கல்பனாவின் தம்பி ரகு தான் போனை எடுத்தான். அவனுக்கு இவர்களின் முடிவில்லாத காதல் கதை நன்றாகத் தெரியும். கௌதமையும் மிகவும் பிடிக்கும் ரகுவிற்கு.
எப்படியும் கௌதம் தான் தன் அக்காவின் கணவன் என்று மனதிற்குள் திடமாக நம்பியதால், “மாமா” என்று தான் ரகு அவனைக் கூப்பிடுவான். “உங்க மெக்கானிக் மச்சான்” என்று பல முறை கீதா கூட இவனை கேலி செய்திருக்கிறாள்.
“டாக்டர் மாமா, நீங்களா?” என ரகு கேட்க
“ஆமாம் ரகு, எப்படி இருக்கிறாய்? போனை தயவு செய்து நம் சண்டி ராணியிடம் கொடு” என்றான் கௌதம்.
“மாமா, அக்கா மதியம் லன்ச் முடித்து விட்டு இரண்டு மணிக்கு கிளம்பி விட்டாள். அவளை அனுப்பி விட்டு இப்போது தான் நான் வீட்டிற்கு வந்தேன்” எனவும்
“எப்படிடா இருக்கிறாள் என் ஜான்ஸி ராணி?” எனக் கேட்டான் கெளதம்.
“என்னைப் பார்க்கும் போது சிரிக்கிறாள், நான் பார்க்காத போது கண்கள் கலங்க ஏதோ சோக தேவதை போல் நிற்கிறாள். உங்கள் காதல் கதைக்கு எப்போது மாமா ‘என்ட்கார்ட்’ போடப் போகிறீர்கள்? ரொம்ப இழுத்துக் கொண்டே போனால் ரொம்ப போரடிக்கிறது மாமா” என்று சிரித்தான் ரகு.
“டேய், உனக்குக் கூட என்னைப் பார்த்தால் கேலியாக இருக்கிறதா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டு விட்டு மேலும் சிறிது நேரம் பேசிவிட்டுப் போனை வைத்து விட்டான் கெளதம்.
கல்பனா தன் பணியில் போய் சேர்ந்து விட்ட பிறகு, கௌதம் அவளுக்கு மூன்று நான்கு முறை போன் செய்து பார்த்தான். ஆனால் எப்போதும் அவள் லைன் எப்போதும் ‘பிஸி’யாகவே இருந்தது. அவளுடைய பி.ஏ. கூட போனை எடுக்கவில்லை. கல்பனா நிஜமாகவே பிஸியா இல்லை அப்படிக் காட்டிக் கொள்கிறாளா என்று கௌதமிற்குக் கோபம் கூட வந்தது.
கல்பனா ஒரு நாள் சத்யாவிற்குப் போன் செய்தாள். போனை எடுத்தவுடனே இவளை கன்னா பின்னாவென்று திட்டினாள் சத்யா. கல்பனாவிற்கு இவள் எதற்கு போனில் கத்துகிறாள் என்றே புரியவில்லை.
“நான் என்னடி செய்தேன்? என்னை ஏன் கத்துகிறாய்?” என்றாள்.
“நீ வேண்டுமென்று தானே கௌதம் அம்மாவைப் பார்க்க வரும் போது நீ அங்கே இல்லாமல் இங்கே வந்து விட்டாய். அவனை இப்படி அலைக்கழிப்பது நியாயமா? என் அண்ணா எப்படி வருத்தப்படுகிறான் தெரியுமா? அவன் உனக்கு அப்படி என்னடி துரோகம் செய்து விட்டான்?” என சத்யா கோபமாக கேட்க
“கௌதம் ஒன்றும் துரோகம் செய்யவில்லை. அவர் என் மேல் உயிரையே வைத்திருக்கிறார் என்றும் தெரியும், ஆனால் உன் அப்பாவின் மனதில் இன்னும் கூட நாங்கள் ஒன்று சேரக் கூடாது என்ற எண்ணம் தான் இருக்கிறது. நான் இப்போது அம்மாவிற்காக, அவர்கள் சமயத்தில் என் பசியறிந்து காட்டிய அன்பிற்காகத் தான் போனேன். அது சரி, நீ உன் அண்ணாவிற்காக இப்படி வரிந்து கட்டி சண்டைக்கு நிற்கிறாயே… உன் அக்காவைப் பற்றியோ அல்லது அவள் சந்தோஷத்தைப் பற்றியோ ஒன்றுமே நினைக்க மாட்டாயா?” என பதில் கேள்வி கேட்டாள் கல்பனா.
“அவளைப் பற்றி நினைப்பதற்கு என்ன இருக்கிறது? அவளே வக்கீல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கிறாள், கூடிய சீக்கிரம் ப்ப்ளிக் பிராஸிக்யூட்டராக பதவி உயர்வு கூட கிடைக்கப் போகிறது என்று பேசிக் கொள்கிறார்கள்” என்றாள் சத்யா.
“அவளுடைய தொழிலில் மட்டும் முன்னேறினால் போதுமா? வாட் அபௌட் ஹர் பர்சனல் லைப்? இந்த வீட்டில் இன்னொரு காதல் தோல்வி வேண்டாம், இந்த வீட்டில் இன்னொரு கண்ணீர் கதை வேண்டாம் என்று நீ தானே சொன்னாய். எவ்வளவு உடல் நலம் சரியில்லாமல் இருந்தாலும் உன் அம்மா உன் அப்பாவுடன் இருக்கும் போது சந்தோஷமாகத் தானே இருக்கிறார்கள், அப்படித்தானே உன் பெரிய அண்ணா கௌஷிக்கும், நீயும். ஆனால் விஜயா அக்கா முகத்தில் மட்டும் சிரிப்பைக் காணவில்லையே, அதைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டீர்கள், அப்படித் தானே” என்றாள் கல்பனா கோபமாக.
“என்னடி செய்வது? ஜாதி மாறி நீயும், கௌதமும் காதலிப்பதற்கே அப்பா ஒத்துக் கொள்ளவில்லையே. விஜயா அக்கா அல்லவுதீன் என்ற முஸ்லீமை காதலித்தாள், அதற்கு எப்படி ஒத்துக் கொள்வார்?” என்ற சத்யா பேச்சை நிறுத்தினாள்.
“யாரடி அந்த அலாவுதீன்? அவரும் வக்கீலாக இருக்கிறாரா? அக்காவிற்கும் அவருக்கும் நீண்ட நாட்களாகப் பழக்கமோ?” என கல்பனா கேட்க
“அவர் வக்கீல் இல்லை, கௌதம் அண்ணாவின் பெஸ்ட் பிரண்ட். சென்னையில் உள்ள சிறந்த நியூராலஜிஸ்ட். கௌதம் அண்ணாவுடன் தான் முன்பெல்லாம் அடிக்கடி வீட்டிற்கு வருவார், அப்போது தான் அக்காவிற்கும் அவருக்கும் பழக்கம் போல் இருக்கிறது, எங்களுக்குத் தெரியாது.
ஒரு நாள் அப்பா எங்கள் ஜாதியிலேயே பெரிய பணக்காரனாக, அமெரிக்க மாப்பிள்ளையை பிடித்துக் கொண்டு வந்தார். அப்போது தான் அக்கா அல்லாவுதினுடனான தன் காதலை வெளிப்படுத்தினாள். வீட்டில் கௌதம் அண்ணாவைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஒரேயடியாக எதிர்த்து கலாட்டா. அம்மா உடனே, ‘அப்படி ஏதாவது செய்தால் என்னைப் பிணமாகத்தான் பார்ப்பீர்கள்’ என்று எல்லா அம்மாக்களும் சினிமாவில் விடுவது போல் சவால் விட்டாள்.
கடைசியில் அக்கா நடை பிணமாக மாறித்தான் போனாள். இது தான் அவளுடைய சோகக் கதை. அப்போது தான் விஜயாக்கா, ‘நான் அலாவுதீனைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். ஆனால் இனிமேல் எக்காரணம் கொண்டும் நீங்கள் யாரும் என்னைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தக் கூடாது’ என்று கன்னியாகவே நிற்கிறாள்” என வருத்தமாய் உரைத்தாள் சத்யா.
“இப்போதும் அலாவுதீன் உன் அண்ணா கௌதமின் நண்பரா?”
“அலாவுதீன் நல்லவர் தான், ஆனால் அண்ணாவிற்குத் தான் அவருடன் பழக மிகவும் எம்பரேஸிங்காக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ஏதாவது கான்பரன்ஸ் நடக்கும் போது சந்திப்பார்கள் போல் இருக்கிறது. அப்போது பார்ட்டி நடக்கும் போது எடுக்கும் போட்டோக்களில் அண்ணா அவர் பக்கத்தில் தான் இருப்பார். ஏன் இப்போது அவரைப் பற்றிக் கேட்கிறாய்?” என சத்யா கேட்க
“எனக்கு அவரைப் பார்க்க வேண்டும்” என்றாள் கல்பனா.
“நீ பார்த்து என்ன செய்வாய்? மீண்டும் அவர்களை ஒன்று சேர்க்க முடியுமா? அம்மா அப்பா ஒத்துக் கொள்வார்களா? அவர்களே ஒத்துக் கொண்டாலும் விஜயாவும், அலாவுதீனும் இத்தனை கால இடைவெளிக்குப் பிறகு ஒன்று சேர ஒத்துக் கொள்வார்களா?” என சத்யா கேட்க, அவளையே உறுத்துப் பார்த்தாள் கல்பனா.
“அம்மாவையும் அப்பாவையும் நீயும் உன் அண்ணா கௌதமும் தான் கன்வின்ஸ் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் விஜயா அக்காவின் சம்மதமும் அலாவுதீன் சாரின் எண்ணமும் நமக்குத் தெரிய வேண்டும்” என்றாள் கல்பனா, ஏதோ யோசித்துக் கொண்டு.
“அப்பா கன்னாபின்னாவென்று திட்டுவாறே?” என சத்யா தயங்க
“திட்டினால் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் சீக்கிரம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள், அது ஜெனரேஷன் கேப். அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும், நான் கௌதமுடன் பேசுகிறேன்” என்று பேச்சை முடித்தாள் கல்பனா.
கல்பனா போனில் பேசி முடித்த பிறகு, தன்னால் இந்த வேலை முடியுமா என்று யோசித்தாள் சத்யா. முடிந்து தான் ஆக வேண்டும். ஜாதி, மதம், அந்தஸ்து ஏற்றத்தாழ்வுகளால் இரண்டு உள்ளங்கள் பிரிந்து தனிமையில் வாடுவது அவளுக்கு மிகவும் கொடுமையாகப்பட்டது. கொஞ்சமும் யோசிக்காமல் கௌதமைப் போனில் அழைத்தாள்.
“என்னங்க சப்-கலெக்டர் மேடம், நான் பலமுறை அழைத்தும் உங்கள் போன் ‘பிசி பிசி’ என்று வந்தது. நீங்கள் அழைத்தவுடன் நான் பேச வேண்டுமா?” என்றான் கெளதம் இடக்காக.
“டாக்டர் சார், இப்போது இரவு மணி பத்து. நானே ஒரு மணிக்கு முன் தான் வீட்டிற்கே வந்தேன், இன்னும் சாப்பிடக் கூட இல்லை. அதற்குள் உங்கள் அருமை தங்கை என்னுடன் போனில் ஒரே சண்டை”
“சத்யா சண்டை போட்டாளா? ஏன்?”
“எல்லாம் உங்களால் தான். ஏன் என்று உங்களுக்குத் தெரியாதா? இதற்குத் தான் குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதென்று பெயர்”
“ஏய் இது அநியாயம், நான் என்ன செய்தேன்”
“நீங்கள் அம்மாவைப் பார்க்க வரும் போது நான் வேண்டுமென்றே உங்களைப் பார்க்காமல், என் அம்மாவிடம் போய் விட்டேன் என்று சத்யாவிடம் கோள் சொல்லியிருக்கிறீர்கள்”
“அதுதானே உண்மை”
“ஆனால் நான் ஏன் அங்கிருந்து போனேன் என்று தெரியுமா? இப்போது உங்களுக்கு அது வேண்டாம். எனக்கு டாக்டர் அலாவுதீனைப் பார்க்க வேண்டும்”
“அவன் நியூராலஜிஸட். அம்மாவிற்காகவா? இல்லை வேறு யாருக்காவது கன்ஸல்ட் செய்ய வேண்டுமா?” பதற்றத்துடன் கேட்டான் கௌதம்.
“அக்காவிற்காக, விஜயா அக்காவிற்காக. நாம் எல்லோரும் மட்டும் சந்தோஷமாக இருந்தால் இருந்தால் போதுமா? அக்காவைப் பார்த்தால் உங்களுக்குப் பரிதாபமாக இல்லையா? அவர்கள் வாழ்க்கையை சரி செய்ய வேண்டாமா?”
“அதற்கு அலாவுதீன் எதற்கு?” என்று வியப்புடன் கேட்டான் கௌதம்.
“எனக்கும் அக்காவின் கதை தெரியும்” என்றாள் கல்பனா சுருக்கமாக.
சிறிது நேரம் கௌதமிடமிருந்து எந்த பதிலும் இல்லை. “நான் அலாவுதீனுடன் வருகிறேன். வரும் ஞாயிற்றுக்கிழைமை சப்-கலெக்டர் அம்மாவிற்கு எங்களுக்காக நேரம் ஒதுக்க முடியுமா?”
“கிண்டல் வேண்டாம் கௌதம், சனிக்கிழமையிலிருந்தே நான் ரெடி” என்றாள் உற்சாகமாக. சிறிது நேரம் அவனிடமிருந்து சத்தமே இல்லை.
“ஹலோ… கௌதம் தூங்கி விட்டாயா?” என்று கிண்டலாக கேட்டாள் கல்பனா.
“ஏய் வாலு! நான் ஒன்றும் தூங்கவில்லை. அலாவுதீனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவன் ஆயிரம் கேள்விகள் கேட்டான். என் ‘வுட்-பி’ உன்னுடன் பேச வேண்டும் என்றாள்’ என்றேன். ஆனால் திங்கட்கிழமை அவனுக்கு ஒரு ஸர்ஜரி இருக்கிறது என்றும், அதனால் உன்னால் சென்னைக்கு வர முடியுமா என்றும் கேட்டான்”
“கௌதம் நீ அவரிடம் எந்த விஷயமும் சொல்லாதே. நான் நான்கு நாட்கள் லீவ் எடுத்துக் கொண்டு வருகிறேன், ஆனால் அவரை எங்கே சந்திப்பது? உங்கள் வீட்டிலா?”
“ஐயோ ! எங்கள் வீட்டில் எல்லாம் அவரை சந்திக்க முடியாது. நான் ஹோட்டல் ஐ.டி.சி.யில் உனக்கு நான்கு நாட்களுக்கு ரூம் ஏற்பாடு செய்து விடுகிறேன். நானும் பக்கத்திலேயே இன்னொரு ரூம் போட்டுக் கொள்கிறேன். பயப்படாதே, உனக்குத் துணையாக நானும் அங்கே தங்கிக் கொள்கிறேன். அலாவுதினுடன் சனிக்கிழமையே மீட்டிங் தொடங்கி விடலாம், ஆனால் என்ன பேசுவது என்று நன்றாக முடிவு செய்து கொள்”
சென்னை விமான நிலையத்தில் கௌதம் தன் காருடன் காத்திருந்தான், கூடவே அலாவுதீனும் வந்திருந்தான். கௌதம் தான் அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினான்.
அலாவுதீன் முஸ்லீம்களுக்கே உண்டான வெள்ளை நிறத்துடன், ஜிம் பாடியுடன் நல்ல பர்சனாலிட்டியாக இருந்தான். விஜயா அக்காவிற்கு சரியான ஜோடி தான், இருவரையும் மனக்கண் முன் ஒன்றாக நிறுத்திப் பார்த்த கல்பனா மிகவும் சந்தோஷம் அடைந்தாள்.
அலாவுதீன் மிகவும் இயல்பாகப் பேசினான். கல்பனா, விஜயாவிற்காக வாதாடினாள்.
அலாவுதீனும், “நான் பலமுறை முயன்றும், விஜயாவின் பெற்றோர் தங்கள் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவளுடைய அம்மா தற்கொலை செய்வதாக மிரட்டவும், பெற்றோர் சம்மதமில்லாமல் திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்து விட்டாள் விஜயா” என்றான் அலாவுதீன்.
“எத்தகைய வீரரின் பேர் உங்களுக்கு வைத்திருக்கிறார்கள், ஆனால் நீங்களோ உங்கள் வெற்றியிலிருந்து பின் வாங்கி விட்டீர்களே. எப்படியாவது போரிட்டு வெற்றி பெற்று எங்கள் விஜயா அக்காவை நீங்கள் கரம் பிடித்திருக்க வேண்டும், உங்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்காகத்தான் நானும் கௌதமும் முயற்சி செய்கிறோம்” என்றாள் கல்பனா.
“உங்களால் முடியுமா? முடியும் என்றால் உங்கள் முயற்சிக்கு நான் துணை நிற்கிறேன்” என்றான் அலாவுதீன்.
அன்று மாலை கௌதம், தன் காரில் விஜயாவை ஹோட்டலுக்கு அழைத்து வந்தான். விஜயா, அங்கு அல்லாவுதீனை எதிர்பார்க்கவில்லை. இருவரும் சிறிது நேரம் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.
விஜயாவின் கண்களிலிருந்து கண்ணீர். அதைத் துடைத்துக் கொண்டே, “நன்றாக இருக்கிறீர்களா டாக்டர்?” என்றாள் மெல்லிய குரலில்.
“நீ நன்றாக இருக்கிறாயா விஜி, நீ நன்றாக இருக்கிறாய் என்றால் நானும் நலம் தான்” என்றான் அலாவுதீன்.
விஜி என்ற அவன் அழைப்பு அவள் மனதைக் கசக்கிப் பிழிந்தது. பழைய நினைவுகள் எல்லாம் போட்டிப் போட்டு அவர்களை அலைகழித்தன.
அவர்கள் இருவரும் வெகுநாட்களுக்குப் பிறகு சந்திப்பதால் மனம் விட்டுப் பேசிக் கொள்ளட்டும் என்று கண்களால் கௌதமிற்கு சமிக்ஞை செய்து அறையை விட்டு வெளியே போனாள் கல்பனா. கௌதமும் அவள் பின்னாலேயே சென்றான்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings