“இதோ பார் பாக்கியம், நீ என்ன சொன்னாலும் சரி என்னால உம் பையன் சொல்ற அந்த பொண்ண மருமகளா ஏத்துக்க முடியாது புரிஞ்சிதா? இது சம்பந்தமா இனி எங்கிட்ட பேசினியன்னா எனக்கு கெட்ட கோபம் வந்திரும், போய் காஃபிய எடுத்துட்டு வா” என கோபமாக பேசினார் முத்து
“ம்ம்ம் இருக்கிறது ஒரே பையன், அவன் ஆசைப்படற பொண்ண கட்டி வைக்காம பெரிசா பேசறார்” என முணுமுணுத்தவாறே கிட்சனுக்குள் சென்றாள் பாக்கியம்
ஓரக்கண்ணால் பார்த்தவாறே வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே செல்ல முயன்ற மகன் விக்கியை வராந்தாவில் அமர்ந்திருந்த முத்து இடைமறித்தார்
“என்னப்பா ஏன் இன்னைக்கி லேட்டு?” என்ற கேள்விக்கு, மகன் பதில் சொல்லும் முன் முந்திக் கொண்டாள் பாக்கியம்
“ஏங்க ஆபிஸ்ல ஏதாவது எக்ஸ்ட்ரா வேலையிருந்தா பார்த்துட்டு வந்திருப்பான், வந்ததும் வராததுமா நிக்க வச்சி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க” காஃபியை ஆற்றிக் கொண்டே கணவருக்கு பதிலளித்த பாக்கியம்
“நீ போய் கை கால் அலம்பிட்டு வாப்பா” என மகனிடம் உரைத்தாள்
‘காலைல போனவன் இப்பத் தான் வந்திருக்கான், வந்தவுடனே நொய்னொய்னு கேள்வி கேட்டுட்டு’ என மனதிற்குள் நினைத்தவள், “இந்தாங்க காஃபி” என தபேரா செட்டை தடாரென்று வைத்தாள்
“என்னடி? நான் அப்படி என்ன ஒம்பையன கேட்டுட்டேன்னு இவ்ளோ கோபப்படுற. இதோப் பாருடி, நீ என்ன தரிக்குத்தத்தம் செஞ்சாலும், நீயும் ஒம்புள்ளையும் நினைக்கிறது இந்த ஜென்மத்தில நடக்காது” என்றார் கண்டிப்புடன்
“இதே மாதிரி பேசிட்டு இருந்தீங்கன்னா ஒரு நாள் காஃபியில வெசத்த கலந்து கொடுக்கப் போறேன் பாருங்க’’ என பாக்கியம் எரிச்சலாய் கூற
காஃபியை வாயருகே கொண்டு சென்ற முத்து, “எது வெசத்த கலந்து கொடுப்பியா?’’ என அதிர்வுடன் கேட்டார்
“ஆமாமா காஃபியில கலந்தா தித்திப்புல ஒண்ணும் தெரியாது பாருங்க, இந்த காஃபியில கலக்குல தைரியமா குடிங்க” எனவும்
“உன்னை நமபறதுக்கில்ல, செஞ்சாலும் செய்வ” என்றார்
“இந்தா பாருங்க, நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க. இப்ப அவன் வந்தவுடனே நிக்க வச்சி கேள்வி கேட்டீங்களே. அவனும் என்னமோ இப்ப தான் எட்டாங்கிளாஸ் படிக்கிற பையன் மாதிரி பயந்து போய் நின்னான் பாத்தீங்கள்ல. அதுக்கு பேர் பயமில்ல, உங்க மேல அவன் வச்சிருக்கிற மரியாதை, புரிஞ்சிதா? அவனுக்கு இப்ப வயசு முப்பது, கை நெறைய சம்பாதிக்கறான்.
ஒரு பொண்ண லவ் பண்றேன், அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அஞ்சு வருஷமா கேட்டுட்டு இருக்கான். நீங்களும் சம்மதிக்க மாட்டேங்கிறீங்க, அவனும் ஒங்க மேலவுள்ள மரியாதையில மனசு ஒருநாள் மாறும்னு காத்துட்டுருக்கான். நீங்களே ஊர்ல உலகத்தில பாக்குறீங்க தானே, நம்ம பையன் வயசு பசங்கல்லாம் எப்படி இருக்கானுங்கனு” என கோபத்துடன் ஆரம்பித்து வருத்தத்துடன் பாக்கியம் முடிக்க
“ம்ம் நீ சொல்றது சரி தான் பாக்கியம். ஆனா நாம ப்யூர் வெஜிடேரியன்ஸ், அந்த பொண்ணு வீடு நான் வெஜிடேரியன், நம்ம குடும்பத்துக்கு எப்படிடீ சரி வரும்? மீனு விக்கிரவன் தெருவுல வந்தாலே நம்ம வீட்டு கதவ மூடுற உன்னால மீன் சப்பிடுற பொண்ண மருமகளா ஏத்துக்க முடியும்கற?” என அங்காலாய்ப்புடன் கூறினார்
முத்துவின் அருகே அமர்ந்த பாக்கியம், “அதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு நான்வெஜ் சாப்பிடாம நான் பாத்துக்கறேங்க” என பாக்கியம் உறுதிமொழி கொடுக்க
“அப்படியே நாம ஒத்துக்கிட்டாலும், நம்ம சொந்தக்காரங்க மதிப்பாங்களா?” என கேட்டார் முத்து
“டேய் விக்கி ஒடியாடா ஒடியாடா, எங்கடா இருக்க நீ?” என சந்தோஷமாய் கத்திக் கொண்டே வீட்டுக்குள் ஓடினாள் பாக்கியம்
“என்னாச்சி இவளுக்கு பைத்தியம் ஏதும் புடிச்சிருச்சா” என எதுவும் புரியாமல் மனைவியை பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்றார் முத்து
“டேய் விக்கி எங்கடா இருக்க நீ? சீக்கிரமா வெளியே வாடா ஒங்கப்பா ஒங் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாருடா” என பாக்கியம் மகிழ்வுடன் உரைக்க
“ஏய் என்னடி ஒளர்ற நான் எங்கடி ஒத்துக்கிட்டேன்?” என முத்து விழிக்க
முகத்தை துடைத்துக் கொண்டே குளியல் அறையை வெளியே வந்த விக்கி “என்னமா என்னாச்சி?” எனக் கேட்டான்
“டேய் அஞ்சு வருஷமா நீ வெயிட் பண்ணினது வீண் போகலடா, அப்பா ஒன்னோட கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாருடா” என அன்னை கூறவும், விக்கியின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது
“என்னங்க எப்ப நாம சம்மதிச்சாலும்னு சொன்னீங்களோ, அப்பவே நீங்க இந்த கல்யாணத்துக்கு பாதி ஒத்துக்கிட்டீங்கன்னு எனக்கு தெரிஞ்சு போச்சுங்க. என்ன தான் பேசினாலும். மனசுக்குள்ளார உங்களுக்கு விருப்பம் இருந்திருக்கிறத தெரிஞ்சிக்கிட்டேங்க” என பாக்கியம் மடக்க
“அப்பா ரொம்ப தேங்ஸ்சுங்கப்பா” என புன்னகை ததும்பிய முகத்துடன் கூறினான் விக்கி
‘வாயை கொடுத்து வசமாக மாட்டிக்கிட்டோமோ? இல்ல இது தான் கடவுளோட சித்தமோ என்னமோ’ என மனதுள் நினைத்த முத்து, மௌனமானார்
எதிர்பார்ப்புடன் மகன் பார்க்க, மனம் நெகிழ்ந்தவர், “ம்ம் உங்கம்மா என்னன்னமோ பேசி என்னை மடக்கிட்டா, எல்லாம் நல்லபடியா நடந்தா சரி தான்” என்றார் முத்து
“அதெல்லாம் நல்லபடியாதாங்க நடக்கும், எப்ப உங்க மனசுலருந்து சாதகமான முடிவு வந்திருச்சோ, அப்பவே ஒரு குறையுமில்லாம இந்த கல்யாணம் ஜாம் ஜாம்னு தான் நடக்கப் போகுதுனு எனக்கு புரிஞ்சு போச்சு” என பாக்கியம் கூற, மகிழ்வுடன் போனை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினான் விக்கி
அவன் விரும்பும் கார்த்திகாவுக்கு போன் செய்யத் தான் ஓடுகிறான் என்பதை உணர்ந்துக் கொண்டாள் பாக்கியம்
இரண்டு மாதங்கள் ஓடியதே தெரியவில்லை. மாயவரம் ஏ.வி.எஸ் கல்யாண மண்டபத்தில் கல்யாணம் செய்ய முடிவு செய்து, அருகிலுள்ள வள்ளலார் கோயிலிலிருந்து மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கியது
விக்கி வேலை பார்க்கும் பள்ளி சேர்மனின் பி.எம்.டபள்யூ காரில் தான் ஊர்வலம் ஆரம்பமாகியது. விக்கியுடன் பணிபுரியும் நண்பர்கள் அவர்களின் வீட்டு திருமணம் போல், ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்கள்
வான வேடிக்கைகளுடன் மாப்பிள்ளை ஊர்வலம் வெகு சிறப்பாக நடந்தது. மாலை நேரத்தில் வாழை இலையில் வைத்த இரண்டு மெது போண்டா தேங்காய் சட்னியும், அல்வாவும் அற்புத சுவையாக இருக்க “யார் இந்த தவுசு பிள்ளையாண்டான்” என எல்லோரையும் கேட்கச் செய்தது
மறுநாள் காலை ஒன்பது பத்தரை சுபமுகூர்த்ததில், தன் நேசத்திற்கு உரியவளின் கழுத்தில் மங்கள நாண் அணிவித்தான் விக்கி
சூழ்ந்திருந்த சுற்றமும் நட்பும், மணமக்களை விட்டு விலகி சாப்பாட்டு கூடத்தில் சங்கமித்தது
திருமணம் நல்லபடியாய் நடந்தேற, அதைத் தொடர்ந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைவாய் நடந்தது
சில நாட்கள் கழித்து…
“என்னம்மா காலையிலேயே எனன யோசனை? இன்னிக்கி ஞாயித்துக்கிழமை தானே லேட்டா எழுந்திருக்க வேண்டியது தானே? நான் எல்லா வேலைகளையும் பாத்துக்க மாட்டேனா? இந்தா காஃபிய குடி” என மருமகளிடம் காபி கோப்பையை நீட்டினாள் பாக்கியம்
“சாரிங்க அத்தை, நாந்தான் உங்களுக்கு காஃபி போட்டுத் தரணும், நீங்க எனக்கு…” என வார்த்தைகளை விழுங்கினாள் கார்த்திகா
“என் பொண்ணு மாதிரி தான் உன்னை பாக்கறேன், நீ காஃபிய குடி. அப்புறம், உன் புருஷன் பசி தாங்க மாட்டான் காலையில பூரி போடலாமா?’’
‘எம் மகன்’ என இருந்தவன் ‘உன் புருஷன்’ என்று இடம் மாறி போனான் விக்கி, பாக்கியத்துக்கு தெரியாமலே
“சரிங்கத்தை” என கோதுமை மாவு டப்பாவை எடுத்தாள் கார்த்திகா
அப்பாவும் மகனும் டைனிங் டேபிளில் உட்கார்ந்திருக்க, சுடச்சுட பூரியை மாமனாரின் தட்டில் வைத்து உருளைக்கிழங்கு குருமாவை உப்பியிருந்த பூரியின் வயிற்றில் ஊற்றினாள் கீர்த்திகா
“நான் அடுத்து சாப்பிடுறேன் மொதல்ல அவனுக்கு வைம்மா” என முத்து மருமகளிடம் கூற
“அவருக்கும் வைக்கிறேன் மாமா, முதல்ல நீங்க சாப்பிடுங்க. இந்தாங்க தண்ணி” என டம்ளரை அருகே எடுத்து வைத்தாள்
“விக்கி இன்னிக்கி சண்டே தானே டிபன் சாப்பிட்டுட்டு கார்த்திகாவோட கோயிலுக்கு போயிட்டு, அப்படியே அவுங்க அம்மா வீட்டுக்கும் போயிட்டு வாங்க” என்றாள் பாக்கியம்
“என்னப்பா பதிலே வரல, நான் சொல்றது சரி தானே?” என பாக்கியம் மீண்டும் கேட்க
“அதான் ஒங்கம்மா சொல்றாள்ல, இன்னைக்கு லீவு தானே போய்ட்டுத் தான் வாயேன்” என்றார் முத்து
“ம்ம்ம் சரிங்கப்பா, சரிம்மா சாப்பிட்டு கிளம்பறேன்மா” என்றான் விக்கி
“பாத்தியா அவன, உன் மாமனார் சொன்னவுடனே தலையாட்டுறான். அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டதும் நீயும் சாப்பிட்டுட்டு கெளம்புமா” என பாக்கியம் கூற
“மொதல்ல நீங்க சாப்பிடுங்கத்த, நான் அப்புறமா சாப்பிடுறேன். அப்புறம் சாதம் வடிச்சி, சாம்பாரும் மாமாவுக்கு புடிச்ச மோர் கொழம்பும் வச்சிட்டு கெளம்பறேன் அத்த” என்றாள் கார்த்திகா
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நீ டிஃபன் சாப்பிட்டு கிளம்பும்மா” எனவும்
“எனக்கென்னமோ பசிக்கலத்த, நான் அப்புறமா சாப்பிட்டுகறேன்” என்றாள் கார்த்திகா
“ம்ம்… இதே உங்கம்மா வீடாயிருந்தா இன்னிக்கி ஞாயித்துகிழம மட்டன் கொழம்பும் இட்லியும் இருக்கும் இல்லையா? அதான் இன்னைக்கு போறல்ல, ஒரு புடி புடிச்சிட்டு வந்திடு. என்ன யோசிக்கற, எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னா?
நான் கல்யாணமாகி வந்த புதுசுல டவுன்ல வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்தோம் அப்ப பக்கத்து வீட்ல சண்டே ஆனா அப்படித் தான் சாப்பிடுவாங்க அதே மாதிரி தான் உங்க வீட்லேயும் சாப்பிடுவீங்கனு சொன்னேன்மா கோபிச்சிக்கிட்டியா?” என பாக்கியம் சற்று பதற்றத்துடன் கேட்க
“நான் சின்ன வயசிலிருந்தே நான்வெஜ் சாப்பிட மாட்டேன் அத்தை” என்றாள் கார்த்திகா
“அம்மாடி நான் உங்க மாமா மாதிரி இல்லம்மா, நீங்கெல்லாம் நான்வெஜ் சாப்பிடுவீங்கனு தெரிஞ்சி தான் நீ ரொம்ப நல்ல பொண்ணுங்கறதால உங்க மாமாகிட்ட சண்டப் போட்டு கல்யாணம் பண்ணி வச்சேன்மா’’ என பாக்கியம் கூற
“இல்லத்த… நமக்காக இன்னொரு உயிர கொல்றத என்னால ஏத்துக்க முடியல, அதான் நான் சாப்பிடுறதில்ல. அதுக்காக உங்கப் பையன் சாப்பிடுறத நான் தடுக்க மாட்டேன்” என மருமகள் கூற, அதிர்வுடன் பார்த்தாள் பாக்கியம்
“என்ன? எம் பையனா?’’ என இன்னும் அதிர்ச்சி விலகாமல் பாக்கியம் கேட்க
“ஆமாத்த… காலேஜ் படிக்கும் போது டவுன்ல ‘புத்தூர் ஜெயராம் மெஸ்’னு ரொம்ப பேமஸ்த்த, அதுல ஃப்ரண்ட்ஸ்களோட சாப்பிட்டு பழகிட்டாரு. அதான் எங்க வீட்டுக்கு நான் கெளம்பறத்துக்கு முன்னாடி அவர் கெளம்ப ஆரம்பிச்சிடுவாரு. அப்புறம் அத்த, நீங்க எதையும் அவர்கிட்ட கேட்டிடாதீங்கத்த ப்ளீஸ்” என்றாள் கார்த்திகா
எதேச்சையாக அந்த பக்கம் வந்த முத்து, மருமகள் பேசியதை கேட்டு ஒரு கணம் வாயடைத்து நின்றவர், பின் வந்த சுவடு தெரியாமல் வெளியேறினார்
#ad
#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
உயர்ந்தவர்கள் அருமையான கதை..அழகான ஓட்டம்.சைவம் அசைவம்..என பட்டி மன்றம் வைக்கலாம்.இதில் சைவம் பக்கம் நின்று வாதிப்பவர்களே இன்று அசைவ ப்ரியர்களாக இருப்பார்கள் ரகசியமாக..
சில ரகசியங்கள் அரங்கேற்றினால் அசிங்கம்…அமைதியாக பயணிப்போம்.கதை சூப்பரோ சூப்பர்…
என்ன செய்ய முடியும்? இப்படித்தான் நடக்கிறது. அதைப் பெற்றோர்கள் பலரும் அறிவதில்லை என்பதும் உண்மையே.
சைவம் அசைவத்தை பிரித்துவிட முடியுமா என்ன?
இந்தக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு யதார்த்தமான ஒரு குடும்பப்பாங்கான கதையை புனைந்த பெருமாள் நல்லமுத்து அவர்களுக்குப் பாராட்டுக்கள்!