#ads – Deals in Amazon👇
மாத போட்டிக்கான பதிவு (நவம்பர் 2021)
லண்டனுக்கு அலுவலக ப்ராஜெக்ட் நிமித்தமாகச் சென்றிருந்த அபர்ணா, கொரோனா லாக்டவுனில் மாட்டிக் கொண்டாள். ப்ராஜெக்ட் முடிய ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை ஆகலாம், அதுவரை இருந்து முடித்து விட்டு திரும்ப வேண்டும் என்கிற நிபந்தனையுடன், அவள் லண்டனுக்குச் சென்றிருந்தாள்
அபர்ணா – ராமசாமி சுசீலா தம்பதியரின் ஒரே மகள். அவர்களுக்குத் திருமணமாகி பதினைந்து வருடங்கள் கழித்து அபர்ணா பிறந்ததால், மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள்
படிப்பிலும் இன்ன பிற கலைகளிலும் படு சுட்டி. அதனால், தனக்குத் தெரிந்த அளவுக்கு மற்றவர்களுக்குத் தெரியாது என்ற செருக்கில், அனைவரையும் எடுத்தெறிந்து பேசுவாள்.
சுந்தர், ராமசாமியின் தம்பி. ராமசாமி சுசீலா இருவருக்கும் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள இருக்கும் ஒரே நபர் சுந்தர் தான்
சுந்தருக்கு படிப்பு வராததால், பாலிடெக்னிக் படித்து விட்டு எலக்ட்ரிகல் வேலை பார்த்து வந்தார். தான் படிக்க அண்ணா ராமசாமி உறுதுணையாக இருந்ததால், சுந்தருக்கு ராமசாமி மேல் ஒரு தனி அபிமானம். அடிக்கடி வந்து அண்ணனைப் பார்த்து ஏதாவது விஷயம் கேட்டுக் கொண்டு போவார்.
எதுவும் தெரியாத மக்கு என்று, அபர்ணாவுக்கு சுந்தர் சித்தப்பாவை அறவே பிடிக்காது. சுந்தர் ஏதாவது கேட்டால், முகங்குடுத்துக் கூட பேச மாட்டாள்.
அபர்ணா பி.டெக் முடித்து விட்டு கணினித் துறையில் மென்பொருள் என்ஜினியராக சென்னையில் பணிபுரிகிறாள்.
சென்ற வருடம் ஜனவரில் திருமணம் நிச்சயம் செய்தார்கள். மாப்பிள்ளைக்கு சென்னையில் நல்ல வேலை. ப்ராஜெக்ட் முடிந்து, அபர்ணா லண்டனிலிருந்து திரும்பியவுடன் திருமணம் என்று முடிவு செய்தார்கள்
திருமணத்தை வெகு சிறப்பாக நடத்த வேண்டுமென்று ராமசாமியும் சுசீலாவும் முடிவு செய்திருந்தார்கள்.
கொரோனா பரவல் என்றதும், அபர்ணாவுக்கு ஊரில் அப்பா அம்மா பத்திரமாக இருக்க வேண்டுமே என்ற கவலை. அவளுடைய அப்பா அம்மா மற்றும் மாப்பிள்ளை வீட்டில் அனைவருக்குமே, அபர்ணா பத்திரமாக சென்னை வந்து சேர வேண்டும் என்ற கவலை.
சுசீலாவோ ராமசாமியோ வெளியே போகக் கூடாது என்று லண்டனிலிருந்து படியே உத்தரவு பிறப்பித்திருந்தாள் அபர்ணா
அபர்ணாவுக்குத் திருமணம் வேறு நிச்சயிக்கப்பட்டிருந்த படியால், சுசீலாவும் ராமசாமியும் மிகவும் பத்திரமாக இருக்க எண்ணி, ஆன்லைனிலேயே அன்றாடத் தேவைகளுக்கான சாமான்களை வாங்கி வந்தனர்
லண்டனில் வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளை செய்து வந்தாள் அபர்ணா. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் முகக்கவசம் அணிந்து வெளியே சென்று வந்தாள்.
லண்டன் நகருக்கு வந்திருக்கிறோம், வெளியே சுற்றிப் பார்க்கப் போகிறோம் என்ற அவளுடைய கனவு, பகற்கனவானது
அவள் லண்டன் போகப் போகிறாள் என்றதும், சுந்தர் சித்தப்பா ஆசை ஆசையாய் வந்து, “அபர்ணாக்குட்டி, எல்லா இடமும் போய் சுத்திப் பாத்துட்டு வருவீல்ல” என்றார்.
“இல்ல, வீட்டுலயே உக்காந்திருக்கப் போறேன்” என்று திமிராய் பதில் சொல்லி விட்டு வந்தாள். வானத்தில் தேவர்கள் ததாஸ்து சொல்லிக் கொண்டு போக, அவள் சொன்னபடியே வீட்டிலேயே உட்காரும்படி ஆகி விட்டது.
எப்பொழுது லாக் டவுன் முடியும், எப்போது சென்னை திரும்பப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள் அபர்ணா
இந்த மாதம் சரியாகிவிடும், அடுத்த மாதம் சரியாகி விடும் என்று சொல்லிச் சொல்லி ஒரு வருடம் ஓடி விட்டது
லண்டனில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாலும், அவளுடைய ப்ராஜெக்ட் முடிவடைந்ததாலும், அபர்ணா ஊருக்குத் திரும்ப அவளது அலுவலகம் சம்மதித்தது.
சென்னையிலும் கொரோனா பரவல் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதால், அவளது திருமணத்திற்கும் நாள் குறிக்கப்பட்டது.
‘சென்னை போகப் போகிறோம், அப்பா அம்மாவைப் பார்க்கப் போகிறோம், உடனே திருமணம்’ என்றெல்லாம் கனவுகளோடு சென்னைக்கு வந்தவளை, விதி தலை கீழாய் புரட்டிப் போட்டது.
திடீரெனப் பரவிய இரண்டாவது அலையில், அவளது தந்தை ராமசாமிக்கு கொரோனா உறுதியானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமசாமி, அபர்ணாவின் திருமணத்தைக் காணாமலே போய்ச் சேர்ந்தார்.
இரண்டாவது அலை சற்றே தணிந்து, சுமூக நிலை திரும்பியவுடன், அபர்ணாவின் திருமணத்தை அவர்களது அபார்ட்மெண்ட் கார் பார்கிங்கிலேயே நிச்சயித்த தேதியில் நடத்துவது என இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.
அபர்ணாவால் அப்படியொரு திருமண நிகழ்வை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எப்படியெல்லாம் கல்யாண ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனவு கண்டிருந்தாள், எல்லாம் தவிடு பொடியானது.
குளிர் சாதன வசதி கொண்ட திருமண மண்டபத்திற்கு பதிலாக, மின்விசிறிகளுடன் கூடிய கார் பார்க்கிங் பகுதியே திருமண மண்டபமானது. ஆயிரம் பேர் எதிர் பார்க்கப்பட்ட திருமணத்தில், வெறும் ஐம்பது பேர் மட்டும்
திருமண புகைப்படங்களில் எல்லாம் மனிதர்களை விட, முகமூடியே பிரதானமாகத் தெரிந்தது. முகமூடி அணிந்திருந்த காரணத்தால் யாரையும், எளிதில் அடையாளம் காண முடியாமல் போனது.
எல்லாவற்றிற்கும் மேலாக மற்றுமோர் இடி அபர்ணாவுக்கு
எதுவுமே தெரியாது எதற்கும் லாயக்கில்லாதவர் என்றெல்லாம் ஏளனம் செய்த சுந்தர் சித்தப்பா தான், அவள் வெறுக்கும் சுந்தர் சித்தப்பா தான், அவளது திருமணத்தை முன் நின்று நடத்தி கன்னிகாதானம் செய்து கொடுக்கப் போகிறார் என்று தெரிந்ததும், துடித்துப் போனாள்.
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தாள்.
ராமசாமி இருந்தால் என்னென்ன பார்த்துப் பார்த்து செய்வாரோ, அதற்கு ஒரு படி மேலே போய், அந்த பார்க்கிங் இடத்தை ஒரு மினி திருமண மஹாலாக மாற்றியிருந்தார் சுந்தர்.
முகூர்த்த மாலை, அலங்காரம், சாப்பாடு என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்க்களப்படுத்தி விட்டார் சுந்தர்.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள், “தனியாளாய் இருந்து கொண்டு எதற்கு இத்தனை கஷ்டப்பட வேண்டும்” என்று கேட்டதற்கு
“என் அண்ணன் அபர்ணா கல்யாணத்தை எப்படி எல்லாம் நடத்தணும்னு ஆசைப்பட்டான் தெரியுமா? அவன் எதிர்பார்த்த அளவுக்கு என்னால செய்ய முடியலை, ஆனா என்னால முடிஞ்ச அளவுக்கு பண்ணிருக்கேன்” என்று கண் கலங்கி, எல்லாரையும் அழ வைத்து விட்டார்
சுந்தர் மடியில் அமர்ந்து கொண்டு மாங்கல்ய தாரணம் வாங்கும் போது, அபர்ணா அழுத அழுகை அந்த ஹாலையே உலுக்கி விட்டது
அப்பாவை நினைத்து அழுகிறாள் என்று எல்லாரும் நினைத்த போது, அவளுக்கு மட்டுமே தெரியும் அந்த அழுகைக்குப் பின்னால் இருந்த மற்றொரு காரணம்.
‘அப்பா இறந்த அந்த இக்கட்டான தருணத்தில், தான் முன் செய்த அவமரியாதைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் “என் அபர்ணா குட்டி, என் அபர்ணா குட்டி” என்று, மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லி, ஒரு வாரம் இரவு பகல் என்று பாராமல் அலைந்து திரிந்து இன்று என்னைக் கன்னிகாதானம் செய்து கொடுத்த என் சித்தப்பாவுக்கு, நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது’ என்று எண்ணினாள்.
படிப்பறிவையும் தொழிலையும் மட்டுமே வைத்து, ஒருவரை எடை போடுவது எவ்வளவு பெரிய தவறென்று, அவளுக்கு ஒரு படிப்பினைத் தந்தது கொரோனா
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings