in

வாழ்க ஆசிரியர் சமுதாயம் (கவிதை) – ✍சிவகாமி பரமசிவம், புதுச்சேரி

உணவு கொடுக்கும் உழவன்
உடற்பிணி போக்கும் மருத்துவன்
தொழிலை வளர்க்கும் பொறியாளன்
நாட்டை உயர்த்தும் தொழிலாளன்
உலகைக் காக்கும் மாண்பாளன்
எல்லைக் காவல் போர்வீரன்
தேசியம் போற்றும் நற்கலைஞன் 
அனைவருக்கும் ஏணியாய் 
கரைச் சேர்த்த தோணியாய்
நிச்சயமாய் ஓர் ஆசான் 
நிரந்தரமாய் குடியிருப்பார் மனதில்

வேதம் சொல்கிறது
இறைவனை விடவும் 
தொழுகைக்கு உரியவன்  
ஆசான் என்று

எண்ணையும் எழுத்தையும் அறிமுகம் செய்து
உலகை நம் காட்சிக்கு விட்டவர் 
பாடத்திட்டத்தை மட்டுமல்ல
மேன்மைப்படுத்தும் நற்கலைகளை 
சீரிய ஒழுக்கத்தின் சிறப்பியல்புகளை
உயிரை வளர்க்கும் உடல்வித்தகத்தை
வாடிய பொழுதினில் நம்பிக்கை நீரூற்றை 
வீரம் விவேகம் தன்மான எழுச்சியை 
குணத்தால் குற்றம் 
களையும் மாண்பினை 
அன்பு காதல் அறத்தின் மேன்மையை 
பக்குவமாய் வார்த்து
புவியில் இசைபட நாம் வாழ 
நம்மைச் செதுக்கிய சிற்பி

ஓர்வயிற்றில் விளைந்த சகோதரமோ
சங்கிலிப் பிணைப்பாய் சொந்தமோ
பாசம் வைப்பதில்
வியப்பென்ன இருக்கிறது

ஆண்டவன் படைப்பே
இயற்கையோடு மனிதன் 
செழிப்புறச் செய்வதில் 
அவனுக்கென்னச் சிறப்பு

உயிர் கொடுத்து 
கருவளர்த்த பெற்றோர் 
ஈன்றதால் பாசம் 
இதிலென்னப் பெருமை

சுயநலம் சார்ந்து தான் 
இறைவன் உட்பட 
ஈன்றோர் பாசம் வரை

படைத்தவனல்ல 
ரத்த பந்தமுமல்ல 
உற்றாருமல்ல 
சுற்றமுமல்ல - என்றாலும் 
நூற்றுவரில் ஒரு சீடன் 
காலக் கேடுகளில் சிக்கிவிட்டால்
ஆம்! நூறில் ஒன்று 
மந்தமாகிப் போனாலும் 
மனம் நொந்து போகின்றார்
நல்லாசிரியன்

ஆசிரியர் காட்டும் பளிங்காய்
பிள்ளை மனம்
வகுப்பறையில் விதைக்கப்படுவதால்
உற்சாக வளர்ச்சி
தேசத்தின் வளர்ச்சி
கல்விக்கூடத்தில் தான் உதயமாகிறது

இன்றைய தேசம்
நேற்றைய வகுப்பறையால்
நாளைய தேசம் 
இன்றைய வகுப்பறையில்

வகுப்பறையின் தவறு
வருங்காலத்தையே வீழ்த்திடும்
ஆசிரியப் பணி தவப்பணி
ஆசிரியப் பணி திருப்பணி
ஆசிரியர் பணி அறப்பணி 
தவச்சாலையே கல்விச்சாலை
தட்சிணாமூர்த்திகள் ஆசான்கள்
தப்பான ஆசான் 
தரணிக்குக் கூடாது 

இருள் நீக்கும் பகலவன் 
நோய் தீர்க்கும் மூலிகை 
வாழ்க்கைச் செழிக்கச் 
செய்யும் வான்மழை 
அறிவூட்டிய ஆசானை
இந்நன்னாளில் வணங்குவோம்

#ad

      

        

#ad 

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாழ்க்கை (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி

    அப்துல் கலாம் ஓவியம் By ரூபிணி சக்தி (கல்லூரி மாணவி)