in

உன் வாழ்க்கை உன் கையில் (நாவல் – பகுதி 6) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

உன் வாழ்க்கை... (பகுதி 6)

மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

இதுவரை:

துரை, ரவி இருவரும் மர்மமான முறையில் இறந்து  போகிறார்கள்.  சூர்யா தன் மனதிற்கினிய தாமரையைத் தேடி  கோவை வந்து விசாரிக்கிறான்.  ஆனால் அவளைப் பற்றிய தகவல்கள் தெளிவாக யாருக்கும் தெரியவில்லை.  விஜய் தன் மனைவி ரம்யாவைத் தாக்கியது யார் என்ற தவிப்பில்  இருக்கிறான். பரந்தாமன் தன்னிடம் விசாரிக்க வரும் காவலர்களிடம் பிடிகொடுக்காமல்  பேசுகிறார்.

இனி:

காவலர்கள் வந்து விசாரித்து போனபின், பரந்தாமன் அன்றைய அலுவல்களைக் கவனிக்க வெளியே கிளம்பினார். அவருக்காகக் காத்துக் கொண்டிருந்த டிரைவர் ப்ரேம், காரை அவரருகில் கொண்டு வந்து நிறுத்த, பரந்தாமன் தன் உதவியாளர் சுகுமாருடன் காரில் ஏறி, தன் அலுவலகத்தை நோக்கி பயணத்தைத் துவக்கினார்.

“என்ன ப்ரேம், போலீஸ் உன்கிட்ட ஏதாவது விசாரிச்சாங்களா?”

“ஆமா சார், ரவி, துரை பத்தி கேட்டாங்க. அவங்க எப்படி இறந்தாங்கன்னு ஏதாவது தெரியுமா அப்படின்னு விசாரிச்சாங்க சார்.”

“நீ என்ன பதில் சொன்னே?”

“நீங்க சொன்ன மாதிரி தான் சொன்னேன். அதைத் தவிர எக்ஸ்ட்ராவா ஒரு வார்த்தை கூட விடல.”

“நல்லது. ஆமா கனகு ஏன் இன்னும் வரல?”

“தெரியல சார். நான் ஃபோன் பண்ணிப் பார்த்தேன். கனகு நம்பர் சுவிட்ச் ஆஃப்னு வருது.”

“அப்படியா? சுகுமார், இப்ப மறுபடியும் கூப்பிட்டுப் பாரு.”

சுகுமார் கனகுவின்  நம்பருக்கு அழைத்தான்.   சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று தான் பதில் வந்தது. பரந்தாமனுக்குக் குழப்பமானது.

“காலைல மொபைலை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு என்ன பண்ணிட்டு இருப்பான்?”

“அதான் சார் ஆச்சரியமா இருக்கு. நேத்து உங்ககிட்ட எதுவும் சொல்லிட்டுப் போனானா?”

“இல்லையே. நம்ம இன்னோவா சர்வீசுக்கு விட்டிருக்கில்ல, அதைப் போய்ப் பார்த்து, ரெடி பண்ணிவைக்க சொல்லிட்டு,    இன்னிக்கு வண்டியை எடுத்துட்டு வரச் சொல்லி இருந்தேன்.”

“ஆமா, இன்னும் வண்டி ரெடியாகாம இருக்குமா என்ன?  இருங்க சார், நம்ம பிஎன் சர்வீஸ் தானே, மதன்கிட்ட கேட்டுப் பார்க்கறேன்.”

சுகுமார், சர்வீஸ் சென்டர் மதனுக்கு ஃபோன் செய்தான். மதனிடம் விசாரித்ததில் நேற்று மாலையே கனகு வந்து, தயாராக இருந்த காரை வீட்டிற்கு எடுத்துப் போனதாகத் தகவல் சொன்னான்.

பரந்தாமனுக்கும், ப்ரேமுக்கும், சுகுமாருக்கும் ஆச்சரியமும்,  அதிர்ச்சியும் கலந்து ஏற்பட்டது.

“என்ன சுகுமார், நேத்து சாயங்காலமே ரெடியாயிடுச்சு, எடுத்துட்டுப் போனதா  சொல்றான். அப்போ கார் வீட்டுக்கு வந்திருக்கணுமே. நைட்டு ஏதாவது கொண்டு வந்திருப்பானா?  அப்படி வந்திருந்தாலும்  என்கிட்ட சொல்லிட்டுப் போயிருப்பானே….”

“இல்லையே சார், நைட் வரலையே.  இப்போ காலையில கூட வெளியே நின்னுட்டிருந்த கார்ல இன்னோவாவைப் பார்க்கலையே. இருங்க நான் எதுக்கும் செக்யூரிட்டிக்கு ஃபோன் பண்ணி கேட்டுப் பார்க்கறேன்.”

சுகுமார் செக்யூரிட்டிக்கு ஃபோன் செய்து கேட்க, செக்யூரிட்டி கனகு வரவில்லை என்று பதில் சொன்னான். மூன்று பேரும் குழம்பினார்கள்.

குழப்பத்துடன்  ஆஃபீஸ் வந்து சேர்ந்தார் பரந்தாமன். கனகு  எங்கே போனான்… புரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் குழப்பத்திற்கான பதில் கிடைக்கும் என்று தெரியாமல் அலுவலக வேலையைக்  கவனிக்கலானார்.

கனகு…. முந்தைய நாள்  மாலை சர்வீஸ் விட்டிருந்த  இன்னோவாவை எடுத்துக் கொண்டு பரந்தாமன் வீட்டை நோக்கி காரைச்  செலுத்தினான். கார் சற்று தூரம்  போன போது, யாரோ கூப்பிடுவது போல இருந்தது. காரின் வேகத்தைக் குறைத்து, பின்னால் திரும்பிப் பார்த்தான் கனகு.

‘இதென்னடா வம்பாப் போச்சு. சர்வீஸ் பண்ணிட்டு எவனாவது காருக்குள்ளேயே தூங்கிட்டானா….’

சன்னமான குரலில் தனக்குத் தானே பேசியபடி, பின் சீட்டில் பார்த்தான். யாரும் இல்லை. மீண்டும் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான். மறுபடியும் ரகசியக் குரலில் யாரோ ‘கன….கு……’ என்று கூப்பிடவே, திக் என்றானது கனகுவிற்கு.

காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, பின்சீட் முழுவதும் கண்களால் துழாவினான்.  காரின் உள்ளே லைட்டைப் போட்டு சீட்டிறகுக் கீழே எல்லாம் பார்த்தான்.  யாரும் இல்லை. குழப்பத்துடன் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்யும் போது, சட்டென ஒரு வித்தியாச நறுமணம்.

‘என்னது… திடீர்னு காருக்குள்ள ஏதோ பூ வாசம் மாதிரி…. இந்த வாசனை….. இ….து எப்படி…. காருக்குள்ள? சர்வீஸ் பண்ணும் போது ஏதாவது ஸ்ப்ரே அடிச்சிருப்பாங்களோ….? இவ்வளவு நேரம் எதுவும் தெரியலையே’

நிறைய குழப்பங்களும், கேள்விகளும் கனகுவின் மனதுக்குள் ஓடின. குழப்பத்துடன் காரை மீண்டும் வேகப்படுத்தினான். இப்போது அந்த நறுமணம் காருக்குள் அதிகமாகப் பரவியது. பின்னங்கழுத்தில் யாரோ பெருமூச்சு விடும் உணர்வு.

எப்போதும் தெனாவெட்டாக, எதற்கும் அஞ்சாமல் இருக்கும் கனகு, முதல்முறையாக பயந்தான். பயத்தில் வயிற்றில் அமிலம் சுரந்து இம்சையை அதிகப்படுத்தியது. காருக்குள் ஏசியை அதிகப்படுத்தினான். ஆனாலும் கைகள் வியர்த்து, ஸ்டியரிங்கை ஈரமாக்கின. பதட்டத்தில் ப்ரேக்கையும், ஆக்சிலேட்டரையும் கட்டுப்பாடில்லாமல் அழுத்தினான்.

கார் சாலையில் தடுமாறியது.

மனதைக் கொஞ்சம் திடப்படுத்திக் கொண்டு, சீராக ஓட்ட முயன்றான். கார் இப்போது கனகுவின் கட்டுப்பாட்டில் இருந்து அதன் கட்டுப்பாட்டிற்குப் போனது. பரந்தாமனின் வீட்டிற்குப் போக வேண்டிய பாதையில் இருந்து, திசை மாறி, கார் இப்போது வேறு பாதையில்  வேகமெடுத்தது.

கனகுவிற்கு ஒன்றும் புரியவில்லை. பயத்தில் ஸ்டியரிங்கில் இருந்து கையை எடுத்து விட்டான். ஆனால் கார் சீராக ஓடிக் கொண்டிருந்தது. இதயத் துடிப்பு தாறுமாறாக எகிற, செய்வதறியாது ட்ரைவர் சீட்டில் வெறுமனே உட்கார்ந்திருந்தான் கனகு.

வெள்ளை நிறத்தில் பளபளவென்றிருந்த அந்த இன்னோவா, கனகுவின் உதவியின்றி தானாகவே சாலையில் வழுக்கியபடி சீராக ஓடி, பரந்தாமனின் அலுவலகத்திற்குள் நுழைந்தது.

கனகுவைப் பார்த்ததால் ஆஃபீஸ் செக்யூரிட்டியும் எதுவும் சொல்லாமல் காரை உள்ளே விட்டான். ஆஃபீஸின் கடைசிக்குப் போய் நின்றது கார்.

கார் நின்றவுடன், எப்படியாவது தப்பித்து ஓடி விடும் எண்ணத்துடன் கதவைத் திறக்க முயன்றான் கனகு. முடியவில்லை. கார்க் கதவை யாரோ இழுத்துப் பிடித்திருப்பது போல் இருந்தது. கனகுவிற்கு அந்நியாயத்திற்கு வியர்த்துக் கொட்டியது.

“யா….ர் நீ…? எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தே….”

பதில் இல்லை. ஆடாமல், அசங்காமல் நின்றிருந்த காரில், கனகு வேக வேகமாக ஸ்ட்டியரிங்கில் போய் மோத ஆரம்பித்தான். மூச்சுத் திணறியது, நெஞ்சு வலித்தது. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று தன்னை ஆட்டுவிப்பதைப் புரிந்து கொண்ட கனகு, “என்…னை…. விட்டு….ரு…” என்று குழறினான்.

“விட முடியாது டா…. இப்போ உன் வாழ்க்கை உன் கைல இல்ல, என் கைல…. “

காதைப் பிளக்கும் இரைச்சலுடன் கேட்ட குரலால் அதிர்ந்து போனான் கனகு.

“நீ…..யா……?”

அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தவனை அது அழுத்த, சத்தமின்றி காருக்குள் உயிரை விட்டான் கனகு.

அதன் பின் அலுவலகத்தில் இருந்தவர்கள், முதலாளியின் கார் நிற்பதாக மட்டுமே நினைத்தார்கள். கனகு கார் சீட்டில் விழுந்து கிடந்ததால், வெளியில் இருந்து யாருக்கும் தெரியவில்லை.

செக்யூரிட்டியும் பணி முடிந்து, இரவுப் பணிக்கான செக்யூரிட்டி வந்ததால், கனகு இரவு முழுவதும் காரிலேயே கிடந்தான்.

காலையில் பரந்தாமனை அலுவலகத்தில் இறக்கி விட்ட ப்ரேம், காரை நிறுத்தி விட்டு, சிகரெட்டைப் புகைத்தபடி, சாவகாசமாக நடையைப் போட்டான். ஆஃபீஸின் கடைசியில் ஏதேச்சையாக இன்னோவா கண்ணில் படவே, நடையை துரிதப்படுத்தினான்.

அருகே போய், கண்ணாடி வழியே பார்த்தவன் அதிர்ந்து நின்றான். பரந்தாமனுக்குத் தகவல் போனது.

(தொடரும் – சனி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இறுதி முடிவு (சிறுகதை) – ✍ கோபாலன் நாகநாதன்

    வைராக்கியம் ❤ (பகுதி 11) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை