in , ,

உடல் பொருள் ஆவி (அத்தியாயம் 1) – ஸ்ரீவித்யா பசுபதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அழகான   வெள்ளிக்கிழமை  அதிகாலை.  விடிந்தும்  விடியாத நேரமான விடிகாலை  ஐந்து மணி.  டிசம்பர்  மாதப்  பனி   இரவு  முழுவதும்  குளிப்பாட்டியதில்  ஈரம்  காயாமல், கதிரவன்  வந்து தலை துவட்டிவிடக்  காத்துக்  கொண்டிருந்தன வானுயர்  மரங்கள்.  

சாலை விளக்குகள் பனியில் நனைந்தபடி மங்கலான வெளிச்சத்தில் காலியான சாலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.  தூங்கி எழுந்து சோம்பல் முறித்தபடி அன்றைய ரயில்களை வரவேற்கத் தயாராக இருந்தது.  அதிகாலை இரயிலைப் பிடிப்பதற்காக இரவே வந்து இரயில் நிலையத்தில் தங்கியவர்கள் ஆங்காங்கே சுருண்டு படுத்திருந்தனர். ஒருசிலர் காலையில் குளித்து தயாராகி ஃப்ரெஷ்ஷாக வந்திருந்தனர்.

தலைக் குல்லாவையும்,  ஸ்வெட்டரையும்  டிசம்பர்  மாதம் மட்டுமே  தேடி எடுத்து  உபயோகிக்கும்   டீக்கடைக்காரர்  பரபரப்பாக   காஃபி  போட்டுக்  கொண்டிருந்தார். டீக்கடையை  ஒட்டி சொற்பமான கூட்டம் ஆவி பறக்கும் காஃபியை கொலாப்சபுள் கப்புகளில் கைகளில் ஏந்தியபடி நின்றிருந்தனர்.  காஃபியின் சூடு கப்பில் பரவி அவர்களின் கைகளைப் பதம் பார்த்ததால், அவ்வப்போது கை மாற்றி வைத்து,  உதட்டைக் குவித்து ஊதி, பின் உதடுக்குக் கொடுத்தனர்.

 நியூஸ்  பேப்பர்  போடுபவரும்,  ரயிலில்  டீ, காஃபி  விற்பவரும், தண்ணீர் பாட்டில்களை விற்பவரும் குளிருக்கு  இதமாக முழுக்கை  சட்டை  போட்டுக்  கொண்டு,  ஓரமாய்  ஒதுங்கி தூண்களில் சாய்ந்தபடி நின்றிருந்தனர். அந்த  அதிகாலையிலும்  புகையை இழுத்துவிட்டபடி  ஊர்க்கதையைப்  பேசிக் கொண்டு  அடுத்து  வரும் ரயிலுக்காகக்  காத்துக்  கொண்டிருந்தனர்.

அடுத்து வரவிருக்கும் ரயில் பற்றிய அறிவிப்பும், எழும்பூரிலிருந்து கிளம்பும் ரயில் பற்றிய அறிவிப்பும் ஹிந்தி,  ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளிலும் மாறி மாறி அவ்வப்போது அழகான குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆங்காங்கே  குளிருக்கு  அடக்கமாய்  சுருண்டு  படுத்திருந்த  சில  தெரு நாய்கள்,  சத்தம் கேட்டு  அவ்வப்போது  தலையைத் தூக்கிப்  பார்த்து விட்டு  மீண்டும்  தங்கள்  தூக்கத்தைத்  தொடர்ந்தன.

மதுரையிலிருந்து வந்த பாண்டியன்  எக்ஸ்ப்ரஸ்  சென்னை எழும்பூர்  நிலையத்திற்குள்  நுழைந்து, மெதுவாக ஊர்ந்து ஒரு பெருமூச்சோடு நின்றது. நீண்ட தூரம் ஓடி பிரயாணப்பட்டு வந்த களைப்பைப் போக்கிக் கொள்வதற்காக தன்னை அமைதிப்படுத்திக்  கொண்டது.

இரயிலின் வருகைக்காகக் காத்திருந்த போர்ட்டர்கள் சிலர், தங்களுக்கு வேலை இருக்குமா எனப் பார்த்தக் கொண்டே ஒவ்வொரு கம்பார்ட்மென்ட்டாக எட்டிப்பார்த்தபடி நகர்ந்தனர்.  தூக்கக் கலக்கத்தோடு ரயிலில் இருந்து இறங்கியவர்கள் தங்கள் உடைமைகளை சரிபார்த்துக் கொண்டு வெளியே செல்லும் வழியை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

உள்ளே இருந்த பயணிகள் பொலபொலவென்று வெளியேற ஆரம்பித்தனர். ஒவ்வொருவருக்கும் என்ன அவசரமோ தெரியவில்லை, ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு தங்களது உடமைகளைத்  தூக்கி முதுகில் சுமந்து கொண்டும்,  கையில் தூக்கிக்  கொண்டும் பிளாட்ஃபாரத்தில் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். தரையோடு இழுத்துச் செல்லும் வகையிலான சூட்கேசுகளின் குட்டிச் சக்கரங்கள் நடைமேடைத் தரையில் உரசி சத்தத்தை உண்டாக்கின.

முதல் வகுப்பு குளிர்ச்சாதனப்  பெட்டியில் இருந்து தன் கைத்தடிகள் சூழ, வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையுடன் இறங்கினார் அமிர்தவளவன், பிரபல கட்சியில் எம்எல்ஏ.

அவர் வருவதை முன்பே தெரிந்து கொண்டிருந்த கட்சித் தொண்டர்கள் சால்வைகள் மற்றும் மாலைகளைக் கையில் வைத்துக்கொண்டு அவரை வரவேற்க, அந்த அதிகாலையிலும் காத்துக் கொண்டிருந்தனர். அனைவரும் வெவ்வேறு நிற உடைகளில் இருந்தாலும், ஒரே வண்ணத் துண்டைக் கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்தனர்.

 ஊடகத்  துறையைச்  சேர்ந்தவர்களில் ஒரு சிலரும்  கையில்  கேமரா,  மைக்  சகிதம்  ஏதாவது பரபரப்பான செய்தி கிடைக்குமா  என்ற ஆவலில் காத்துக்  கிடந்தனர். காவல்துறையைச்  சேர்ந்தவர்களும்  முன்னெச்சரிக்கையாக  சில  நடவடிக்கைகளை  மேற்கொண்டிருந்தனர்.

அமிர்தவளவன்  நாலைந்து  முறை  கண்ணாடியில்  தன்னை  சரிபார்த்துக்  கொண்டு  பிரயாணக்  களைப்பு  எதுவும்  இல்லாமல்  ஃப்ரெஷ்ஷாகக்  கீழே  இறங்கினார்.  தொண்டர்களின்  வாழ்க  கோஷமும்,  மாலை  மரியாதைகளும்  அவருக்கு  மேலும்  உற்சாகத்தைத்  தந்தன.

செய்தி சேகரிக்க தன் முன்  நீண்ட மைக்குகளுக்கு  என்ன சொல்லி  சந்தோஷப்படுத்தலாம்  என்று யோசித்தபடியே  கேமராவுக்கு  போஸ்  கொடுத்துக்  கொண்டிருந்தார் அமிர்தவளவன்.

“சார், உங்க  சென்னைப்  பயணத்துகான  நோக்கம்  என்னன்னு  சொல்ல  முடியுமா?”

“மகாபலிபுரத்துல நடக்கற  வரலாற்று மாநாட்டுல  கலந்துக்கறதுக்காகத் தான் நான் சென்னை  வந்திருக்கேன்.”

“சார், நீங்க ஏற்கனவே மகாபலிபுரம் பார்த்திருக்கீங்களா? இந்த வரலாற்று மாநாடு பத்தியும், மகாபலிபுரம் பத்தியும் உங்க கருத்தைச் சொல்லுங்க.”

“இல்ல, நான் மகாபலிபுரம் இதுவரைக்கும் போனதில்லை. சின்ன வயசுல வரலாற்றுப் பாடத்துல படிச்சது. நமக்கு மதுரை பக்கம். சென்னை வந்தா வேலை விஷயமா வந்துட்டு, உடனே ஊருக்குப் போகத்தான் சரியா இருக்கு. அதனாலத்தான் இந்த மாநாட்டில் அவசியம் கலந்துகிட்டு மகாபலிபுரத்தை சுத்திப் பார்க்கணும் அப்படிங்கற ஆவலோட வந்திருக்கேன். அங்கே இருக்கற சிற்பங்களைப் பத்தியும், அதோட வரலாற்று முக்கியத்துவம் பத்தியும் கேள்விப்பட்டதுல இருந்து, ரொம்ப ஆர்வமா இருக்கேன். அதனால இப்போ இதுக்கு மேல எனக்கு எதுவும் சொல்லத் தெரியல.  மகாபலிபுரம் போயிட்டு, மாநாடு எல்லாம் முடிச்சுட்டு வந்த பிறகு, உங்களுக்கு நான் நிறைய விஷயங்களைச் சொல்றேன், வரட்டுங்களா.”

கைகூப்பி அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார் அமிர்தவளவன். பளிச் பளிச்சென கேமராக்களில் அவரை விதவிதமான கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டே அவருடன் நடந்தனர் சில ஊடகத் துறையினர்.

தன் தொண்டர்கள் புடை சூழ நடைமேடையில் நடந்து நகரும்படிகளில் மேலே ஏறி, அடுத்த  நடைமேடையில் இறங்கி, ரயில்நிலைய  நுழைவாயிலை  நோக்கி நடக்கலானார்.  

தனக்கு கும்பிடு போட்ட பொதுமக்களுக்கு தலையசைப்பை பதிலாகக் கொடுத்துவிட்டு, மற்றவர்களை கர்வத்தோடு ஒரு பார்வை பார்த்தபடியே நடைமேடையில் நடந்து கொண்டிருந்தார். அவர் நடையில் ஒரு உற்சாகம் தெரிந்தது.

சற்று தள்ளி, அவ்வளவு நேரம் உறக்கத்தில் இருந்த கருப்புநிற நாய் ஒன்று தலையைத் தூக்கி அமிர்தவளவனையே  உற்றுப் பார்த்தது. ஆனால் அமிர்தவளவன்  அதையெல்லாம்  கவனிக்காமல் நடந்தார்.

ஆனால் அந்தக் கருப்பு நாய் திடீரென உறுமலுடன் வெறி பிடித்தாற்போல் வேகமாக அவரை நோக்கிப் பாய்ந்தது. நாய் சற்று தொலைவில் இருந்தவரை, தொண்டர்கள் சாதாரணமாக நாயை விரட்டுவது போல் சூ…. சூ….. என்று கையை ஆட்டியும், தோளில் கிடந்த துண்டை எடுத்து  ஆட்டியும்  நாயை விரட்டப்  பார்த்தார்கள். ஆனால் எதற்கும் சளைக்காமல் நாலு கால் பாய்ச்சலில், அந்த கருப்பு நிற நாய் ஒரு கருஞ்சிறுத்தை போல் பாய்ந்தது.

அதைப் பார்த்ததும் அமிர்தவளவனுடன் கூடவே வந்த தொண்டர் கூட்டம் ஆளுக்கு ஒரு பக்கமாகத் தெறித்து ஓடியது. அந்த கருப்பு நிற நாயைத் தனியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில், பயந்து போய் நடைமேடையின் விளிம்புவரை சென்று தவிப்புடன் நின்று கொண்டிருந்தார் அமிர்தவளவன்.

ஆனால் அந்த நாய் விடுவதாக இல்லை. வந்த அதே வேகத்தில் அமிர்தவளவன் மேல் பாய, அதனிடமிருந்து தப்பிப்பதற்காக காலியாக இருந்த தண்டவாளத்தில் தொப்பென்று குதித்தார் அமிர்தவளவன். குதித்த வேகத்தில் கொஞ்சம் சுருண்டு விழுந்தவர் சுதாரித்து எழுவதற்குள், கூவென்று அலறலுடன் எதிர்த் திசையில் இருந்து வந்துகொண்டிருந்த அதிவேக ரயில், அமிர்த வளவனையும் இழுத்துக் கொண்டு, ரயில் நிலையத்தில் நிற்காமல் கடந்து சென்றது.

நடந்ததைப் புரிந்து கொண்ட காவல்துறையினரும், தொண்டர்களும் சுதாரித்துக் கொண்டு அந்த தண்டவாளத்தில் வந்து பார்க்கும் போது, அமிர்தவளவனின் வேஷ்டி மட்டும் பாதி கிழிந்தபடி ரத்தக் கறையுடன் இருந்தது.

இப்போது அனைவரும் அந்தக் கருப்பு நிற நாயைத் தேடத் திரும்பினர். ஆனால் அங்கே அந்த நாய் இல்லை.

     

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காலை எழுந்தவுடன் படிப்பு (சிறுகதை) – ரேவதி பாலாஜி

    மாறவில்லை பாசம் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்