2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அந்த தங்கும் விடுதி மிகவும் பழமையான, ஆனால் பாரம்பரியம் மிக்க ஒன்று.
தற்போதுள்ள நவீன லாட்ஜ் களை போல இருக்காது. ஆனால் புதுப்பிக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது.
விடுதி எந்த அளவுக்கு பழமையாக இருந்ததுவோ, அதுபோல வேலை பார்க்கும் பணியாளர்களும் சற்று வயதானவர்களாகவே இருந்தார்கள்.
அலுவலக வேலையாக மதுரை வந்த நான் அந்த விடுதியில் அறை ஒன்றை எடுத்து தங்கினேன்.
நான் தங்கியிருந்த முதல் தளத்தில் ரூம் சர்வீஸ்க்கு ஒரு வயதான பெரியவர் மட்டுமே இருந்தார்.
அறைக்குள் நுழைந்த பின், எனக்கு தாகமாக இருந்ததால், குடிக்க தண்ணீர் தேவைப்பட்டது. அறையில் வைத்திருந்த வாட்டர் ஜக்’லும் தண்ணீர் நிரப்பி வைக்கப்படவில்லை. சரி, கடையிலிருந்து குடிநீர் பாட்டில் வாங்கி வர சொல்லலாம் என நினைத்து ரூம் சர்வீசுக்கான தொலைபேசி என்னை பலமுறை தொடர்பு கொண்டும் யாரும் எடுக்கவும் இல்லை, நேரில் வரவுமில்லை.
எரிச்சல் அடைந்த நான் பிறகு வெளியில் சென்று, இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வரும்போது வாட்டர் பாட்டில் வாங்கி வந்துவிட்டேன்.
மறுநாள் என் அலுவலக பணிகளை முடித்துக்கொண்டு, மீண்டும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்’ல் சென்னை திரும்ப, அறையை காலி செய்துகொண்டு, சாவியை விடுதியின் முகப்பு வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம் ரூம் 104 செக்அவுட் செய்யுங்கள் என்றேன்.
அந்தபெண் சார், சற்று பொறுங்கள், அந்த தளத்தின் ரூம் சர்வீஸ் பொறுப்பாளர் பெரியவர் ரங்கசாமி ரூம்’ஐ செக் செய்துவிட்டு வரட்டும், உங்கள் பில்ஐ செட்டில் செய்து விடுகிறேன் என்றாள்.
எனக்கு தெரியும், பல லாட்ஜ்களில், ரூம் சர்வீஸ் செய்யும் பணியாளர்கள், நாம் ரூமை காலி செய்யும்போது இறுதியாக ரூமை செக் செய்வதுபோல் செய்துவிட்டு டிப்ஸ் எதிர்பார்த்து நிற்பார்கள்.
ஆனால் இந்தமுறை அறையில் குடிக்க தண்ணீர் கூட வைக்காத இந்த பணியாளருக்கு டிப்ஸ் எதுவும் வழங்க கூடாது என்று தீர்மானித்த நான்,
அந்த பெண்ணிடம்,“இத பாரும்மா, நான் இங்க ரூம் எடுத்ததிலிருந்து இப்போ காலி செய்யும் வரைக்கும் “ரூம் சர்வீஸ்க்கு “யாரும் வரலை, பலமுறை போனில் அழைத்தும் யாரும் போனை எடுக்கவில்லை, இப்போ காலி செய்யும்போது மட்டும் “ரூம் சர்வீஸ் “பாக்குறவர் செக் செய்து சொல்லணும் சொல்றீங்க,
நான் அவர் வரும் வரை காத்திருக்க முடியாது, எனக்கு ட்ரெயினுக்கு லேட் ஆகிடும், பில்-ஐ செட்டில் பண்ணுங்க என்றேன் கோபமாக,
சார், கோச்சுக்காதீங்க, அவர் வயசானவர், முடிஞ்சமட்டும் எல்லோருக்கும் உதவி செய்வார், இப்போ கூட பக்கத்து ரூம்ல உள்ளவங்களுக்கு ஏதோ வாங்கி வரத்தான் கடைக்கு போயிருக்கார், இப்போ வந்துவிடுவார் என்றாள்.
அவர் வரும் வரை நான் காத்திருக்க முடியாது என்றேன்.
அந்த பெண் மறுத்து ஏதும் பதில் கூறாமல், நான் செலுத்தியிருந்த முன்பணத்தில் ரூம் வாடகையைகழித்துக்கொண்டு மீதி தொகையை என்னிடம் கொடுத்தாள்.
அதை பெற்றுக்கொண்ட நான் ரயில் நிலையம் செல்ல ஒரு ஆட்டோவை அமர்த்திக்கொண்டு சென்றுகொண்டிருக்கும் போது மொபைல் ஒலித்தது.
எதிர்முனையில், பேசிய பெண் “சார், நாங்க JVR லாட்ஜ்ல இருந்து பேசறோம், நீங்க தங்கியிருந்த ரூமை செக் அவுட் செய்தபோது கட்டிலுக்கு கீழே கிடந்ததாக கூறி மொபைல் போன் ஒன்றை,அறையை செக் செய்த பெரியவர் கொண்டுவந்து கொடுத்து இருக்கிறாரு, நீங்க உடனே வந்தீங்கன்னா வாங்கிக்கலாம் “என்றார்.
அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது, நான் எப்போதும் அதிகம் உபயோகிக்காத என்னுடைய மற்றொரு மொபைலை இரவு படுக்கையில் படுத்தப்படியே பார்த்துக் கொண்டிருந்ததும், தூக்க கலக்கத்திலும், காலையில் அவசரமாக வெளியே கிளம்பியதாலும் போன் கீழே விழுந்ததை கவனிக்காமல் விட்டுவிட்டேன் என்பதை.
உடனே அவரிடம் “ஆமாம்,அது என் போன் தான், மறந்து எடுக்காமல் வந்துட்டேன், இன்னும் சில நிமிடங்களில் வந்து வாங்கி கொள்கிறேன் “ என்று அவரமாக சொல்லிவிட்டு,
“ஆட்டோ டிரைவரிடம், ஆட்டோவை மீண்டும் லாட்ஜ் க்கு திருப்புங்க,” போய்ட்டு உடனே திரும்பி விடலாம், ட்ரெயினுக்கு இன்னமும் முப்பது நிமிடங்கள் இருக்கு” என்றேன்.
ஆட்டோவிலிருந்து இறங்கி வேகமாக லாட்ஜின் வரவேற்பு அறையில் இருந்த பெண்ணை நோக்கி சென்றேன்,
அவர் என்னை பார்த்தவுடன், என்னுடைய மொபைலை எடுத்து என்னிடம் கொடுத்தார், இனியாவது ஜாக்கிரதையாக இருங்க சார், நீங்க சில நிமிடங்கள் காத்து இருந்திருந்தால், பெரியவர் உடனே கொண்டுவந்து கொடுத்து இருப்பார், நீங்களும் திரும்பி வர வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது, என்றாள்.
நான் அவரிடம் sorry- மேடம், என்று சொல்லிவிட்டு மொபைலை பெற்றுக்கொண்டு, திரும்பியபோது அந்த பெரியவர் நின்று கொண்டிருப்பதை கவனித்தேன், அவரிடம்
“ரொம்ப நன்றி ஐயா”என சொல்லிக் கொண்டே நூறு ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்தேன்,
அதை பெற்றுக்கொள்ள மறுத்த அவர், ஐயா, இது எங்க கடமை. தங்கறவங்க ஏதும் பொருள தவற விட்டுட கூடாதுன்னுதான் நாங்க கடைசி நேரம் கூட
அறையை செக் செய்யறோம். ஆனால், நீங்கதான் சில நிமிடங்கள் காத்திருக்க பொறுமையில்லாமல் புறப்பட்டு போயிட்டிங்க, என்றார்.
பரவாயில்லை, இந்த பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன்,
பணமெல்லாம் வேண்டாம், ரொம்ப நன்றி, நீங்க போயிட்டு வாங்க என்றார் அந்த பெரியவர்.
என்னுடைய முன் கோபத்திற்கும், பொறுமையின்மைக்கும் எனக்கு நானே வெட்கி தலை குனிந்தவாறு வெளியேறினேன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமை