எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இன்டர்வியூக்கு வரும்போது டாக்ஸியில் வந்துவிட்ட செல்வி. திரும்பும்போது ஆட்டோவில் போனால் போதுமென்று நினைத்து அம்மாவுடன் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தாள்.
இரண்டு மூன்று ஆட்டோக்கள் அருகில் வந்து நின்றன. ஆனால் மூன்று கிலோ மீட்டர் போவதற்கு இருநூற்றைம்பது முதல் முன்னூறு வரை சொல்லி அவளை திக்குமுக்காட வைத்து விட்டனர். வெறுத்துப் போனவள் அவர்களை அனுப்பிவிட்டாள்.
‘பாருமா… பஸ்ல போல பதினஞ்சு ரூபாதான்… பேசாம பஸ்லேயே போய்டலாமாமா…‘ என்றாள் அம்மாவைப் பார்த்து.
‘நாந்தான் அப்போவே சொன்னேனில்லே… நீதான் ஆட்டோவுல போய்க்கலாம்னே… பாரு, இவனுங்க நூத்துக் கணக்குல சொல்றானுங்க… ‘ கடுப்புடன் மகளை முறைத்தாள் அம்மா.
கடைசியில் ஒரு ஆட்டோ வந்து நிற்க அவனும் அப்படியே கிராக்கி பண்ண, கடைசியில் இருநூறு ரூபாய்க்கு பேரம் படிய ஏறிக்கொண்டனர்.
போய்க் கொண்டிருக்கும் போது, ‘அம்மா… நீங்க சொல்றது ஒரு எக்ஸ்டென்ஷன் ஏரியா… ரோடெல்லாம் குண்டும் குழியுமா இருக்கும். முந்தினநாள்தான் ஒரு கிராக்கிய கொண்டு போய் இறக்கினேன்… வண்டி ஆடி ஆடி போச்சு… அதில்லாம ஒன்வேல போயி சுத்திக்கிட்டு போயி பெட்ரோல் காலியானதுதான் மிச்சம்… இறங்கும்போது பார்த்து சேர்த்து போட்டுக் குடுங்கம்மா… ‘
எரிச்சல் பட்டாள் செல்வி. ‘இருநூறுக்கு சரி என்றுவிட்டு, ஏறியதும் சாதுரியமாக டிமான்ட் செய்கிறான் பார், ராஸ்கல்… ‘ என்று மனதுக்குள் கறுவிக்கொண்டாள்.
அவன் சொன்னதும் உண்மைதான்… அந்த ஏரியாவில் ரோடு உண்டு, கரண்ட் உண்டு, சாக்கடை உண்டு, தண்ணீர் உண்டு என்றெல்லாம் சொல்லி பிளாட்டுகளை விற்றவர்கள், தங்கள் வேலை முடிந்ததும் மாயமாகிப் போனார்கள். இப்போது இவர்கள் வீட்டைக் கட்டிக்கொண்டு காசுக்கு வண்டியில் தண்ணீர் வாங்குகிறார்கள்.
மெட்டலைக் கொட்டிவிட்டு தார் போடாமல் போய்விட்டார்கள். தண்ணீர் குழாய் பதிக்கிறேன் பேர்வழியென்று தோண்டிவிட்டு குழாய் பதிக்காமலேயே போய்விட்டார்கள். அது கொசு உற்பத்தியாகும் சாக்கடையாக மாறிவிட்டது. மெட்டல் ரோடும் போனமாதம் அடித்த மழைக்கே பல் இளிக்க ஆரம்பித்துவிட்டது.
அம்மன் கோவில் சந்தில் நுழைந்தால் அது ஒரு வழிப்பாதை. திரும்பவும் அதில் வர முடியாது. சுற்றிக்கொண்டுதான் வரவேண்டும். அடுத்து அந்த மெட்டல் ரோடு. வண்டி குலுங்கி குலுங்கிதான் போய்க்கொண்டிருந்தது. அவன் சொன்னதெல்லாம் உண்மை தான். அதிலும் அதெல்லாம் தெரிந்துதானே இருநூறுக்கு ஒப்புக்கொண்டான். ஏறி உட்கார்ந்ததும் மேலே போட்டுக் கொடுக்கச் சொன்னால் எப்படி…
எலும்பெல்லாம் நொறுங்காத குறையாக ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தனர்.
‘பதினஞ்சு ஏனு சொன்னீங்கள்ளே… வந்தாச்சுமா… ‘ என்றான் ஆட்டோக்காரன்.
பர்ஸைத் திறந்து இரண்டு நூறு ரூபாய் தாள்களை எடுத்து நீட்டினாள் செல்வி.
‘அம்மா மேலே போட்டுக் கொடுங்கம்மா… ‘
‘ஏங்க… இருநூறு சரின்னுதான் எத்துனீங்க… ‘
‘அம்மா நீங்கதான் பார்த்தீங்கள்ள… ரோடு எவ்ளோ மோசம்னு… ரிடர்ன் போகும்போது வேற சுத்திக்கிட்டு போகணும்… நாந்தான் சொன்னேனேம்மா மேலே போட்டுக்கொடுக்கச் சொல்லி… ‘
‘முடியாது… இன்னும் எண்பது ரூபா போட்டா நான் டாக்சியில ஏ.ஸி.ல வந்திருப்பேன்… மிச்சப் படுத்தனும்னா முப்பது ரூபாய்ல பஸ் ஏறி வந்திருப்பேனே… நூத்தி எழுபது மிச்சமாச்சு… ‘
‘ஏன்மா… ஆட்டோல ஏறி வந்துட்டு இப்படி பேசினா என்னம்மா அர்த்தம்… பத்து ரூபாயாவது கொடுங்கம்மா…‘ தலையைச் சொறிந்தான் அவன்.
‘நீங்ககூடத்தான் இருநூறுக்கு சரி சொல்லிட்டு இப்போ தகராறு பண்ணினா பேசினா என்ன அர்த்தம்… ‘
இதைப் பார்த்துக்கொண்டிருந்த அம்மா, ‘ ஐயையைய்ய… நீ நகருமா… ‘ என்றபடி சட்டென தனது கையிலிருந்த பர்ஸிலிருந்து இருபது ரூபாயை எடுத்து ஆட்டோக்காரனிடம் கொடுத்துவிட்டு, ‘ சரி சரி, நீ போப்பா… ‘ என்று அவனை அனுப்பினாள்.
அவன் போவதை எரிச்சலுடன் பார்த்தபடி, ‘நீ ஏன்மா முந்திரிக் கொட்டையாட்டம் பணத்தை எடுத்துக் கொடுத்தே… ‘ என்று அம்மா மேல் எரிந்து விழுந்தாள் செல்வி. ஆட்டோக்காரன் போயே விட்டான்.
xxxxxxxxx
வீட்டுக்குள் நுழைந்ததும்தான் புரிந்தது, கையோடு கொண்டுவந்திருந்த போல்டரைக் காணவில்லை என்று. தேடாத இடம் இல்லை. ஆட்டோவிலிருந்து கொண்டு வந்து எங்கேயாவது வைத்து விட்டோமா என்று குழம்பினாள்.
‘அய்யய்யோ… சர்ட்டிபிகேட்லாம் அதுலேத்தான்டி இருந்தது…‘ நெஞ்சில் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்பினாள் அம்மா.
‘அதுலதாம்மா என்னோட காலேஜ் டாகுமேன்ட்லாம் இருக்கு. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர், பாஸ்போர்ட், ஆதார் கார்டு எல்லாமே அதுலேதாம்மா இருக்கு… ‘
‘ஆட்டோல ஏறும்போது கையில வச்சிருந்தியேடி… ‘
‘ஆம்மாம்மா… கண்டிப்பா ஆட்டோலத்தான் வச்சிட்டு இறங்கி இருக்கணும்… ‘
சொல்லிக்கொண்டே ஓட்டமாய் வெளியே ஓடினாள். கண்ணுக்கெட்டியதூரம் வரை ஆட்டோ தென்படவில்லை.
‘இறங்கினதும் சீட்டை பார்த்திருக்கனும்… நீதான் பணத்துலே குறியா இருந்தியே… ‘
‘நீ வேற எரிச்சலைக் கிளப்பாதேமா… ஒருவேளை ஆட்டோல இருந்து கீழே ஏதும் விழுந்திருக்குமோ… கடவுளே… என்னை ஒட்டியேத்தானே வச்சிருந்தேன்… ஆட்டோல சைடுல ஏதும் விழுந்திருக்குமோ… ‘ புலம்ப ஆரம்பித்தாள்.
‘ஆட்டோ நம்பர் ஞாபகம் இருக்காடி… ‘
‘நீ வேற… அத எவ பார்த்தா… ஆப்ல புக் பண்ணியிருந்தாகூட போன் நம்பர் முதற்கொண்டு இருந்திருக்கும்… அய்யய்யோ… இப்போ எல்லா டாகுமேன்ட்டும் போச்சே… எப்படி வேலைல சேருவேன்… என்ன பண்ணுவேன்… ‘
‘சரி கிளம்பு… போலீஸ்ல போயி கம்ப்ளெயின்ட் பண்ணிட்டு வரலாம்… சொன்னமாதிரி எப்படி வேலையில போயி சேருவே… டாக்குமெண்ட்லாம் கேட்பாங்களே… ‘
வீட்டைப் பூட்டிக்கொண்டு ரோடிற்கு வந்தார்கள். பர்ஸை எடுத்துக்கொண்டு வந்தாள் அம்மா. இன்ப அதிர்ச்சியாக அதே ஆட்டோ தூரத்தில் வந்து கொண்டிருந்தது.
நெஞ்சு படபடத்தது செல்விக்கு.
‘அந்த ஆட்டோதான் போல… ‘ அம்மா சொன்னாள்.
பக்கத்தில் வந்த ஆட்டோ நிற்க, அதிலிருந்து இறங்கிக்கொண்டே, ‘போற வழில டீ குடிச்சிட்டு திரும்ப வண்டியை எடுக்கும்போதுதான் கவனிச்சேன் நீங்க இந்த அட்டையை விட்டுட்டு இறங்கிட்டீங்கன்னு… உங்க போட்டோவும் அதுல இருக்க, அப்படியே திருப்பிக்கிட்டு வந்துட்டேன்… இந்தாங்கம்மா… ‘ என்றபடி அவன் டாக்குமென்ட் போல்டரை செல்வியிடம் நீட்ட, அதற்குள் அவசரமாய் பர்ஸைத் திறந்த அம்மா ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
இப்போது செல்வி அவளைத் தடுக்கவில்லை. முகம் மலர பணத்தை வாங்கிக்கொண்டு அவனும், ‘வர்றேன்மா… ‘ என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings