in

வசந்தத்தில் ஒருநாள் ❤ (சிறுகதை) – ✍ சக்தி ஸ்ரீநிவாஸன்

வசந்தத்தில் ஒருநாள் ❤ (சிறுகதை)

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சோஃபாவில் அமர்ந்தபடி தன் முன்னே பரப்பியிருந்த கீரைக் கட்டிலிருந்து  கீரைகளைக் கிள்ளியபடி, தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த  கைபின்னல் குறித்த செயல்முறை விளக்கத்தில் ஒரு கண்ணுமாக இருந்தாள் சரோஜா.

சமையலறையில் மதிய உணவிற்கான வேலைகளில் மும்முரமாயிருந்த மதுமிதா, பொரியலுக்கு காய் எடுக்க குளிர்சாதனபெட்டியைத் திறந்த போது தான், இன்றைய சமையலுக்கு மட்டுமே காய்கள் இருப்பதை அறிந்து, அடுப்பை அணைத்து விட்டு கடைக்குச் செல்ல ஆயத்தமானாள்.

“அம்மா… நான் கடைக்கு வரைக்கும் போயிட்டு வந்திடறேன். உங்களுக்கு குடிக்க மோர் தரட்டுமா?” என அவள் கேட்டதும்

“வேணாம்மா, மதியம் சாப்பிடறேன். ஏம்மா இந்த வெயில் நேரத்துல கடைக்குக் கிளம்பற? சாயங்காலம் தான் போகிறது” என்றாள் சரோஜா.

“இல்லம்மா, காய் மளிகை பழம் எல்லாமே குறைவாத் தான் இருக்கு. பக்கம் தானம்மா கடை, சீக்கிரமா போயிட்டு வந்திடறேன். நீங்க கதவைப் பூட்டிக்கோங்க. யார் வந்தாலும் கதவைத்  திறக்காம பேசுங்க, வரேன்ம்மா…” என்றபடி வாசலுக்கு நகர்ந்தாள்.

காலணி அணிந்தவள் வீட்டின் வெளிக்கதவைத் திறந்ததும் தான், பின் வாசலைத் தாளிடாதது மதுமிதாவின் நினைவிற்கு வந்தது. உடனே வீட்டின் பின்பக்கமாக சென்றாள்.

“சரோஜா   சரோஜா…” குரல் கேட்டு வாசலில் வந்து பார்த்தாள்  சரோஜா. பக்கத்து வீட்டு விமலாவும் பிரேமாவும் வந்திருந்தனர்.

“வாங்க வாங்க” என்றபடி வரவேற்ற சரோஜா, இருவரும் அமர்ந்தபின் குளிர்பானம் அளித்து அவர்களை உபசரித்தாள்.

“பக்கத்துல இருக்கோம்னு தான் பேரு. எங்க அடிக்கடி நாம பேசிக்க முடியுது?” என்ற விமலாவின் குரல் பின்வாசல் வழியாக வீட்டினுள் நுழைந்த மதுமிதாவின் காதில் விழுந்தது. மெதுவாக ஹாலில் எட்டிப் பார்த்தாள்.

வதந்தி பிரியர்களான விமலாவும் பிரேமாவும் வந்திருக்கிறார்களே என்று நினைத்தவுடன் அவளுக்கு கலக்கம் வந்தது.

இவர்கள் இருவரும் எந்த வீட்டிற்கு சென்றாலும் அந்த வீட்டு மாமியாரோ  மருமகளோ   தங்கள் எதிரணியினரிடம் இருந்து பலத்த எதிர்ப்பையும் பிரச்சனையையுமே சந்திப்பர்.

தன்னிடம் மிகுந்த வாஞ்சையுடன் இருக்கும் மாமியார் சரோஜா கூட, இவர்கள் வந்து சென்றால், மூன்று நாட்களுக்காவது பாராமுகமாய் அல்லது முரணாயிருப்பதும், இதன் தாக்கத்தை தன் கணவன் விநோத் மூலமாக தெரிவிப்பது என, சில மனஸ்தாபங்களினால் மூவரின் நிம்மதியுமே மூன்று நாட்களுக்கு குறைவு தான்.

எப்படியோ மாமியாரை சமாதானம் செய்து பழைய அன்பு நிலைக்குத் திருப்புவாள் மதுமிதா. மாமியார் மிகவும் நல்லவர் தான். ஆனாலும் இவர்களின் தூபம் அவர் மனதை மாற்றும்.

அதனால்… அவர்கள்  இருவரின் வதந்திகளுக்கும் தகிடுதத்த வித்தைகளுக்கும் எதிரான வியூகத்தை அமைக்க வேண்டி சமையலறையை தஞ்சம் அடைந்தாள், அவர்கள் மூவரும் அறியாவண்ணம்.

“முந்தா நேத்து தான பார்த்தோம் நாம. உன் முழங்கால் வலி பரவாயில்லையா? விமலா, நான் சொன்ன அந்த தைலத்த தடவினியா? என் மருமக ஒருமுறை வாங்கிக் கொடுத்தது. எனக்கு வலி நல்லா கேட்டுது. அதான் உனக்கு சொன்னேன்”  என்று சரோஜா சொன்னதும்

“ஆமா… நீ எப்பவும் மருமகள தலை மேல தூக்கிவச்சு ஆடுவ.  அதெல்லாம் நான் உபயோகிக்கல. என் அண்ணன் பையன் ஆர்த்தோ டாக்டர் ஆச்சே. வர்ற சனிக்கிழமை அவன வீட்லயே நேர்ல பார்த்துக்கிறேன். அப்படியே என் அண்ணன பார்த்த மாதிரியும் இருக்கும்” என்றாள் 

‘இதோட நூறு முறை சொல்லியிருப்பா… ஒருதடவை கூட அந்த டாக்டர பார்த்ததே இல்ல. நம்மகிட்டயே வந்து மருந்தையும் தைலத்தையும் கேட்பா’ என நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் சரோஜா.

“ஆமா சரோஜா… நீ உன் மருமகள இப்படி உசத்தியா பேசறதாலத் தான் அவ… அவ போக்குக்கு இருக்கிறா”  என ஆரம்பித்தாள் பிரேமா.

பதில் ஏதும் கூறாத சரோஜாவின் மௌனத்தை சாதகமாக எடுத்துக் கொண்டு தூபம் போட ஆரம்பித்தனர் இருவரும்.

“நாம எல்லாரும் முப்பது வருஷமா இந்த தெருவில இருக்கோம். நாமும் மருமகள்களாத் தான் புகுந்த வீட்டுக்கு வந்தோம். மாமியார் சொல்லே மந்திரம்னு அவங்க பேச்ச கேட்டு நடந்தோம். எனக்கு இப்பவும் நினைவிருக்கு.  உன் வீட்டுக்காரரு கட்டின இந்த வீட்டுக்கு உன் மாமியார், மாமனார், கல்யாண வயசுல   ரெண்டு நாத்தனாரு, படிச்சிட்டிருந்த அவரு தம்பிங்கனு அத்தன பேரோட கிரகப்பிரவேசம் முடிந்து குடித்தனம் வந்த.

உனக்கும் மூணு பிள்ளைங்க ஆகி, நாத்தனாருங்க கல்யாணம் முடிச்சு, மச்சினர்கள ஆளாக்கி குடும்பம் அமைச்சிக் கொடுத்து, உங்க வீடு முழுக்க குழந்தைங்க சத்தத்தோட எப்பவும் கலகலனு சந்தோஷமா இருக்கும்.

உன் மூத்த பிள்ளை கல்யாணம் முடிந்து பெங்களூர்ல குடும்பத்தோட இருக்கான்.  கடைக்குட்டி புவனா அமெரிக்காலயே புருஷன் குழந்தைகளோட செட்டில் ஆயிட்டதால, அவங்க குழந்தைங்கள சின்னதுல பார்த்தபடி சரி. 

நீயும் விநோத்தும் அந்த குழந்தைங்க மேல எவ்ளோ உயிரா இருப்பீங்க. மகராசி அவப் பாட்டுக்கு வேலைக்குப் போயிடுவா. நீயும் விநோத்தும் தான குழநதைகளை  கவனிச்சிப்பீங்க. இப்ப அதுங்கள நாங்க கண்ணால பார்த்ததுக் கூட இல்ல. புவனா இங்க வந்து  அஞ்சாறு வருஷம் இருக்குமா?…

எங்கள எடுத்துக்கோ.  உன்ன விட வசதி குறைவு தான். ஆனாலும் பேரன் பேத்திகளோட எவ்வளவோ ஆனந்தமா இருக்கோம் தெரியுமா? அவங்க ரெண்டு பேரையும் விட்டுத் தள்ளு. ஏதோ தொலைவில இருக்காங்க. உன் பையன்  வினோத் விரும்பறான்னு அவன் கூட வேலை பார்த்த பொண்ண சாதி, அந்தஸ்து எதுவும் பார்க்காம கல்யாணம் பண்ணி வச்சே ரெண்டு வருஷம் முன்னாடி.  

பத்து பதினைந்து குழந்தைங்க ஓடியாடின வீட்ல, இப்படி குழந்த சத்தமே கேட்காம இருக்கே. நீ ஒண்ணும் அவங்கள கேட்கிறது இல்லையா? பிள்ளைய விடு,  அவனுக்கு என்ன தெரியும்? உன் மருமகள கேட்க வேணாமா? ஏதோ மனசு கேட்காம நாங்க சொல்றோம். அப்புறம் உன் இஷ்டம். சரி நாங்க வரட்டுமா?”  என வந்த வேலை முடிந்த திருப்தியில் அடுத்த வீட்டுக்கு நகர்ந்தனர்.

எல்லாவற்றையும் கேட்டு மௌனம் சாதித்த மாமியாரின் போக்கை எண்ணிக்  கோபம் கொண்டாள் மதுமிதா.

இப்போது வம்புப் பேசி சென்றவர்களின் குடும்ப நிலவரம் ஒன்றும் அவ்வளவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது அப்பகுதியிலுள்ள அனைவருக்குமே தெரியும்.

விமலாவிற்கும் அவள் மாமியாருக்குமான பனிப்போர் அந்த ஏரியா பிரசித்தம். அவர்கள் சண்டையின் முடிவில் எண்பது வயது மாமியாரை மகள் வீட்டிற்கோ சில மாதங்கள் கிராமத்திற்கோ   துரத்தி விடுவது, அதன் உச்சகட்டமாக ஒரு வருடம் முதியோர் இல்லத்தில் கூட விட்டவள்

அதனைச் சரிக்கட்டும் வகையில் விமலாவிற்கு வாய்த்த மருமகள் ப்ரீத்தியோ, மாமியாருக்கு தான் சளைத்தவள் அல்ல என விமலாவின் வினைக்கான வினையைப் பரிசாய் விதைத்தாள்.

பிரேமாவின் வீட்டு நிலவரம் வேறு மாதிரியானது.  இவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவும் எல்லா பொறுப்புகளையும் கொடுப்பது போலவும்  கொடுத்து இருக்கின்ற  வேலைகளையும் இவள் தலையில் கட்டி விட்ட மருமகள்கள். சம்பளமில்லா வேலைக்காரியாய் பேரன் பேத்திகளிடம் கூட மரியாதை இழந்த வாழ்வில் சுகம் காண்பவள்.

இவர்கள் சரோஜாவிடம் வத்தி வைப்பது போல் அவர்கள் மருமகள்கள் இவளிடம் மாமியார்களுக்கெதிராக போர்க்கொடி தூக்குவதற்கான யுக்திகளைக் குறித்துப் பகிர்வார்கள்.

மதுமிதாவிற்கும் சரோஜாவிற்கும் இடையில் நல்ல புரிதலும்   பரஸ்பர அன்பும் மரியாதையும் இருந்ததால், இதுவரை அவர்களுக்குள் பெரிய  விரிசல் ஏற்பட்டதில்லை.

அப்படியிருக்கும் போது, அவர்களது குற்றச்சாட்டிற்கு எதிராக எதுவும் பேசாமல் அவர் மௌனம் சாதித்ததில் இருந்து, மாமியாருக்கும் இவ்விஷயத்தில் உடன்பாடு இருக்குமோ என்றே தோன்றியது.

கணவன் மனைவி அந்தரங்கத்தில் தலையிடுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இதுவரைக்கும் குழந்தை பற்றி நேரடியாகவோ நாசுக்காகவோ இவர்களிடம் சரோஜா கேட்டதே இல்லை. அதனாலேயே மாமியாரின் மௌனம் அவளுக்கு வருத்தத்தை அளித்தது.

இந்த விஷயம் குறித்து கணவனிடம் பேசினால், அவன் கூறும் சமாதானம் ஒத்துக் கொள்ளும்படி இருந்தாலும், எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளும்படி இருக்காது என்பதே இவளது எண்ணம்.

மாதங்கள் மூன்று கடந்து, ஒரு வெள்ளிக்கிழமை அன்று  கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்து பிரகாரத்தைச் சுற்றி வரும் போது, அங்கு வந்த விமலாவின் மருமகள் ப்ரீத்தி, மதுமிதாவைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.

“என்ன மது… சௌக்யமா? நாம பார்த்து ரொம்ப நாளாயிடுச்சுல.  நானும் வேலை விட்டு வர்ற நேரமாயிடுது. வந்தாலும் வீட்ல வேலையே ஓய மாட்டேங்குது. ரெண்டு வயசானதுங்களும் நோயாளிங்க என்கிறதால அதுங்களுக்கு டயட் சாப்பாடா பண்ண வேண்டியிருக்கு.

சரி என் விஷயம் இருக்கட்டும். என் மாமியார்  அந்த பிரேமாகிட்ட போன்ல பேசிட்டு   இருந்துச்சு. ரெண்டு மாசமா உன் மாமியார் இதுவரைக்கும் மூணு பொண்ணுங்களப் போயி பார்த்துருக்காங்க தன் பையன் ரெண்டாவது கல்யாணத்துக்கு. 

அதுக்குக் காரணமா உன் பேர் தான் அடிபட்டது அவங்க பேச்சில. உங்க பெர்சனல்ல நான் தலையிட விரும்பல. ஆனா நீங்க குழந்தை விஷயத்த தள்ளிப் போட்டதால உன் மாமியார் தன் பிள்ளைக்குப் பெண் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கு.  இத நீ சாதாரணமா நினைச்சி விட்டுடாத. 

உடனே உன் வீட்டுக்காரர் கூட கலந்து பேசி அம்மாவ சரிக்கட்ட பார்க்கச் சொல்லு. இல்லையா நீங்க தனிக்குடித்தனம் கிளம்பிடுங்க.  இந்த கிழடுங்க என்னிக்குமே நம்ம சந்தோஷத்துக்கு இடைஞ்சல் தான்” எனப் பேசிக் கொண்டே போக, அவளிடம் அவசரமாக விடைப்பெற்றுக் கொண்டு   வீடு திரும்பினாள் மதுமிதா.

வீட்டினுள் நுழையும் பொழுதே, சரோஜா யாரிடமோ தொலைபேசியில் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டு இருந்தாள்.

“ஆமா… எனக்கு இந்த இடம் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. பொண்ணு நல்லா படித்து பெரிய வேலையில இருந்தாலும், ரொம்ப மரியாதை தெரிஞ்சவளாவும் இருக்கா. கண்ணுக்கு லட்சணமா அந்தஸ்தோட பொண்ணு கிடைக்கும் போது விட மனசு வருமா? நேரா கல்யாணத்தப் பேசி முடிவு பண்ணிடலாம். பையன் முடிவுக்குத் தான் காத்திருக்கேன்” எனப் பேசியபடி மதுமிதாவைப் பார்த்ததும் குரலைத் தழைத்தபடி, “சரி நாம அப்புறமா பேசலாம்” என்றபடி   ஃபோனைக் கீழே வைத்தாள்.

ஒன்றுமே நடக்காதது போல், “என்னம்மா கோயிலுக்குப் போய் இருந்தியா? நான் உள்ள படுத்திருந்து புத்தகம் தான படிச்சிட்டு இருந்தேன். சொல்லி இருந்தா நானும்  வந்திருப்பேனே. வெளில வேற பூட்டிக்கிட்டு சாவியக் கையோடக் கொண்டு போயிட்ட. எனக்கும்  கொஞ்சம் வெளியில் போக வேண்டிய வேலை இருந்தது.  அதான் கேட்டேன்” என சொன்னதும்…

“அம்மா!  நீங்க சொல்றது ஆச்சரியமா இருக்கு. நீங்க தான்  கொஞ்ச நாளாகவே நினைச்சவுடனே எங்கேயாவது கிளம்பிடறீங்க. என்கிட்டயோ உங்க பிள்ளைகிட்டயோ சொல்லிட்டா போறீங்க?” என மதுமிதா கேட்டதும்

இவர்களின் உரையாடலின் விபரீதத்தை, வெளிவாசல் கதவைத் திறந்து உள்ளே நுழையும் போதே உணர்ந்துக் கொண்ட வினோத், ” அம்மா! மது!   ஆஃபிஸ்ல ரொம்ப நாள் நான் எதிர்பார்த்திட்டிருந்த பிரமோஷன் ஆர்டர் இன்னிக்குத் தான் கிடைச்சுது. எனக்கு இப்பவே ஸ்வீட் சாப்பிடனும் போல இருக்கு. நானே வாங்கிட்டு வரணும் என்று தான் நினைச்சேன், டயர்டுல அப்படியே வண்டி ஓட்டிட்டு வந்துட்டேன். அதனாலென்ன? மது கேசரி செஞ்சு கொண்டு வர்றியா?” என்றதும்

“உங்கம்மா உங்களுக்காக பார்த்து வச்சிருக்கிற  பெண் வீடுகளுக்குப் போங்க. அவங்க நீங்க கேட்கிற பஜ்ஜியும் கேசரியும் அள்ளித் தருவாங்க” என பொரிந்துத் தள்ளினாள் மதுமிதா. 

இத்தருணத்திலும் மௌனம் காத்து நின்ற மாமியாரைப் பார்த்ததும் கோபம் மேலும் கூடியது அவளுக்கு.

“மது! என்ன பேசற நீ, அமைதியாயிரு. அம்மா, இதுவரைக்கும் மது குரல் உயர்த்திப் பேசி நான் கேட்டதே இல்ல.  என்கிட்டேயாவது சில நேரம் சத்தம் போட்டு பேசுவா. ஆனா உங்கக்கிட்ட இப்படி விவாதம் செய்து நான் பார்த்ததே இல்ல.

என்னம்மா எதுவும் பேசாம இருக்கீங்க. எனக்கு நீங்க பொண்ணுப் பார்க்கறீங்களா ? உங்க மருமககிட்ட அப்படி என்ன குறை கண்டுப்பிடிச்சீங்க? இந்த பக்கத்து வீட்டுக்காரங்க பேசியது எல்லாம் எனக்குத் தெரியும்மா.  அவங்க என்ன ஓதிட்டுப் போனாங்க?

இப்பவே நான் போய் கேட்கிறதுல அவங்க நிலைமத் தான் மாறப் போகுது. புரணியும் வதந்தியும் பேசற அவங்க வேலைக்கு இன்னிக்கே முடிவுக் கட்டுறேன்” எனக் கோபத்தில் இருந்த மகனைப் பார்த்து…

“எதுவும் தெரியாம ஏன் ரெண்டு பேரும் இப்படி குதிக்கிறீங்க. நெருப்பில்லாம புகையாதுனு ஒரு பழமொழி தெரியுமா உங்களுக்கு?”  என சரோஜா ஆரம்பித்ததும் இடைமறித்த மதுமிதா

“புரியுது அத்தே!   இந்த வீட்டில இன்னும் குழந்தை சத்தம் கேட்கலங்கிற உங்க எண்ணத்தை நீங்க வெளிப்படுத்தாம உள்ளுக்குள்ளேயே புழுங்கிட்டு இருந்தீங்க. அவங்க அத வெளிப்படையா சொல்லி உங்கள் உசுப்பி விட்டதும்… இதான் சாக்குன்னு பிள்ளைக்குப் பெண் பார்க்கக் கிளம்பிட்டீங்க” எனக் குமுறியவளை வியப்புடன் பார்த்தாள் சரோஜா.

“மூச்சுக்கு மூச்சு அம்மா அம்மான்னு கூப்பிடறவ இன்னிக்கு என்னை அத்தேன்னு கூப்பிடுற. ஆனா கேட்க நல்லாத் தான் இருக்கு. ஏம்மா!  நீ படிச்சவ இப்படியா பாமரத்தனமா இருக்கிறது? கண்ணால காண்பதும் பொய், காதால கேட்கிறதும் பொய்யின்னு  உனக்கும் தெரியும் இல்ல?  அதனாலத் தான் தீர விசாரிப்பது என்று இந்த விசாரணையா?

அவங்க என்ன சொன்னாலும் அதுக்கு ஆமோதிச்சு நான் பேசி இருக்கேனா? அவங்கள மறுத்துப் பேசி இருந்தேன்னா அந்த வேலையை உன்கிட்ட தொடங்கி இருப்பாங்க. அவங்க மருமகளுங்க அந்த வேலையை உன்கிட்ட நிச்சயம் செஞ்சிருப்பாங்க. சரி தானே?

ஸ்திரமான புத்தியிருந்ததாலத் தான் நாம ரெண்டு பேருமே அவங்க பேச்சப் பொருட்படுத்தல. நம்ம ரெண்டு பேரோட உலகமே வினோத் என்பதும் இன்னொரு காரணம். 

பெண்கள் பொருளாதாரத்துல சுயமா நிற்கனும் என்கிறது என் எண்ணம். வினோத்துக்கு உன்னை வேலைக்கு அனுப்புறதுல விருப்பம் இல்லன்னு தெரிஞ்சதும், நான் அந்த விஷயத்துல தலையிடல. நான் வேலைக்குப் போகல. ஆனாலும் புவனாவ படிச்சு முடிச்சதும் வேலைக்குப் போகச் சொன்னேன் இவங்க அப்பா விருப்பத்தை மீறி.

இந்த குழந்தை விஷயத்துல நான் தலையிட விரும்பல. பேரன் பேத்தியப் பார்க்கணும் கொஞ்சணும் என்கிற ஆசை எனக்கு இருந்தாலும் உங்க அந்தரங்கத்தில தலையிட எனக்கு விருப்பமில்ல.  என் பிள்ளைங்க மூணு பேரோட சொந்த விஷயங்களில் என் தலையீடு எப்பவுமே இருக்காது.

அதோட உங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் தானே ஆகுது. குழந்தை எப்போ உண்டாகிறதோ அப்போ தானா வரப் போகுது. அப்புறம் எதுக்கு இந்த பெண் பார்க்கிற படலம்னு தானே கேட்கிறீங்க?

சிங்கப்பூர்ல என் ஊரு சிநேகிதி இருக்கா.  ஊர்ல நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா வளர்ந்தவங்க. நாங்க பத்தாவது படிக்கும் போதே அவ கல்யாணமாகி இங்க சென்னைக்கு வந்துட்டா.  இருபது வருஷம் முன்னாடி சிங்கப்பூர்லேயே குடும்பத்தோட செட்டிலாயிட்டா. 

எங்க ரெண்டு பேருக்குள்ள ஆரம்பத்துல கடித போக்குவரத்து இருந்துச்சு. அப்புறம் இந்த ஃபோன்லாம் வந்தப்புறம் வாரம் ஒருமுறையோ மாசத்துக்கொரு முறையோ நாங்க ரெண்டு பேரும் எங்க உணர்வுகளப் பகிர்ந்துக்குவோம்.

சுலோச்சனா மகளுக்கு அங்கேயே பையனப் பார்த்து கல்யாணத்த முடிச்சிட்டா. பையன் யூகேல வேலைப் பார்க்கிறான். அவனுக்கு இங்க பெண் பார்க்க சொல்லியிருந்தா. அதனால தான் நான் எனக்குத் தெரிஞ்ச இடங்கள்ல சொல்லி வச்சு ஒரு இடம் தகைஞ்சுது. இப்பத் தான் அவகிட்ட விஷயத்த சொல்லிட்டு இருந்தேன். அதை அரைகுறையா கேட்டுட்டு மது கலாட்டா பண்ணிடுச்சு” என குறும்பாக பார்க்க, மதுவும் அசடு வழிந்தாள்.

கேட்டுக் கொண்டிருந்த விநோத், “அம்மா விளையாட்டு இருக்கட்டும். இப்ப நான் நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன். உங்களுக்கே தெரியும்மா, நான் இன்ஜினியரிங்  படிச்சிருந்தாலும் நான் தேர்ந்தெடுத்த துறையில பெரிய அளவுக்கு வேலை வாய்ப்பு இல்ல. நான் படிச்சு முடிச்சு ரெண்டு வருஷம் வேலைத் தேடி அலைஞ்சது உங்களுக்கேத் தெரியும்.

இப்ப வேலை செய்யற கம்பெனில பல ஒப்பந்தங்கள ஒத்துக்கிட்டு தான், அஞ்சு வருஷ காண்ட்ராக்ட் அக்ரிமெண்ட்ல கையெழுத்துப் போட்டு வேலைக்கு சேர்ந்தேன். அந்த ஒப்பந்தங்களில் ஒரு விஷயம், மூணு வருஷத்துக்குள்ள அவங்க சொல்லும் போது இந்தியாவில் எந்த நகரத்துக்கு வேணும் என்றாலும் மாறுதல் செய்வாங்க.  தேவை ஏற்படும் போது வெளிநாடுகளுக்கும் போக வேண்டி இருக்கும் என்று.

எனக்கு முன்னாலேயே அங்க அக்கௌண்ட் செக்க்ஷன்ல வேல பார்த்திட்டிருந்த மதுவை எனக்குப் பிடித்து, உங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அந்த சமயம் அப்பா போய் ஒரு வருஷம் ஆன நிலையில, உங்க ஆசிர்வாதத்துல எனக்கு அப்பாவோட வாழ்த்து தெரிந்தது.

இந்த ட்ரான்ஸ்ஃபர் பயத்துல தாம்மா நான் குழந்தை விஷயத்தத் தள்ளிப் போட்டேன். இது முழுக்க முழுக்க என் முடிவே தவிர, மதுக்கு இதுல சம்மதம் இல்ல. எனக்குக் குழந்தைங்கன்னா கொள்ளைப் பிரியம்னு உங்களுக்குத் தெரியும். நம்ம பிரவீண், விஷ்வா, ரேஷ்மா, ப்ருந்தா பிறந்தப்ப   நான் காலேஜ் தான படிச்சிட்டிருந்தேன். பிறந்ததுல இருந்து குழந்தைங்க அதுங்க ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துபடி.

அண்ணியும் அக்காவும் குழந்தை பிறந்த மூணே மாசத்துல வேலைக்குப் போனப்ப நம்ம ரெண்டு பேர்கிட்ட தான குழந்தைங்க விட்டுப் போனாங்க. அதுங்கள குளிப்பாட்டறது,  தூங்க வைக்கிறது,  ஊட்டறது இப்படி எல்லா விஷயங்களிலேயும் உங்கக் கூடவே நான் இருப்பேனேம்மா. 

குழந்தை வளர்ப்பு எவ்வளவு அழகானது, எவ்வளவு ரசனையானது, குழந்தைய விட ஒரு சொர்க்க உலகம் வேற இருக்கா. அதுங்களோட ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்க்க தவற விடலாமா? அதனால தான், மதுவை வேலைக்கு அனுப்பப் பிரியப்படல. தேவையும் சூழ்நிலையும் இருந்து, அவளும் வேலைக்குப்  போகப் பிரியப்பட்டா, நான் தடுக்க மாட்டேன்.

ஆனா அவளுக்கும் போக விருப்பமில்லைனு சொல்லிட்டா. என்னோட குழந்தையோட ஒவ்வொரு பருவத்தையும் வளர்ச்சியையும் பார்க்கிறத நான் தவற விட விரும்பல. குழந்தை பிறந்தவுடனே, ஒருவேளை எனக்கு வேலை மாறுதல் கிடைச்சா, அப்பா பாசம் என் குழந்தைக்குக் கிடைக்காம, அதோட ஒவ்வொரு அசைவையும் பார்த்து சந்தோஷப்படாம தவிப்போட இருக்கிற நிலைமையில நான் இருக்கவும் மனசுப் பிரியப்படல.

நீங்களும் இதப்பத்தி பேசாம நாசுக்கா இருந்ததால, நாங்க உங்கக்கிட்ட இதப்பத்தி சொல்லல. இப்ப அந்த ஒப்பந்தம் காலாவதி ஆயிடுச்சு. அதோட அஞ்சு வருஷ வேலை நிறைவோட, என் திறமைக்கு அங்கீகாரமா பதவி உயர்வும் கிடைச்சிருக்கும்மா” என்று  பேச்சை முடித்த விநோத்தை

மகிழ்வுடன் பார்த்தவாறு, “மது… ஆனந்தம் எப்போ நம்ம வீட்டுக்கு வரப் போகுதுனுக் காத்திருந்தேன். உன் புருஷன் பிரமோஷனோட, நம்ம எல்லாரோட பிரமோஷனுக்காகவும் நானே ஸ்வீட் செஞ்சு கொண்டு வர்றேன். என்ன பார்க்கறீங்க? நீங்க ரெண்டு பேரும் அப்பா அம்மாவா பிரமோஷன் ஆகப் போறீங்க.   எனக்கு பாட்டி பிரமோஷன். சரி தானே” என்றவள் 

கடைக்கண்ணால் விநோத்தை பார்த்தபடி முகம்சிவந்த மதுமிதாவைப் பார்த்து, “என்னம்மா மது, நான் எதையும் கவனிக்காத மாதிரி இருந்தாலும், உங்க ரெண்டு பேரையும் என் கண்காணிப்புலத் தான்   வச்சிருக்கேன். நீ ரெண்டு மாசமா தலைக் குளிக்காம  இருக்கிறது எனக்குத் தெரியாதுனு நெனச்சியா? எப்ப சின்னக் கண்ணனோ சின்ன ராதையோ நம்ம வீட்ல தவழ வரும் என்று தான் காத்திட்டு  இருக்கேனே. 

உன் புருஷனுக்கு இந்த விஷயம் தெரியுமோ தெரியாதோ, நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் முதல்ல கோயிலுக்குப் போயிட்டு அப்படியே டாக்டரையும் பார்த்துட்டு வந்து எனக்கு நல்ல சேதி சொல்றீங்க, சரியா?” என்றதும், கண்களில் நீர் பனிக்க சரோஜாவின் கால்களைப் பணிந்தாள் மதுமிதா

உடன் சேர்ந்த விநோத்தும் அவள்  வாழ்த்தை  வேண்டினான்.

மனதார வாழ்த்தியவளைப் பார்த்து, “அம்மா… சின்ன வயசுலலேயே அம்மாவை இழந்த நான், இந்த வீட்டுக்கு வந்து உங்களப் பார்த்ததும் அம்மான்னு மனசார கூப்பிட ஆரம்பிச்சேன்.  இத்தன நாள்ல, இன்னிக்குத் தான் உங்கள ஏதோ பதட்டத்துல அத்தேன்னு கூப்பிட்டேன்.

நான் ஆரம்பத்திலேயே எல்லா விஷயத்தையும் உங்கக்கிட்ட சொல்லி இருக்கனும். கூச்சத்தாலேயோ என்னவோ, நான் சொல்லாததற்கு என்னை மன்னிச்சிடுங்க. இப்படி உங்கக்கிட்ட சத்தம் போட்டு பேசினதுக்கும் மன்னிச்சிடுங்க.

உங்க தங்கமனசப் புரிஞ்சிக்காதது தான் காரணம். உண்மையாகவே நாளைக்கு உங்களக் கூட்டிட்டு டாக்டர்கிட்ட போய் உறுதிபடுத்தினவுடனே விஷயத்த முதல்ல உங்கக்கிட்ட சொல்லனும்னு தான் நினைச்சேன். ஆனா எங்க ஒவ்வொரு அசைவும் உங்களுக்கு அத்துபடிங்கிறது இப்பத் தான் புரிஞ்சது. அம்மா!  நீங்க ஆசைப்படற சின்னக்கண்ணனா அப்பாவே நம்ம வீட்டுக்குத் திரும்ப வந்து, இந்த வீட்லயும் உங்களுக்குள்ளேயும் ஆனந்தம் முழுக்க நிறைக்க செய்வார்மா” என கூறினாள் மது.

வேடிக்கைக்காக  இருவரையும் கேசரி தயாரிக்கும்படி கூறிய விநோத், தான் கையோடு வாங்கி வந்திருந்த  ஸ்வீட் பாக்கெட்டைத் திறந்து, தன் அம்மா வாய் நிறைய இனிப்பைத் திணித்தான்.

திருமணத்திற்குப் பிறகு எத்தனையோ வசந்தங்களை மனமும் உடலும் சுகித்திருந்தாலும், இன்றைய சுபநாளே வசந்தத்தில் ஒருநாள்…திருநாள், என்ற நெகிழ்வுத் தந்த நிறைவுடன், சரோஜா அளித்த இனிப்பை, விநோத்தின் அன்பும் பார்வையுடன் சேர்த்து சுவைத்தாள் மதுமிதா.

இது ஆனந்தம் குடிகொண்ட வீடு, வரப் போகும் புது அன்றிலுடன் இம்மூன்றும் உறவாடும் கூடு!!!

வசந்தமே வருக!!! இன்பம் தருக!!!

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இஞ்சி புளி – ✍ பத்மாவதி மாணிக்கம், கோவை

    அவளுக்கும் மனமுண்டு ❤ (சிறுகதை) – ✍ கவிஞர் இரஜகை நிலவன், மும்பை