்லையே?” அழுத்தமாய்க் கேட்டான் தமிழ்மணி.

 “ம்ஹூம்… இல்லை!” என்று மொத்தக் கூட்டமும் கோரஸாய்ச் சொல்ல,

தாவிச் சென்று, சுவரோரமாய் வைக்கப்பட்டிருந்த அந்த கடப்பாரையை எடுத்து, அதே வேகத்தில் கோவிலை நோக்கி ஓடி, சிதிலமாகி, காரை பெயர்ந்த நிலையிலிருந்த அதன் சுவர்களை இடிக்க ஆரம்பித்தான்.

அந்தச் சுவர் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சரிய, அவன் மக்கள் வாயடைத்து, நிற்கத்தான் முடிந்த்தே தவிர, தடுக்க முடியவில்லை.

காரணம்? அவனுடைய உரிமையை உறுதிப் படுத்தியவர்களே அவர்கள்தானே?

ஒரு பக்கத்துச் சுவர் மொத்தமாய்ச் சரிந்ததுமே, மேல் கோபுரம் “சட…சட”வென விழுந்து தூள் தூளாக… மற்ற சுவர்களும் பொடிப் பொடியாய் நொறுங்கி விழுந்து மண் மேடாகிப் போனது கோவில்.

கலெக்டரே ஆடிப் போனார்.

“கலெக்டர் சார்… என்னைய மன்னிச்சிடுங்க!… எனக்கு வேற வழி தெரியலை!” மூச்சு வாங்கியபடி தமிழ்மணி சொல்ல,

புன்னகையுடன் ஆமோதித்த கலெக்டர், மக்களை நோக்கிக் கையைக் காட்ட, அவர்கள் பக்கம் திரும்பினான் தமிழ்மணி.

 “எல்லோரும் என்னைய மன்னிக்கணும்!… “எப்ப எங்க கொள்ளுத் தாத்தா கட்டின கோவில்… உயிர்ப் பலி வாங்கிட்டுதோ… அப்பவே முடிவு பண்ணிட்டேன்.. “இனி இது நமக்கு அவசியமில்லை”ன்னு!… “கோவில்” என்பது அன்பையும், பாசத்தையும், மனித நேயத்தையும் வளர்க்கிற விஷயமாயிருக்கணும்!… மாறா… அது விரோதத்தையும்… குரோதத்தையும்… வளர்க்கும் போது… அது எதுக்கு நமக்கு?”

கூட்டம் அமைதி காக்க, தொடர்ந்தான்.

 “இந்த இடத்துக்காரரு எதுக்காக கோவிலை இடிக்கறேன்!னு சொன்னாரு?… இங்க ஒரு காலேஜ் கொண்டு வரத்தான் அப்படிச் சொல்றார்!… இங்க காலேஜ் வந்தா பலன்களை அவர் மட்டுமா அனுபவிக்கப் போறார்?… நீங்களும்… உங்க சந்ததிகளும்தானே?… கம்மாக்கரையையும்… கட்டைவண்டியையுமே பார்த்துப் பழகின உங்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸை அறிமுகப்படுத்தறேன்!கறார்… அது எவ்வளவு நல்ல விஷயம்?… அதைத் தடுக்கலாமா?”

 “படிப்பறிவும், வளர்ச்சியும், முன்னேற்றமும் காணாம வெறும் சாமியைக் கும்பிட்டுக்கிட்டு, இருந்தாப் போதுமா?… முன்னேற வேண்டாமா?… அதுக்காக முயற்சி எடுக்கற மனிதரை விரோதியாய்ப் பார்க்கலாமா?….”

அதைக் கேட்டு கை தட்டிய மாவட்டக் கலெக்டர் எழுந்து வந்து, “டோண்ட் வொர்ரி மிஸ்டர் தமிழ்மணி… உங்க மக்கள் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க!… இனி… புரிஞ்சுக்குவாங்க!… வாங்க புறப்படலாம்!”

கலெக்டருடன் அமைதியாக நடந்த தமிழ்மணி, மானசீகமாக தன் கொள்ளுத் தாத்தாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒரு அயர் பாக்ஸும் குலதெய்வமும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    மரப்பாச்சி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை