ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
இரவு ஏழு மணிக்கு வல்லபி தன் ஐ10 காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள்.
டாக்டர் பட்டம் பெற்று ஐந்து ஆண்டுகள் கிராமத்தில் பணிபுரிய வேண்டும் என்ற உண்மையான ஆர்வத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு வட்டத்தில் ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேரந்தாள்.
அந்த மருத்துவமனையில் இன்னொரு மருத்துவரும் உண்டு. ஆனால் அவர் தன் குழந்தைகளின் படிப்பைக் கருதி, கோவை அரசு மருத்துவமனைக்கு மாறுதல் கோரி விண்ணப்பித்து விட்டு விடுப்பில் இருக்கிறார். அதனால் அவர் பார்க்க வேண்டிய நோயாளிகளையும் இவளே கவனிக்க வேண்டி உள்ளதால் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
ஊரின் பேர்தான் மிக அழகு ‘தாமரைக் குளம்’. தாமரைக் குளங்களும், அல்லிக் குளங்களும் நிறைந்த அழகான ஊர்தான். ஆனால் ஊர் தான் சுத்தமில்லை.
திறந்தவெளிச் சாக்கடைகளும் போதிய அளவு குப்பைத் தொட்டிகள் இல்லாமல், தெருவெங்கும் வழிந்த குப்பைகளும், அதனால் எழும் நாற்றமும் சகிக்க முடியாதவை. மழைக் காலங்களிலோ கேட்கவே வேண்டாம். தெருவில் கால் வைத்து நடக்க முடியாது.
ஆனால் ஏனோ, எது எப்படி இருந்தாலும் அந்த ஊர் மிகவும் பிடித்திருந்தது. சென்னையில் மயிலாப்பூரில் தன் தாய் மல்லிகாவுடன் வாழ்ந்து வந்தாள் வல்லபி. வல்லபிக்கு சென்னையில் மிகவும் பிடித்த இடம் மைலாப்பூர்தான். கபாலீஸ்வரர் கோயிலும், குளமும் அவளுக்கு எத்தனை முறை சுற்றி வந்தாலும் சலிக்கவே சலிக்காது..
முதல் போஸ்டிங்ஸ் தாமரைக் குளம் என்றவுடன் வல்லபி கொஞ்சம் திகைத்தாள்.
நல்ல டீஸன்டான லொகாலிட்டியான மைலாப்பூரில் இருந்து விட்டு, தாமரைக் குளம் என்னும் சிற்றூரில் தன்னால் இருக்க முடியுமா என்று யோசித்தாள்.
அவள் தாய் மல்லிகாவோ ஊரின் பேரைக் கேட்டவுடன் மிகவும் அதிர்த்தாள். மல்லிகா எம்.எஸ்சி.,பி.எட். சென்னை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை.
அம்மாவின் திகைப்பைப் பார்த்த வல்லபி, “அம்மா, நீ அந்த ஊருக்குப் போயிருக்கிறாயா?” என்றாள்.
அவள் பதிலேதும் சொல்லாமல் தன் மாணவர்களின் டெஸ்ட் நோட்டைத் தீவிரமாகத் திருத்துவதற்கு ஈடுபட்டாள். அம்மா, பள்ளிக்கூட வேலைகளில் இருந்தால் யாருடனும் பேசமாட்டாள். வல்லபியும் அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை.
வல்லபி, தாமரைக் குளத்தில் முதலில் வேலையில் சேரும் போது, மல்லிகா தான் தன் மகளுடன் வந்து ஒரு நல்ல சுற்றுச்சூழலில் வீடு பார்த்து, சமையலுக்கு கனகா என்ற பெண்ணையும் ஏற்பாடு செய்து விட்டு சென்னைக்குத் திரும்பினாள். இப்போது அந்த சின்னஞ்சிறிய ஊரில் கனகா தான் அவள் தோழி, மற்றும் எல்லாம்.
பலவும் யோசித்துக் கொண்டு வரும்போது, அவளுடைய கார், அவளையறியாமல் அவள் வீட்டு வாசலில் வந்து நின்றது அவளுக்கு மிகவும் ஆச்சரியம் கொடுத்தது. அறிவியலில் படித்த அனிச்சை செயல் ஞாபகத்திற்கு வந்தது.
வல்லபியின் கார் சப்தம் கேட்டவுடனே கனகா ஓடி வந்து தெருக்கதவைத் திறந்தாள். காரை விட்டு இறங்கி வீட்டினுள் சென்று கொண்டே வல்லபி, “கனகா, எனக்காக வெயிட் பண்ணாதே! நீ போய் சாப்பிடு. நான் குளித்து விட்டு வந்து சாப்பிட கொஞ்ச நேரம் ஆகும்” என்றாள்.
“பரவாயில்லை அம்மா. நீங்கள் குளித்து விட்டு வாங்க. பாத்ரூமில் கெய்சர் போட்டு அரைமணி நேரம் ஆகிறது. உங்கள் சோப்பு, டவல் எல்லாம் உள்ளே வைத்திருக்கிறேன்” என்றாள் கனகா.
ஷாம்பூ போட்டு தலை குளித்து விட்டு, கருப்பு நிற நைட் பேன்ட், கருப்பு நிற டீ ஷர்ட்டில் வெளியே வந்தாள் வல்லபி. டிரையர் போட்டதால் அவள் சுருண்ட முடி மேலும் அழகாய்ப் பளபளத்து பறந்து கொண்டிருந்தது. கனகா அவளையே திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன கனகா அப்படிப் பார்க்கிறே? இரவு நேரத்தில் தலை விரித்துக் கொண்டு கருப்பு நிற நைட் டிரஸ்ஸில் பார்த்தால் பேய் மாதிரி இருக்கிறதா?” என்றாள் வல்லபி குறும்பாகச் சிரித்தபடி.
வல்லபியை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு ‘இல்லை’ என்று மெதுவாக தலையசைத்தாள்.
“இல்லை அம்மா! தேவதை மாதிரி தெரிகிறீர்கள். இந்த கருப்பு நிற நைட் டிரஸ்ஸில் உங்கள் சந்தன நிறம் மேலும் பால் போல் தெரிகிறது” என்றாள் கனகா.
“சரிதான், நீ என்ன திடீரென புலவராகி விட்டாய். ஆனால் எனக்கு ரொம்பவும் பசிக்கிறது. என்ன டின்னர்?” என்று கேட்டுக் கொண்டே டைனிங் டேபிள் சேரில் உட்கார்ந்தாள்.
“ஆப்பம், தேங்காய் பால், சிக்கன் குருமா அம்மா” என்று சொல்லியவாறே தட்டை எடுத்து வைத்தாள் கனகா. தட்டில் ஆப்பத்தை வைத்தவள், ஒரு கண்ணாடி பௌலில் தேங்காய்ப் பாலும், இன்னொன்றில் சிக்கன் குருமாவும் வைத்தாள்.
அந்த நேரத்தில் வல்லபியின் செல்போன் அழைத்தது.
“அம்மா, அதை ஆப் செய்யுங்கள். சாப்பிடும் போதும், தூங்கும் போதும் அதற்கு மூக்கில் வேர்க்கும். மத்தியானம் கூட சரியாக சாப்பிடவில்லை. சாப்பிட்ட பிறகு பேசிக் கொள்ளலாம்.”
“கனகா, நோ நோ, டாக்டர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் மிக முக்கியமானவை. பிறகு என்று தள்ளி வைத்தால், கேட்க முடியாமலே கூட போகும்”” என்றவள் போனை எடுத்து, “ஹலோ” என்றாள்.
“டாக்டர், இந்த நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். என் பெயர் விஷ்ணு. என் மாமா மிஸ்டர் மூர்த்திக்கு திடீரென பிட்ஸ் வந்து வாயெல்லாம் நுரை தள்ளுகிறது. நீங்கள் தயவு செய்து வரமுடியுமா?” மறு முனையிலிருந்து பதட்டமாக வந்த குரல்.
“நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்? உங்கள் வீடு எவ்வளவு தூரம்?” எனக் கேட்டாள் வல்லபி.
“கொஞ்ச தூரம் தான் டாக்டர். தயவு செய்து உடனே வர முடியுமா? நான் என் காரை எடுத்துக் கொண்டு வரட்டுமா டாக்டர்?” என்றான் பதட்டமாக.
“நீங்கள் வாருங்கள், நான் வருகிறேன்” என்றவள் போனை வைத்து விட்டாள்.
“என்னம்மா நீங்கள்? முன்னே பின்னே யோசிக்காமல் வருகிறேன் என்று கூறி விட்டீர்களே? அவன் நல்லவனோ இல்லை கெட்டவனோ? இந்த நேரத்தில் போய்த் தான் ஆக வேண்டுமா அம்மா?” என்றாள் கனகா,.
அவளுக்கு பதில் சொல்லாமல் வல்லபி, சலவை செய்த ஒரு காட்டன் புடவையைக் கட்டிக் கொண்டு கிளம்பத் தயாரானாள். அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாத கனகாவும் சுத்தமான வேறு புடவை மாற்றிக் கொண்டு ‘மெடிக்கல் கிட்’டு’டன் கிளம்பத் தயாரானாள்.
அதே நேரத்தில் வீட்டு வாசலில் ஒரு மாருதி ஸ்விஃப்ட் கார் வந்து நின்றது. அதிலிருந்து ஆறடிக்கும் குறையாத உயரத்துடன் ஒரு முப்பது வயது வாலிபன் வந்து இறங்கினான். ‘விஷ்ணு’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“இந்த இரவு நேரத்தில் நீங்கள் என்னை நம்பி வருவதற்கு மிக்க நன்றி டாக்டர். என் காரிலோ இல்லை உங்கள் காரிலோ போகலாம்” என்றான்.
“எனக்கு டிரைவர் கிடையாது. மேலும் நான் இப்போது தான் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தேன். என்னுடன் என் அசிஸ்டெண்ட் கனகா வருவாள்” என்றாள்.
கார் ஒரு பெரிய பங்களாவில் நுழைந்தது. பழைய கால பங்களாதான். பெயிண்ட் அடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருந்தது. பெரிய தோட்டமும், தென்னை மரங்களுமாக இருந்தது.
பார்க்க அழகாக, பணக்காரத் தோற்றத்துடன் இருந்தது. வெளியே விலையுயர்ந்த கார்கள் இரண்டும், ஒரு ஜீப்பும் நின்றிருந்தன.
உள்ளே நுழையும் போதே ஒரு பெரிய வெராண்டா. இரண்டு பக்கமும் குறைந்த உயரத்தில் அகலமான, வழுவழுப்பான காவி பூசப்பட்ட சிமென்ட் திண்ணைகள். ரொம்ப அழகாக இருந்தது.
பார்த்தவுடன் ஏறி உட்கார வேண்டும் என்று வல்லபிக்கு ஆசை வந்தது. அங்கிருந்து ரேழி என்றழைக்கப்படும் ஒரு நடை உள்ளே கூடத்தை இணைக்கும் பாலம் போல் இருந்தது.
அதையும் கடந்து ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான் விஷ்ணு. ஒரு பெரிய படுக்கை அறை, பெரிய கட்டில். அதில் நடுத்தர வயதைக் கடந்த ஒரு மனிதர் படுத்திருந்தார்.
நல்ல மஞ்சள் நிறம். உயரமும் கனமுமாகப் பார்க்கும் போது மரியாதை தர வேண்டும் என்ற எண்ணம் தன்னையறியாமல் தோன்றியது. பெங்காலி போன்ற தோற்றத்துடன் இருந்தார். அவரைப் பார்த்ததும் காரணம் இல்லாமல் உடம்பு சிலிர்த்தது வல்லபிக்கு.
அந்த மனிதர் கண்களை மூடிப் படுத்திருந்தார். அவருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை எல்லாம் டெஸ்ட் செய்தாள். வலிப்பு சில வினாடிகளே இருந்தது என்றும், ஆனால் இது முதல் முறையல்ல என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
ஒரு பெரியவரும், வயதான ஒரு பெண்மணியும் கட்டிலின் அருகில் உட்கார்ந்திருந்தனர். அவர்களைத் தன் பெற்றோர் என்றும், கட்டிலில் படுத்திருப்பவர் தன் மாமா என்றும் விஷ்ணு அறிமுகப்படுத்தினான்.
ஒரு இஞ்ஜெக்ஷன் போட்டு சில மாத்திரைகளும் கொடுத்தாள். வீடு திரும்ப மணி ஒன்பதாகி விட்டது.
“ரொம்ப நன்றி டாக்டர். இரவு நேரம் என்று கூடப் பார்க்காமல் என் பேச்சை நம்பி உடனே வந்தீர்கள். இதை நான் என்றும் மறக்க மாட்டேன்” என்றான் விஷ்ணு நன்றி பெருக்கெடுத்தோட.
“பரவாயில்லை என் கடமையைத்தான் நான் செய்தேன்” என்று சுருக்கமாகத் தன் பேச்சை முடித்துக் கொண்டாள் வல்லபி.
இடையில் ஒரு நாள் விஷ்ணுவிற்குப் போன் செய்து, அவன் மாமாவின் நலம் விசாரித்தாள் வல்லபி.
“நன்றாக, அமைதியாகத் தூங்குகிறார். பிரச்சனை ஒன்றும் இல்லை. ரொம்ப நன்றி டாக்டர்” என்றான்.
“சனிக்கிழமை என் தோழி டாக்டர் சுகந்தி வருகிறாள். நரம்பியல் டாக்டர். அவளை உங்கள் வீட்டிற்கு அழைத்து வருகிறேன். நீங்களும், உங்கள் மாமாவும் காலை பதினோரு மணி போல் வீட்டில் இருப்பீர்களா?”
“கட்டாயம்… எல்லோரும் உங்களுக்காகக் காத்திருப்போம்” விஷ்ணு.
“வல்லபி” எனும் இந்த நாவலை, நாளை (ஆகஸ்ட் 2, 2022) ‘சஹானா’ இணைய இதழ் மற்றும் ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் ஆண்டு விழா நிகழ்வில், அச்சுப்புத்தகமாக வெளியிட இருக்கிறோம்.
168 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை வாங்க விருப்பம் உள்ள வாசகர்கள், 77082 93241 என்ற WHATSAPP எண்ணில் மெசேஜ் அனுப்பி ORDER செய்யலாம். Google Pay Facility Available. நன்றி
(தொடரும் – திங்கள் தோறும்)
GIPHY App Key not set. Please check settings