“அம்மா, ராஜி எங்க?” என்றபடி உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன்
மகனின் மகிழ்ச்சி பெற்றவள் பரிமளாவையும் தொற்றிக் கொள்ள “ராஜி மேல ரூம்ல இருந்தா கண்ணா” என்றாள்
“அது இன்னும் நல்லது தான்”, என மனதிற்குள் நினைத்தபடி, இரண்டு இரண்டு படிகளாய் தாவி ஏறினான் கண்ணன் `
“ஒரு புள்ளைய பெத்தாச்சு இன்னும் தானே சின்னபுள்ளனு நெனப்பு தான் உன் மகனுக்கு” என சிரித்தார் கண்ணனின் அப்பா கோபால்
“தாத்தாவாகி ஒரு வருசமாக போகுது, சமயத்துல நீங்களே அப்படித் தான நடந்துக்கறீங்க” என பரிமளா பொய் கோபம் காட்ட
“உன் புள்ளைய விட்டு குடுப்பியா நீ” என சிரித்தார் கோபால்
அதற்குள் மாடி அறையை அடைந்த கண்ணன் ஓசைபடாமல் கதவை சாத்தி, துணி மடித்து கொண்டிருந்த மனைவியை தூக்கி தட்டாமாலை சுற்றினான்
முதலில் அதிர்ந்தவள், பின் கணவனின் தொடுகை உணர்ந்து ரசித்த போதும், “ஐயோ, என்னதிது? விடுங்க கீழ” என சிணுங்கினாள் ராஜி
உடனே விடாமல் மேலும் இரு சுற்று சுற்றி விட்டு அமரச் செய்து, மூச்சு வாங்கியபடி அருகே அணைத்தபடி அமர்ந்தான் கண்ணன்
“இப்ப எதுக்கு இந்த ஆர்பாட்டம்?” என்றாள் ராஜி பொய்யான சலிப்புடன்
“கெஸ் பண்ணு ராஜி” என்றான் மகிழ்வாய்
“ஆபீஸ்ல எதுனா ப்ரமோஷன்?” என ராஜி கேள்வியாய் நிறுத்த
“ஆபீஸ் நியூஸ் தான், ஆனா ப்ரமோஷன் இல்ல” எனவும்
“ம்… வேற என்ன? நீங்களே சொல்லுங்க” என்றாள் பொறுமையின்றி
அதற்கு மேல் கண்ணனுக்கும் பொறுமை இருக்கவில்லை, “அய்யாவுக்கு ஆபீஸ்ல ஒரு வாரம் லீவ் கிடைச்சுருக்கு. இன்னும் ரெண்டு நாள்ல நாம ரெண்டு பேரும் செகண்ட் ஹனிமூன் போறோம்” என மையலாய் கண் சிமிட்டி சிரித்தான்
சட்டென ராஜியின் முகம் மாற, “ஒரு வாரம் எப்படிப்பா? குட்டி பையன தூக்கிட்டு அவ்ளோ நாள் சுத்தறது கஷ்டம், அவனுக்கு வெளிய சாப்பாடு வேற ஒத்துக்காதே” என்றாள் ராஜி வருத்தமாய்
“கொழந்தைய தூக்கிட்டு போனா அதுக்கு பேர் ஹனிமூன் இல்ல ராஜி” என்றான் கண்ணன் எரிச்சலாய்
“அவன விட்டுட்டு…”
“ராஜி ப்ளீஸ், வி நீட் எ பிரேக். ராகுல் பொறந்ததுல இருந்து நாம ரெண்டு பேரும் ரெண்டு நாள் சேந்த மாதிரி எங்காச்சும் வெளிய போய் இருக்கமானு நீயே சொல்லு” என்றான் கோபத்தை கட்டுப்படுத்தி
“அதுக்காக சின்ன கொழந்தைய விட்டுட்டு ஒரு வாரம் எப்படிங்க?” என்றாள் ஆதங்கத்துடன்
ஒருவித ஒட்டாத பாவத்துடன் மனைவியை விட்டு நகர்ந்து அமர்ந்தவன், “அப்ப உனக்கு உன் பையன் தான் முக்கியம், நான் இல்ல. அப்படித்தான” என்றான்
“ஏன் இப்படி பேசறீங்க?” என்றாள் ராஜி வருத்தத்துடன்
“இப்ப முடிவா என்ன சொல்ற?” என்றான் கோபமாய்
“புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்… ராகுல் கொஞ்சம் பெரியவனாகட்டும்” என்றாள் கெஞ்சலாய்
“உனக்கு என்கூட வர இஷ்டமில்லனு நேரடியாவே சொல்லிடேன்”
“அதில்லைங்க, குழந்தைய விட்டுட்டு போனா மனசெல்லாம் இங்க தான் இருக்கும். சாப்ட்டானா தூங்கினானானு டென்சனா இருக்குங்க”
“ஒரு வாரம் எங்கம்மா அப்பாவை நம்பி ராகுலை விட மாட்டியா?”
“ஐயோ நம்பாம இல்ல. சும்மா பாத்துக்கறது ஒகே, அவன சாப்பிட வெக்கறதுக்கு ஊரே சுத்தணும், ஓய்ஞ்சு போய்டுவாங்க. என்னாலயும் விட்டுட்டு இருக்க முடியாதுங்க. கொஞ்ச நாள் போகட்டும்”
“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி உன் தங்கச்சி கல்யாண சமயத்துல பத்து நாள் உங்கம்மா வீட்ல போய் இருந்தியே, அப்ப ராகுல் இங்க தான இருந்தான்” என்றான் விடாமல்
“எதை எதை கம்பேர் பண்றீங்க. எங்கம்மாவுக்கு முடியலைனு கல்யாண வேலைக்கு உதவ போனேன். அது அத்யாவிசயங்க”
“அப்ப என் சந்தோஷம் உனக்கு அநாவிசயமா?” என்றான் கண்ணனும் விடாமல்
“கடவுளே… உங்ககிட்ட பேச முடியாது” என்றாள் சலிப்புடன்
“வேண்டாம்… அவ்ளோ கஷ்டப்பட்டு என்கிட்ட நீ பேச வேண்டாம்” என்றவன் ராஜியின் பதிலை காதில் வாங்காமல் வெளியேறினான்
செய்வதறியாமல் திகைத்து நின்றவள், வெளியே கண்ணனின் பைக் கிளம்பும் சத்தம் கேட்க பெருமூச்சுடன் எழுந்தாள்
சிறிது நேரத்தில் “தோசை ஊத்தட்டுமா அத்த?” என்றபடி ராஜி மாடிப்படிகளில் இறங்கி வர
“இந்த நேரத்துல கண்ணன் எங்கம்மா போறான்? போகும் போது ஏன் கேக்கணும்னு கேக்கல” என பரிமளா யோசனையாய் பார்த்தார்
“ஏதோ வாங்கணும்னு போனார் அத்த”, என சமாளித்தபடி சமையலறைக்குள் நுழைந்தாள் ராஜி
“வரும் போது அவ்ளோ குஷியா வந்தான், அதுக்குள்ள என்னங்க பிரச்சன” என மெல்லிய குரலில் பரிமளா கணவனிடம் கவலையுடன் வினவ
“விடு பரி, குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு மாதிரி தான் புருஷன் பொண்டாட்டி பிரச்சனையும். நாம போடாத சண்டையா? விடிஞ்சதும் தீந்துடும் தானே” என கோபால் கேலியாய் சிரித்தார்
“மருமக அடுத்த ரூம்ல தான் இருக்கா, ஞாபகமிருக்கட்டும்” என முறைத்தவள், பேரனின் சிணுங்கல் கேட்க, முட்டி வலியை மறந்து வேகமாய் எழுந்து சென்றாள் பரிமளா
இரவு பதினொன்றாகியும் கண்ணன் வராமல் போக, ராஜியின் மனம் ஏதேதோ விபரீத கற்பனையில் தவித்தது. வயதின் காரணமாயும், உடல் உபாதைகளுக்கான மாத்திரைகளின் உபயத்தினாலும் கண்ணனின் பெற்றோர் உறங்கி இருக்க, தனியாய் முன்னறை ஜன்னல் கம்பியை பற்றியபடி சாலையை பார்த்த வண்ணம் நின்றாள் ராஜி
சற்று நேரத்தில் வந்தவன், தனக்காக ஒருத்தி காத்து நிற்பதைக் கூட பொருட்படுத்தாமல் படிகளில் ஏறினான்
“டிபன் மேலேயே எடுத்துட்டு வரட்டுமா?” என்றவளின் குரலும் கண்ணனின் காதில் விழவில்லை
மனம் கேளாமல், ஒரு டம்ளரில் பாலை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள் ராஜி
“இந்த பாலாவது குடிங்க ப்ளீஸ்”`
“…. “, பதில் கூறாமல் உடை மாற்றினான்
“என் மேல இருக்கற கோபத்த சாப்பாட்டு மேல ஏன் காட்றீங்க”
“….”, மௌனமாய் இறுகிய முகத்துடன் குளியலறைக்குள் சென்று தாளிட்டு கொண்டான் கண்ணன்
வெளியே வந்தவன் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மகனை சற்று நேரம் ரசித்தபடி நின்றான். பின் மௌனமாய் ராஜிக்கு முதுகு காட்டி படுத்து கொண்டான்
இனி பேசிப் பயனில்லை என உணர்ந்தவளாய், மௌனமானாள் ராஜி. அப்படியே சோர்வில் அயர்ந்து உறங்கியும் போனாள்
நடு இரவில் விழிப்பு வர, கண்ணனுக்கு பசி வயிற்றை கிள்ளியது. ஆனால் ராஜியை எழுப்ப தன்மானம் இடம் தராமல் போக, சத்தமின்றி அறையை விட்டு வெளியேறினான்
சமையலறைக்குள் நுழைந்தவன், அவசரமாய் டைனிங் டேபிள் மீது இருந்த ஹாட் பாக்ஸை திறந்து, தட்டை எடுத்து போட்டுக் கொள்ள கூட பொறுமையின்றி அப்படியே சாப்பிடத் தொடங்கினான்
அதற்குள் பெற்றோரின் அறையிலிருந்து பேச்சு குரல் கேட்க, பெற்றோரே என்றாலும் கணவன் மனைவியின் உரையாடலை கேட்பது சரியல்ல என எழுந்தவன்
“முடிவா என்ன தான் சொல்ற?” என சற்று கோபமாய் ஒலித்த தந்தையின் குரலில், ஏதோ பிரச்சனை என உணர்ந்து காதை கூர்மையாக்கினான்
“ஏன் இப்ப கோபப்பட்றீங்க?” என பரிமளா சலித்து கொள்ள
“எவ்ளோ நாளா நாம ரெண்டு பேரும் திருப்பதி போகணும்னு கேக்கறேன். எதாச்சும் சாக்கு சொல்லிட்டே இருக்க. முன்னாடி எல்லாம் கண்ணனோட படிப்பு, வேலை, கல்யாணம்னு சாக்கு சொன்ன. இப்ப அவன் புள்ளய சாக்கா சொல்ல ஆரம்பிச்சுட்ட”
“ஏங்க புரியாம பேசறீங்க? ராகுல் தவழ ஆரம்பிச்சதுல இருந்து ராஜிக்கு ஓயாம வேலை. ரெம்ப முடியாதப்ப நம்ம கைல குடுத்துட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறா. இந்த சமயத்துல தானங்க நம்ம உதவி நம்ம கொழந்தைகளுக்கு வேணும்”`
“அப்ப உன் புள்ள, மருமக, பேரன் மட்டும் தான் உனக்கு முக்கியம். நான் இல்ல, அப்படி தான” என, சில மணி நேரங்களுக்கு முன் கிட்டத்தட்ட தான் ராஜியிடம் கூறிய அதே வார்த்தைகளை தந்தை கூறக் கேட்டதும், அதிர்ந்து நின்றான் கண்ணன்
இதற்கு அம்மா என்ன பதில் சொல்லப் போகிறாள் என அறிந்து கொள்ள ஆர்வமானான் கண்ணன்
“நீங்கில்லாம புள்ள மருமக பேரனல்லாம் எங்கிருந்து வந்தாங்க. ஏன் இப்படி புரிஞ்சுக்காம பேசறீங்க?” என பரிமளா விசும்ப
“இப்ப எதுக்கு கண்ணக் கசக்கற? சரி விடு, இனிமே நம்ம தெரு மொக்குல இருக்கற பிள்ளையார் கோயிலுக்கு கூட உன்னை கூப்பிடல, போதுமா?” என சிறிது வருத்தமும் சிறிது சமாதானமும் கலந்து ஒலித்தது கோபாலின் குரல்
“ஹ்ம்ம்… எத்தன வயசானாலும் அம்மா அம்மா தான். எனக்கு மகன் பொறந்தப்புறம் கூட என்னை பத்தி அம்மா கவலைப்படும் போது, ஒரு வயசு கொழந்தைய விட்டுட்டு ராஜி என்னோட ஊர் சுத்த வரலைனு நான் கோபப்படறது நியாயமில்ல தான?” என்ற தெளிவு மனதில் வந்ததும், உடனே தன் மனைவியிடம் மன்னிப்பு கேட்கத் தோன்றியது கண்ணனுக்கு
முகத்தில் மெல்லிய சோகம் படர உறங்கிக் கொண்டிருந்த மனைவியைக் கண்டதும், அதற்கு மேல் பொறுமை காக்க இயலாமல் அருகில் சென்று, “ராஜி… ராஜி” என எழுப்பினான்
நல்ல உறக்கத்தில் எழுப்பப்பட்டதும் ஒரு கணம் புரியாமல் விழித்தவள், “என்னாச்சுப்பா? ராகுல் எழுந்துட்டானா?” என அவசரமாய் தொட்டிலை நோக்கி பார்வை பாய்ந்தது. ஆனால் இம்முறை கண்ணனுக்கு கோபம் வரவில்லை, மாறாக பெருமிதமே மிஞ்சியது
ராஜியின் முகம் பற்றி தன் புறம் திருப்பியவன், “சாரி ராஜி” என்றான் நிஜமான வருத்ததுடன்
“எதுக்கு சாரி?” என புரியாமல் பார்த்தவளுக்கு, பின் மெல்ல அன்றைய நிகழ்வுகள் நினைவுக்கு வர, புன்னகையுடன் நிமிர்ந்தாள்
“என்ன திடீர்னு நடுராத்ரில ஞானோதயம்?” என கேலியாய் கேட்டபடி, காதலுடன் பார்த்தாள் ராஜி
“ம்… ஞானோதயம் தான்… புத்தருக்கு போதி மரத்தடின்னா எனக்கு நம்ம வீட்டு சமயலறையில் கெடச்சது” என்றவன், தன் பெற்றோரின் உரையாடலை கேட்க நேர்ந்ததை கூறினான்
“ச்சே… அத்த மாமா பாவங்க, நம்ம சுயநலத்துக்கு அவங்க ஆசைகள பலியாக்கறோம்” என்றாள் ராஜி குற்ற உணர்வுடன்
“அதான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன். நாளைக்கே அம்மா அப்பா ஒரு வாரம் திருப்பதி அப்புறம் சுத்தி இருக்கற கோவில்கள் எல்லாம் பாக்கறதுக்கு டிக்கெட் ஏற்பாடு பண்ணப் போறேன். நான் எடுத்த லீவை வீட்ல இருந்து உனக்கு ராகுலை பாத்துக்கறதுக்கு ஹெல்ப் பண்ணப் போறேன்”
“வாவ்… சூப்பர் ஐடியாங்க” என ராஜி மகிழ்ந்தாள்
தானும் அவளோடு சேர்ந்து மகிழ்ந்தவன், சட்டென சிந்தனை வயப்பட்டவனாய் மௌனமானான். “என்னாச்சு சார், ஏமாந்து ஹெல்ப் பண்றதா வாக்குறுதி குடுத்து மாட்டிட்டோம்னு டென்சனா?” என ராஜி கேலியாய் கேட்க
“அதில்ல ராஜி, நீயும் அம்மா மாதிரி தான் இல்லையா? இன்னும் எத்தன வருசமானாலும் ராகுலுக்கு அப்புறம் தான் உனக்கு நான், அப்படித்தான”, எத்தனை முயன்றும் அவன் குரலில் இருந்த வருத்தத்தை மறைக்க இயலவில்லை
“ஐயோ… நீங்க புரிஞ்சுகிட்டது அவ்ளோ தான். அது அப்படி இல்லங்க, கல்யாணம் ஆன புதுசுல தானே ஒரு கொழந்த மாதிரி இருக்கற பொண்ணுக, தனக்குன்னு ஒரு புள்ள வந்ததும் தன் கணவனையும் இன்னொரு புள்ளயா பாக்கற அளவுக்கு மாறிடுவாங்க
கணவன்’ங்கற பெரிய புள்ளைக்கு தன்னை கவனிச்சுக்க தெரியும்கறதால சின்ன புள்ளயான தான் பெத்த புள்ள மேல கொஞ்சம் கவனம் அதிகமாகுது அவ்ளோ தான், இப்ப புரிஞ்சதா?” என ராஜி காதலுடன் கூற, அதை ரசித்தவன்
“புரிஞ்சது மேடம், இப்ப உன் சின்னப்புள்ள தூங்கியாச்சில்ல. இனியாச்சும் பெரிய புள்ளைய கொஞ்சம் கவனிக்கலாமே” என குறும்புடன் சிரிக்க, அந்த மாயக்கண்ணனின் சிரிப்பில் மயங்கி நிற்கும் கோபியரை போல, ராஜியும் தன் கண்ணனின் சிரிப்பில் மயங்கி நின்றாள்
(முற்றும்)
மனதை தொட்ட சிறுகதை. அருமை.
மிக்க நன்றிங்க