in ,

வாழ்க்க போச்சே (சிறுகதை) – M.மனோஜ் குமார்

எழுத்தாளர் மனோஜ்குமார் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அலுவலகம் வந்ததிலிருந்து ராஜேஷ் ஒரு மாதிரியாகவே இருந்தான். வேலையில் கவனம் திரும்பவில்லை. அவனது அலைபேசி சிறு துண்டு ரிங்டோனை உமிழ்ந்தது.      

“ரோட்டோரம் உங்க மச்சான் மோசமா அடிப்பட்டு கிடக்கிறாரு. உடனடியா மேம்பாலம் வாங்க”

ராஜேஷுக்கு அது அதிர்ச்சி செய்தியாக இருந்தது. செய்தி கேட்டது பாதி கேட்காதது பாதியாக ராஜேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்தான். படுகாயங்களுடன், மோசமாக அடிப்பட்டு கிடந்த மைத்துனர் கோபாலை மீட்டு, ஆம்புலன்ஸில் ஏற்றி, மருத்துவமனைக்கு விரைந்தான். அவசரசிகிச்சை பிரிவில், தீவிர சிகிச்சைக்காக கோபால் அனுமதிக்கப்பட்டான். அவனை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.          

“நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டிருக்கு. நோயாளி, ‘பீ’ பாசிட்டிவ் ரத்த குரூப்பை சேர்ந்தவர். அவருக்கு, ‘பீ’ பாசிட்டிவ் ரத்தம், அவசரமா தேவைப்படுது. உடனடியா, மூணு லட்சம் பணத்தை, கவுண்டரில் கட்டுங்க. பணத்தை கட்டின பிறகு,. நோயாளிக்கு, ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம். லேட் பண்ணாம, உடனடியா பணம் கட்டிட்டு, ‘பீ’ பாசிட்டிவ் ரத்தம் வாங்கிட்டு வாங்க! கொஞ்சம் தாமதம் ஆனாக் கூட,  நோயாளியோட உயிருக்கு ஆபத்து!” ராஜேஷிடம் விளக்கமாக கூறினார்கள் டாக்டர்கள்                                                                 

தன்  கணவர் கோபால், மோசமாக படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து, அவரது மனைவியும், ராஜேஷின் தங்கையுமான மீனா, பதறி அடித்து கொண்டு, மருத்துவமனைக்கு விரைந்தாள்.                                            

“அண்ணே! அவருக்கு என்ன ஆச்சி? அவருக்கு ஏதாவது ஆனா என் மனசு தாங்காது!”, பதற்றத்தில் பயத்தோடு அழுதாள்.                                                                                                    

“எதுக்கும் கவலைப்படாதம்மா! மச்சானுக்கு எதுவும் ஆகாதும்மா! நல்லதே நடக்கும்” ராஜேஷ் அவளுக்கு தைரியம் சொன்னான் .                                                                                

ராஜேஷ், கோபாலின் மருத்துவ செலவுக்கு, பணம் கட்ட. உறவினர்கள், நண்பர்களிடம் பணம் கடன் கேட்டு அனுப்பி வைக்குமாறு கேட்டான், ஆனால், யாரும் அவனுக்கு பண உதவி செய்யவில்லை.                           

“அண்ணா, இத அடகு வைத்து தேவையான பணம் வாங்கு:” மீனா தான் அணிந்திருந்த நகைகளை கழட்டிக் கொடுத்தாள்.

தனது வங்கி கணக்கு விவரங்கள், கோபாலின் வங்கி கணக்கு விவரங்கள், ராஜேஷுக்கு அலைப்பேசியில் அனுப்பி வைத்து, வங்கியிலிருந்து பணம் எடுத்து வரவும் சொன்னாள்   

ராஜேஷ் பம்பரமானான். பணத்தை ஏ.டி.எம்லிருந்து எடுத்தும், நகை அடமானம் வைத்தும் பணம் புரட்டி கோபாலுக்கு தேவைப்படும் “பீ” பாசிட்டிவ் ரத்தம், ரத்த வங்கியிலிருந்து வாங்கி வர, பதறி அடித்து, அவசரமாக தன்  இரு சக்கர வாகனத்தில், வேகமாக பதற்றத்துடன் சென்றான். வழியில்  போக்குவரத்து காவலர் ராஜேஷை மடக்கினார் .          

“ரேஷ் டிரைவிங், தலையில ஹெல்மெட் கூட போடல. வா! ஓரம் வா!” வண்டி சாவியை பிடுங்கி, ராஜேஷையும், அவன் ஒட்டி வந்த வாகனத்தையும் மடக்கினார்.                                  

“சார்! சார்! என் மச்சான் ஆஸ்பத்திரியில உயிருக்கு போராடுறாரு. ரொம்ப சீரியஸ். அவசரமா அவருக்கு ரத்தம் தேவைப்படுது! பணம் வேற ஆஸ்பத்திரில கட்டணும். இந்த தடவை மன்னிச்சு விட்டுடுங்க! அடுத்த தடவை, இந்த தப்பு பண்ணவே மாட்டேன். தப்பு நடக்காம பார்த்துக்கிறேன் சார்!” போக்குவரத்து காவலரிடம் கெஞ்சினான் ராஜேஷ்              

“ஏன்டா! பைன் கட்டாம, ஏமாத்தி தப்பிக்க பார்க்கிறியா? என்னப் பார்த்தா கேணயன், இளிச்சவாயன் மாதிரி தெரியுதா? யார் காதுல பூ சுத்துற? இதெல்லாம், வண்டி ஓட்டும் பொழுதே யோசிச்சி இருக்கணும். பைனைக் கட்டு! இல்லைனா, போலீஸ் ஸ்டேஷன்-ல உட்காரு” ராஜேஷை போக்குவரத்து காவலர் கண்டபடி திட்டினார்.                                            

”ஃபைன் தானே சார்! நான் கண்டிப்பா கட்டுறேன். பைன் சல்லான் மட்டும், பிரிண்ட் எடுத்து கொடுங்க. இரண்டு நாளைக்குள்ள, போஸ்ட் ஆபீஸ்க்கு போய், பைன் கட்டிட்டு, உங்களுக்கு கண்டிப்பா பேமென்ட் ரெசிப்ட் காட்டுறேன் சார்! இப்போ, எனக்கு ஆஸ்பத்திரில கட்ட வேண்டிய பணம் மட்டும் தான் கையில இருக்கு. வேற பணம் இல்லை. நான் ஏமாத்த மாட்டேன்! என்னை நம்புங்க சார்!”  ராஜேஷ் கெஞ்சினான்   

“கையில பணம் இல்லைனா என்ன? கூகுள் பே, போன் பே, பே.டி.எம் இருக்கில்ல! அதுல, பைனைக் கட்டு. பைனை கட்டு, நான் விட்டுடுறேன்” போக்குவரத்து காவலர் கறாராகச் சொன்னார்.                                           

“சார்! சார்! நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன். நான் பைன் கட்டுற நிலைமையில, இப்போ இல்லை.  ஆஸ்பத்திர்க்கு கட்ட வேண்டிய பணத்த தவிர கையில வேற பணம் இல்ல. அது மட்டுமில்ல, எந்த ஆக்கவுண்டுலயும் இப்போ பணம் இல்லை. இரண்டு நாள் டைம் கொடுங்க. நான் கண்டிப்பா பைன் கட்டுறேன். என்னை நம்புங்க சார்!” ராஜேஷ் மறுபடியும்  கெஞ்சினான்                                                       

“உன்கிட்ட பேசுனா வேலைக்கு ஆகாது. ஒன்னு பைனை கட்டிட்டு நகரு! இல்லைனா, இங்கேயே கிடந்து நாறு!” போக்குவரத்து காவலர் அவனைக் கேவலமாகத் திட்டினார். நேரம்  ஓடியது. ராஜேஷை செல்லவிடாமல் தடுத்து, போக்குவரத்து காவலர் அலைக்கழிததார், அவனது அலைபேசி சிணுங்க எடுத்து ஹலோ சொன்னான்.                    

“அண்ணா! அவர் நம்ம எல்லாரையும் விட்டு போயிட்டாருண்ணா!” மருத்துவமனையிலிருந்து, மீனா, அழுதபடி சொன்னாள். கோபால் இறந்த செய்தியை கேட்டு, அதிர்ச்சி அடைந்தான் ராஜேஷ். அவனது கோபம் போக்குவரத்து காவலர் மீது படிந்தது, ஆத்திரம் அடைந்தான்.

“சண்டாளா! படுபாவி! இப்போ சந்தோஷமாடா? என்னை ஒழுங்கா விட்டிருந்தா, என் மச்சானை காப்பாத்தி இருப்பேன். இப்படி பண்ணிடீங்களே” அவரின் சட்டையை பிடித்து அடித்தான் ராஜேஷ்.                                 

அதற்குள் வேறோரு போக்குவரத்து காவலர், அலைபேசியில் மற்ற போலீஸ்காரர்களை அழைத்தார். அனைவரும் சேர்ந்து, ராஜேஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் செல்ல தயாரானார்கள்.

“ஏன்யா, கடமை கடமைன்னு என்ன போக விடாம தடுத்தீங்களே! அதனால பணத்த கட்ட முடியாம, ரத்தமும் கொடுக்க முடியாம, அனியாயமா என் மச்சான கொன்னுட்டீங்களே! இந்த மாதிரி பணத்துக்கு ஏன் அலையுறீங்க? இறக்கும்பொழுது, சுடுகாட்டுக்கு பணம், சொத்தை எடுத்துக்கிட்டா போகப் போறீங்க? ஒழுங்கா, என்னை போக விட்டிருந்தா, உயிரை காப்பாத்தி இருக்கலாம். உயிராவது மிஞ்சியிருக்கும். இதுவே, உங்க அண்ணன், தம்பி, ரத்த சொந்தம் யாருக்காவது நடந்திருந்தா, நீங்க சும்மா இருப்பீங்களா? நீங்க மனுஷ ஜன்மமுன்னு சொல்றதுக்கு லாயக்கில்ல, இறந்துப்போன என் மச்சான் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா? இப்போ சந்தோஷமா?” ராஜேஷ் அவர்கள் சட்டையைப் பிடிக்காத குறையாகக் கேட்டான். தலை குனிந்தார் போக்குவரத்துக் காவலர்                        

ராஜேஷ் அழுதபடியே ஆஸ்பத்திரிக்கு விரைந்தான், அழுது மயக்கிய நிலையில் இருந்த அவனது தங்கையை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு நடக்க வேண்டிய காரியங்களைக் கவனித்தான்.

“போக்குவரத்து போலீஸ்காரர் மட்டும் என்னை விட்டிருந்தால், என் மச்சான் உயிர் போயிருக்காது. என் தங்கையும் விதவை ஆகியிருக்க மாட்டா” அவன் மனம் காவலரை சபித்தபடியே இருந்தது                                                

ஆறு மாதங்கள் கழிந்தது. அன்றும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த போது அதே போக்குவரத்து காவலர், தலைக்கவசம் அணியாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை, மடக்கிப் பிடித்தார்

”ஹெல்மெட் போடாம வந்துட்டேன். இவன்கிட்ட மல்லு கட்டுறதுக்கு பதிலா ஃபைன அடைச்சிட்டு போயிட வேண்டியதுதான்” ராஜேஷ் தன் வண்டியை ஓரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு, பர்ஸ்ஸிலிருந்து பைன் கட்டுவதற்காக பணத்தை எடுத்தான்.

”என்ன மன்னிச்சிடு தம்பி! போன தடவை கடமை கடமைன்னு உன்னைத் தடுத்து நிறுத்தி, ஒரு உயிர் போக காரணமாயிட்டேன். அதை நினைச்சா இப்ப கூட என் மனசுக்கு என்னவோ போல இருக்கு. என்னால ஒரு உயிர் போனது மட்டுமில்லாம, ஒரு பொண்ணு தாலியை அறுத்து விதவை என்கிற பட்டத்தை சுமக்கிறத கேட்டப்போ மனசுக்கு ரொம்ப பாரமா இருந்துச்சு. நானும் ரொம்ப நாளா நீ இந்த பக்கம் வருவேன்னு காத்துக்கிட்டு தான் இருந்தேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. என்னால விதவையான உன் தங்கச்சிக்கு நான் மறுவாழ்க்கை கொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன். நான் உன் தங்கச்சிய மறுமணம் செய்து கொள்ள நீ சம்மதிபியா?” கேட்ட ராஜேஷ் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது

தன் தவறை உணர்ந்து, அதற்கு பிராயசித்தமா விதவையான தன் தங்கையை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படும் போக்குவரத்து காவலரை நினைக்க நினைக்க பெருமையாக இருந்தது.

ராஜேஷ், அவனது தங்கையுடன் பேசி சம்மதம் வாங்கி ஒரே வாரத்தில், கோவிலில் வைத்து சிம்பிளாக திருமணம் நடந்தது.

தன் தங்கைக்கு ஒரு வாழ்க்கை வந்ததே என்று ஆனந்தத்தில் மிதந்தான் ராஜேஷ்.             

எழுத்தாளர் மனோஜ்குமார் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)                                                                                                          

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆடை (சிறுகதை) – M.மனோஜ் குமார்

    ஒரு திருப்பம்… நூறு ரூபாய்… (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு