எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அஸ்வின் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். காயத்ரியின் முகம் நினைவில் வந்து வந்து போனது. ரயில் போவதே தெரியாமல் ஆடியாடி போய்க் கொண்டிருந்தது. நினைவுகளும் கூடவே சென்றன.
சென்னையில் அந்த விளம்பர நிறுவனத்தில் கிரியேட்டிவ் ஹெட்டாக வேலை கிடைத்து, சேர்ந்திருந்தான் அஸ்வின்.
சம்பிரதாயமான அலுவலக அறிமுகத்திற்குப் பிறகு வேலையில் முழுகிப்போனான். ஒரு சந்தேகம் கேட்பதற்காக அவனிடம் வந்த காயத்ரி பின் நெருங்கிய தோழியானாள். அவனுக்குக் கீழ் வேலை செய்யும் நான்குபேர் கொண்ட குழுவில் காயத்ரியும் ஒருத்தி.
‘நாங்கல்லாம் இருக்கும்போது ஹெட் என்ன உன்கிட்ட மட்டும் வழியிறான்’ காண்டீனிற்கு போன போது கேட்டாள் கவிதா.
‘டோண்ட் பீ சில்லி! வைப் நல்லாருக்கு, பேசறோம், அவ்வளவுதான்’
‘ஆனா, பையனப்பாத்தா சும்மா பழகறமாதிரி தெரியலையே?! உன்கிட்ட பேசும்போது அப்படி ஒரு பார்வை பாக்குறான்’
‘சும்மா நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத’ என்று கூறினாலும் காயத்ரிக்கு அவள் சொல்வது சரியென்று தோன்றியது.
தன்னிடம் பேசும்போது மட்டும் ஏன் அப்படி பார்க்கிறான்? உள்ளிருப்பதையெல்லாம் வேரோடு பிடுங்குவதுபோல… மிக ஆழமான ஆனால் நெஞ்சை வதைக்கும் பார்வை! அது அவளையும் ஏதோ செய்தது.
விளக்க முடியாத புதிரைப்போல காயத்ரிக்கும் அஸ்வினுக்கும் இடையில் இருந்த நெருக்கம் வேகமாக வளர்ந்து லிவிங் டூகெதர் வரை வந்துவிட்டிருந்தது. அலுவலகத்தில் இதெல்லாம் ஒரு வாரப் பேச்சாகி பின் ஓய்ந்து போனது.
வாழ்க்கை சுவாரஸ்யமாக இருந்தது அஸ்வினுக்கு. வேலை நாட்களில் சீக்கிரமாக எழுந்து, சேர்ந்து சமைத்து, சேர்ந்து வேலைக்கு வந்து என்று கழிந்தது
விடுமுறைகளில் தாமதமாக எழுந்து சொமாட்டோ புண்ணியத்தில் சாப்பிட்டு சோம்பலாக கழிந்தது. இரவுகள் நீண்ட காதலைப் பேசின. நடுநிசியிலும் கலவி கொண்டாடித் தவித்தது. ஒருமித்த குளியலில் இடைவெளி வழிந்தோடியது.
அஸ்வினினுக்கு அம்மாவும் சுற்றத்தாருமாக தஞ்சாவூரில் குடும்பமிருந்தது. காயத்ரிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கூட இருந்த வந்த பாட்டி, கடந்த வருடம் இறந்து போன பின் தனியாகத்தான் இருக்கிறாள்.
அவரவருக்கான இடத்தையும் சுதந்திரத்தையும் தெளிவாக புரிந்துவைத்திருந்ததால் இருவருக்குமிடையேயான சின்ன சின்ன ஊடல்களும் ஒருநாளுக்குள் காணாமல் போயின.
இரண்டு வருடங்களாக அலுக்காத காதல் ஒருநாள் காரணமின்றி காணாமல் போனது. அவள் யாருக்கும் தெரியாத எங்கேயென்று அறியாத ஓர் இடத்திற்கு காணாமல் போனாள்.
ஊகங்கள் வைத்து தேடிப்பார்த்தும், தேடியலைந்தும் நாட்கள் வீணாகிப்போனது. ‘ஏன்? எதற்கு’? விடை தெரியாமல் தவித்துப்போனான் அஸ்வின்.
‘அம்மாகிட்ட நேத்து சொல்லிட்டேன் காயூ, உன்னப்பாக்க இந்த சண்டே வரவான்னு கேட்டாங்க.’
‘எல்லாம் ஓகே! ஆனா அம்மா வராங்கன்னு புடவை கட்றதுக்கோ ட்ரடீஷனலா சமைக்கறதுக்கோ நடிக்கவோ சொல்லக்கூடாது. நான் எப்பவும் போலத்தான் இருப்பேன், சரியா?’
‘அதெல்லாம் உன் இஷ்டம். உன்ன எதுக்குமே கட்டாயப்படுத்த மாட்டேன்.’
‘தேங்க்யூ’ என்றபடி கன்னத்தில் முத்தமிட்டாள்.
ஞாயிறன்று கையில்லாத ஒரு டீஷர்ட்டையும் தொடைவரை இருக்கும் ப்ளூமர் ஒன்றையும் அணிந்து வரவேற்ற காயத்ரியை அற்பமாகப் பார்த்தாள் அஸ்வினின் அம்மா.
அவளுக்கு காயத்ரியை எந்தவிதத்திலும் பிடிக்கவேயில்லை. கண்ணியமான, கலாசாரமான தன் குடும்பத்திற்கு காயத்ரி ஏற்றவளில்லை என்று அஸ்வினிடம் கூறினாள்.
‘அம்மா! அவ வாழப்போறது என்கூட! அப்புறம் ஒனக்கென்ன பிரச்சினை?
‘எல்லாக் காலமும் அப்டியே இருக்கமுடியுமா? ஒரு குழந்தை பொறந்தா? இல்ல குடும்பத்தில ஒரு விசேஷம்னா எல்லாரையும் பாக்க பழக வேணாமா?’
‘அம்மா, முதல்ல கல்யாணம் ஆகட்டும். அப்புறம் நம்ம குடும்பத்துக்கு தகுந்த மாதிரி அவளை மாத்திடறேன். நீ ஒண்ணும் கவலைப்படாத.’ சமாதானப்படுத்தி வழியனுப்பி வைத்தான்.
காயத்ரி மவுனமாக இருந்தாள். திங்களன்று காலை காணாமல் போய்விட்டிருந்தாள். ‘தேடாதே! தொடராதே! குட்பை’ என்று எழுதிவைத்துவிட்டுப் போயிருந்தாள்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நண்பன் ஒருவன் தொலைபேசியபோது காயத்ரி கொச்சியில் ஒரு கம்பெனியில் வேலை செய்வது தெரிந்து புறப்பட்டிருந்தான்.
அவளது ஆபிஸிலிருந்து தான் நண்பனின் கம்பெனி விளம்பரம் தயாரிக்கப்பட்டு டி.வியிலும் வானொலியிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
வேலைநிமித்தம் கொச்சிக்கு சென்றவன் காயத்ரியை கண்டதாகவும் அவளைப்பின் தொடர்ந்து ஆபிஸை கண்டுபிடித்ததாகவும் கூறி வாட்ஸ்அப்பிற்கு முகவரியை அனுப்பியிருந்தான்.
கொச்சி வந்ததும் ஒரு ரூமை வாடகைககு எடுத்துக்கொண்டு, ஃபிரெஷாகி வந்ததும் ஒரு ஆட்டோ பிடித்து காயத்ரியின் அலுவலகம் சென்றான் அஸ்வின்.
வரவேற்பறை பெண்ணிடம் விசாரித்ததும் அவள் உள்ளே யாருடனோ தொலைபேசிவிட்டு ‘காயத்ரி’ வேலையை விட்டுட்டுப் போய்ட்டாங்க’ என்றாள்.
அஸ்வினுக்கு நம்பமுடியவில்லை. ‘என்….என்ன..சொல்றீங்க?’ தவிப்புடன் கேட்டான்.
அந்தப்பெண், ‘ரண்டு நாள் முன்னாடிதான் திடீர்னு வேலையைவிட்டுட்டாங்க’ என்றாள்.
கம்பெனி நிபந்தனைப்படி முகவரி தரமுடியாது. அப்படியே கிடைத்தாலும் அவள் அங்கிருக்க வாய்ப்பில்லை, காலி செய்து இரண்டு நாள் ஆகியிருக்கிறது என்றும் தொடர்பு கொள்ள தந்திருந்த மொபைல் எண்ணையும் கொடுத்தாள்.
கூட வேலை செய்பவர்களுக்கும் தற்காலிக முகவரி மட்டுமே தெரிந்திருந்தது. அவளது எண்ணிற்கு அழைத்தான். சுவிட்ச் ஆப் என்றது. புதிய விளம்பரத்தின் சொந்தக்காரன் அஸ்வினின் நண்பன் என்று தெரிந்ததும் போய்விட்டிருக்கிறாள் என்று நமக்கு மட்டும்தானே தெரியும்.
‘மறுபடியும் ஏன்? எதற்கு?’ என்று தெரியாமல் குழப்பமாக நின்றான் அஸ்வின்.
எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings