in

திண்ணை தொலைத்த தெம்மாங்கு (சிறுகதை) – ✍ நிழலி, கிழுமத்தூர்

திண்ணை தொலைத்த தெம்மாங்கு (சிறுகதை)

 மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“முந்தி வேர்க்குதுனு முக்காடெடுக்க 

பந்தியில விழுந்த யெலையா  

சந்தி சிரிக்க நின்னாளே  

சங்கிலியாண்டவன் கோயிலு சங்குமணி  

சப்தமெல்லாம் சாட்சிக்கு வந்தாலும்  

சாயம் போன சீலத்தான்  

சந்தையில எடுபடுமோ – நா  

சல்லடையில் நீரல்ல  

சந்தனகொடந்தான் நெறஞ்சிடுமோ ”  

என்ற பாடல் வரிகளோடு திண்ணை தாங்கிய வாரைத் தூணில் சாய்ந்து காலை நீட்டி வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள் சீரங்காயி. 

திண்ணை கடந்து செல்பவர்கள், “ஆமா இந்த கெழவிக்கு வேல வெட்டியென்னா ஒலக்கைய இடிச்சிகிட்டு பாடிகிட்டு கெடக்கும் இது கூட வாழ்ந்ததெல்லாம் போயி சேர்ந்து வருசமாச்சி . இன்னும் இந்த திண்ணையில ஒட்டிக்கிட்டு தாளம் போடுது ஆயி” என்றபடியே நகர்ந்தனர். 

இதையெல்லாம் ஆயி காதில் வாங்குவதேயில்லை. சூரியனை துரத்தி விடும் மாலை நிலவுக்காகவே பொழுதை புரட்டிக் கொண்டிருந்தாள். பள்ளி முடிந்து சீருடை கூட மாற்றாமல் தன்னிடம் பாட்டு கேட்க வரும் பிள்ளைகள் தான் தற்போது அவளின் உலகம்

அக்கம் பக்கம் மகன் மகளென யார் வீட்டிலிருந்தாவது உணவு வந்து சேரும். சில நேரங்களில் எங்கிருந்தும் வராமலும் இருக்கும். தூது பாடல் அப்போது தொடங்கி விடும். மாலை வரும் பிள்ளைகளோடு ஊடுருவிக்கொள்ளும் அவளது பேரனின் கையில் அவளுக்கு தேவையான வெற்றிலை பாக்கு தவறாமல் வந்துவிடும். 

பிறகென்ன கவலைகொள்ள என்று ஊர் பேசி போனாலும் சீரங்காயி கவலைபடவும் கொஞ்சம் கால நினைவுகள் மிச்சம் இருந்தது அவளுக்கு தான் தெரியும்.  

மாடி வீடு வழவழப்பான தரையினு ஊரே மாறி போனாலும் இன்னும் பழமையின் விரிசல் தொங்கிக் கொண்டிருப்பது சீரங்காயி வீடு ஒன்று தான். 

மகன்களுக்கு வீட்டை பாகம் பிரித்த பின்னும் சுவர் ஒட்டி இருக்க காரணமே ஆயி தான். எத்தனையோ முறை மகன்களோடு சண்டை தான். 

“நாஞ் சாவுற வர இந்த திண்ணையில தான் கெடப்பேன் எம்பிரேதம் போகுற முன்னாடி ஒரு செங்கலு தொலைஞ்சாலும் சொத்தையெல்லாம் சங்கிலியாண்டவன் உண்டியலுக்கு படைச்சிடுவே”னு பேசி வைப்பாள். 

சுருங்கி தொங்கும் தாடையை ஆட்டி யாட்டி எந்நேரமும் அவள் பாடும் வரிகளில் உயிரொன்று தூக்கிட்டு தொங்கும் சோகம் நிறைந்திருக்கும். 

வீட்டை இடித்து மாடி கட்ட மல்லுக்கு நிக்கும் மகனின் தொந்தரவை  

“பரன் கட்டுன திண்ணையில  

பாயில்லாம தூங்குன சனமும்  

சோயோன் கட்டுன திண்ணையில  

சோர்ந்து வந்து இளப்பாறிய சனமும்  

ஓட்டன் கட்டுன திண்ணையில  

ஒண்டி வாழ்ந்து போன சனமும்  

பூட்டன் கட்டுன திண்ணையில  

புள்ள பெத்து பூத்த சனமும்  

பாட்டன் கட்டுன திண்ணையில 

 பள்ளி பாடம் படிச்ச சனமும்  

உங்கொப்பன் கட்டுன திண்ணையில  

ஒய்யாரம் ஒசந்த சனமும்  

எம்மவனேனு நீ வந்து நிக்கையிலே  

நெலக்கதவும் சேதமுனு ஆகனுமா ?” 

என்று பாடி தீர்ப்பாள்.  

ஆனால் குழந்தைகளிடம் அப்படியில்லை. அவர்கள் கேட்கும் பொருளை வைத்து பாடி மகிழ்விப்பாள். துள்ளி குதித்து தாளம் போடும் வாண்டுகளின் வண்ணம் நிறைந்த திண்ணை பாடல் வாசம் வீசும்.  

ஆயி ஆயி கத‌ சொல்லு ஆயி என்று ஓடி வரும் பிள்ளைகளுக்கும் பாடல் தான்.  

“பாப்பா பாப்பா கதை சொல்லவா  

 பாட்டி நானும் கதை சொல்லவா  

ராசா ராணி கதை சொல்லவா  

நாட்டுப்புற கதை சொல்லவா 

திருட்டு கண்ணன் கதை சொல்லவா  

தேசம் சுற்றும் கதை சொல்லவா 

வெள்ள காக்கா கதை சொல்லவா 

வெளஞ்ச நெல்லு கதை சொல்லவா 

பெரிய பூதம் கதை சொல்லவா 

பேசும் கிளி கதை சொல்லவா 

ஆவலுடன் நீ கேட்டால்  

அதிசய தீவு கத சொல்லுவேன்  

மடியில் சாய்ந்து உம் கொட்ட 

மந்திர மோதிர கதை சொல்லுவேன் 

உனக்கு எந்த கதை வேணும்  

உலகிலில்லா கதையெல்லாம்  

ஒவ்வொன்ன நாஞ் சொல்லுவேன்  

பாப்பா பாப்பா கதை சொல்லவா 

பாட்டி நானும் கதை சொல்லவா”  

நீட்டி முழங்கும் சீரங்காயி பாடலையே பாடிக்கொண்டு வீடு திரும்பும் பிள்ளைகள் பெருங்கதை கேட்டது போல் கும்மாளமிடும். 

திண்ணை கிழவியின் பாட்டு வரிகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல காட்டுவேலை செய்து களைத்து திரும்புபவர்களுக்கும் திண்ணை கடந்து செல்லும் துளி நேரத்தில் களைப்பை மாறச் செய்யும். 

ஆயிக்கு தான் அதை சொல்வதில்லை மற்றபடி களைபிடுங்கும் கைகளில் எல்லாம் ஆயி வரிகள் தான் சோர்வு நீக்கி கொண்டிருக்கும். 

தெருக்களில் யாருமற்று பசித்திருக்கும் நாட்களில் 

“ரோட்டோரம் போற நாயே  

 காட்டோரம் போயி வந்தா  

வீட்டோர கெழவி இன்னும் 

வீங்காத வயித்துக்கு வெர போடாம – காத்திருக்கா 

நேத்து வடிச்சது நீத்து போயிருந்தாலும்  

பாத்து பத்திரமா வாங்கி வா 

பாதி கஞ்சி பங்கு தாரேனு ”  

அத கேட்கும் நாயும் எல்லாம் புரிஞ்ச மாதிரி அங்கிருந்து போகும்.  பேச்சி துணையின்றி எல்லாவற்றோடும் பேசி கொண்டிருக்கும் சீரங்காயிக்கு மனநிலை மாறிவிட்டதென புறந்தள்ளும் உறவுகளையும் நேசித்து பழகியவள் ஆயி. 

அவளின் இறுதி நாளை கனித்து கொண்ட கர்வமும் அவளிடம் அதிகம் தென்பட்டது. தன்னை காயப்படுத்தும் உறவுகளிடம் “ஆனது ஆச்சி இன்னும் பத்து நாள் தான் அப்பறம் படையலே வச்சி படைச்சாலும் உங்க சோத்த வந்து திங்க போறதில்ல” என்றபடியே 

“பண்ணையம் பொலச்சி  

பாடுபட்டு நெல்லுசேத்தி  

பச்சரிசி சோறாக்கி 

பாதி உருண்டைக்கும்  

பருக்கை மிச்சமில்லாமல்  

பக்குவமா பகிர்ந்தேனே  

பாவி வயித்துக்கு தான் 

பழங்கஞ்சி பாடாபடுதேனு”  

காற்றில் வரிகள் மிதக்கும்.  

ஆயி சொன்ன பத்து நாளும் வந்துச்சி.  

“படி படியா தேடி திரிஞ்சி 

மடி மடியா சேர்த்துவச்சேன் 

கொடி கொடியா படர்ந்த உறவும்  

நெடி நெடியா தூரம் போக  

 குடி குடியா வானம் பார்த்து  

புடி மண்ணுக்கும்  

குடியத்து போறேனே நா” 

ஊரே அலற  ஒப்பாரியென ஆயி குரல் கடைசியாக திண்ணை அதிர ஒலித்தது. 

எந்நாளும் போல மறுநாள் விடியல் வந்து திண்ணை நிறைத்தது. சேவலுக்கு முன் கூவும் ஆயி இன்னும் எழாமல் தான் இருந்தாள். பழுத்த இலையென நரம்புகள் பிரதிபலிக்கும் சீரங்காயி கால்களில் சூரியனின் சுடரொளி இன்னும் கொஞ்சம் நிறத்தை கூட்டி காட்டியது. 

வழக்கம் போல சொம்பு நிறைந்திருக்கும் கடுங்காப்பி குளிர்ந்து போகாமல் தடுக்க போராடிய சூரியனின் கதிர்கள் தோற்று நின்றன. காலை கஞ்சியும் வெளத்து நீர் பிரிந்து அடிபானையில் சோற்றின் அளவை வெளிக்காட்டியது. 

ஆயி இன்னும் எழாத அதிசயத்தை பள்ளி செல்லும் குழந்தைகள் பெரியவர்களிடம் முறையிட திண்ணை முழுவதும் கூட்டம் கூடியது. 

“நல்லா சாவு தூக்கத்திலேயே நிம்மதியா போயியுச்சி ஆயி” என்றாள் நாடி பிடித்து பார்த்தவள்.  

“வரம் வாங்குன உசுரு தான். இல்லனா மத்த கெழங்கட்டைங்க மாதிரி பீ, மூத்திரம் அள்ள வைக்காம யாரு வாயிலையும் விழாம நெளுவா போயிடுச்சி” என்றாள் ஒருத்தி. 

“நல்ல தாயி இருந்தப்பவும் தொல்ல இல்ல போகும் போதும் தொல்ல இல்ல சொத்த கூட தெளிவா முடிச்சி வச்சிட்டு போயிருக்கு” என்றான் ஊர்காரன் ஒருவன். 

பெருமை பேச தொடங்கிய வாயெல்லாம் பார்த்து “ஆயி  செத்துபோச்சாப்பா” என்று அழத் தொடங்கினாள் பேத்தி 

அழுவதெல்லாம் சடங்கென்பது போல திண்ணையை அழுதை சப்தம் ஆக்கிரமித்து கொண்டது. பாடல் கேட்டே பழகிய திண்ணை தூண்களுக்கு மூக்கு துடைத்து அழும் திரவ சப்தங்கள் பிடத்தமானதாக இல்லை தான் வேறு வழியில்லாமல் கேட்டு கொண்டிருந்தது.  

“எப்போதாவது போயிருவேன் 

எங்கையாவது போயிருவேன் 

களத்து மேட்டுல இல்லையினா 

 காத்து வாங்க போயிருப்பேன்  

கம்மா கரையில இல்லையினா  

 காட்டு பக்கம் போயிருப்பேன்  

ஆத்து மேட்டுல இல்லையினா 

 அடுத்த ஊரு போயிருப்பேன்  

அடுப்பங்கரையில இல்லையினா 

 ஆத்தா வூட்டுக்கு போயிருப்பேன்  

பொழுது சாய இல்லையினா 

 புருசன் கூட போயிருப்பேன்  

திண்ணையில இல்லையினா  

திங்களோடு போயிருப்பேன்  

தேடாத தவிக்காத எம்பேத்தி 

 நெனப்பா உனக்குள்ள வாழ்ந்திருப்பேனு ”  

ஆயி பாடியதாக பாடுகிறாள் பேத்தி. 

இதயம் உருகியதாக ஒரு கூட்டம் இன்னும் கொஞ்சம் அழகை தந்தது.  எல்லாம் கடந்தேறிய பின் திண்ணையின் வெற்றிடம் காற்றில் ஆடியது.  

இரண்டு மூன்று நாட்கள் தாமதம் தான்.  

கற்களும், சல்லிகளும், சுண்ணாம்புமென குவியத் தொடங்கியது. பெரிய மாடி கட்டும் கனவை நிறைவேற்ற தொடங்கினான் சீரங்காயி மகன். ஊருக்கு பேர் சொல்ல ஒட்டியிருந்த கடைசி திண்ணையும் அடையாளம் இல்லாமல் தொலைந்து கொண்டிருந்தது. 

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. “Intha graameeya maNam veesum ‘Puthuk kavithaiyaip padiththapOthu, koodavE, Morrisville * 22Dr. VSK-yin kavithaiGaLum en ninaivukku

    vanthana. SarithaanE ?

    – “M.K. Subramanian.”.” .

பெருமாள் வைரம் (டிடெக்ட்டிவ் சிறுகதை) – ✍ ராம் ஸ்ரீதர், சென்னை

ஆப்பிள் பர்ஃபி – Recipe By திருமதி.ராஜதிலகம் பாலாஜி