2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஹலோ சார்,…. எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கீங்களா? உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு” வெண்டைக்காயின் பின்புற காம்பை உடைத்துக் கொண்டே கேட்டான் சுந்தர்.
“உங்கள பாத்து தான் ரொம்ப நாளாச்சு. நான் இந்த கடைக்கு வாரா வாரம் வந்துகிட்டு தான் இருக்கேன்”. என்றான் சிரித்துக் கொண்டே சேகர்.
“அப்படிங்களா, வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? உங்க பசங்க எல்லாரும் நல்லா படிக்கிறாங்களா?”- சுந்தர்
“நல்லா படிக்கிறாங்க, நீங்க எப்படி இருக்கீங்க? உங்க வீட்ல எப்படி இருக்காங்க?” பதிலுக்கு நலம் விசாரித்தபடி சேப்பைக்கிழங்கை எடுத்து கூடையில் போட்டான் சேகர்.
“ம்….எல்லாரும் நல்லா இருக்காங்க.” என்றான் சுந்தர்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்ப்புற வரிசையில் கத்திரிக்காயை பொறுக்கிக் கொண்டிருந்த மீரா தனது தோழி வசந்தியிடம் “ஏய், அங்க பாத்தியா? அது யாருன்னு தெரியுதா?” என்று கண்களால் சேகரை காண்பித்து “அதான், அப்பார்ட்மெண்ட்ல இருக்காளே சுமதி அவளுடைய வீட்டுக்காரர் தான், அவரு” என்று காதில் கிசுகிசுத்து விட்டு, “அவ கொடுத்து வச்சவ, என்னமா ஹெல்ப் பண்ணுகிறார் பாரு அவ வீட்டுக்காரர். நமக்கும்தான் வந்து வாய்ச்சுருக்கே, சண்டே வந்தாப் போதும் கை கால் நீட்டி உட்கார்ந்துகிட்டு, டிவி போட்டுகிட்டு, காப்பிய கொண்டா, டிபனை கொண்டானு உட்கார்ந்த இடத்திலிருந்து ஆர்டர் பண்ண வேண்டியது. காபி குடிச்ச டம்ளரை கூட கொண்டு வந்து போடறது கிடையாது எல்லாம் நம்ம தலை எழுத்து” என்று குறைபட்டுக் கொண்டாள்.
“ஆமாக்கா நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட். எங்க வீட்டுக்காரரும் அப்படித்தான் ஒரு ஹெல்ப் கிடையாது அவங்களுக்காவது சண்டேன்னு ஒரு லீவு இருக்கு நமக்கு அது கூட கிடையாது. ஞாயிற்றுக்கிழமைலையும் நம்மதான் எல்லா வேலையும் பார்க்க வேண்டி இருக்கு. என்ன பொழப்பு போங்க” என்று வசந்தி ஆமோதித்தாள்.
இருவரும் பேசிக்கொண்டே காய்கறிகளை வாங்கிக் கொண்டு தத்தம் வீடுகளுக்கு சென்றனர்.
மறுநாள் காலையில் வசந்தியும் மீராவும் தம் குழந்தைகளை ஸ்கூலில் விட்டு விட்டு பேசிக் கொண்டே வந்தனர். அவர்கள் வீடு இருக்கும் தெருவின் எதிரில் இருக்கும் அப்பார்ட்மெண்டின் மேலிருந்து சுமதி கையை அசைத்தாள். ‘ஹாய்” என்று .
மீராவும் அவளைப் பார்த்து புன்னகைத்து கையசைத்தாள்.
“இருங்கள் நான் கீழே வருகிறேன்” என்று சைகை செய்தாள் சுமதி. இவர்கள் இருவரும் கேட்டை திறந்து கார் பார்க்கிங்கில் நின்று கொண்டனர். அவள் வருகைக்காக காத்திருந்தனர்.
கீழே இறங்கி வந்த சுமதி, “எப்படி அக்கா இருக்கீங்க” என்று மீராவிடம் விசாரித்தாள்.
“இவங்க வசந்தி, அடுத்த தெருவில் இருக்காங்க. போன மாசம் தான் பழக்கம்” என்று மீரா சுமதியிடம் அறிமுகப்படுத்தி விட்டு, “நீ எப்படி இருக்க சுமதி நல்லா இருக்கியா ?”என்றாள்.
“நல்லா இருக்கேன் அக்கா, உங்க சுடிதார் ரொம்ப நல்லா இருக்கு, கலர் ரொம்ப நல்லா இருக்கு எங்க வாங்கினீங்க?”
“இங்கதான், அஞ்சாவது மெயின் ரோட்டில் புதுசா கடை வந்துருக்கு, ஃபுல்லா காட்டன் சுடிதார் தான், ரொம்ப நல்லா இருக்கு நீ வரியா போய் வாங்கலாம்” என்று சுமதியை அழைத்தாள் மீரா.
“அதெல்லாம் இவங்க விடமாட்டாங்க அக்கா. இவங்க ஆன்லைன்ல எல்லாத்தையும் ஆர்டர் பண்ணி வாங்கி தந்துருவாங்க” என்று தன் கணவனைப் பற்றிக் கூறினாள்.
“உனக்கு என்னம்மா கொடுத்து வச்சவ, மகாராணி மாதிரி உன்னை தாங்கறாரு உன் வீட்டுக்காரர். காலையில காய்கறி கடையில பார்த்தேன். பரவாயில்ல. உன்னை கஷ்டப்படுத்தாம தானே கடைக்குப் போறாரு” என்று மீரா அங்கலாய்த்தாள்.
“ஆமா நீங்க தான் மெச்சிக்கணும், எனக்கு உங்கள மாதிரி வெளியில் போகணும், எல்லாரையும் ஃப்ரெண்ட்ஸ் பிடிச்சுக்கணும். எனக்கு பிடித்ததை நானே போய் வாங்கணும். இதெல்லாம் எனக்கு ரொம்ப ஆசை. எங்க ஊர்ல நான் தான் போய் வாங்குவேன். எங்க வீட்ல சுதந்திரமா விடுவாங்க”
“இங்க, என்னோட கால கட்டி போட்ட மாதிரி இருக்கு. உங்கள மாதிரி ஜாலியா, என்னைக்கு வெளியில போலாம்னு ஆசையா இருக்கு” சொல்லும்போதே கண்களில் கண்ணீர் தழும்பியது சுமதிக்கு.
அப்பொழுது மாடியில் இருந்து “சுமதி” என சுமதியின் மாமியார் அழைப்பது கேட்டது.
“சரிக்கா வரேன் நாளைக்கு வீட்டுக்கு வாங்க அக்கா பேசலாம்” என்று கூறியபடி வேகமாக ஓடினாள் சுமதி.
இவர்கள் இருவரும் மௌனமாக வெளியே வந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு மீரா சொன்னாள், “இக்கரைக்கு அக்கரை பச்சை”.
வசந்தி சொன்னாள் “வீட்டுக்கு வீடு வாசப்படி”.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings