in ,

வெற்றியாளன் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ரயிலில் தன் எதிரில் அமர்ந்திருந்தவருடன் என் கணவர் பேசிக் கொண்டே வர நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தபடியே பயணித்துக் கொண்டிருந்தேன்.

அந்த எதிர் இருக்கை நபர் தான் எழுதிய ஒரு கவிதை நூலை எடுத்து என் கணவரிடம் தர கவிதைக்கும் தனக்கும் காத தூரம் என்பதை காட்டிக் கொள்ள விரும்பாத என் கணவர் அப்புத்தகத்தை நாசூக்காக என்னிடம் தள்ளினார். “த பாரு கனகு…சாரு கவிதை நூலெல்லாம் வெளியிட்டிருக்கார்..”

புன்னகையுடன் வாங்கிப் புரட்ட ஆரம்பித்தேன்.  வாசிக்க வாசிக்க என் விழிகள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்தன. என்னை மாபெரும் பிரமிப்பில் ஆழ்த்தின அப்புத்தகத்திலிருந்த பல கவிதை வரிகள்.  அவைளை கவிதை வரிகள் என்று கூடச் சொல்லக் கூடாது… கனல் கங்குகள்..சாட்டைச் சுழற்றல்கள்.

“வாவ்…ரியலி கிரேட்…” என் மனம் என்னையும் மீறி அவரைப் பாராட்ட ஆரம்பித்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, “சார்…நீங்க பத்திரிக்கைகளெல்லாம் படிக்கற பழக்கமுண்டா?..”

அந்த நபர் கேட்க. என் கணவர் இட, வலமாயத் தலையாட்டினார்.

“மேடம்…நீங்க?”

“ம்…லெண்டிங் லைப்ரரில கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளுமே வாங்கிடறேன்”

“வான் மதி…படிக்கறீங்களா?”

“ம..ரெகுலரா படிச்சிட்டிருக்கேன்…ஏன் கேட்கறீங்க?”

“அதுல வர்ற ‘தீக்கொழுந்தில் பனித்துளிகள்’ தொடர்கதை?”

“தொடர்ந்து படிச்சிட்டிருக்கேன்…அற்புதமான கதை…ஆழமான பல நல்ல கருத்துக்களை ரொம்ப யதார்த்தமா…படு இயல்பா சொல்லுற விதம்…எப்படா அடுத்த வாரம் வரும்ன்னு ஏங்க வைக்கும்”

“சரி…அதை எழுதறது யார்ன்னு தொpயுமா?”

“தெரியுமே…அனலேந்தின்னு ஒருத்தர்…”

“அந்த அனலேந்தி வேற யாருமில்லை….அடியேன்தான்…கதைக்கா அந்தப்  புனை பெயர்..”

“நீங்க…கவிதை மட்டும்தானே…?”

“கவிதை மட்டுமல்ல…கதையும் எழுதுவேன்…என்னோட பல நாவல்கள் மாநில அளவுல…தேசிய அளவுல பரிசுகளை வாங்கியிருக்கே…”

எனக்கு அந்த நபர் மீது அபரிமிதமான மரியாதை ஏற்பட்டது. “ஆஹா…எவ்வளவு ஒரு அற்புதமான படைப்பாளி…”

என் மனமாற்றத்தை என் முக மாற்றத்தில் கண்டுபிடித்து விட்ட என் கணவர் சோகத்தில் ஆழ்ந்தார். “ஒருவேளை நான் கொஞ்சம் ஓவரா ரீஆக்ட் பண்ணிட்டேனோ?”

அந்தச் சூழ்நிலையை மாற்ற விரும்பிய என் கணவர் “சார் சென்னைக்கு என்ன விஷயமா?” கேட்க,

“அது வேறொன்றுமில்லை… சன்-டிவில…வர்ற பொங்கலுக்கு ஒளிபரப்ப சிறப்புப் பட்டிமன்றம் ஒண்ணு ஷூட் பண்றாங்க…அதுக்குத்தான் போய்ட்டிருக்கேன்…”

“பார்வையாளராகவா?” அப்பாவித்தனமாய்க் கேட்டார் என் கணவர்.

மெலிதாய் முறுவலித்த அந்த நபர் ‘நடுவரே நான்தான்…”

“என்னது நடுவரா?…ஓ…நீங்க பேச்சாளரும் கூடவா?”

“நல்லாக் கேட்டீங்க போங்க….போன தீபாவளியன்னைக்குக்கு ‘முல்லை டிவி”லே பட்டிமன்றம் பார்க்கலையா நீங்க?”

எனக்கு லேசாய் ஞாபகம் வர ‘கரெக்ட்…கரெக்ட்…நான் பார்த்தேன்..இப்ப ஞாபகம் வருது உங்க முகம்…”

“முழு பட்டிமன்றமும் கேட்டீங்களா?…எப்படியிருந்தது?”

“அருமையாயிருந்தது சார்…வழக்கமா இந்த மாதிரி பட்டிமன்றங்கள்ல உப்புச் சப்பில்லாத ஒரு அபத்தமான தலைப்பை எடுத்துக்கிட்டு… சம்மந்தா சம்மந்தமில்லாம…. கோணங்கித்தனமான நகைச்சுவைகளைக் கொட்டி ஒரு வித எரிச்சலைத்தான் மூட்டுவாங்க. ஆனா…நீங்க ஒரு நல்ல முக்கியமான சமுதாயப் பிரச்சினையை எடுத்துக்கிட்டு…அதை அக்கு வேறு ஆணி வேறாப் பிரிச்சு…பார்க்கிறவங்களுக்கு ஒரு விழிப்பணர்வையே ஏற்படுத்தினீங்க சார்…”

என் கணவர் முகம் போன போக்கு எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த, இனி மேல் பேசினால்  வம்பு என்பதை உணர்ந்து கொண்டு வாயை இறுகச் சாத்திக் கொண்டேன்.

ஆனாலும் என் சிந்தனை ஓட்டத்தை என்னால தடுத்து நிறுத்த முழயவில்லை. சிந்திந்து சிந்தித்து.. இறுதியில் என் உள் மனம அந்த நபரை சிகரத்தின் உச்சியில் கொண்டு போய் அமர வைத்து அழகு பார்த்தது. கவிஞர்…கதாசிரியர்…பட்டிமன்றப் பேச்சாளர்…என எல்லாத் துறையிலும் வெற்றிக் கொடி நாட்ட எப்படி இவரால் மட்டும் முடியுது?

இதெல்லாம் வாங்கி வந்த வரமா?…இல்லை…வழக்கத்தில்…வாசிப்பில்…உழைப்பில்…ஊக்கத்தில் வந்து சேர்ந்த திறமைகளா?… பொறந்தா இந்த மாதிரி ஒரு வெற்றியாளனா…. சாதனையாளனா…. பொறக்கணும்…ஹூம்…இவரை புருஷனாய்ப் பெற்றவள் குடுத்து வைத்தவள்…பின்னே.. ஒரு அறிவு ஜீவியோட சம்சாரம்ன்னா சாதாரணமா?

ஒரு நீண்ட அமைதிக்குப் பின் என் கணவர் அந்த நபரிடம் கேட்டார் “சாரோட குடும்பத்தைப் பத்தி ஒண்ணும் சொல்லலையே…”

அதற்கு பதிலேதும் சொல்லாமல் எங்கோ பார்த்தபடி அமர;ந்திருந்த அந்த நபரை வலிய இழுத்து மீண்டும் கேட்டார் “சொல்லுங்க சார் ..உங்க சம்சாரம் எப்படி…உங்க எழுத்துக்களை..ரசிப்பவரா?….விமர்சிப்பவரா….?”

“வேண்டாங்க…என் குடும்பத்தைப் பத்தியோ…என் மனைவியைப் பத்தியோ பேசாதீங்க…. ப்ளீஸ்” அந்த நபர் ஆணிததரமாய்ச் சொல்ல, என் கணவர் முகம் பிரகாசமானது.

“அதெப்படி…உங்களைப் பத்தி விலாவாரியாச் சொன்னீங்க…கேட்டோம்…அது மாதிரி உங்க மனைவி மக்களைப் பத்திச் சொல்ல வேண்டாமா?” என் கணவர் விடாப்பிடியாய்க் கேட்டார்.

“எனக்கு மனைவி…மகன்…மகள்…எல்லோருமே இருக்காங்க….ஆனா…” அவர் தயங்கி நிறுத்த,

“ஆனா….?”

“அவங்க யாரும் என் கூட இல்லை…”

“ஏன்?” என் கணவர் தொடர்ந்து குடைந்தது எனக்கே ஒரு மாதிரி இங்கிதமின்மையாய்த் தெரிந்தது.

“அது…அது ஏன்னா….அவங்களுக்கும் எனக்கு ஒத்து வரலை…மனைவியை டைவர்ஸ் பண்ணிட்டேன்…”

“மகனும் மகளும் அம்மாகூடவே போயிட்டாங்க..அப்படித்தானே?”

“ஆமாம்….அதுகளுக்கும் என் கூட இருக்கப் பிடிக்கலை…”

மேலும் ஏதோ கேட்க என் கணவர் வாயெடுக்க, “போதும் சார்…இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க” சட்டென்று அவர் அந்தப் பேச்சைத் துண்டித்தார்.

ஒரு கவிஞர், ஒரு எழுத்தாளர்… ஒரு மேடைப் பேச்சாளர் என எல்லாத்திலேயும் வெற்றியடைஞ்ச இந்த மனுஷனால தன் மனைவிக்கு ஒரு நல்ல…வேண்டாம்…அட்லீஸ்ட் சராசரிக் கணவனா…குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா..வெற்றியடைய முடியாதப்ப..அந்த மாபெரும் வெற்றிகளினால் என்ன பிரயோஜனம்?

என் மனத்தில் உயரத்தில் இருந்த அந்த நபர் ஒரு விநாடியில் சடாரென விழுந்து அதலபாதாளத்திற்குச் சென்று விட அவர் முகத்தை ஊடுருவிப் பார்த்தேன். ஒரு வித ஆணவமும்…அகம்பாவமும் நிரந்தரமாகவே ஒட்டிக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது.

‘அடப் போடா…நீ இலக்கியத்துல எத்தனை உயரத்திற்குப் போனாலும்… எத்தனையோ வெற்றிகளையும் விருதுகளையும் வாங்கிக குவிச்சாலும்… ஆழ்ந்து பார்த்தால் அவையெல்லாம் தோல்விகளே!…ஏன்னா…நீ வாழ்க்கைல தோற்றவன்…வாழ்க்கையையே தொலைத்தவன்…ஒரு சாதாரணன்…சாமான்யன் ஜெயிக்கற யதார்த்தங்களிலேயே நீ தோற்றுப் போகும் போது உன் தலைக்கு சூட்டப்படற எல்லா மகுடங்களுமே வெறும் மண்சட்டிகளே;

என் கணவரை நோக்கினேன் அவர் என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். புருவத்தை உயர்த்தி “என்ன?” கேட்டேன்.

“ஒண்ணுமில்லை…” என்றார்.

எனக்கு ஒரு நல்ல கணவனா…என் குழந்தைகளுக்கு  ஒரு நல்ல தகப்பனா… என்னோட பெற்றோர்களுக்கு ஒரு நல்ல மருமகனா இருக்கற இவரை விடவா இந்த இலக்கியவாதி… ‘ஏங்க…சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்கதாங்க உண்மையான வெற்றியாளர்’ மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ரட்சகன் (குறுநாவல் – பகுதி 2) – சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    மகா மார்பிள்ஸ் (நாவல் – அத்தியாயம் 23) – தி.வள்ளி, திருநெல்வேலி