in

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 8)

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கோபியைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, “மஞ்சு… நான் உனக்கு இரண்டு புடவைகள் வாங்கி வந்திருக்கிறேன். தயவுசெய்து மறுக்காமல் வாங்கிக் கொள்வாயா?” என்றான் நந்தகோபால் கெஞ்சும் குரலில்

 “இங்கே நான் அதிகம் புடவைகளே உடுத்துவதில்லை, ஜீன்ஸும் சுடிதாரும் தான் பெரும்பாலும்” என்றாள் மஞ்சுளா மறுக்கும் விதமாக.

“ஸாரி… இது நான் உனக்கு செய்த பாவங்களின் பரிகாரம் அல்ல. என் விருப்பம் தான். பழைய டாக்டர் நந்தகோபால் செத்து விட்டான், நான் அகங்காரத்தை ஒழித்த கோபியின் தந்தை நந்தகோபால்… ப்ளீஸ்” என்றான் அந்தப் புடவைகளை நீட்டியபடி

ஒரு பெருமூச்சுடன் அந்தப் பைகளை வாங்கிக் கொண்டாள். விலை அதிகமான மைசூர் சில்க் புடவைகள். ஒன்று அழகான மயில் இழுத்துக் கலர், மற்றொன்று அடர்ந்த பச்சை நிறம், சிறிய ஜரிகைக் கரை

“டாடி, சாப்பிடலாமா? அம்மா உங்களுக்கும் எனக்கும் பிடித்த பால் பாயசம் வடையெல்லாம் செய்து இருக்கிறார்கள்” என்றான் கோபி, அவன் அப்பாவின் கன்னங்களைப் பிடித்தவாறு.

“நிஜமாகவா மஞ்சு?” என்று அவளை உறுத்துப் பார்த்து கேட்டவாறு கோபியையும் தூக்கிக் கொண்டு எழுந்து கொண்டான் நந்தகோபால். இருவருக்கும் பரிமாறினாள் மஞ்சுளா

“நீயும் சாப்பிடு மஞ்சு ” என்றான் நந்தகோபால்

“நீங்கள் இருவரும் சாப்பிடுங்கள், பிறகு நான் சாப்பிடுகிறேன்”

“சிக்கன் பிரியாணியும் மீன் வறுவலும் சூப்பர், பாயசம் தேவாமிர்தம் போல் இருக்கிறது. இதைப் போல் முழுச் சாப்பாடு சாப்பிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன” என்றான் நந்தகோபால்

மஞ்சுளா ஏதும் பேசவில்லை. அப்போது திடீரென்று பலத்த மழை கொட்டத் தொடங்கியது. டைனிங் ஹால் முழுவதும் பெரிய கண்ணாடி ஜன்னல்கள். நந்தகோபால் பலமாகக் கொட்டும் மழையை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“இங்கே இப்படித் தான் டாடி. திடீரென்று வெயிலடிக்கும், பிறகு மழை கொட்டித் தீர்க்கும்” என்றான் பாயசத்தை ஸ்பூனால் குடித்துக் கொண்டே .

“மஞ்சு நீ உட்கார், நான் பரிமாறுகிறேன்” என்று அவனே அவளுக்கு உணவுகளைத் தட்டில் எடுத்து வைத்தான்.

“உங்கள் நண்பர்களையும் அழைத்து வந்திருக்கலாம், இல்லையா டாடி. அவர்களும் நன்றாக சாப்பிட்டு இருப்பார்கள்” என்று சொல்லிச் சிரித்தான் கோபி .

“எங்கள் அலுவலக வேலை எதிர்பார்த்ததைவிட சீக்கிரம் முடிந்து விட்டது கோபி. நாங்கள் இன்னும் பத்து நாட்கள் கழித்துத் தான் திரும்பும் நாள். அவர்கள் ரிடர்ன் டிக்கெட்டை பிரிபோன் செய்து கிளம்பி விட்டார்கள். ஆனால் எனக்கு உங்களை விட்டு கிளம்ப மனம் இல்லை. அதனால் என் அபார்ட்மெண்ட்டில் நான் மட்டும் தான்”

“நீங்கள் ஏன் டாடி தனியாக இருக்க வேண்டும்? இங்கே எங்களுடன் வந்து விடுங்களேன். பத்து நாட்கள் நீங்கள் நம் வீட்டில் எங்களுடன் இருங்கள். நானும் ஜாலியாக இருப்பேன். என் நண்பர்களிடம் உங்களை என் அப்பா என்று அறிமுகப்படுத்துவேன். உங்களுக்கு ஓ.கே தானே டாடி? என்ன அம்மா நான் சொல்வது சரி தானே?”  என்றான் கோபி பெற்றோர் இருவரையும் பார்த்து

“நீயே கேள்வியும் கேட்டு நீயே பதிலும் சொன்னால் எப்படி கோபி? உன் டாடிக்கு எப்படி சௌகர்யமோ அப்படி செய்யட்டும் ” என்றாள் மஞ்சுளா.        

“மஞ்சு… நான் இந்தியா திரும்பும் வரை உங்களுடன் பத்து நாட்கள் தங்கலாமா? நான் தொலைத்த சந்தோஷங்கள் எனக்குத் திரும்பக் கிடைக்குமா? நான் உன்னை எப்படி அவமானப்படுத்தினேன், எப்படியெல்லாம் காயப்படுத்தினேன் என்று இப்போது நினைத்தாலும் அவமானமாக இருக்கிறது” என்றான். அவன் கண்கள் லேசாகக் கலங்கின

“கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படாதீர்கள், இருக்கும் வரை சந்தோஷமாக இருங்கள். நீங்களே பெரிய டாக்டர், உங்களுக்குத் தெரியாததா” என்ற ‌மஞ்சுளா, மேலும் தொடர்ந்து “நீங்கள் திருமணம் செய்ய வற்புறுத்தியிருந்தாலும், நான் அதற்கு சம்மதித்து இருக்கக் கூடாது. உங்கள் படிப்பு, பெற்றோர்களின் செல்வாக்கு எதையும் என்னால் எட்டிக் கூடப் பிடிக்க முடியாது. முடவன் கொம்புத் தேனிர்க்கு ஆசைப்பட்டான் போல் பொருந்தாத திருமணம். தவறு என் மேலும் தான், அதனால் எல்லாவற்றிற்கும் நீங்கள் மட்டும் பொறுப்பல்ல, வருத்தப்படாதீர்கள் ” என்றாள் மஞ்சுளா .

“எங்கே என் மனம் புண்படுமோ என்று வீண் பழியை நீ ஏற்றுக் கொள்வது உன் பெருந்தன்மையைக் காட்டுகிறது” என்றவன் அடக்க முடியாத துயரத்தை அடக்கிக் கொள்பவன் போல் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவன், “அப்படியானால் மழை நின்ற பிறகு நான் என் அறையை காலி செய்து விட்டு, சாவியை அபார்ட்மென்ட் அசோசியேஷன் அலுவலகத்தில் கொடுத்து விட்டு வந்து விடட்டுமா?” என்று சின்னக் குழந்தை போல் கேட்டு அவள் முகத்தை ஆவலுடன் பார்த்தான்.

“சரி… ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்து விட்டுப் பிறகு போகலாம். அதற்குள் மழையும் கொஞ்சம் குறைந்து விடும்” என்றாள்.

கோபி அறைக்கு அடுத்த அறையை நந்தகோபாலிற்கு ஒதுக்கியிருந்தாள். முன்பு அவள் அண்ணாவும், அண்ணியும் வந்திருக்கும் போது அங்கு தான் தங்கியிருந்தார்கள். தலையணை உறை, மெத்தையின் உறை இவற்றையெல்லாம் புதிதாக மாற்றினாள் .

ஒரு மணி நேர ஓய்விற்குப் பிறகு நந்தகோபால் வாடகைக் காரை ‘புக்’ செய்ய போன் செய்தான் .

“வாடகைக் கார் வேண்டாம். நம் வீட்டில் இருக்கும் எஸ்.யூ.வி.யை எடுத்துக் கொள்ளலாம், நானும் வருகிறேன். அப்போது தான் வேலை சீக்கிரம் முடியும்” என்றாள் மஞ்சுளா.

நந்தகோபால், மஞ்சுவின் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. அவன் பொருட்கள் மட்டும் தான் தனி அறையில், படுக்கை கோபியின் பெட்டில் தான். கோபியின் தலையைத் தன் கையின் மேல் வைத்து, அவனை அணைத்துக் கொண்டு தூங்குவான்.

ஒரு நாள் மஞ்சுளா அடுத்த நாள் கல்லூரியில் வகுப்பெடுக்க பாடங்கள் தயாரித்துக் கொண்டு இருந்தாள். மணி இரவு ஒன்றாகி விட்டது. கோபியின் அறையில் பகல் போல் வெளிச்சம். இவ்வளவு நேரம் தூங்காமல் இருவரும் என்ன‌ செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காக மஞ்சுளா கோபியின் அறைக்கு வந்தாள் .

ஒரு கனமான கம்போர்ட்டரை இருவரும் போர்த்திக்கொண்டு கலிபோர்னியாவின் குளிருக்கு கட்டிப்பிடித்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள் .

நந்தகோபாலின் கண்ணாடி லேசாக மூக்கின் கீழே இறங்கியிருந்தது. கையில் ஏதோ கதைப் புத்தகம்.

புத்தகத்தை எடுத்து அருகில் இருந்த வலை பீரோ மேல் வைத்து விட்டு, கண்ணாடியைக் கழற்றி புத்தகத்தின் மேல் வைத்தாள். டியூப் லைட்டை அணைத்தாள். இரவு விளக்கு நீல நிறத்தில் தன்னாலேயே ஒளிர்ந்தது. கதவைத் தாழிடாமல் மெதுவாக சார்த்திக் கொண்டு தன் அறைக்கு சென்றாள்.

புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. ‘இவ்வளவு ஆண்டுகள் கழித்து இந்த நந்தகோபால் ஏன் இங்கு வந்தான்? இந்தக் குழந்தையிடம் இப்படி அன்பைப் பொழிந்து விட்டுப் பிறகு துஷ்யந்தனைப் போல் எல்லாவற்றையும் மறந்து விட்டால் குழந்தை தாங்குவானா?’ என்று பலவாறு யோசித்தாள்.

நீண்ட நேரம் தூங்காமல் விடியும் நேரத்தில் தூங்கியதால் கண்கள் லேசாக எரிந்தன. கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழரை.

‘ஐயோ! கோபியை பள்ளிக்கு எட்டு மணிக்கெல்லாம் அழைத்துப் போக வேண்டுமே. அவனுக்கு லஞ்ச் கட்ட வேண்டும்’ என்று தன் அறையில் உள்ள பாத்ரூமில் முகத்தைக் கழுவிக் கொண்டு வேகமாக கீழே ஓடினாள்.

சமையல் அறையில் வாசனை கமகமவென்று மூக்கைத் துளைத்தது. கீழே அப்பாவும் பிள்ளையும் ஏதோ பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

“குட்மார்னிங் மஞ்சு, காபி எடுத்துக் கொள். நீ போடும் அளவிற்கு ருசியாக இருக்குமா என்று தெரியவில்லை” என்று காபியை நீட்டினான்.

காபியை வாங்கிக் கொண்ட மஞ்சுளா, “சாரி, ரொம்ப நேரம் தூங்கி விட்டேன். சமையலை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ குளித்து விட்டு ரெடியாகு” என்றாள்.

“மம்மி, காலை உணவு, மதியம் லஞ்ச், எல்லாம் டாடியே ரெடி செய்து விட்டார். இன்று உனக்கு ரெஸ்ட் மம்மி” என்றான் கோபி உற்சாகமாக.

“ரொம்ப தேங்க்ஸ், ஆனால் உங்களுக்கு அனாவசிய கஷ்டம்.வெரி ஸாரி” என்றாள் நந்தகோபாலிடம் திருப்பிப் பார்த்து. அவளையே ஆவலுடன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நந்தகோபாலின் பார்வையைத் தாங்க சக்தியில்லாமல் மஞ்சுளா தலை கவிழ்ந்தாள்.

டைனிங் டேபிள் மேல் வரிசையாக வைக்கப்பட்டிருந்த ஹாட் பாக்குகளைத் திறந்து பார்த்தாள். ஒரு ஹாட் பேக்கில் ஃப்ரெஞ்ச் டோஸ்ட், ஆப்பிள் துண்டுகள், ஸ்ட்ராபெரிஸ்  ஒரு வாழைப்பழம். மற்றோன்றில் காய்கறிகள், சிக்கன் துண்டுகளோடு கூடிய நூடுல்ஸ். வேறொரு ஹாட் பேக்கில் எலுமிச்சை சாதம்; தனியாக ஒரு ஹாட் பேக்கில் தயிர் சாதம். தனித்தனியே லஞ்ச் பாக்ஸில் கோபிக்கும், இவளுக்குமாக பேக் செய்தாள்.

அன்று மாலை மஞ்சுளாவிற்குக் கல்லூரியில் கொஞ்சம் வேலை அதிகமாக இருந்தது. கோபியை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமே, என்ன செய்வது? என்று யோசித்தாள்.

கிளாராடமோவிடமோ, நிவேதாவிடமோ உதவி கேட்கலாம் என்று தன் செல்போனை எடுத்தாள். அப்போது நந்தகோபாலிடமிருந்து போனில் அழைப்பு.

“மஞ்சுளா… நேரம் அதிகமாகிவிட்டதால் நான் கோபியை டாக்ஸியில் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன். நீ கவலைப்பட வேண்டாம். நான் போனை வைத்து விடுகிறேன். வேலை நேரத்தில் தொந்தரவு செய்வதற்கு ஸாரி” என்று கூறி போனை வைத்து விட்டான்.

வீடு திரும்பவே அன்று இரவு மணி ஏழாகி விட்டது. வீட்டில் அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து டின்னர் தயாரித்து விட்டோம் என்றார்கள். டைனிங் டேபிளில் இரண்டு பாத்திரத்தில் என்னவோ மூடி வைக்கப்பட்டிருந்தது. திறந்து பார்த்தால் ஒன்றில் சாம்பார் சாதம், மற்றொன்றில் தயிர் சாதம்.

கல்லூரியிலிருந்து வந்த அலுப்பு நீங்கக் குளித்து விட்டு, சாப்பாட்டிற்குத் தொட்டுக் கொள்ள கொஞ்சம் வற்றல், வடாம் என்று பொரித்து வைத்தாள் மஞ்சுளா.

சாம்பார் சாதம் நிஜமாகவே நன்றாக இருந்தது. டின்னர் முடித்தவுடன், “கோபி, நாளை கொடுக்க வேண்டிய வீட்டுப் பாடங்களை முடி. நாளை இரண்டு டெஸ்ட் இருக்கிறது அல்லவா? அதற்கும் தயார் செய்ய வேண்டும்” என்றாள் மஞ்சுளா .

“வீட்டுப் பாடங்களை டாடியின் உதவியோடு முடித்து விட்டேன் அம்மா. டெஸ்ட்டிற்கும் டாடி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டேன்” என்றான் சந்தோஷமாக.

அணைத்துப் படுத்துக் கொண்டு ஏதோ கதைகள் சொல்ல, தூங்கி விட்டான் கோபி. நந்தகோபால் தான் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான்.

‘எவ்வளவு இனிமையான வாழ்க்கை. பண்பான மனைவி, அன்பான குழந்தை! இதைப் போய்த் தொலைத்து விட்டு இப்போது கிடைக்குமா என்று ஏங்குகின்றேனே! என்னைப் போல் யாராவது முட்டாள் இருப்பார்களா? காமவயப்பட்டவர்களுக்கு பண்பும் அறிவும் இருக்காது என்று பெரியவர்கள் சொல்லியும் என் புத்திக்கு எட்டவில்லையே!’ என்று பலவும் எண்ணித் தூக்கம் வராமல் தவித்தான் .

மஞ்சுளாவின் நிலைமையும் ஏறக்குறைய அதே தான்.

‘இவ்வளவு அன்பாக இருக்கும் இந்த நந்தகோபால் முன்பு எவ்வளவு மோசமாக நடந்தான். திருமண வாழ்க்கையே வெறுத்து ஒதுக்கி, பிறந்த நாட்டை விட்டு, நிம்மதியைத் தேடி, அமெரிக்காவில் வந்து அடைக்கலம் புகுந்தோம். இத்தனை வருடங்கள் கழித்து இங்கே வந்து அன்பைக் கொட்டி நம் மனதைக் கலைக்கிரானே! இவன் இந்தியா போன பிறகு நம்மை மறந்து புறக்கணித்தால், என்னால் பொறுத்துக் கொள்ள முடியும், குழந்தை கோபி ஏங்கி விட மாட்டானா?’ என்று பலவும் யோசித்து அவளும் தூக்கம் வராமல் தவித்தாள்.

நந்தகோபால், இந்தியா திரும்பும் நாளும் வந்தது. ஒரு சனிக்கிழமை ‘எமிரேட்ஸ்’ ஃப்ளைட்டில் கிளம்ப வேண்டும்.வெள்ளிக்கிழமையே கோபியின் முகம் சிறுத்து விட்டது. அவன் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தான்.

அப்பாவின் கால்களைக் கட்டிக் கொண்டு, கண்களில் நீர் தேங்க, அண்ணாந்து அவன் முகத்தைப் பார்த்து, “டாடி, கட்டாயம் நீங்கள் இந்தியா போய்த் தான் ஆக வேண்டுமா?” என்று ஏக்கத்துடன் கேட்டான் கோபி.

“ஆமாண்டா கண்ணா, என்னுடைய விசா முடிவடைகிறது. மேலும் சர்ஜரிக்காக என்னுடைய பேஷண்ட்ஸ் சில பேர் காத்திருக்கிறார்கள். அதுவுமில்லாமல் உன் தாத்தாவும், பாட்டியும் என்னைப் பார்க்க ஆவலாக இருப்பார்கள்” என்றான் நந்தகோபால்

“தாத்தாவும், பாட்டியும் உங்களைப் பார்க்க ஆவலோடு இருப்பார்களா? டாடி, அந்த ஆவல், என்னைப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்கும் இருந்ததா?” என்றான் கோபி கேள்விக் குறியோடு முகத்தை ஏறிட்டுப் பார்த்து.

நந்தகோபால் மகனின் கேள்வியைக் கேட்டு அதிர்ந்தான். ஏதோ வேலை செய்து கொண்டே, இவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மஞ்சுளா கூட வியப்படைந்தாள். மகனின் கேள்விக்கு தந்தை அளிக்கும் பதிலைக் கேட்க, மஞ்சு கூட ஆவலுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்

“கண்ணா! முதலில் ஒரு வருடம் முறையோடு வாழும் வாழ்க்கைத் தெரியாமல், ஏதோ ஒரு பைத்தியத்தில் நான் உன் அம்மாவிடம் கோபமாக இருந்தேன். அப்போது பிரிந்து சென்ற உன் அம்மா, வந்து விடுவாள்; அவளோடு நீயும் வந்து விடுவாய் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அந்தப் பிரிவு என்னால் நிரந்தரமானதும் எனக்கு உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்து, கடந்த ஒரு வருடமாக மிகவும் வேதனையடைந்தேன். உன் அம்மா எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. பிறகு உன் அம்மா வேலை செய்த பல்கலைக்கழகம் மூலம் தெரிந்து கொண்டு இங்கே வந்தேன். உங்களோடு பத்து நாட்களும் தங்கி விட்டேன்” என்றான் நந்தகோபால் பெருமூச்சுடன்.

ஸான்பிரான்ஸிஸ்கோ ஏர்போர்ட்டில் தன் பெட்டிகளை செக்- இன் செய்து விட்டு வெளியே காத்திருக்கும் மஞ்சுவிடமும் கோபியிடமும் திரும்பி வந்தான் நந்தகோபால். வந்தவன் கோபியைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான். அவன் கண்கள் கலங்கியிருந்தன, காது மடல்கள் கூட சிவந்திருந்தன.

மஞ்சுவின் அருகில் வந்து, ”மஞ்சு, என்னை மன்னிப்பாயா? நான் உனக்கு செய்தது மிகப் பெரிய துரோகம். நீ என்னை மன்னிக்காவிட்டால் சாகும் வரை உன் நினைவுகளோடும், கோபியின் நினைவுகளோடும் தான் வாழ வேண்டும். சத்தியமாக நான் திருந்தி விட்டேன். நாம் சேர்ந்து வாழ ஒரு சந்தர்ப்பம் தருவாயா மஞ்சு?” என்று அவள் கைகளைப் பிடித்து கெஞ்சினான்.

(தொடரும் – புதன் தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

கங்கையின் சங்கமம் (சிறுகதை) – ✍ கீதா இளங்கோ, புதுச்சேரி

ஏக்கமும் ஏகாந்தமும் (சிறுகதை) – ✍ மீனாட்சி அண்ணாமலை, சென்னை