in ,

உறவுக்கு நிறம் ஏது (சிறுகதை) – முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

                தன் நிறைமாத வயிற்றை லேசாய்த் தடவிபடியே சுவரில் தொங்கும் நாள்காட்டியைப் பார்த்தாள் வள்ளி.

      “அந்தக காலண்டரையே எத்தனை தடவை திரும்பத் திரும்பப் பார்ப்பே?” குறுஞ்சிரிப்புடன் கேட்டான் அவள் கணவன் சரவணன்.

      “இருபதாம் தேதி…ன்னு டாக்டர் நாள் குறிச்சுக் கொடுத்திருக்கிறார்!…அதுக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குன்னு பார்த்தேன்” ஆயாசமாக மூச்சு விட்டபடியே சொன்னவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டான் சரவணன்.

     “ஏன் தங்கம்?… பயமா இருக்கா?” அவள் தாடையைத் தொட்டுத் தூக்கிக் கேட்டான்.

     அவள் மேலும் கீழுமாய்த் தலையாட்ட, “அய்யே… பயப்படவே தேவையில்லை!… இப்பெல்லாம் மருத்துவம் ரொம்ப முன்னேறிடுச்சு!… அந்த காலத்துலதான் பிரசவம்ன்னா மறுபிறவி மாதிரின்னு சொல்லுவாங்க… இப்ப அப்படியெல்லாம் இல்லை!… காலைல போறாங்க… அட்மிட் ஆகறாங்க… மதியம் டெலிவரி… ஈவினிங் டிஸ்சார்ஜ்… வெரி சிம்பிள்” என்று வார்த்தைகள் மூலம் அவளுக்குத் தெம்பூட்டினான் சரவணன்.

     “நான் அதை நினைச்சுப் பயப்படவில்லைங்க!… உங்க அம்மாவை நினைச்சாத்தான் பயமா இருக்கு!” என்றாள் சன்னக் குரலில்.

     “எங்க அம்மாவை நினைச்சா… எதுக்கு?” கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டான் சரவணன்.

     “வந்து… அத்தைக்கு கருப்பா இருக்கிறவங்களைக் கண்டாலே பிடிக்காது!”

     “சரி… அதுக்கும்… இதுக்கும் என்ன சம்பந்தம்?” புரியாதவனாய்க் கேட்டான் சரவணன்.

     “ஒருவேளை… எனக்கு பிறக்கிற குழந்தை… கருப்பாய்ப் பொறந்திடுச்சுன்னா… அத்தை அதை வெறுத்து ஒதுக்கிடுவாங்களோ?… அதை எடுக்கவோ… எடுத்துக் கொஞ்சவோ மாட்டாங்களோ?ன்னு பயமா இருக்குங்க!” சொல்லும் போதே தழுதழுத்தன அவள் உதடுகள்.

     தன் அம்மாவின் அந்தக் குணம் சரவணனுக்கும் தெரியும். அதனால், அவனும் யோசனையில் ஆழ்ந்தான். அவனுக்குள்ளும் அந்தப் பயம் லேசாய் ஊடுருவ ஆரம்பித்தது.  “உண்மைதான்… ஒருவேளை இவள் சொல்வதைப் போல் என் குழந்தையும் கருப்பாய்ப் பிறந்து விட்டால்…..” உள்ளத்தில் முளைவிட்ட அந்த அச்சத்தைத் தானும் வெளிப்படுத்தி, ஏற்கனவே கலவரப்பட்டிருக்கும் பிள்ளைத்தாச்சிப் பெண்ணை மேலும் கலவரப்படுத்த விரும்பாமல், 

            “ஏன் வள்ளி… நீ எப்பவும்… எதிர்மறையாகவே சிந்திக்கிறே?… நமக்கு பொறக்கப் போற குழந்தை என்னை மாதிரியோ… இல்லை உன்னை மாதிரியோ… ஏன் எங்க அம்மா மாதிரியோ சிகப்பாய்ப் பிறக்கும்”ன்னு நினைத்துக் கொள்” அவனுடைய வார்த்தைகள் அப்போதைக்கு அவளை கொஞ்சமாய் சமாதானப்படுத்த மெல்லப் புன்னகைத்தாள்.

      “ஆமாங்க நீங்க சொல்றதும் சரிதான்!… கருப்பா இருக்கிற எங்க அப்பா மாதிரியோ… எங்க அண்ணன் மாதிரியோ?ன்னு ஏன் நினைக்கணும்?… என்னை மாதிரி… உங்களை மாதிரின்னு நினைக்கலாமே?” என்றாள் சிரித்த முகத்துடன்.

     “அப்பாடா… இப்பதான் உன் முகத்துல சிரிப்பே தெரியுது” என்றவாறு அவள் கன்னத்தில் செல்லமாய் தட்டி முத்தமிட்டு நகர்ந்தான்.

     டாக்டர்கள் குறித்த நாளுக்கு இரண்டு தினங்கள் முன்னதாகவே பிரசவவலி கண்டு விட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் வள்ளி.

     குடும்பத்தார் அனைவரும் மகிழும் வண்ணம் சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த வள்ளி, ஏனோ தன் மாமியாரை நினைத்து மட்டும் கவலையில் ஆழ்ந்தாள். ஆம்! அந்த மகன்… அந்த மழலை… அவள் அண்ணனை உரித்து வைத்தாற் போல் அதே கருப்பான கருப்பாய் பிறந்திருந்தது.

     ஆவலோடு தன் வாரிசைக் காண வந்த சரவணன் கூட லேசாய் முகம் வாடி போனது போல் தோன்றியது வள்ளிக்கு. கண்ணீரோடு கணவனின் கை விரல்களைப் பிடித்துக் கொண்டு, பார்வையால் கெஞ்சியவளை சமாதானப்படுத்தினான் சரவணன்.

      “நம்ம கையில என்னடா இருக்கு?… எல்லாம் ஆண்டவன் செயல்!”.

      “ஏங்க… அத்தை வந்து குழந்தையைப் பார்த்தாங்களா?” வறண்ட உதடுகள் கேட்க,

             “இல்லைடா… வந்திட்டிருக்காங்க!… அநேகமா இன்னும் பத்துப் பதினஞ்சு நிமிஷத்துல வந்துடுவாங்கன்னு நினைக்கிறேன்”

     “குபுக்”கென்று கண்ணீர் பொங்க வாய் விட்டு அழுதவர்களின் தலையை ஆதரவாய் தடவிக் கொடுத்த சரவணன்,  “வள்ளி அழாதடா!” என்றான்.

      “ஏங்க.. அத்தை வந்து… நம்ம குழந்தையைப் பார்த்ததும் என்ன நடக்கும்?னு நினைச்சா எனக்கு ரொம்பப் பயமா இருக்குங்க!… நான் என்னங்க செய்வேன்?” அழுதபடியே சொன்னான்.

     அவளுக்கு பதிலேதும் சொல்ல இயலாதவனாய் அறையை விட்டு வெளியேறினான் சரவணன்..

     வெளியே பெஞ்சில் வந்து அமர்ந்தவனுக்கு எல்லாமே வெறுப்பாய்த் தோன்றியது. “ஹூம்… ஏன்தான் கல்யாணம் செய்தோமோ?… ஏன் தான் பிள்ளை பெற்றோமோ?”.

     பக்கத்து பெஞ்சில் கன்னங்கரேல் என்றிருந்த  குழந்தையை தன் மடியில் அமர்த்திக் கொண்டு அதைக் கொஞ்சோ.. கொஞ்சென்று கொஞ்சிக் கொண்டிருந்த ஒரு பெண்மணியை சோகமாய் பார்த்தான்.

      “என் அம்மா மட்டும் ஏன் இப்படி இருக்காங்க?… கருப்பா இருந்தா என்ன?… கருப்பா இருக்கிறவங்களும் மனுஷங்க தானே?”.

     வராண்டா முகப்பில் வேக வேகமாய் நடந்து வரும் தன் தாயைப் பார்த்ததும் அந்த நினைவுகளை அழித்து விட்டு
எழுந்து ஓடினான்.

      “வாம்மா” குரல் பிசிறடிக்க வரவேற்றான்.

 “எந்த அறை சரவணா?” அவள் கேள்வியில் பேரனை பார்க்கப் போகும் ஆவல் தூக்கலாய் இருந்தது.

 “அது… வந்து… அதோ இடது பக்கத்துல நாலாவது அறை!” அவன் காட்டிய அறையை நோக்கி வேக வேகமாய் அவன் தாய் நடக்க, தாயின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாய் பின்னால் வந்தான் சரவணன்.

  “ஐயோ… என்ன நடக்கப் போகுதோ?… குழந்தையைப் பார்த்ததும் அம்மா ஏதாவது ஏடாகூடமாய் பேசிட்டா!… பாவம் வள்ளி”

 அறையை அடைந்து அவசரமாய் உள்ளே நுழைந்தாள் மாமியார்.

 அத்தையின் திடீர் வரவில் அரண்டு போய் எழ முடியாமல் வள்ளி தவிக்க, அவளைக் கையமர்த்திய மாமியார் தொட்டிலை நெருங்கினாள்.

      “ஐயோ கடவுளே” மனசுக்குள் அலறி, கண்களை இறுக மூடிக் கொண்டாள் வள்ளி.

 சரவணன் அறைக்குள்ளேயே வரவில்லை. வெளியிலேயே தங்கி விட்டான்.

சில வினாடிகளுக்குப் பிறகு  “மொச்சு,.. மொச்சு” என்று முத்தமிடும் சத்தம் கேட்க, மெல்ல கண்களைத் திறந்து பார்த்த வள்ளிக்கு தன் கண்களை தன்னாலேயே நம்பவே முடியவில்லை.

 மாமியார் அந்த பிஞ்சுப் பூவுக்கு முத்தம் மாரி பொழிந்து கொண்டிருந்தாள்.

 “என்ன வள்ளி… பாத்தியா என் பேரனை?… எப்படி சூரியக் குட்டி மாதிரி இருக்கான் பாரு”

வள்ளிக்கு எதுவுமே புரியவில்லை. கருப்பாக இருப்பவர்களைக் கண்டாலே வெறுத்துத் தூக்கியெறிந்து பேசும் அத்தை கருப்பு குழந்தையை இந்த கொஞ்சு  கொஞ்சுக்கிறாரே? என ஆச்சரியப்பட்டாள். “பரவாயில்லை குட்டிப் பையன் பிறந்த உடனேயே பாட்டியோட குணத்தை அடியோடு மாற்றிப்புட்டான்”  வியந்தாள் வள்ளி..

தயங்கித் தயங்கி உள்ளே வந்த கணவனிடம் தான் கண்ட அதிசயத்தை வள்ளி சொல்ல, அவனும் வியப்பில் வாயடைத்துப் போனான்.

 ரத்த உறவு என்று வரும் போது நிறம் கூட இரண்டாம் பட்சம் தானே?

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காக்கா ஃபார்முலா 2024 (சிறுகதை) – முகில் தினகரன்

    எவரெஸ்ட் மனசு (சிறுகதை) – முகில் தினகரன்