in ,

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 6) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“பயப்படாதே கல்பனா, கௌதம் இனிமேல் எதையும் தட்டி விட மாட்டான்” என்று சிரித்தாள் அவன் அம்மா.

கௌதமைப் பார்த்தவாரே பாயஸ கப்பைக் கையில் எடுத்துக் கொண்டாள் கல்பனா.

“என்னம்மா விசேஷம்? பாயசம் தருகிறீர்கள்?”

“பெரிய மருமகள் கீதாவின் அம்மாவும் அவள் தங்கை சங்கீதாவும் வந்திருக்கிறார்கள், அதற்காகத் தான் இந்த பாயஸம். இரவு பெரிய டின்னர் ஏற்பாடு செய்து இருக்கிறோம். உன் அம்மாவைக் கேட்டு நீயும் இதில் கலந்து கொள்ளேன் கல்பனா”

“வேண்டாம் அம்மா, உங்கள் வீட்டுப் பங்ஷனில் நான் கலந்து கொண்டால் நன்றாக இருக்காது. மேலும் என் அம்மா நேரத்தோடு வீட்டிற்குப் போகவில்லை என்றால் நாளையிலிருந்து எங்கும் அனுப்ப மாட்டார்கள்” என்று கூறிவிட்டுத் தன் வேலைகளை முடித்துக் கொண்டு அன்று சிறிது சீக்கிரமே கிளம்பி விட்டாள்.

தங்கை காஞ்சனாவிற்கு பிளஸ்டூ தேர்வு நடந்து கொண்டிருந்தது. அதனால் அவள் செய்யும் வேலைகளையும் கல்பனாவே செய்ய வேண்டியிருந்தது.

இரவு சாப்பாட்டு நேரத்தில்தான் கல்பனா வீட்டில் எல்லா முக்கிய விஷயங்களையும் அலசி ஆராய்வது வழக்கம். அப்போது கல்பனா தன் தங்கையிடம், “மேற்கொண்டு என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டாள்.

“அக்கா, நான் எந்த டிகிரியும் படிக்கப் போவதில்லை” என்றாள் அப்பளத்தைக் கடித்தப்படி.

“அடிப்பாவி, நாம் ஒன்றும் மெடிசனோ அல்லது இன்ஜினீயரிங்கோ படிக்கப் போவதில்லை. சாதாரணமாக ஒரு சையன்ஸ் டிகிரி அல்லது ஆர்ட்ஸ் டிகிரி கூட இல்லையென்றால் யார் மதிப்பார்கள்?”

“அக்கா, படிப்பது நாம் ஒரு நல்ல வேலையில் திருப்தியாக சம்பாதிப்பதற்காகவும் சௌகர்யமாக வாழ்வதற்காகவும்தான். நம் மதிப்பு நம்மோடு, இதில் மற்றவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?”

“சரி, நீ மேற்கொண்டு என்னதான் படிக்கப் போகிறாய்?”

“அக்கா, நான் நர்ஸிங் படிக்கப் போகிறேன்” என்றாள் திட்ட வட்டமாக.

“படிப்பு நன்றாகத்தான் இருக்கும், ஆனால் வேலை செய்யும் போது ‘டே டியூட்டி, நைட் டியூட்டி’ என்று மாறி மாறி வரும் போது கஷ்டமாக இருக்கும்”

“நர்ஸ் படிப்பெல்லாம் வேண்டாம் காஞ்சனா. பின்னால் கல்யாணம் செய்து கொடுப்பதற்கும் கூட கஷ்டம். நர்ஸ் வேலையில் இருந்தால் எந்த பையனும் திருமணம் செய்து கொள்ள விரும்ப மாட்டான்” என்றாள் அவள் அம்மா.

“அம்மா… நீ வாழ்வது கற்காலம், ஆனால் இது பொற்காலம். பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும், தெரிந்து கொள்” என்றாள் காஞ்சனா.

“அம்மா… நர்ஸிங் கோர்ஸ் மூன்று வருடம் தான், வேலையும் உடனே கிடைக்கும். ஆனால் நான் படித்த பட்டப்படிப்பிற்கு வேலை உடனே கிடைக்காது. போஸ்ட் கிராஜுவேட் படித்தால் தான் வேலை சிரமப்பட்டு கிடைக்கும்” என்றாள் கல்பனா.

“என்னவோ செய்யுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதைத் தான் செய்வீர்கள், நான் சொல்ல என்ன இருக்கிறது?” என பெருமூச்செறிந்தாள் அம்மா.

அடுத்த நாள் பிற்பகல் மூன்று மணிக்கு கல்பனா வழக்கம் போல் விஜயாவின் ஆபீஸில் இருந்தாள். முன்தினம் அட்டகாசமாகவும், கொண்டாட்டமாகவும் இருந்த அந்த வீட்டில், இன்று பயமுறுத்தும் அமைதி நிலவியது. முதலில் கல்பனா அதைப் பற்றி பெரியதாக நினைக்கவில்லை, ஆனால் நேரம் ஆக ஆக அந்த அமைதி அவளை மிகவும் உறுத்தியது.

“மேடம், வீடு ஏன் ரொம்ப அமைதியாக இருக்கிறது?” என்று கல்பனா விஜயாவிடம் கேட்க, சத்யா அப்போது அங்கு வந்து அமர்ந்தாள்.

விஜயா குறும்புடன் தன் தங்கையைப் பார்த்து, “எல்லாம் இவளால் தான்” என்றாள்.

“ஏய், நான் என்ன செய்தேன்?  என் சின்ன அண்ணாவை ஒரு கொடுமையின் பிடியில் இருந்து தப்பிக்க உதவி செய்தேன். நியாயமாகப் பார்த்தால் நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும்”

அதே நேரத்தில் உள்ளேயிருந்து தன் இரண்டு சூட்கேஸ்களையும் நாய் குட்டிகளைப் போல் இழுத்துக்கொண்டு சங்கீதாவும், அவள் அம்மாவும் வெளியே வந்தனர்.

சங்கீதா தன் கையில் இருந்த சூட்கேஸை காலால் எட்டி உதைக்க, அது வெளிவராண்டாவில் போய் நின்றது. பிறகு நேராக சத்யாவின் அருகில் வந்து அவளை முறைத்துக் கொண்டு நின்றாள்.

“இந்தப் பஞ்சப் பரதேசி தான் உன் சினேகிதியா? இவளுக்காகத்தான் நீ வக்காலத்து வாங்கினாயா?” என சங்கீதா கேட்க, கல்பனாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

அதைப் பார்த்த விஜயா, “கல்பனா, பாரதியாரே ரௌத்திரம் பழகு என்று தானே முழங்கி இருக்கிறார். எப்போதும் கோபத்தை அடக்காதே. நீ என்னிடம் வேலை செய்யும் படித்த அறிவுள்ள பெண். நீ மற்றவர்களுக்கு அடங்க வேண்டிய அவசியம் இல்லை. உன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசு” என்றாள்.

 “நாகரீகமாகப் பேசுபவர்களோடு பேசலாம். இவர்கள் கண்டபடி பேசி உள்நாட்டு குழப்பம் உண்டாக்குவார்கள். இதனால் அம்மாவிற்கும் வீட்டில் மற்றவர்களுக்கும் தேவையில்லாமல் பிரச்சனை. இவர்கள் பேச்செல்லாம் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காது. நம் வேலையே நமக்குத் தலைக்கு மேல் இருக்கிறது” என்றாள் கல்பனா.

அவள் பேச்சிற்கு யாரோ கை தட்டினார்கள். திரும்பிப் பார்த்தால், அறைக்கு வெளியே கௌதம் தன் பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டபடி ஸ்டைலாக நின்றிருந்தான்.

“ஏய் சங்கீதா, என்ன ஆச்சு உனக்கு?  சத்யா சின்னப் பெண், அவள் ஏதோ சொன்னாள் என்று அதற்குப் போய் கோபித்துக் கொள்வதா? அத்தை நீங்களும் உள்ளே போங்கள், உங்கள் பெட்டிகளை நான் எடுத்து வருகிறேன்” என்றான் கௌதம்

 “அதானே, நாங்கள் பெரியவர்கள் ஏதாவது சொன்னோமா? இல்லையே? சத்யா சின்னப் பெண். காலேஜ் கூட இன்னும் முடிக்கவில்லை, அவள் பேச்சிற்குப் போய் கோபப்பட்டால் எப்படி? கௌதம் ஏதாவது சொன்னானா? அசடு வா உள்ளே, அண்ணி நீங்களும் உள்ளே வாருங்கள்” என்றாள் கௌதமின் அம்மா லட்சுமி.

அவர்கள் கூப்பிட்டதே போதும் என்று, சங்கீதா ஓடிப் போய் தன் பெட்டிகளை இழுத்துக் கொண்டு வந்தாள். எல்லாவற்றையும் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் கீதா.

“சங்கீதா, நீ பேசியது ரொம்ப துஷ்டத்தனம். முதலில் கல்பனாவிடம் மன்னிப்புக் கேள். மற்ற விஷயமெல்லாம் உள்ளே போய் பேசிக் கொள்ளலாம்” என்றான் கௌதம்.

“இப்போது கூட உங்களுக்கு அந்த கல்பனா தான் முக்கியமா மாமா? அவளுக்காகத்தானே சத்யா கூட வாதாடினாள்” என சங்கீதா சுணங்க

“யார் முக்கியம் என்பதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் சங்கீதா. யாரிடம் மரியாதை இல்லாமல் பேசினாலும், பேசியவர் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும்” என்றான் கெளதம் தீர்மானமாய்.

“சாரி” என்று கல்பனாவைப் பார்த்து மனசில்லாமல் முணுமுணுத்து விட்டு உள்ளே போனாள் சங்கீதா.

அந்தச் சம்பவத்தை தொடர்ந்து, அடுத்த பத்து நாட்கள் டெல்லியில் மெடிக்கல் கான்பரன்ஸ் என்று போயிருந்தான் கௌதம். கல்பனா அவனிடம் அதிகம் பேசுவதும் பழகுவதும் இல்லையென்றாலும், அவன் இல்லாத வெறுமையை நன்கு உணர்ந்தாள்.

குடிப்பதை விட்ட பிறகு அவன் அவளிடம் குறும்புத்தனமாகப் பேசும் பேச்சும், ஆணழகனாக அவன் உடுத்தி அவள் மயங்கியதும், அவனில்லாத வெறுமையை நன்கு உணர்த்தின.

திடீரென வீட்டில் விருந்தும் கொண்டாட்டமுமாக இருந்தது. கல்பனா எதையும் கண்டு கொள்ளவில்லை. வெளியார் கார்கள் வரிசையாக வந்து நின்று கொண்டிருந்தன. விஜயா அமைதியாக கேஸ் கட்டுகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள். அவளும் எதிலும் கலந்து கொள்வது போல் இல்லை.

சத்யா மட்டும் வழக்கமாக அவள் உடுத்தும் ஜீன்ஸ் பேண்டோ, அல்லது சுடிதரோ போடாமல், பட்டுப் பாவாடை தாவணி அணிந்து, இரட்டைப் பின்னல் போட்டு, உள்ளேயும் வெளியிலும் சுற்றிக் கொண்டிருந்தாள். நேரம் ஆக, ஆக கூட்டம் நிறைய சேர்ந்து கொண்டிருந்தது.

“விஜயாக்கா, கூட்டம் நிறைய வருகிறது. நானும் கிளம்பட்டுமா? ஏறக்குறைய நீங்கள் கொடுத்த எல்லா வேலைகளும் முடிந்து விட்டன” என்று தன் ஹேண்ட் பேகை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் கல்பனா.

“ஹலோ டிடக்டிவ் மேடம், அதென்ன பங்ஷனில் கலந்து கொள்ளாமல் கிளம்பி விட்டீர்கள்?” என்று கேட்டபடி, குறும்பு சிரிப்புடன் விஜயாவின் ஆபீஸ் வாசலில் நின்று கொண்டிருந்தான் கௌதம். 

வழக்கம் போல் அவனுக்கே உரிய ஸ்டைலுடன் இரண்டு பேண்ட் பாக்கெட்டிலும் கைகளை விட்டபடி நின்று கொண்டிருந்தான். இந்த ஸ்டைலில் தானே அவள் மனதை அவனிடம் பறி கொடுத்தாள் கல்பனா.

“சார், நீங்கள் ஏதோ கான்பரன்ஸ் என்று டெல்லி போயிருப்பதாக சத்யா சொன்னாள்” என்றாள் கல்பனா மெதுவாக.

“ஏய் உனக்குத் தெரியாதா? கௌதம் சமர்ப்பித்த ‘எய்ட்ஸ்’ பற்றிய தீஸிஸை, டெல்லியில் உள்ள மெடிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் மிகச் சிறந்த கட்டுரை என்று அங்கீகரித்து இந்த மாதம் மெடிக்கல் ஜர்னலில் பப்ளிஷ் செய்து இருக்கிறார்கள். அதற்காகத்தான் டாடி ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கிறார். நீயும் பார்ட்டியில் கலந்து கொண்டு பிறகு போகலாம்” என்றாள் விஜயா.

“கங்கிராட்ஸ் டாக்டர் சார்” என்றாள் முகம் மலர.

“வெறும் வாழ்த்துக்கள் போதாது டிடெக்டிவ் மேடம், நீங்கள் இந்தப் பார்ட்டியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்” என்றான் கௌதம்.

“ஓ, ஐயாம் சாரி சார். இப்போதே மிகவும் நேரமாகி விட்டது, வீட்டில் அம்மாவும் தங்கையும் வெளிவாசலில் உட்கார்ந்து கொண்டு என்னை எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள் சார். வருகிறேன் மேடம்” என்று விஜயாவிடமும் சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வெளியே சென்றாள்.

“கல்பனா நில்லுங்கள், நான் வேண்டுமானால் காரில் கொண்டு வந்து விடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே பின்னால் வந்தான் கௌதம்.

கூடவே சத்யாவும் ஓடி வந்தாள். “கல்பனா, உன் வீட்டிற்குப் போய் உன் அம்மாவிடமும் அனுமதி பெற்று வரலாம். என் அக்காவிடம் வேலை செய்து நீயும் மிகவும் டயர்டாக இருக்கிறாய், அதனால் உன் வீட்டில் போய் ப்ரஷ்-அப் செய்து வேறு ட்ரஸ் மாற்றிக் கொண்டு வரலாம். வா என் ஸ்கூட்டியில் போகலாம்” என்று வண்டிசாவியைச் சுழற்றிக் கொண்டு வந்தாள் சத்யா.

“வேண்டாம் சத்யா, உன் வீட்டுப் பங்ஷனில் பெரிய மனிதர்களும், டாக்டர்களும், பெரிய வக்கீல்களும் கலந்து கொள்வார்கள். எனக்கு அந்த நேரத்தில் மிகவும் எம்பரேஸிங்காக இருக்கும்” என்றாள்.

“அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது, நீ எனக்குக் கம்பெனி கொடு வா” என்று அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள். “அண்ணா, நாங்கள் சீக்கிரமே வந்து விடுவோம்” என்று போகிற போக்கில் கௌதமிடம் கூறிவிட்டு கையை ஆட்டி விட்டு ஸ்கூட்டியில் வேகமாகப் போனாள்.

ஒரு மணி நேரத்தில் இருவரும் திரும்பினர். கல்பனாவைப் பார்த்து விஜயாவே கண்கள் விரிய நின்றாள்.

வெளிர் நீல நிறத்தில் மெல்லிய ஜரிகைக் கரையுடன் மைசூர் சில்க் புடவை. அதே நிறத்தில் அளவான ‘கட்டிங்’குடன் ஜாக்கெட். கழுத்தில் பிளாட்பாரத்தில் வாங்கிய இரட்டை வட முத்துமாலை. காதில் ஒரே ஒரு முத்து தொங்கும் சிறிய ரிங். ஒரு கையில் கருப்பு லெதர் ஸ்ட்ராப் வைத்த வாட்ச். அந்த கருப்பு ஸ்ட்ராப் அவள் கையின் வெண்மையை அதிகரித்துக் காட்டியது. இன்னொரு கையில் எதுவும் இல்லாமல் யானையின் தந்தம் போல் வெண்மையாக நீண்டு இருந்தது.

வீட்டில் போய் ஷாம்பு போட்டு குளித்து ட்ரையர் போட்டு, முடியைப் பின்னாமல் இரண்டு காதோரமும் விதவிதமான அலங்காரக் கிளிப்புகளால் கட்டுப்படுத்தி வைத்திருந்தாள். அந்த நீண்ட சுருண்ட கூந்தலை மத்தியில் ரப்பர் பேண்ட் போட்டு கட்டி வைத்திருந்தாள். அப்படியும் அடங்காமல் முன் நெற்றியிலும், கழுத்தின் இரண்டு பக்கங்களிலும் ஸ்பிரிங் போல் சுருண்டு விளையாடியது.

இந்த அழகைப் பார்த்து பிரமித்து நின்ற கௌதம், “தேரிலே வந்தது தேவதையோ இல்லை மெர்மெய்டோ” என்று அவள் அருகில் சென்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி பாடினான்.  கல்பனா கன்னம் சிவக்க அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

இந்த நாடகத்தை பார்த்து வயிரெறிந்து நின்ற சங்கீதா. தன் அக்கா கீதாவிடம் கண்ஜாடை செய்தாள், கீதாவின் முகம் கோபத்தில் சிவந்தது. ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று விரலசைத்தாள்.

மொட்டை மாடியில் ஷாமினா போட்டு, வரிசையாக பிளாஸ்டிக் சேர் போட்டிருந்தார்கள். முதல் வரிசையில் கௌதமின் அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி மற்றும் முக்கியமான டாக்டர்களும், நீதிபதிகளும், வக்கீல்களும் அமர்ந்திருந்தனர். 

அவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்து அரண்டுதான் போனாள் கல்பனா. விஜயா அவளுடைய நட்பு வட்டாரமான வக்கீல்களுடன் அமர்நது கலகலவென்று பேசிக் கொண்டிருந்தாள். இன்னும் கூட நிறைய காலிச் சேர்கள் இருந்தன.

சங்கீதாவும், அவள் அம்மாவும் மிக ஆடம்பரமாக பட்டுப் புடவையும், வைர நகைகளுமாக கௌதமிற்கு நேர் பின்னால் உட்கார்ந்து கொண்டு, மற்ற வைர நகைகளுடன் ஆரவாரமாய் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் தங்கள் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் செய்த அட்டகாசத்தில் எல்லோரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது உள்ளே நுழைந்த சத்யாவும், கல்பனாவும் எங்கே உட்காருவது என்று கண்களால் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த கௌதம், அவர்களை அழைத்து வந்து முதல் வரிசையில் ஓர் ஓரமாய் உட்கார வைத்தான்.

கீதாவின் இருக்கைக்கும், சத்யா, கல்பனா இருவரின் இருக்கைக்கும் இடையில் ஐந்தாறு நாற்காலிகள் இருந்தன. அப்படியிருந்தும் கல்பனாவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கீதா.

கீதா கணவனின் காதில் ஏதோ கடிக்க, அவன் உடனே தம்பியை அழைத்து, “டேய் கௌதம், முதல் வரிசை முழுவதும் வி.ஐ.பி.களுக்கு என்று ஒதுக்கியிருக்கிறார்கள். இவர்களைப் பின் வரிசையில் உட்கார வைக்க வேண்டும்” என்றான் கௌசிக்.

கௌதம் அவனைப் பார்த்து, “அண்ணா, என்னைப் பொறுத்த வரையில் இவர்கள் தான் வி.ஐ.பி.“ என்று கூறிவிட்டு அவர்களைக் கடந்து வேறு யாரையோ வரவேற்கப் போய்விட்டான்.

திக்பிரமை பிடித்தாற் போல் கௌசிக்கும் கீதாவும் பார்த்துக் கொண்டனர்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பழைய சோறும் பாஸ்ட் புட்டும் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 7) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை