in ,

ஒரு அயர் பாக்ஸும் குலதெய்வமும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அது ஒரு மலைக் கிராமம்

அதிகாலை நேரம். வீடுகளின் மேல் கெட்டியான பனி, போர்வையாய்ப் படர்ந்திருக்க, தோலைத் துளைத்துக் கொண்டு, எலும்பு வரை  சென்று குத்தும் ஊசிக் குளிரை பற்றிக் கவலைப்படாமல் எழுந்து குளித்து முடித்து புறப்படத் தயாரானான் மலைச்சாமி.

“டேய் வெளில பனி கொட்டிட்டிருக்குடா… இந்தப் பனில போகணுமாடா?..” அவன் தாய் மயிலாள் கெஞ்சலாய்ச் சொல்ல,

“இப்ப மணி என்ன அஞ்சு!… இப்பக் கிளம்பினால் தான் மினி பஸ்சை பிடிச்சு குன்னூரு போய்… அங்கிருந்து கோயம்புத்தூர் பஸ் பிடிக்க சரியா இருக்கும்” எரிந்து விழுந்தான் மலைச்சாமி.

“அரை நாள் லீவு போட்டு மதியம் போகலாமே?”

“எங்க காலேஜை பொறுத்த வரைக்கும் அரை நாள் லீவு என்பது பெரிய விஷயம்!… எத்தனை நோட்ஸ் போயிடும் தெரியுமா?…அப்புறம் கண்ட பசங்ககிட்டயெல்லாம் கெஞ்சிட்டு நிக்கணும்!.”  

படிப்பின் மேல் உள்ள அக்கறையால்தான் அவன் அப்படிப் பேசுகிறான் என்பது தாய்க்கு சந்தோஷமாய் இருந்தாலும், கொட்டும் பனியில்… மகன் போகிறானே? என்பது வேதனையாகத்தான் இருந்தது.

“சரிப்பா வந்து நம்ம குலதெய்வம் மூஞ்சிறப்பனை கும்பிட்டுட்டுக் கிளம்பு” என்றாள் தாய்.

மலைச்சாமிக்கு எரிச்சலாய் இருந்தது.  “ஆரம்பிச்சிட்டியா உன்னோட புராணத்தை?… எங்கிருந்துதான் புடிச்சீங்களோ இப்படி ஒரு குல தெய்வத்தை?… பேரைப் பாரு மூஞ்சிறப்பன்!… எலிதானே அது?” கேட்டான்.

“ஆமாம்… நம்ம குலதெய்வம்”

“எலி ஒரு சிற்றுயிர் ஜந்து… அதைப் போய் குல தெய்வமாக்கி கும்பிட்டுட்டு… என்னைக்குத் தான் உருப்படப் போறீங்களோ?”

“டேய்… நம்ம இனத்தையும்… இனத்தோட குல தெய்வத்தையும்… பழிச்சுப் பேசாதடா!… நீ சொல்ற மாதிரி எலிங்கறது… சாதாரணமில்லடா!… பிள்ளையார் வாகனம்!… பிள்ளையார் தான்டா இந்த உலகத்துக்கு முழு முதற்கடவுள்!… அந்த மூஞ்சிறப்பன் நமக்கு குல தெய்வமா அமைஞ்சதுக்கு  நாமதான் கொடுத்து வச்சிருக்கணும்!”

“எங்க குடுத்து வச்சிருக்கணும்?… என்ன குடுத்து வெச்சிருக்கணும்?” அவன் கேட்க அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

“அம்மா… நீ கும்பிடுற அந்த எலி…”

“எலி இல்லைடா… மூஞ்சுறு”

“சரி ஏதோ ஒண்ணு!.. அது வந்து நம்மையோ… நம்ம குடும்பத்தையோ… காப்பாற்றப் போறதில்லை!… நான் படிக்கிறேனே படிப்பு?… அதுதான் காப்பாத்தப் போகுது!… அதனால… படிப்புதான் தெய்வம்… பாடப் புத்தகம்தான் நம்ம குல தெய்வம்!” வாதிட்டான்.

“படிப்பும் தெய்வம்தான் நான் மறுக்கலை!… அந்தப் படிப்பை படிக்க… நம்ம மூளை ஒத்துழைக்கணும்!… மனசு அலை பாயாம ஒரு நிலைல இருக்கணும்!… அதையெல்லாம் கட்டுப்படுத்தி… உடம்புக்கு நோய் நொடி எதுவும் வந்திடாமக் காப்பாத்திட்டிருக்கறதே இந்த மூஞ்சிறப்பன்தான்”

“சரி… சரி போதும் நான் கிளம்புறேன்” காலில் ஷூவை  அணியப்  போனவனை தடுத்தாள், “ஒரே தடவை பூஜை அறைக்குள்ளார வந்து மூஞ்சிறப்பனைக் கும்பிட்டுட்டுப் போடா” கெஞ்சினாள்.

தாயின் கெஞ்சலை சட்டை செய்யாமல் அவன் வெளியேற அவள் கண்களில் கண்ணீரே வந்து விட்டது.

கல்லூரி. ஹாஸ்டல் ரூம் நம்பர் 108.  அறைத் தோழர்கள் சினிமாவிற்குப் போய் விட்டதால் தனியாக  போரடித்துக்  கொண்டிருந்தான்  மலைச்சாமி. 

அப்போது சட்டென்று மூளைக்குள் அந்த யோசனை பளிச்சிட்டது. “ஆங்… துணிகளை அயர்ன் பண்ற வேலையொண்ணு பாக்கியிருக்கு!… இப்ப அதை முடிச்சிட்டா… காலைல எந்திரிச்சு  அவசர  அவசரமா அயர்ன் பண்ண வேண்டி இருக்காது…” என்று முடிவு செய்து கொண்டு அயர்ன் பாக்ஸை எடுத்து மேஜை மேல் வைத்தான்.

பக்கத்து  அறையில் முருகன், குணா  மற்றும் விஜய் மூவரும் கையில் ஆளுக்கொரு துடைப்பத்தை வைத்துக் கொண்டு கட்டிலுக்கடியிலும், மேஜைக்கு அடியிலும் குனிந்து குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தனர்.

”டேய் முருகா… எலி மேஜைக்கு அடிலதான் நிற்குது” என்ற குணா தன் கையிலிருந்த துடைப்பத்தை எலியின் மேல் பிசாசுத்தனமாய் வீசினான்.

அதாவது அடி வாங்கறதாவது?… சட்டென்று மேஜைக்கடியிலிருந்து வெளியேறி மின்னல் வேகத்தில் பீரோவுக்கு அடியில் புகுந்து கொண்டது.

மூவரும் சேர்ந்து பீரோவை நகர்த்த முயற்சி  செய்த போது, அங்கிருந்து எஸ்கேப் ஆகி, ஒரே ஓட்டமாய் ஓடி, கதவுக்கடியில் இருந்த சந்து வழியாய் வெளியேறி, வராண்டாவில் ஒலிம்பிக் ஓட்டமாய் ஓடியது. அவர்களும் கதவை திறந்து அதை துரத்திக் கொண்டு ஓடினர்.

“ஏ… நூ காவாலய்யா!… நூ காவாலய்யா”என்று பாடிக் கொண்டே அயர்ன் பாக்ஸ் பிளக்கை எடுத்து பாயிண்ட்டில் செருகிய மலைச்சாமியை உடைந்து போன பிளக் வழியே கசிந்த மின்சாரம் “பக்”கென்று ஈர்த்துக் கொண்டது.

“ஹீ….ஹீ…ஹீ…” என்ற ஹீனக் குரல் மட்டுமே அவனிடமிருந்து வெளியேறியது. உடல் மின்சாரத் தாலாட்டில் ‘தட…தட’வென ஆடியது.

ஒரு நிமிடம்… இரண்டு நிமிடம்…. மொத்த உடலும் நிறம் மாறத் துவங்கியது.

எலியை துரத்திக் கொண்டு வராண்டாவில் ‘தட…தட’வென ஓடி வந்த கும்பல் அது சாத்தப்பட்டிருந்த கதவிடுக்கு வழியாக அறை எண் 108க்குள் புகுந்து விட அப்படியே நின்றனர்.

“டேய் 108க்குள்ளார பூந்துடுச்சுடா?” முருகன் கத்தினான்.

“உள்ளார லாக் பண்ணி இருக்கு!… அப்ப மக்கள் உள்ளாரதான் இருக்காங்க”  ‘தட… தட”வெனக் கதவை தட்டினான்.

உள்ளே எந்தவித சலனமும் இல்லை. “என்னடா இது?… தூங்கிட்டு இருக்கானுங்களா?” முருகன் கேட்க,

“டேய் மாம்ஸ் இப்பதான் ஞாபகம் வருது! அவனுக பிக்சருக்கு போயிட்டானுங்க!… மலைச்சாமி மட்டும்தான் இருக்கான்!”

“அப்படி என்னதான் பண்ணிட்டிருக்கான்?… இந்த தட்டுத் தட்டியும் திறக்காம?” சொல்லியவாறே ஜன்னலருகே சென்று உள்ளே  எட்டிப்  பார்த்த விஜய் அலறினான்.

“என்னடா?… என்னடா ஆச்சு?” முருகன் வேகமாய் வந்து, ஜன்னல் வழியே உள்ளே பார்த்து விட்டு, “அய்யய்யோ கரண்ட்டு ஷாக் வாங்கிட்டேன் போலிருக்கே?” அடித் தொண்டையில் கத்தினான்.

குணா ஓடினான் ஹாஸ்டல் வார்டனை அழைத்து வர, சிறிது நேரத்தில் கதவு உடைக்கப்பட்டு வெளியில் கொண்டு வரப்பட்ட மலைச்சாமியை வராண்டாவில் வைத்து முதலுதவி செய்தார் ஹாஸ்டல் வார்டன்.

ஏறக்குறைய எல்லா அறைகளுக்குள்ளிருந்த மாணவர்களும் அறை எண் 108 முன் கூடி இருந்தனர். பத்து நிமிடங்களுக்குப் பிறகு லேசாய் கண் திறந்தான் மலைச்சாமி.  எல்லோர் முகத்திலும் அப்போதுதான் பிரகாசம் தெரிந்தது.

மெல்ல எழுந்து உட்கார்ந்து  “மலங்க… மலங்க” விழித்தவனிடம், “ஒண்ணும் பயப்படாதே!… ரூமுக்கு உள்ளார போய் படுத்து… ரெஸ்ட் எடு… கொஞ்ச நேரத்துல எல்லாம் சரியாயிடும்” என்றார் ஹாஸ்டல் வார்டன்.

முருகனும் விஜய்யும் முன் வந்து அவனது இரண்டு தோள்களிலும் கையை வைத்து தூக்கி, அறைக்குள் கொண்டு சென்று, கட்டிலில் படுக்க வைத்தனர்.

“டென்ஷனாகாதே மலைச்சாமி!… ஜஸ்ட் எலக்ட்ரிக் ஷாக் தான்..” முருகன் அவன் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான்.

“டேய்… அவன் கொஞ்ச நேரம் தூங்கட்டும் நாம வெளில போயிடலாம்!” சொல்லி விட்டு அவர்கள் வெளியேறிய போது கட்டிலில் படுத்திருந்த மலைச்சாமியின் கண்களில் பீரோவின் மீது அமர்ந்திருந்த எலி பட, மிகவும் சிரமப்பட்டு, “எ…எ…எ…லி…லி” என்றான்.

கதவருகே சென்று விட்டுத் திரும்பி வந்த பார்த்த முருகன் அவன் கண்களால் ஜாடை காட்டிய இடத்தைப் பார்த்து விட்டு, “டேய்… உண்மையைச் சொல்லணும்ன்னா… அந்த எலி இல்லேன்னா… நீ இன்னிக்கு உயிர் பிழைச்சிருக்கவே முடியாது!” என்றான்.

மலைச்சாமி எதுவும் புரியாமல் விழிக்க, “அது மட்டும் உன் ரூமுக்குள்ளார வராமப் போயிருந்தா… நாங்க எங்கே உன்னை பார்க்கிறது?… காப்பாத்துறது?… இந்நேரம் உனக்கு சங்குதான்” சொல்லி விட்டு முருகன் நகர்ந்தான்.

 எல்லோரும் சென்றதும் மீண்டும் பீரோ மேல் பார்வையைச் செலுத்தினான் மலைச்சாமி.  அதைக் காணவில்லை.

“ம்மா… எலிங்கறது ஒரு சிற்றுயிர் ஜந்து!… அது வந்து நம்மையோ… நம்ம குடும்பத்தையோ… நம்ம உசுரையோ காப்பாத்தப் போறதில்லை!… அதைப் போய் குலதெய்வமாக்கிக் கும்பிட்டுட்டு… ச்சை”

அம்மாவிடம் தான் சொன்ன அந்த வார்த்தைகள் எவ்வளவு தவறானவை என்பது  அவனுக்கு  அப்போதுதான்  உறைத்தது.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (இறுதி அத்தியாயம்) – ரேவதி பாலாஜி

    விடியல் வெளிச்சங்கள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை