in ,

வல்லினமாய் ஒரு மெல்லினம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“போகும் போதும்….வரும் போதும்…அந்த முள்ளுச் செடிகளைப் பார்த்துக்கிட்டேதானே போறே…வர்றே?….ஒரு மண்வெட்டியை எடுத்து, அதைக் கொத்தி எறியக் கூடாதா?… நீயும்தானே அதுல நடக்கறே?” வீட்டு ஓனர் என்கிற ஆணவம்…திமிர் கௌரியம்மாளின் பேச்சில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

பதிலேதும் பேசாமல் அமைதியாய் நின்று, அந்த முட்செடிகளை ஒரு பார்வை பார்த்து விட்டு, மெல்ல நகர்ந்தாள் விமலா.  மனசு மட்டும், “க்கும்…உங்க வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கறவங்க என்ன உங்க வீட்டு வேலைக்காரங்களா?…உன் வீடு…உன் இடம்…வேணும்ன்னா நீயே கொத்தி எறி….இல்லையா?…அம்பது நூறு கொடுத்து ஆளை விட்டுக் கொத்திப் போடு…அதை விட்டுட்டு…” என்று கூவியது.

“என்னடி நான் பேசிக்கிட்டேயிருக்கேன்… நீ பாட்டுக்கு போய்க்கிட்டேயிருக்கே?.. என்னைப் பார்த்தா உனக்கு அத்தனை எளப்பமா இருக்கா?”

“அது வந்து…இப்ப என்னால முடியாது…சமையலறைல கொஞ்சம் வேலையிருக்கு…சாயந்திரமா கொத்திடறேனே?” என்றாள் விமலா.  எப்படியும் சாயந்திரம் புருஷன் கூட வெளியில் போய் விடுவோம், என்கிற தைரியத்தில் சும்மாவாகிலும் சொல்லி வைத்தாள்.

வீட்டிற்குள்ளிருந்து இந்த சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த கௌரியம்மாளின் கணவர் தியாகராஜனுக்கு தன் மனைவி மீதுதான் ஆத்திரமாய் வந்தது.

“ச்சை…என்ன பொம்பளை இவ?…வாடகைக்கு இருக்கறவங்களை கொத்தடிமைக மாதிரியல்ல நடத்தறா?…போன வாரம்தான் இந்த விமலாவை அதட்டி…மிரட்டி…தண்ணித் தொட்டியைக் கழுவ வெச்சா…முந்தாநாளும் அவளை வாசல் பூராவும் சாணி போட்டு மெழுக வெச்சா…பாவம் அந்தப் பொண்ணு…வெளியூர்க்காரி…அதனால முழுங்கவும் முடியாம துப்பவும் முடியாம இவ சொல்றதையெல்லாம் கேட்டுக்கறா”

மதியம் இரண்டு மணியிருக்கும். ஓய்வாகப் படுத்திருந்த தியாகராஜனின் மொபைல் ஒலிக்க, நிதானமாய் எழுந்து போய் எடுத்துப் பார்த்தார். அவர் மகள் நந்தினிதான் அழைத்திருந்தாள்.

“ஹலோ…சொல்லும்மா” என்றபடி இணைப்பில் புகுந்த அவரை பேச விடாமல் மறுமுனையில் பொரிந்து தள்ளினாள் நந்தினி.

அவள் பேசப் பேச அவர் முகம் இருளுக்குப் போய்க் கொண்டேயிருந்தது.

அவளே அழைத்து, அவளே பேசி முடித்து விட்டு, இணைப்பிலிருந்து அவளே வெளியேறி விட, “தொப்”பென்று படுக்கையில் அமர்ந்தார் தியாகராஜன்.

“என்னங்க…யாரு கிட்டேயிருந்து போன்?…” கேட்டபடியே வந்த மனைவியிடம் மகள் பொரிந்த விஷயங்களை அட்சரம் பிசகாமல் அப்படியே பொரிந்தார் அவர்.

கேட்டு முடித்தவள், “மறுபடியும் என்னாச்சு இந்த நந்தினிக்கு?…இத்தனை நாளு மாமியார் கொடுமை…மாமியார் இம்சை”ன்னு போன் மேலே போன் போட்டு அழுதா…நாமளும் அதுக்கொரு முடிவு கட்டும் விதமாய் போன மாசம் நேர்ல போய்…மாப்பிள்ளை கிட்டேயும், அவரோட அம்மாக்காரி கிட்டேயும் பேசி…படாத பாடு பட்டு, நம்ம பொண்ணையும் மாப்பிள்ளையையும்  தனிக்குடித்தனம் வெச்சிட்டு வந்தோம்!….மறுபடியும் இப்ப என்ன பிரச்சினையாம் அவளுக்கு?…ம்ம்ம்…ஒருவேளை அந்த மாமியார்க்கிழவி அங்கேயும் போய்த் தொந்தரவு பண்ணுதோ…என்னவோ?” மூச்சு விடாமல் பேசினாள் கௌரியம்மாள்.

இடையில் புகுந்த தியாகராஜன், “ஏய்…ஏய்…கொஞ்சம் மூச்சு விடுடி…உன் பொண்ணு ஒண்ணுமில்லாத விஷயத்தையெல்லாம் “பெரிய பிரச்சினை”ன்னு போன்ல சொல்லி…நம்மைக் களேபரப்படுத்தி… வரவழைச்சிட்டிருக்கா!…நாமும்…அவ போனை நம்பி…என்னமோ…ஏதோ…ன்னு அடிச்சுப் பிடிச்சு ஓடிடறோம்!…அதான் அவளுக்கு ரொம்ப தெனாவெட்டாப் போச்சு!…கெடக்கட்டும் கழுதை…இந்த வாட்டி நாம போகக் கூடாது…அவளே சமாளிக்கட்டும்” ஆணித்தரமாய்ச் சொன்னார் தியாகராஜன்.

கௌரியம்மாள் மட்டும் மனசு கேளாமல் கெஞ்ச ஆரம்பித்தாள்.  “அப்படிச் சொல்லாதீங்க…நம்ம பொண்ணுக்கு நம்மை விட்டா வேற யார் இருக்காங்க?…புருஷன்கிட்டே கூட ஓரளவுக்குத்தான் வெளிப்படையா பேச முடியும்…தாய்கிட்டேதானுங்க ஒரு பெண்ணால முழுக்க முழுக்க மனசு விட்டுப் பேச முடியும்…அதனால….” இழுத்தாள்.

“அதனால….?” சற்று உரத்த குரலில் கேட்டார் தியாகராஜன்.

“இந்த ஒரு தடவை மட்டும் போய் என்ன?…ஏது?ன்னு பார்த்திட்டு வந்திடுவோம்ங்க…” பேசும் போதே கௌரியம்மாளின் கண்களில் நீர் கோர்த்து கீழ் விழக் காத்திருந்தது.

தான் எவ்வளவுதான் மறுத்தாலும்…எதிர்வாக்குவாதம் செய்தாலும் இறுதியில் அவள் நினைத்ததுதான் சாத்தியப்படும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்த தியாகராஜன், “சரி…போவோம்” என்றார் சன்னக் குரலில்.

அன்று இரவு பஸ்ஸிலேயே இருவரும் கிளம்பி, மறுநாள் முழுவதும் மகள் வீட்டில் இருந்து விட்டுத் திரும்பினர்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள், காலை பதினோரு மணியிருக்கும். வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த கௌரியம்மாளின் கண்களில் முட்செடிகளை வெட்டிக் கொண்டிருக்கும் விமலா பட, அவசர அவசரமாக அவளருகில் ஓடிச் சென்றாள்.

“ஏம்மா…நீ எதுக்கும்மா இதை வெட்டிட்டு இருக்கே?…அதுவும் இந்த வெயில்ல…எந்திரிச்சுப் போம்மா…எவனாவது ஆளை விட்டு அம்பதோ நூறோ குடுத்து வெட்டிக்கலாம்” என்றாள் கௌரியம்மாள்.

விமலாவிற்கு தான் கண்பதென்ன கனவா?…இல்லை நிஜமா? என்றே சந்தேகமானது.

விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு விட்டுக்கார அம்மாளை வியப்புடன் பாத்த விமலா, “அம்மா…அன்னிக்கு நீங்கதான்….”

“அதை விடும்மா!…அன்னிக்கு ஏதோ கிறுக்குப் புத்தில அப்படிச் சொல்லிட்டேன்!…இனிமே இந்த மாதிரி வேலைகளையெல்லாம் நீ செய்ய வேண்டாம்!…தண்ணித் தொட்டி கழுவறது….வாசலைச் சாணி போட்டு மெழுகறது….எதுவும் வேண்டாம்!…நீயும் மனுஷிதானே?…வீட்டு வேலைகளையும் செஞ்சிட்டு…இதுகளையும் செய்யறது உனக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும்?…”

“அம்மா…அது வந்து…நாங்க…வாடகைக்கு…”

“வாடகைக்கு இருக்கிறோம் என்பதற்காக இதையெல்லாமா செய்வாங்க?…கூடாது…கூடாது” கௌரியம்மாள் சொல்லிக் கொண்டே போக, தலை “கிர்ர்ர்ர்”ரென்று சுற்றியது விமலாவிற்கு.

அதே நேரம், வீட்டினுள் ஜன்னலருகில் நின்று கொண்டு, இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த தியாகராஜன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.

அவர் மனத்திரையில் மகள் வீட்டில் நிகழ்ந்த நிகழ்வுகள் திரைப்படமாய் ஓடின.

“ஏண்டி…எதுக்குடு…சும்மா சும்மா போன் போட்டு எங்களை வரவழைக்கறே?…நீ பாட்டுக்கு போன் பண்ணிட்டு வெச்சிடறே…நாங்க அங்க இருப்புக் கொள்ளாமத் தவிக்கறோம்…என்னாச்சு?..எதுக்கு இப்ப எங்களை வரச் சொன்னே?…” வீட்டிற்குள் நுழைந்தும் நுழையாததுமாய்க் கூவினாள் கௌரியம்மாள்.

“முடியாதும்மா…என்னால் இதுக்கு மேலே ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுல இருக்க முடியாதும்மா” மகள் நந்தினியும் கூவினாள்.

“ஏண்டி அங்க மாமியார்க் கிழவி அராஜகம் பண்றாள்ன்னு சொன்னே…அதுக்காக படாதபாடு பட்டு தனிக்குடித்தனம் கொண்டாந்து வெச்சிட்டோம்…இங்கே என்னடி பிரச்சினை?”

“அங்கே மாமியார்க் கிழவி…இங்கே விட்டுக்காரக் கிழவி”

“வீட்டுக்காரக் கிழவியா?…என்னம்மா சொல்றே?”

“ஏம்மா…நாங்க வாடகை குடுத்திட்டுத்தானே இந்த வீட்டுல குடியிருக்கோம்…என்னமோ சும்மா குடி வெச்சிருக்கற மாதிரி வீட்டுக்காரக் கிழவி என்னை ஒரு அடிமையை விரட்டற மாதிரி விரட்டறாள்ம்மா…” நந்தினி சொல்லிக் கொண்டே போக கௌரியம்மாளின் முகம் வெளிறிப் போனது.

“எங்க ரெண்டு வீட்டுக்கும் பொதுவா இருக்கற…தண்ணித் தொட்டியை நாந்தான் வாரத்துக்கு ஒரு தடவை கழுவணுமாம்…” நந்தினி பெரிய குரலில் சொன்னாள்.

கௌரியம்மாள் பதிலேதும் பேசாது சிலையாய் நின்றிருந்தாள்.

“என்னம்மா…நான் என் கஷ்டத்தைச் சொல்லிப் புலம்பிக்கிட்டிருக்கேன்…நீ பாட்டுக்கு இடிச்ச புளீயாட்டம் நிக்குறே?…நேத்திக்கு…என்ன சொன்னா தெரியுமா?…வாசலுக்கு வெளிய முளைச்சிருக்கற முள்ளுச் செடிகளையெல்லாம் நாந்தான் கொத்தணும்மா!… ஹும்…எப்படியிருக்கு நியாயம்?”

அதுவரையில் அமைதியாயிருந்த தியாகராஜன் மெல்லக் கேட்டார். “இப்ப நாங்க என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கறே…அதைச் சொல்லு மொதல்ல”

“நீங்க அந்தக் கிழவிகிட்ட நேர்ல போய்…என் பொண்ணு எங்களுக்கு ஒரே பொண்ணு செல்லமா வளர்ந்த பொண்ணு…அவளுக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் செஞ்சு பழக்கமில்லை!…அவகிட்ட இந்த வேலையெல்லாம் குடுக்க வேண்டாம்!னு சொல்லிட்டுப் போங்க…” நந்தினி கோரிக்கை வைத்தாள்.

சில நிமிடங்கள் அமைதியாய் யோசித்த தியாகராஜன், மகள் சொல்வதிலும் ஒரு யதார்த்த நியாயம் இருப்பதைப் புரிந்து கொண்டு, “சரிம்மா..நான் இப்பவே போய் பேசிட்டு வர்றேன்” என்று சொல்லி விட்டு எழ, கௌரியம்மாளும் உடன் எழுந்தாள்.

அந்த நினைவுகளிலிருந்து மீண்டு சுயத்திற்கு வந்த தியாகராஜன் எதேச்சையாய் ஜன்னல் வழியே பார்த்த போது அங்கே கௌரியம்மாள் தானே ஒரு மண் வெட்டியை எடுத்து அந்த முட்செடிகளைக் கொத்திக் கொண்டிருந்தாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பீட்சா பாட்டி (சிறுகதை) – ரேவதி பாலாஜி

    ஊதுபத்தி மனிதர்கள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை